ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களின் மாபெரும் மேதினக் கூட்டம்

ஓரகடத்தில் உள்ள ரெனால்ட்-நிசான் தொழிற்சாலையில் இருந்து ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(யு.எல்.எஃப்) தொழிலாளர்கள் மே 1 அன்று சர்வ தேச உழைப்பாளர் தினத்தை கொண்டாடினர். மேதின தியாகிகளை நினைவு கூறவும் தொழிற்சங்க உரிமையை மறுத்து வரும் நிர்வாகப் போக்கை கண்டித்தும் 1500 தொழிலாளர்கள் சென்னை பூந்தமல்லியில் மாபெரும் அரங்கக் கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மே தினத்தின் சின்னமான சிகாகோ ஹேமார்க்கெட் போராட்டத்தை நினைவு கூறினர். தொழிலாளர்களை தொடர் போராட்டத்திற்கு ஒன்று கூடி தயாராகுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

Renault Nissan ULF Workers

Renault Nissan ULF Workers

நிசான் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(யு.எல்.எஃப்) சங்கத்தில் இணைந்ததனால், நிர்வாகம் இதுவரை 96 தொழிலாளர்கள் மேல் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 6 தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். பல தொழிலாளர்கள் அற்பமான குற்றச்சாட்டுகள் சுமத்தி தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக நிர்வாக விசயங்களை பேஸ்புக்கில் வெளியிட்டதாக தொழிலாளர்கள் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிலாளர்கள் செலுத்தும் சந்தா மூலமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு சங்கம் நிதியுதவி செய்து வருகிறது. இத்தொழிலாளர்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர உறுதியேற்றனர்.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை எடுத்து செல்ல அழைத்த ரெனால்ட் நிசான் தொழிலாளரும், யு.எல்.எஃப் ஸ்ரீபெரும்புதூர் கிளையின் செயலாளரும் ஆன தோழர் மூர்த்தி, ‘நிர்வாகம் தொழிலாளர்களை யு.எல்.எஃப் வை விட்டு நிர்வாகத் தரப்பு சங்கத்திற்கு மாற நிர்பந்தம் செய்யும், இல்லாவிட்டால் நாங்கள் உங்களை வேறு துறைக்கு மாற்றுவோம் என்று அச்சுறுத்தும் ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் நம்மை வேறு துறைக்கு மாற்றினாலும் நாம் பின் வாங்கக் கூடாது. அவர்களின் தோல்வியே நமது வெற்றி’ என்று கூறினார்.

யு.எல்.எஃப் தலைவர் வழக்கறிஞர் பிரகாஷ் வேலை நிறுத்தத்தற்கு தயாராக இருக்க வேண்டும் என தொழிலாளர்களை கோரினார். வேலை நிறுத்தத்தை அறிவத்தவுடன் தொழிலாளர் துறை பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத்தையும், சங்கத்தையும் அழைத்துள்ளது. இதனால் வேலை நிறுத்தம் நடக்காது என்று நிர்வாகம் நினைத்து வருகிறது. பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது என்று தோன்றினாலும், அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்று முடிவில் தான் தெரியும். அதனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்காக ஆயத்தம் செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஒன்று பட்ட வேலை நிறுத்தமே தொழிலாளர்களுக்கு வழியாகும் என அவர் கூறினார். இந்த போராட்டம் நிரந்தரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் இருக்கக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களை சங்கத்தில் இணைக்கவும் போராட்டத்தில் ஈடுபடுத்தவும் தொழிலாளர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சங்கத்தின் ஆண்டு நிதி அறிக்கையை வெளியிட்ட பொருளாளர் தொழிலாளர்களின் உற்பத்தியில் இருந்து விளைந்த சங்க நிதியை முறையாக பராமரிப்பதில் பெருமை கொள்வதாக கூறினார். முக்கிய செலவுகளை பட்டியலிட்ட அவர், சமீபத்தில் இறந்த 2 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியுதவியையும் குறிப்பிட்டார்.

யு.எல்.எஃப் சங்கத்தை முறியடிப்பதற்காக நிர்வாகம் தனக்கு ஆதரவான சங்கம் ஒன்றை தொழிற்சாலையில் நிறுவ முயற்சித்து வருகிறது. தமிழக அரசு ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களை பொதுத் துறையாக அறிவித்துள்ளதால், வேலை நிறுத்த அறிவிப்பிற்கு பின்னர், தொழிலாளர் துறையின் கீழ் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது தடை செய்யபட்டுள்ளது. ஆனாலும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வதற்கு தயாராக உள்ளனர்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.