மாருதி தொழிற்சாலையில் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், காவல் தடியடி

மாருதி சுசூகி மாநேசர் தொழிற்சாலையில், நிரந்தரத் தொழிலாளர்களும் நிர்வாகமும், ஊதிய ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 வருடங்களில் மாதத்திற்கு 16000 ரூபாய்க்கு மேல் ஊதியம் உயர்த்தப்படும் என்றும் மேலும் தற்போது 40 செகன்டுகளில் தயாரிக்கப்படும் ஒரு கார் 60 செகன்டுகளில் தயாரிப்பதற்கு உற்பத்தி முறை மாற்றப்படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.
நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏற்படுத்தப்பட்ட இந்த ஊதிய உயர்வு, தற்காலிகத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2012ல் நடந்த கலவரத்தை அடுத்து மாருதி ஒப்பந்தத் தொழிலாளர்களை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக தற்காலிகத் தொழிலாளர்களை 6-7 மாத ஒப்பந்தத்தில் 10000-14000ரூபாய்க்கு வேலைக்கு அமர்த்தி வருகிறது. 7 மாதத்திற்கு பின்னர், அவரகள் வேலையை விட்டு நீக்கப்பட்டு 5 மாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் புதிய ஒப்பந்தத்தில் வேலை செய்கினறனர். நிரந்தரத் தொழிலாளருக்கு சப்போர்ட் வேலை என்று கூறினாலும் உண்மையில் அவர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் வேலையை தான் செய்கின்றனர்.

Workers Solidarity Center

Source: Workers Solidarity Center

இந்த வேலை முறையில் ஏற்கனவே தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். வெள்ளிகிழமை அன்று ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகத் தொழிலாளர்கள் சனிக்கிழமை அன்று வேலை நிறுத்தம் செய்தனர். காலை ஷிஃப்டிற்கு போகாமல் தொழிற்சாலை வாயிலில் அனைவரும் கூடினர். அருகில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமரசம் செய்ய முயற்சித்த போது அவர்கள் மறுத்து விட்டனர். நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளே பிரதிநிதிகளை அனுப்பவில்லை.  இவ்வாறான சமரசங்கள் தங்களுடைய நிலைமைகளை மேம்படுத்துவதில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு.மாறாக நிர்வாகப் பிரதிநிதிகளை வெளியே வருமாறு கேட்டனர்.
தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதற்காக நிர்வாகம் குண்டர்களை இறக்கியுள்ளது. இது இன்றைய தொழிற்சாலை பகுதிகளில் சர்வ சாதாரணமாகி விட்டது. மேலும் காவல்துறை கூடிய தொழிலாளர்களின் மேல் தடியடி நடத்தியுள்ளது. இதனால் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஐசியு வில் சேர்க்கப்பட்டுள்ளனர். 100 தொழிலாளர்களையும் தொழிலாளர் ஆதரவு மையத்தைச் சார்ந்த 2 பிரதிநிதிகளையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த 2 பிரதிநிதிகள் தோழர் குஷிராம் மற்றும் ஜிதேந்தர் மாருதியில் வேலை செய்த தொழிலாளர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட குஷிராமை காவல்துறையினர் நிர்வாகப்படுத்த அடித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர்கள் மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டு அனைத்து தொழிலாளர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

This entry was posted in Automobile Industry, Contract Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged . Bookmark the permalink.