நாங்கள் என்ன தவறு செய்தோம்? – டாடா நானோ தொழிலாளர்களின் திறந்த மடல்

The english version of this open letter by Tata Nano Workers is available here.

மேற்கு வங்காளத்திலிருந்து டாடா நானோ தொழிற்சாலை குஜராத்திற்கு சென்ற போது குஜராத் மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தின் தலையாய பிரச்சனையில் ஒன்றான இளைஞர் மத்தியில் வேலையின்மை நீங்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். நானோ தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய ஆய்வு மையம் கட்டப்பட வேண்டிய இடத்தை டாடாவிற்கு கொடுத்தனர். இடத்தின் விலை, முத்திரை வரி, இயந்திரங்களை மேற்கு வங்காளத்தில் இருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதற்காக செலவு, சாலை, நீர், எரிபொருள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய அனைத்திற்கும் முழுவதுமாக அல்லது நிறைய சலுகைகள் கொடுத்தது குஜராத் அரசு. வெறும் 0.1சத வட்டியில் 30000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அதுவும் 20வருடங்களுக்கு பின்னர் திருப்பி கொடுத்தால் போதும். இதெல்லாம் போதாது என்று, குஜராத் அரசின் கொள்கைபடி டாடா நானோ தொழிற்சாலை 85சத வேலை வாய்ப்புகளை உள்ளுர் தொழிலாளர்களுக்கு கொடுக்க தேவையில்லை. டாடா நானோ நிர்வாகத்திற்காக இவ்வளவு செய்ய தயாராக இருந்த அரசு இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமைகளை பற்றி கவலைப்படுகிறதா என்பதே எங்கள் கேள்வி.

டாடா நானோ தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலும் விவசாயக் குடும்பங்களைச் சார்நதவர்கள். தொழிற்சாலையில் 5 வருடமாக பணி புரிந்தும் எங்களுடைய மாத ஊதியம் ரூ11700(3370ரூ அடிப்படை மற்றும் 8330ரூ சலுகைகள்). இன்றைய பணவீக்கத்திலும், விலைவாசியிலும் இது எப்படி கட்டுபடியாகும்?. நானோ தொழிற்சாலை அமைந்த சனானந்த் பகுதியில் ஒரு அறை மற்றும் சமையலறை உள்ள ஒரு சின்ன வீட்டின் வாடகை ரூ5000 ஆகும். நாங்கள் வாங்கும் ஊதியத்தை வைத்து எவ்வாறு நாங்கள் ஒரு குடும்பத்தை பராமறிக்க முடியும்? எங்கள் குழந்தைகளை எவ்வாறு படிக்க வைக்க முடியும்? நாங்கள் எவ்வாறு வாழ முடியும்? என்று நாங்கள் கோருகிறோம். ஆனாலும் நாங்கள் தற்சமயம் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தவில்லை.

தொழிற்சங்க சட்டத்தின் படி எங்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை உண்டு. நாங்கள் என்று சங்கத்தை பதிவு செய்ய முயற்சி செய்தோமோ அன்றே 2 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்க்குமாறு நாங்கள் நிர்வாகத்திடம் கோரினோம். ஒரு மாதத்திற்குள் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்ப்பதாக நிர்வாகம் எழுத்துபூர்வமாக உறுதி செய்தது. நிர்வாகத்தை நம்பிய நாங்கள் எங்களுடைய வேலையை நேர்மையாக செய்து வந்தோம்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி 2 மாதங்கள் ஆகியும் எங்களுடைய தோழர்கள் மீண்டும் வேலைக்கு சேர்க்கப்படவில்லை. நாங்கள் திரும்பவும் நிர்வாகத்திடம் முறையிட்டோம். அதற்கு பதிலாக நிர்வாகம் இன்னும் 26 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. அதை எதிர்த்து நாங்கள் தொழிற்சாலையின் பார்க்கிங் ஏரியாவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். 13 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர், நிர்வாகம் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிகளை ரத்து செய்தது. அன்று நாங்கள் வீட்டுக்கு செல்லும் போது காவல்துறை வெளியே நின்று கொண்டிருந்தது. எங்களை சிறையில் அடைப்போம் என்றும், ஜாமின் கிடைக்க முடியாதபடி செய்வோம் என்றும், சிறையில் சித்திரவதை செய்வோம் என்றும் காவல்துறை எங்களை மிரட்டியது. காவல்துறை தொழிற்சாலைக்கு பக்கத்தில் நாங்கள் யாரும் இனி மேல் வரக்கூடாது என்று காவல்துறை அபாச வார்த்தைகள் பிரயோகித்து கூறியது. அதற்கு பின்னால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாக கருதப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்தது.

தங்களுடைய தொழிலாளர்களை டாடாக்கள் எப்போதும் சரியாக கவனித்து கொள்வதாக பறைசாற்றி வரும் டாடாவின் இந்த போக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எப்போது தங்களுடைய தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையை அனுமதித்து தொழிலாளர்களின் உரிமைகளை பறித்தனரோ அப்போதே டாடாவின் முகமூடி கிழிந்து விட்டது. குஜராத் அரசிடம் இருந்து பல்வேறு மானியங்களை பெற்ற டாடா குஜராத்தின் இளைஞர்கள் மீது அநியாயத்தை அவிழ்த்து விட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை காட்டிலும் டாடா நிறுவனம் மாறுபட்டதல்ல தொழிலாளர்களை சுரண்டியே நாங்கள் வளர்வோம் என்பதை இந்நிகழ்வுகள் வெளிக்காட்டியுள்ளன.

டாடா தொழிலாளர்கள் முன்வைக்கும் கேள்விகள்:
1. சங்கம் பதிவு செய்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளதா?
2. ஏன் சங்கப் பதிவாளர் இதுவரை எங்கள் சங்கத்தை பதிவு செய்யவில்லை?
3. தொழிலாளர் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் துறை ஏன் தொழிலாளர் விரோதப் போக்குகளை கடைபிடிக்கிறது?
4. நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்து வரும் தொழிலாளர்களின் மீது ஏன் காவல்துறை பிரயோகிக்க பட்டது?
5. ஒரு தனியார் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் குஜராத் மாநில அரசு ஏன் தலையிட்டு வேலைநிறுத்தத்தை சட்ட விரோதமாக அறிவித்தது?
6. வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று கூறி நிலத்தை டாடாவிற்கு தாரை வார்த்த மாநில அரசு ஏன் தொழிலாளர்களுக்கு எதிராக மாறியுள்ளது.?

தொழிற்சங்கம் அமைப்பது எங்கள் அடிப்படை உரிமை. டாடா நானோ தொழிற்சாலையில் சங்கம் பதிவு செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles and tagged , , , . Bookmark the permalink.