லூகாஸ் டிவிஎஸ் நிர்வாகத்தால் வெளியேற்றபட்ட 2400 பயிற்சியாளர்களின் நிலை கேள்விகுறி – பயிற்சியாளர்களுக்காக தனியாருக்கு கொடுக்கபட்ட கோடிகள் வீண்

Source: Indian Labour News

Source: Indian Labour News

லூகாஸ் டிவிஎஸ் சென்னை பாடி தொழிற்சாலையில் வேலை செய்து வரும் சுமார் 2400 அப்பிரன்டைஸ் தொழிலாளர்கள் கடந்த ஜனவரி 8 ஆம் தேதியில் இருந்து வேலையில் நீக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 7 அன்று நடந்த இரவு ஷிஃப்டில் வேலை செய்த பயிற்சியாளர்களும், காலை ஷிஃப்டில் வேலைக்கு வந்த தொழிலாளர்களும் ஊதிய உயர்வு, பணி நிலைமைகள் மாற்றக் கோரி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். லூகாஸ் டிவிஎஸ் தொழிலாளர்கள் சங்கம், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினரும் சிஐடியு மாநில தலைவரும் ஆன தோழர் சவுந்தராஜன் போராட்டத்தில் தலையீட்டிய பின்னர், 11 ஜனவரி அன்று டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர் துணை ஆணையர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தொழிலாளர்களை மீண்டும் 18ஆம் தேதியில் வேலைக்கு சேர்த்து கொள்வதாக நிர்வாகம் ஒப்பு கொண்டதாக சிஐடியு தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் ஜனவரி 18 அன்று பயிற்சியாளர்கள் வேலைக்கு திரும்பிய போது, நிர்வாகம் அவர்களின் விவரங்களை சேகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. தொழிலாளர்களிடம் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று நிர்வாகம் கூறியதாகக் கூறப்படுகிறது. நிர்வாகம் தங்களுக்கு பதிலாக வேறு மாணவர்களை சேர்த்து கொண்டிருப்பதாக தொழிலாளர்கள் கூறினர். இந்த பயிற்சி 12 மாத காலத்திற்கான பயிற்சியாகும். பல பயிற்சியாளர்கள் ஏற்கனவே 9 மாதங்களுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர். ஒரு தொழிலாளர் பயிற்சியை முடிப்பதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளதாக தொழிலாளர்கள் கூறினர்.

சென்னையில் உள்ள லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள ஆட்டொமொபைல் துறைகளுக்கு உதிரிபாகங்களை தயாரி;த்து வருகிறது. இங்கு 600 நிரந்தரத் தொழிலாளர்கள், 3000 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் 2400 பயிற்சியாளர்கள் வேலை செய்வதாக தெரிகிற்து. 2400 பயிற்சியாளர்களில் 1500 பேர் 1வருட சான்றிதழ் பெரும் பயிற்சிக்காக வந்தவர்கள். மற்ற தொழிலாளர்கள் கடந்த 2-3 வருடங்களாக பயிற்சியாளர் என்ற பெயரில் வேலை செய்கின்றனர்.

18-22 வயதிற்குறிய இந்த பயிற்சியாளர்கள் பொது மற்றும் தனியார் துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டஙகளில் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். பயிற்சியில் சேர்ந்து 1 மாதத்திற்கு சீனியர் பயிற்சியாளர்களால் பயிற்சி தரப்பட்டு, நேரடி உற்பத்தியில் இவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர் என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அனைத்து தொழிலாளர்களைப் போல இவர்களும் உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும். உதாரணமாக ஒரு பயிற்சியாளர் ஒரு நாளில் 36 ஆல்டர்னேடர்களை தயாரி;க்க வேண்டும். இந்த இலக்கை எட்டா விட்டால் மிகவும் கண்டிக்கப் படுகின்றனர்.

