பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் அக்டோபர் மாத இதழ் – தொழிலாளர் குரல்

பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் மாதப்பத்திரிக்கை இந்தியில் வெளியிடப்படுகிறது. 1982ல் தொடங்கப்பட்டது. தில்லி பரிதாபாதில், முக்கால்வாசி தொழிற்சார்ந்த தொழிலாளர்கள் (தொழிலாளர் சட்டங்களின்) பார்வைக்கு வராதத் தொழிலாளர்கள் ஆவர். 85 சதத் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படும் தற்காலிகத் தொழிலாளர்கள். இங்கு தற்போது மாதம் ரூ3914 ஆக குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதுவும் 80 சதத் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 6 மாதங்கள் வரை சம்பள பாக்கி உண்டு. இங்கு மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில், 15 வருடங்கள் கழித்தும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் தரப்படுவதில்லை.

ஒவ்வொரு இதழிலும் பரிதாபாத் மஸ்தூர் சமாச்சார் 50-60 தொழிலாளர்களின் குரல்களை பதிவு செய்கிறது. 1000 பத்திரிக்கைகளிலிருந்து ஆரம்பித்து தற்போது 7000 பத்திரிக்கைகள் மாதம் விநியோகிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பரிதாபாத் மற்றும் சுற்று  பகுதிகளில் ரோட்டோரமாக ஷிஃப்ட் மாறும் போது சமாச்சார் தொழிலாளர் தொண்டர்கள் தொழிலாளர்களுக்கு பத்திரிக்கையை இலவசமாக விநியோகிக்கின்றனர்.

தொழிலாளர் கூடம் இந்த பதிவுகளை மாதம் ஒரு முறை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடும்.

(நிர்வாகங்கள்) தொழிலாளர் சட்டங்களை மீறுவது சர்வ சாதாரணமாகி விட்டது. சட்டவிதிகளின் படி நடக்கும் தொழிற்சாலைகள் அபூர்வமாகி விட்டன. இன்றைய சட்டங்கள் வேலை செய்வதில்லை, அவைகள் தேவையற்றவைகளாகி விட்டன என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இது வழக்கமாக உள்ளதா அல்லது வழக்கத்திற்கு மாறாக புதிய நடைமுறையா? இந்த நடைமுறை மூலதனத்திற்கும் தொழிலாளருக்கும் உள்ள பாரம்பரிய சமூக உறவை மாற்றுகின்றதா? மூலதனத்தின் இன்றைய பரிமாணத்தில் எழும் சமூக உறவுகள் என்ன? இதைக் குறித்து உலகின் 700 கோடி மக்களும் சிந்திக்க வேண்டாமா? இந்த உரையாடலில் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பங்கு பெற வேண்டும். இந்த உரையாடலுக்கு பயன் சேர்ப்பதற்கு மஸ்தூர் சமாச்சர் (தில்லி-மாநேசர்-பரிதாபாதில் உள்ள) தொழில் சார்ந்த தொழிலாளர்களின் பேட்டிகளை தொகுத்துள்ளது.

SKH மெட்டல் தொழிலாளர் : மாநேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலியின் கேட் நம்பர் 4ல் எஸ்கேஹெச் மெட்டல்ஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. 7 ஒப்பந்த கம்பெனிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தொழிற்சாலை 2006லிருந்து உற்பத்தி செய்து வந்தும் ஒரு தொழிலாளர் கூட நிரந்தரம் இல்லை. இரண்டு 12 மணி நேர ஷிஃப்டில் தொழிலாளர்கள் வேலை செய்து மாருதி கார்களுக்கு பெரிய சஸ்பென்ஷன் மற்றும் ஆக்சில்கள் தயாரிக்கின்றனர். ஓவர்டைமிற்கு சிங்கிள் ரேட்தான் அளிக்கப்படுகிறது. இங்கு பிரஸ் ஷாப், வெல்டிங் ஷாப் மற்றும் பெயின்ட் ஷாப் உள்ளது. வெல்டிங் ஷாப்பில் உள்ள 2 செக்ஷனில் 80-90 ரோபாட்கள் இயங்குகின்றன. பல தடவை சென்சர்கள் வேலை செய்யாததனால் விபத்துகள் ஏற்படும். ஒரு ரோபாட்டினால் ஒரு தொழிலாளர் இறந்த பிறகு பராமரிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது ஆனால் ஆட்குறைப்பும் ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்டேஷனில் முன்னர் 9 தொழிலாளர்கள் வேலை செய்தால் தற்போது 6 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். சில தொழிலாளர்கள் இரண்டு ஸ்டேஷன்களை ஆப்பரேட் செய்கின்றனர்.

