தொழிலாளர் விரோதத்தை வளர்க்கும் ஊடகங்கள்!!

”அரசியல் கட்சிகள் தங்களைச் சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது. இல்லையென்றால் கட்சியின் கொள்கைக் கட்டுப்பாட்டில் இல்லாமல், தலைமைக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனித்துச் செயல்படும் நிலைமை உருவாகி விடும். இது பல தகராறுகளுக்கும், கொலைகளுக்கும் வழிவகுத்து விடும்”. இந்த வார்த்தைகளை தொலைநோக்கு அக்கறையுடன் முன் வைத்ததாக நினைத்துக் கொண்டு தினமணி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவையாக இல்லாமல், இடைத்தரகர்களாக மாறுவது தான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதை யாரும் சொல்லத் தயாராக இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? என தினமணி தலையங்கத்தை நிறைவு செய்துள்ளது.

இறுதி வார்த்தைகள் வர்க்கப் பாசத்தில் இருந்து உதித்தது என்பது சொல்லாமல் விளங்கும். மேற்படி அக்கறையும், அவதூறும் மானேசரில் உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து முன்னெழுந்தது. அராஜகத்தைக் கண்டிப்பது அவசியம். மாருதி சுசுகியில் நடந்த படுகொலையையும் அதைத் தொடர்ந்து நடைபெறும், தொழிலாளர் விரோத அணுகுமுறையையும், தொழிற்சங்கங்களும், இடது சாரிகளும் கண்டித்துள்ளனர். ஆனால் தினமணி மட்டுமல்ல எல்லா ஊடகங்களும் சூப்பர்வைசரின் சாதிரீதியான வசைச் சொற்களையும், வசைகளுக்கு ஆளான தொழிலாளியை மனிதவள மேலாளர் சஸ்பெண்ட் உத்தரவிட்டு வெளியேற்றியதையும், நிர்வாகம் அடியாட்களைக் ( பெய்டு பவுண்ஸர் ) கொண்டு தொழிலாளர்களைத் தாக்கியதையும் உலகிற்கு சொல்ல மறுக்கின்றன. சூப்பர்வைசர் தொழிலாளரை சாதியைச் சொல்லி திட்டியது நியாயப்படுத்தக் கூடியதா? தொழிற்ச் சங்கங்களின் கவலை தொழிலாளர்களை ஆத்திரமூட்டி முதலாளித்துவம் தன் சுரண்டல் குனத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது என்பதே.

தொழில் நிறுவனத்திற்குள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வைத்துள்ளனர். இந்தக் கருவிகளில் தொழிலாளர் செய்யும் தவறுகள் பதிவாகிறது. ஆனால் தொழிலாளரை அவமானப் படுத்தும் வார்த்தைகளோ, தொழிலாளரின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வுகளோ பதிவு செய்யப் படுவதில்லை. 21ம் நூற்றாண்டில், ஜனநாயகமும், மனித உரிமையும் உரக்கப் பேசப் பட்டு வருகிறது. கடந்த 2011 துவக்கத்தில் டுனிசியாவில் ஒரு தொழிலாளரை காவல்த்துறை மிகக் கேவலமாக நடத்தியது. அதை அந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஆவேசமான போராட்டத்தில் மக்களும் கரம் கோர்த்தார்கள். அந்த நாட்டின் அதிபர் பென் அலி தினமணியைப் போல் ஒரு அமெரிக்க ஆதரவாளர். இருந்த போதும் மக்கள் சக்திக்கு முன், பென் அலியை அமெரிக்கா ஜனநாயகம் என்ற போர்வையில் காவு கொடுத்தது. மனித உரிமை அல்லது ஜனநாயகம் என்பது அமெரிக்காவும் அதன் ஆதரவாளர்களும் பேசுவதற்கு பயன்படும் சொற்களல்ல, என்பதை அமெரிக்க ஆதரவு ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு இதே மானேசர் சுசுகி நிறுவனத்தில் 33 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். தொழிற் சங்கம் வைத்த குற்றத்திற்காக, சஸ்பெண்ட் செய்யப் பட்டவர்களை மீண்டும் பணிக்கு அனுமதிக்க வேண்டும், என்ற கோரிக்கைகளுக்காக மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது போராட்டக் காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை. இப்போது நடைபெற்றது முழுக்க முழுக்க ஆத்திரமூட்டல் மற்றும் அடக்குமுறை பின்புலத்தில் இருந்து நடைபெற்றது.