பயிற்சியாளர்கள் 8 மணி நேர ஷிஃப்டில் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 4 முறை என்று ஒரு மணி நேர ஒய்வு உண்டு. இதற்காக அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் தரப்படுகிறது(அதாவது ஒரு நாளைக்கு 288ரூபாய் ஊதியம்). இந்திய அரசு பயிற்சியாளர்களுக்கு 50சதம் வரை ஊதியத்தை தானே அளிக்க முன் வந்துள்ளது. தொழிலாளர்களின் கூற்றுப்படி அவர்களுடைய ஊதியத்தில் ரூ4500 அரசிடமிருந்து வருகிறது.(2-3 வருடம் வேலை செய்யும்) சீனியர் டிரெயினிகளுக்கு அரசின் மானியம் கிடையாது. அவர்களுக்கு நிர்வாகம் மாதம் ரூ7000 ஊதியமாக தருகிறது.

லூகாஸ் டிவிஎஸின் மற்ற குழும நிறுவனங்கள் உட்பட இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பயிற்சியாளர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்கு தரப்படும் 7000-7500ரூபாய் ஊதியம் குறைவு என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதைத் தவிர அவர்களுக்கு தரப்படும் உணவிலும் குறைபாடுகள் உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நிரந்தரத் தொழிலாளர்கள் சாப்பிட்டபின்னர் மீதம் இருக்கும் உணவே இவர்களுக்கு தரப்படுவதாக தொழிலாளர்கள் குறை கூறினர். மேலும் உற்பத்திகளில் சூப்பர்வைசர்களும் செக்யூரிடி ஊழியர்களும் இவர்களை தரக்குறைவாகவே நடத்துகின்றனர் என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு எதிராகவும் ஒரு மாநகரத்தில் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் ஊதியம் கோரியே தொழிலாளர்கள் போராடினர்.

இந்த பிரச்சனைகளை குறிப்பாக உணவுப் பிரச்சனையை பல மாதங்களாக பயிற்சியாளர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். மேலும் ஊதியத்தை 10500ரூபாயாக உயர்த்த கோரி வந்தனர். நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஜனவரி 4 முதல் தங்களுடைய கோரிக்கைகளுக்காக பயிற்சியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள தொடங்கினர். 3நாட்கள் உண்ணாவிரதம் நடத்தியும் நிர்வாகம் பயிற்சியாளர்களை புறக்கணித்தது மட்டுமல்லாமல் எந்த ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்று பயிற்சியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதனால் ஜனவரி 7 இரவு ஷிஃப்டுகளில் வேலை செய்த பயிற்சியாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர். உடனேயே பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிர்வாகம் பிரச்சனைகளை தீரப்பதாக வாக்குறுதி அழைத்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமார் இரவு 3.45 நடந்து கொண்டிருக்கும் போது அடுத்த ஷிஃப்ட் பயிற்சியாளர்கள் உள்ளே வராமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்த பயிற்சியாளர்களும் கேட்டிற்கு பக்கத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.

நி;ர்வாகம் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விடுமுறை அளித்து தொழிற்சாலையில் இருந்து வெளியேற நிர்பந்தித்தது. ஆனால் ஜனவரி 10 வரை தொழிலாளர்கள் நகரவில்லை. காவல் துறை தலையிட்டும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தது. 11ம் தேதி நிரந்தரத் தொழிலாளர்கள் சிலர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், நிர்வாகம் போராட்டத்திற்கு எதிராக நிர்வாகம் தடையுத்தரவு வாங்கியுள்ளதாக கூறி காவல்துறை தொழிலாளர்களை கலைவதற்கு நிர்பந்தித்துள்ளனர். தொழிலாளர்கள் மறுத்ததால் 1400 பேரை கைது செய்துள்ளனர். ‘நீதான் தலைவரா? உன்னை தூக்கி உள்ளே வைத்தால் எல்லாம் தானாக சரியாகி விடும்” என்று காவல் துறை மிரட்டியதாக ஒரு தொழிலாளர் கூறினார்.