12 மணி நேர வெல்டிங் வேலையால், கண்வலி அதிகமாகிறது. தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிற்பதும், வேலையிலிருந்து நீக்கப்படுவதும், புது ஒப்பந்த தொழிலாளர்கள் வருவதும் சகஜமாகி விட்டது. மாருதி சுசுகியில் விடுமுறை என்றால் இங்கு விடுமுறை விடப்படும். கடந்த வருடத்தில் 50-60 நாள் தொழிற்சாலை மூடியது. இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடையாது. ஷிஃப்ட் ஆரம்பிப்பதற்கு முன்னால் 15 நிமிடங்களாவது நாங்கள் ரிப்போர்ட் செய்ய வேண்டும். இதை கணக்கல் எடுத்து சில வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை கேட்டோம் ஆனால் தரவில்லை. 2-3 வருடங்களாக ஒரு ஷிஃப்டுக்கு 10ரூபாய் என்ற அடிப்படையில் எங்களுக்கு போனஸ் தருகின்றனர்.

கிராஃபிடி எக்ஸ்போர்ட்ஸ் தொழிலாளர் : எங்களது தொழிற்சாலை குர்காவில் உள்ளது. பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கின்றோம். ஆகஸ்டில் எங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் நிறுவனத்திலிருந்து இன்ஸ்பெக்ஷனிற்கு வந்தனர். அதற்குள் அனைத்து ஆடைகளுக்கு பேக் செய்யப்பட்டு அனுப்புவதற்கு தயாராக இருந்தன. அவர்கள் சில பாக்ஸ்களை திறந்து பார்த்தனர். சில ஆடைகள் சரியாக பிரஸ் செய்யப்படவில்லை. சிலவற்றில் தையல்கள் சரியாக இல்லை. அனைத்து பாக்ஸ்களையும் அவர்கள் திறக்க ஆரம்பித்தனர். திரும்பவும் ஆடைகளை தைத்து பேக் செய்ய வேண்டிய நிலைமை. அக்டோபர் கம்பிளையன்ஸ் கமிட்டி வருவதாக இருந்தது. மதிய உணவு இடைவெளி ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் புது நிர்வாக அதிகாரி எங்களை மீட்டிங்கிற்கு அழைத்தார். கமிட்டி கேட்டால், நாங்கள் ஓவர்டைம் செய்வதில்லை, ஒவ்வொரு மாதம் 7ம் தேதியில் ஊதியம் தந்து விடுகின்றனர் என்றும், ஞாயிறு விடுமுறை, சிக் விடுமுறை, பெய்ட் லீவுகள் அனைத்தும் தரப்படுவதாகவும் கூற சொன்னார். இஎஸ்ஐ, பிஎஃப் அனைத்தும் தரப்படுவதாகவும், அப்பாயின்ட்மன்ட் கார்டை கேட்டால் தங்கும் அறையில் இருப்பதாகவும் கூற சொன்னார். அவர்கள் எவ்வளவு காலமாக இங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால், அனைவரும் புதிதாக சேர்ந்துள்ளதாக கூற சொன்னார். தொழிலாளர்கள் அனைவரும் ஏன் இவர் இவ்வளவு பொய்கள் பேச சொல்கிறார்? இங்கு ஏதும் ஊழல் நடக்கிறதா என்று பேசி கொண்டனர்.

