ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் இன்று தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் பல கோடி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இங்கு குறிப்பாக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஹுண்டாய், மொபைல்கள் தயாரிக்கும் நோக்கியா மற்றும் இத்தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏராளம். இவ்வளவு கோடிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களின் நிலைமையோ கொடுமையானது. அதற்கு உதாரணம் சமீபத்தில் தொழிற்சாலையில் தற்கொலை செய்ய முயன்ற பாலாஜியின் கதையே!

தன்னுடைய வாழ்வை மேம்படுத்தும் கனவுகளோடு ஐ.டி.ஐ முடித்து வேலை தேடும், வேலை செய்யும் இளைஞர்களில் பாலாஜியும் ஒருவர். இங்கு வேலை செய்யும் ஆண் பெண் தொழிலாளர்களின் கனவெல்லாம் ஒரு நல்ல நிரந்தர வேலை, வேலைக்கேற்ற ஊதியம். ஆனால் தொழிற்சாலைகளில் உள்ள நிலைமையோ வேறு. 40-60 சதத் தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவே அமர்த்தப்படுகின்றனர். வேலை உறுதியின்மை, தங்களுடைய வேலை அனுபவத்திற்கான் கூலி என எதுவும் இந்த தொழிலாளர்களுக்கு கிடையாது.

பாலாஜி ஒப்பந்தத் தொழிலாளராக வேலை செய்தது ஹுண்டாய் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதரிபாகங்கள் தயாரிக்கும் கொரியா நிறுவனம் YSI Automotive Pvt Ltd ஆகும். இங்கு 36 தொழிலாளர்கள் நிரந்தரமாகவும், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், 15 தொழிலாளர்கள் டிரெயினிகளாகவும் வேலை செய்கின்றனர். 3 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்த பாலாஜியின் கடின உழைப்பிற்கு பின் நிறுவனம் அவரை நிரந்தரத் தொழிலாளராக நியமனம் செய்ய முடிவெடுத்தது. 3 வருடம் வேலை அனுபவம் இருந்தும் அவர் திரும்ப டிரெய்னியாக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இருந்த அனுபவம் கணக்கிலெடுக்கப்படவில்லை.

மீண்டும் 3 வருடங்களாக பாலாஜி டிரெயினிங் முடித்த வேலையில் தன்னுடைய கனவு நிறைவேறி விடும் என பாலாஜி எதிர்பார்த்த நிலையில் நிர்வாகமோ அவருடைய நியமனம் குறித்து மௌனம் சாதித்து வந்தது. தன்னுடைய பணி நிலைமை தெரியாமல் பாலாஜி தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்து வந்த நிலையில் திடீரென்று அவரும் மற்றொரு தொழிலாளருடைய அனுமதி கார்ட் வேலை செய்ய வில்லை. இந்த அனுமதி கார்ட் தொழிலாளரை தொழிற்சாலைக்கு அனுமதிப்பதுடன், அவருடைய வருகை மற்றும் வேலை நேரங்களை பதிவு செய்யும். பாலாஜி நிர்வாகத்திடம் முறையிட்ட பின் அவரும் இன்னொரு தொழிலாளரும் வருகைபேட்டில் கையெழுத்திட்டு வேலை செய்து வந்தனர்.

ஒரு மாதம் அவ்வாறு வேலை செய்த அவருக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் மே 8 அன்று நிர்வாகம் அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது. சமீபத்தில் திருமணம் செய்து சிறு குழந்தை உள்ள நிலையில் வேலை நீக்கம் செய்தால் தான் என்ன செய்ய முடியும் என மன்றாடினார் அவர். ஆனால் அந்த மனித வள நிர்வாக அதிகாரியோ மனசாட்சி இல்லாமல் ‘எங்கேயோ போய் செத்து தொலை!’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி தொழிற்சாலையிலேயே பெயின்ட் தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக பாலாஜி காஞ்சிபுரத்தில் உள்ள மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யாமல் மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவமனை கூறியவுடன், அவரை நிர்வாகம் ஸ்ரீபெரும்புதூர் ஜெயா மருத்துவமனையில் சேர்த்துள்ளது. அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ‘பெயின்ட் தின்னர் தொண்டை வரைக்கு சென்றதாகவும், இது தற்கொலை முயற்சி அல்ல வெறும் நாடகம்’ எனக் குறிப்பிட்டுள்ளதாக தொழிலாளர் குடும்பம் கூறுகிறது. மேலும், சம்பவம் நடந்த அன்றே நிர்வாகம் மேற்படி சிகிச்சைக்கு முன்வராத நிலையில் அவரது குடும்பம் சொந்த செலவில் சிகிச்சை செய்ய நேர்ந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையில் கொடுத்த புகாருக்கு, பாலாஜியின் நேரடி வாக்குமூலம் இல்லாமல் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்ததாகவும் பாலாஜி நேரடியாக சென்ற பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் பாலாஜியின் தந்தை கூறினார்.

பாலாஜியின் தற்கொலை முயற்சி குறித்து அறிந்த மற்ற தொழிலாளர்கள் நிர்வாகத்தை அணுகி நியாயம் கேட்க முயன்றபோது, அவர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து தன் தரப்பிற்கு ஒரு புகாரையும் தந்துள்ளது நிர்வாகம். தற்போது தொழிலாளர் துறை துணை ஆணையரின் தலையீட்டிற்கு பின்னால் புகாரில் குறிப்பிட்டுள்ள 6 தொழிலாளர்களை தவிர்த்த மற்ற தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பாலாஜி மற்றும் இதர தொழிலாளர்களின் நிலைமை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , . Bookmark the permalink.