பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்போம் – அகில இந்திய மக்கள் மேடை

கோவை பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அந்நிறுவனத்தின் மனித வளத்துறை துணைத்தலைவர் திரு. ராய்ஜார்ஜின் மரணத்திற்கு காரணம் என்று சொல்லி நான்கு பெண் தொழிலாளர்கள் ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் குமாரசாமி மற்றும் ஏஐசிசிடியு மாநில நிர்வாகிகள் உட்பட 27 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Photo Credit: AICCTU

Photo Credit: AICCTU

அந்த வழக்கில் 03.12.2015 அன்று கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் கொலைச்சதி நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி 19 பேரை விடுதலை செய்து நிருபிக்கப்படாத குற்றத்திற்கு 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 20.09.2009 கொலைச்சதி என்ற அஸ்திவாரத்தின் மீது 21.09.2009 கொலைச்சம்பவம் என்ற கட்டிடம் நிற்பதாக வழக்கில் சொல்லப்பட்டது. இப்போது 03.12.2015 தீர்ப்பில் கொலைச்சதி நிரூபிக்கப்படவில்லை எனச்சொல்லி விட்டார். ஆனால் 8 பேருக்கு கொலை மற்றும் அத்துமீறி நுழைந்தது என்ற குற்றங்கள் நிருபிக்கப்பட்டதாகச்சொல்லி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்.

பிரிக்கால் தொழிலாளர்கள் தீர்ப்பு சாட்சியங்களுக்குப் புறம்பானது என்றும், இரட்டை ஆயுள் தண்டனை என்ற அதீத தண்டனையைக் கூட முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க விரோதத்தை பிரதிபலிக்கிறது எனச்சொல்லி தீர்ப்பிற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகவும், மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்கப் போவதாகவும் சொல்லி உள்ளனர். நாடு முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. போராடிய மாருதி தொழிலாளர்கள் 36 பேர் பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகவே பிணைகூட வழங்கப்படாமல் சிறையில் வாடுகின்றனர். இந்நிலையில் 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை எனும் கடும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் விருப்பபடியான தொழிற்சங்கங்களுக்காகப் போராடினால் அதைச் சகித்துக்கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல, தண்டனையும் பெறுவீர்கள் என்பதையே போராடுகின்ற தொழிலாளர்களுக்கு சொல்லுகின்ற செய்தியாக நீதிமன்றத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள், மக்கள் போராட்ட இயக்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அகில இந்திய மக்கள் மேடை(AIPF) பிரிக்கால் தொழிலாளர்களுக்கு தன் முழு ஒருமைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஜனவரி 18- பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நாடு தழுவிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்படும் நாளில் அகில இந்திய மக்கள் மேடை நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பிரிக்கால் தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம் வாரீர்!

பிரிக்கால் தொழிலாளர்களின் போராட்ட வரலாறு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

மக்களைக் காப்போம் ! ஜனநாயகம் காப்போம் !

பிரிக்கால் எட்டு பேரை விடுதலை செய் ! Free The Pricol 8!

ஆர்ப்பாட்டம்

நாள்: 18.01.2016 திங்கள் காலை 10.00 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை

 

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.