டிடெயில்ஸ் எக்ஸ்போர்ட் தொழிலாளர்: எங்களுடைய தொழிற்சாலை தில்லியில் உள்ளது. 2011ல் 400 டெய்லர்கள் வேலை செய்தோம். அவர்களில் 43 பேரை வேலை விட்டு நீக்கினர். தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டனர். நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றது. 33 மாதங்கள் கழித்து 2014 நவம்பரில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 21 டெய்லர்கள் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டனர். வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது 16 தொழிலாளர்கள் கம்பெனியலிருந்து வேலை விட்டு சென்றனர். இந்த வருடம் செப்டம்பர் 16ம் தேதி வேலைக்கு எடுக்கப்பட்ட 21 தொழிலாளர்களையும் திரும்பவும் வேலையிலிருந்து நீக்கி விட்டனர்.

பி எஸ் என்டர்பிரைஸ் தொழிலாளர்: எங்களுடைய தொழிற்சாலை பரிதாபாதில் உள்ளது. நாங்கள் இரண்டு ஷிஃப்டில் 11.5 மணி நேரம் வேலை செய்கிறோம். பவர் பிரஸ்சை வைத்து வாகன உதரி பாகங்கள் தயாரிக்கிறோம். மெஷின்களை குளிர வைக்க ஒவ்வொரு ஷிஃப்டிற்கு பிறகு அரை மணி நேரம் நிறுத்தி விடுவார்கள். கல்பனா தொழிற்சாலையிலிருந்து மெட்டல் ஷீட்களை கொண்டு வந்து மாருதி, டாடா, மகிந்திரா கார் தொழிற்சாலைகள் கொடுக்கும் விதிகளின் படி மாற்றி அமைத்து திரும்பவும் அதே தொழிற்சாலைக்கு அனுப்பி விடுவோம். பல தடவை, பவர் பிரஸ்களில் கைகள் துண்டாகி விடும். ஒரு தடவை, ஒரே வாரத்தில் 5 பேருக்கு கைகள் அடிபட்டன. சிசுபால் 3 விரல்களை இழந்தார். சந்திற்கும் சன்னிக்கும் கட்டை விரல் துண்டித்தது. ராகேஷ் ஒரு விரலை இழந்தார். ஷேர் சிங் கட்டை விரலையும் இன்னொரு விரலையும் இழந்தார். நிர்வாக இயக்குனர் இதெல்லாம் சகஜம் என்கிறார். பவர் பிரசில் விபத்துகள் ஏற்படும் என்று கூறுகிறார். காயம் பட்ட தொழிலாளர்களை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதில்லை. ஏதாவது தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்கின்றனர்.

காவல் தொழிலாளர்: டிஎஸ்எஸ் செக்யூரிடி எனும் நிறுவனம் 20 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. மாநேசர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தோம். தொழிற்சாலையை மூடி விட்டபின் மார்ச் 7 அன்று டிஎஸ்எஸ் நிறுவனத்துடன் இருந்த ஒப்பந்தம் முறிவடைந்தது. பிப்ரவரி ஊதியம் மார்ச் 23வரைக்கு தரவில்லை. நாங்கள் 3 பேர் தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டோம். ஏப்ரலிலிருந்து ஜூலை வரை 10-15 நாளைக்கு ஒருமுறை புதிய தேதிகள் கொடுத்தார்களே தவிர ஊதிய பாக்கியை தரவில்லை. தொழிலாளர் ஆணையர் எங்களை லாயரை பார்க்க சொல்லிவிட்டார். லாயர் எங்களிடமிருந்து 500ரூபாய் வாங்கினார் மேலும் ஊதியம் வந்த பிறகு அதில் 10சதம் எடுப்போம் என்று கூறியுள்ளார். கடந்த 2 மாதங்களாக மேலும் புது தேதிகளை கூறுகின்றனர். லாயர் ஊதியத்தை பெற கால அவகாசம் வேண்டும் என்று கூறுகிறார்.

சந்தார் காம்பொனன்ட்ஸ் தொழிலாளர்: எங்களுடைய தொழிற்சாலை மாநேசரில் உள்ளது. ஹோண்டா, ஹீரோ பைக்குகளுக்கு பாகங்கள் தயாரிக்கிறோம். 20 நிரந்தரத் தொழிலாளர்கள், 135 ஸ்டாப்கள், 400 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 12 மணி நேர ஷிஃப்ட் வேலை. மோல்டிங் பகுதியில் இஞ்சினியர் எங்கள் பின்னாடியே துரத்துகிறார். வேலை செய்து கொண்டே டீ குடிக்க சொல்கிறார்.

