பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 10ஆவது ஆண்டு துவக்கம்: போராட்டமே கொண்டாட்டம் கொண்டாட்டமாய்ப் போராட்டம்

Source: மாலெ தீப்பொறி

Source: AICCTU

Source: AICCTU

போராட்டத்தைக் கொண்டாடுவோம் கொண்டாட்டமாய்ப் போராடுவோம் என 2007 மார்ச் 3 அன்று ஆரம்பமான கோவை பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் 10ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள தினத்தைக் கொண்டாடும் விதமாக பிரிக்கால் போராட்டத்தின் 10ஆம் ஆண்டுத் துவக்க விழா, கோவை யில் 13.03.2016 அன்று காலை இளைய தோழர்களின் கோவை கலைக் குழுவின் மேளம் தாளம் ஆட்டம் பாட்டு என கொண்டாட்டமாய் ஆரம்பமானது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக சங்கக் கொடியை, கொலைக் குற்ற வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தோழர் மல்லிகா ஏற்றினார். நாட்டு மக்களுக்காகவும் தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் போராடிய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சாமிநாதன் தலைமையுரையாற்றினார்.

பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்ட வழக்குகளில் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கே.எம்.ரமேஷ், லட்சுமணநாராயணன், பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016க்கான தொழிலாளர் வர்க்க சாசனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் வெளியிட ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் தோழர்கள் என்.கே.நடராஜன், ஜவகர், சங்கரபாண்டியன், எ.எஸ்.குமார், புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

10155885_230449407304104_5581781014569295983_n

கூட்டத்தில் பேசிய தோழர் திபங்கர், நான் இங்கு வரும்போது வழியில் வைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். அவை ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், அவர்களின் குடும்பத்தாரின் போராட்டமாக, பின்னர் சமூகத்தின் போராட்டமாக மாறியுள்ளதை வெளிப்படுத்தின. பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் ஒரு முன்னுதாரணமிக்கப் போராட்டமாகத் திகழ்கிறது. இன்று 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். ஆனால் மக்கள் பணத்தை, வங்கிப் பணத்தைக் கொள்ளையடித்த விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்கள் பத்திரமாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த அரசால் ஜனநாயகத்திற்காக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் போடப்படுகிறது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, சாராயத்திற்கு எதிராகப் பாடிய புரட்சிப் பாடகர் கோவன் மீது, ஜேஎன்யு மாணவர்கள் மீது என எல்லோர் மீதும் தேசத் துரோக வழக்கு போடப்படுகிறது. எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். இது தேர்தல் நேரம், தமிழ்நாட்டில் பல முன்னணிகள் உள்ளன. திமுக ஓர் அணி, அதிமுக ஓர் அணி அமைக்கலாம், வைகோ ஓர் அணி, பாஜக ஓர் அணி இப்படி பல கூட்டணிகள் முன்னணிகள் இருக்கலாம். வரலாம். ஆனால், உண்மையான அணி, முன்னணி போராட்ட அணி மட்டுமே, மக்களுக்காக தொழிலாளர்களுக்காக போராடுகின்ற அணி மட்டுமே. மாணவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இணைந்து போராட வேண்டிய காலமிது. வரும் காலத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

அதைத் தொடர்ந்து ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் எஸ்.குமாரசாமி உரையாற்றினார். அவர் தனது உரையில், பிரிக்கால் தொழிலாளர்கள் ஜெயலலிதா போலவோ, கனிமொழி போலவோ ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லவில்லை. தொழிலாளர் போராட்டத்தில் சிறையில் உள்ளனர். அவர்கள் இருக்கும் கோவைச் சிறை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னோடியாக இருந்த, சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி இருந்த சிறை…… அவரைப் போலத்தான் இன்று எட்டு பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள், அதே சிறையில், இரட்டை ஆயுள் தண்டனையில் இருக்கிறார்கள். பிரிக்கால் தொழிலாளர்கள் விரைவில் வெளியே வருவார்கள், பகத்சிங் வழி மரபைப் பின்பற்றி, அம்பேத்கரின் ஜனநாயகப் போராட்டத்தைப் பின்பற்றி மக்களைக் காக்க ஜனநாயகம் காக்க வரும் மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரையிலான பிரச்சாரத்தை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
பின்னர் வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மேட்டுபாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் இகக (மாலெ) சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தோழர் நடராஜன், தோழர் வேல்முருகன் ஆகியோரை தோழர் திபங்கர் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர். விழா மதிய உணவுடன் முடிவு பெற்றது.

மார்ச் 13 அன்று விழா துவங்குவதற்கு முன் பிரிக்கால் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் தோழர் டிகேஎஸ் ஜனார்த்தனன் நினைவு நூலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் திறந்துவைத்தார்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.