இளைஞர்களே இந்த நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்களின் திறனை வளர்ப்பதே நாட்டின் வளர்ச்சி என்றும் பொருளாதார வளர்ச்சி என்றும் ‘ஸ்கில் இந்தியா’ என்ற திட்டத்தை வெகுவாக விளம்பரபடுத்திய அரசின் காவல்துறை நல்ல உணவு, ஊதியத்தை கேட்டதற்காக இதே இளைஞர்களை சிறையில் அடைத்து கேவலப்படுத்துகிறது. அவர்களது ‘பயிற்சியும்’ கேள்விக்குறியாகி உள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்களுக்காக ஐஎன்டியுசி யுடன் இணைக்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகத்தால் அங்கீகரி;க்க பட்டுள்ளது. இந்த சங்கம் ஒப்பந்த தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் ஒருங்கிணைக்கவில்லை. பயிற்சியாளர்களின் போராட்டத்திற்கு, நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு இருந்தும் சங்கம் இவர்களின் பிரச்சனைகளை எடுக்க முன்வரவில்லை. பயிற்சியாளர்களுக்கென்று தனியாக சங்கம் இல்லை. என்றாலும் பகுதியில் உள்ள சிஐடியு, ஏஐசிசிடியு, ஏஐடியுசி அமைப்புகள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பயிற்சியாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தவில்லை என்றால் ஒட்டு மொத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தொழிலாளர் துறை கொடுத்த கால அவகாசத்தை நிர்வாகம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக தான் தெரிகிறது. பலத் தொழிலாளர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், நிர்வாகம் தங்களை மீண்டும் அழைக்கும் என்ற நம்பிக்கையில் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்த கால அவகாசத்தின் மூலம் பயிற்சியாளர்களின் ஒற்றுமையை நிர்வாகம் பலவீனப்படுத்தி உள்ளது. 19 ஜனவரியில் நடந்த தொழிலாளர் துறை பேச்சுவார்த்தையில் அரசு பிரதிநிதிகள், தொழிலாளர்கள், சிஐடியு பிரதிநிதிகள், நிர்வாகம் கலந்து கொண்டனர். இதில் பயிற்சியாளர்களை மீண்டும் எடுத்து கொள்ள மாட்டோம் என்றும் தங்களுக்கு எந்த பயிற்சியாளர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினர் என்று நிர்வாகம் கூறியதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

பயிற்சியாளர்களின் இந்த பரிதாபமான நிலையை மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகள் எடுக்கும் நிலையில் சில கேள்விகளையும் நாம் கேட்க வேண்டியுள்ளது:
1. பயிற்சியாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு உற்பத்தி இலக்கை அடைய வேண்டும் என்ற நிலை உள்ள போது அவரகளுக்கு குறைந்த பட்ச ஊதியம் கூட கொடுக்கப் படாதது எவ்வாறு நியாயமாகும்? நிரந்தரத் தொழிலாளர்களின் என்ட்ரி ஊதியம் பயிற்சியாளர்களுக்கு தரப்பட வேண்டும்.
2. ஒரு பயிற்சியாளர் பயிற்சி பெருவதற்கு ஒரு மாத காலமே ஆகிறது என்றால் ஏன் ஒரு வருடத்திற்கு பயிற்சி திட்டம் செயல் படுத்தப்படுகிறது? குறைந்த காலப் பயிற்சியும் சான்றிதழும் நடைமுறை படுத்த்ப் படலாமே?
3. இளைஞர்களின் திறனை மேம்படுத்த அரசு வரிப்பணத்தை செலவழிக்கிறது என்றால், இந்த திட்டத்தில் ஈடுபடும் அனைவரின் கடமைகள் என்ன? பயிற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்க சான்றிதழ் தர மறுக்கும் நிர்வாகத்திற்கு கொடுத்த வரிப்பணத்தின் பயன் என்ன?
4. சரியான உணவு கூட கொடுக்காமல் குறைந்த ஊதியம், பாராபட்சத்தை எதிர் கொள்ளும் வழிகளின் மூலமாக எவ்வாறு இளைஞர்களை இந்திய அரசு ஊக்குவிக்கப் போகிறது?

ஒரு பக்கம் தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களுக்கு புறம்பாக மாற்றுதல், மறுபக்கம் கார்ப்பரேட் இந்தியாவிற்கு மானியம் என்பதே இந்திய அரசின் கொள்கை என்பதற்கு இன்னும் ஒரு சாட்சி.

This entry was posted in Apprentice, Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.