இரண்டாவது, அகிம்சை முறையில் தொழிற் சங்கம் நடத்த வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் இதில் மறைக்கப் பட்டிருக்கும் உண்மை யாதெனில், நிர்வாகம் தொழிலாளர் நலத்துறையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை மதித்ததுண்டா? நிர்வாகங்களின் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வருவோர், வந்த நாட்களை விட, வராமல் புறக்கணித்ததே அதிகம். நடைபெறும் பேச்சு வார்த்தைகளில், தொழிலாளர் துறை அதிகாரிகள், அரிதாக அளிக்கும் அறிவுறைகளை மதித்து நடப்பதுண்டா?

மூன்றாவது, சர்வ தேச தொழிலாளர் அமைப்பு நிறைவேற்றிய, தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் ( இணக்க விதி 87 ) மற்றும் கூட்டு பேர உரிமைக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் ( இணக்க விதி 98 ) ஆகியவற்றிற்கு இன்று வரை இந்திய அரசு ஒப்புதல் தரவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் கூட இதற்கு ஒப்புதல் தந்துவிட்டன. இது பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் ஏற்பாடு மட்டுமல்ல. தொழிலாளர்களின் உரிமைகளை கைகழுவுகிற அணுகுமுறையும் ஆகும்.

நான்காவது ஒரு நிறுவனத்தில் வேலை நிறுத்தம் என்றால் உடனடியாக காவல்த் துறை வந்து, தொழிலாளர்களை மிரட்டுகிறது. பல நேரங்களில் கைது செய்கிறது. ஆனால் என்றாவது, தொழிலாளர் கொடுத்த புகார் மீது, காவல்துறை அல்லது அரசு நடவடிக்கை எடுத்ததுண்டா? ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்த அனுமதித்ததுண்டா? மிகச் சமீபத்தில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஊழியர் சங்கத்தின், வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஏற்றுக் கொண்ட தொழிலாளர் துறை ஆணையரின் அறிவுறையை அமலாக்க மறுத்து வருகிறது நிர்வாகம். பன்னாட்டு நிறுவனங்கள் இதை விட பலமடங்கு அத்துமீறல்களைச் செய்கின்றன..

அகிம்சை வழியில் இந்திய அரசியல் சட்டம் அனுமதித்த ஜனநாயக உரிமைகள் பறிக்கப் படுவதில் இருந்தே, இது போன்ற குழப்பங்கள் அரங்கேறுகின்றன. இந்த குழப்பங்களைப் பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களும், அரசும் கூட்டாக இணைந்து மேலும் உரிமைகளை மறுப்பதற்கு முயற்சிக்கின்றன. இந்த முயற்சிக்கு ஊடகங்களும் தங்கள் வாதத்திறமையால் வலுச் சேர்க்கின்றன.

“கொலையுண்ட அவனிஷ்குமார் குடும்பத்திற்கு மாருதி நிறுவனம் பெரும் தொகை வழங்கும், அரசாங்கமும் கூட அவரது குடும்பத்திற்கு கருணைத் தொகை அளிக்கலாம். மாருதி நிறுவனம் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் மீண்டும் பழைய படி செயல்படத் தொடங்கி விடும். ஆனால் இந்த சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள 99 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு யாரும் நிதி உதவி அளிக்க மாட்டார்கள். இவர்கள் பிணையில் வந்தாலும், இதே நிறுவனத்தில் வேலைக்கு அனுமதிக்கப் படுவது மிகமிக அரிது. வேறு இடத்தில் வேலை கிடைப்பது அதை விட அரிது. அந்தக் குடும்பங்களின் கதி என்ன?” இந்த வரிகளையும் தினமணி தலையங்கம் தான் கூறுகிறது. கைது செய்யப் பட்ட அனைவரையும் நிர்வாகத்தை விட விரைவாக குற்றவாளியாக்கித் தீர்ப்பையும் எழுதிவிட்டது தினமணி.

நிலப் பிரபுத்துவ ஆதிக்க சக்திகள், தங்களின் சாதிய மேலாதிக்கத்தை நிலைநாட்ட, ”அடக்கு முறைக்கு எதிர்ப்பு என்ற பெயரில், நிலப்பிரபுக்களை பகைத்துக் கொண்டால் வேலை கிடைக்காது” என மிரட்டுவார்கள். அதை தினமணி வேறு வார்த்தைகளில், தொழிலாளர் மீதான பச்சாதாபத்தில் கூறுவது போல் மிரட்டுகிறது.

இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் வரும் 25 ஜூலை அன்று சந்திக்கிறார்கள். மாருதி நிறுவன சம்பவத்தில் ஒரு பகுதியாக நிரந்தரத் தொழிலாளர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் ஆகியோருக்கு இடையிலான பாரபட்சமும் ஒரு காரணம் என்பதை ஏற்காவிட்டாலும், ஒப்பந்தத் தொழிலாளர் நியமனத்தில் நியாயம் இருப்பதாக, அதன் தலைவர் சாண்டில்யா ஒப்புக்கொண்டுள்ளார். இன்று இந்தியாவில் வந்து முதலீடு செய்கிற அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், 20 சதம் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்களை கொண்டிருக்கிறது. 80 சதமானம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். ஒரே வேலைக்கு இரண்டு விதமான சம்பளம் கொடுப்பதை நிறுவனப் பிரதிநிதிகள் நியாயப் படுத்துகின்றனர்.

ஒரு ஒப்பந்தத் தொழிலாளர் 480 நாட்கள் பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மதிப்பதில்லை. மாருதி தொழிலாளர் சங்கம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததும் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைக்குக் காரணமாகும்.

சில ஆங்கில நாளிதழ்களில் அரசு குறிப்பிடுவதாக வெளியிட்டுள்ள செய்திகள் மேலும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கு எடுத்துக் கொடுப்பதாக அமைந்துள்ளது. அதாவது இந்தப் போராட்டங்களுக்குப் பின்னனியில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்ஸலைட்டுகள் இருக்கலாம் என்று கருதுவதாக செய்தி சொல்கிறது. மாவோயிஸ்டுகள் இருக்கும் இடங்களில் காவல் துறையினாலும் அரசுகளினாலும் எந்த வித சட்டவிரோத நடவடிக்கையையும் தடுக்க முடியவில்லை. மாறாக இக்காலத்தில் அரசு அதிதீவிர இயக்கங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவது போல் நடந்து கொண்டன. இப்போது தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க மாவோயிஸ்டு முத்திரை குத்த முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சி தவறு செய்கிற அதி தீவிரவாதிகளுக்கு, மேலும் மயக்கத்தை உருவாக்குவதற்கு தான் பயன் படும். ஜனநாயக ரீதியாக செயல்படும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கை மறைக்கும் நோக்கத்துடன் எழுதப் படுவதாகும்.

மாருதி சுசுகி நிறுவனத்தில் நிகழ்ந்த சம்பவம் இனி எதிர்காலத்தில் நடக்கக் கூடாத ஒன்று. தொழிற் சங்கத்தை அங்கீகரிப்பது, ஒப்பந்தத் தொழிலாளர்களை சட்டப் படி நிரந்தரப் படுத்துவது ஆகியவை நிறைவேறுகிற போது ஜனநாயகத்தின் மீது கூடுதல் நம்பிக்கை கொள்பவர்களாக தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினரையும் உருவாக்கிட முடியும். அதை உடனடியாக செய்வதே அரசின் கடமை.

எஸ். கண்ணன்

This entry was posted in Analysis & Opinions, Automobile Industry, தமிழ். Bookmark the permalink.

3 Responses to தொழிலாளர் விரோதத்தை வளர்க்கும் ஊடகங்கள்!!

  1. Rajavelu. J says:

    Protests in Solidarity with Maruti workers

    On 3rd August, at least 300 people, braving heavy downpour, marched from Subodh Mallik square to Camac street in Kolkata in solidarity with the fighting Maruti workers of Manesar plant. AICCTU, IFTU along with the worker’s union from Hindmotor, Bauria cotton mill, Kalyani spinning mill, Garden Rich Ship Builders, and Hindusthan Lever participated in the march. A 5-member team met the regional head of Maruti-Suzuki company and submitted a memorandum demanding immediate release of all arrested workers, cessation of lock out etc. Outside the Maruti office a protest meet was organised. Basudeb Bose, State general secretary of AICCTU spoke on the occasion along with other TU leaders. On 26th July, another solidarity protest demonstration was organised
    by AICCTU along with NTUI and IFTU in the same venue.

    On 27th July 2012 the Democratic Advocate Association organized a demonstration in the Madras High Court campus to support the Maruti workers’ struggle. This programme was headed by Bharathi (DAA Organizor) and it was addressed by senior advocates K M Ramesh, Ayyadurai, and M John Selvaraj (Organizer of Indian Lawyers Union). In this programme the protestors demanded release of the Maruti workers, and action against the Maruti management, and also demanded the Tamilnadu government to enact the trade union act and undertake the Nokia, Hyundai, Ford and other foreign and Indian companies.

Comments are closed.