கைலாஷ் ரிப்பன் தொழிலாளர்: எங்கள் தொழிற்சாலை குர்காவில் உள்ளது. 2013 பிப்ரவரியில் 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தோம். தொழிற்சாலைக்குள் செல்லாமல் கேட் முன்னர் உட்கார்ந்து விட்டோம். இரண்டு ஷிஃப்டுகளிலிருந்தும் உள்ள தொழிலாளர்கள் உள்ளே செல்லாமல் 24 மணி நேரம் அங்கேயே உட்கார்ந்தோம். அதற்கு பின்னர் ஹரியானா மாநிலத்தின் குறைந்த பட்ச ஊதியத்தை எங்களுக்கு கொடுக்க முன் வந்தனர். 12 மணி நேர அடிப்படையில் இரண்டு ஷிஃப்டுகளில் 400 தொழிலாளர்கள் வேலை செய்கின்றோம். நாங்கள் ரிப்பன்கள், பட்டன்கள் மற்றும் முகவரிசீட்டுகள் தயாரிக்கிறோம். நூல்களை கலர் செய்வது, பிரிண்ட் வேலைகளும் செய்கின்றோம். சட்ட ஆவணங்களில் நிர்வாகம் நிறைய குளறுபடி செய்கின்றனர்.

மில்லெனியம் எம்பராய்டரி தொழிலாளர்: எங்கள் தொழிற்சாலை தில்லியில் உள்ளது. நாங்கள் இரண்டு ஷிஃப்டில் 12 மணி நேரம் வேலை செய்கின்றோம். மாஸ்டர் தொழிலாளர் உட்பட அனைவருக்கும் இஎஸ்ஐ, பிஎஃப் கிடையாது. சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் கிடையாது. 26நாள் வேலைக்கு ஒரு ஹெல்பர் 7500 ரூபாய் ஊதியம் பெறுகிறார், ஒரு ஆப்பரேட்டர் 9000-10500ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

இன்டர்வ்யூ பேஷன் தொழிலாளர்: எங்கள் தொழிற்சாலை தில்லியில் உள்ளது. 180 தொழிலாளர்கள் வேலை செய்கிறோம். ஒருவருக்கு கூட குறைந்த பட்ச ஊதியம் கிடையாது. 60 தொழிலாளர்களுக்கு மட்டும் இஎஸ்ஐ, பிஎஃப் உண்டு. மாதத்தில் 200-300 மணி நேரம் ஒவர்டைம் உண்டு ஆனால் சிங்கிள் ரேட் தான். குறைந்த பட்ச ஊதியம் கேட்டு 2நாள் வேலை நிறுத்தம் செய்தோம். ஒன்றும் நடக்கவில்லை. ஹெல்பர்கள் மாதத்திற்கு 6000-6500 ரூபாய் ஊதியம் பெறுகின்றனர் டெய்லரகள் 7500-8700ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்.

இன்டோ ஆட்டோடெக் தொழிலாளர்: இந்த தொழிற்சாலை மாநேசரில் உள்ளது. 11.5-12.5 நேரம் என்று 2 ஷிஃப்டுகளில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஹோண்டாவிற்கு பாகங்கள் தயாரிக்கிறோம். முன்னர் 50 நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்தோம் இப்போது 10 பேர்தான் உள்ளோம். சங்கம் அமைத்தற்காக 40 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டனர்.

தீம் எக்ஸ்போர்ட் தொழிலாளர்: எங்கள் தொழிற்சாலை தில்லியில் உள்ளது. 50 பெண் தொழிலாளர்கள் கிராஃப்ட் வேலை செய்கின்றோம். தில்லியில் குறைந்த பட்ச ஊதியம் 9048 என்றாலும் எங்களுக்கு மாதம் 5000ரூபாய் ஊதியம் தான்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Garment Industry, தமிழ் and tagged , . Bookmark the permalink.