மாநேசர் பெல்சோனிகா தொழிற்சாலையில் அடக்குமுறை – தொழிலாளர்களின் தொடர் போராட்டம்

மாநேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலைக்கு கார்கள் உற்பத்தி செய்யும் ஜப்பானைச் சார்ந்த பெல்சோனிகா தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை மறுத்து வருகிறது. மாருதி கம்பெனி வளாகத்தில் உள்ள இந்த தொழிற்சாலையில் சுமார் 1000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இத்தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததற்காக, நிர்வாகம் 150 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியுள்ளது. தொழிலாளர்களை மறுபடியும் வேலைக்கு அமர்த்த தொழிலாளர் துறையும், உயர்நீதி மன்றமும் ஆணையிட்டும், நிர்வாகம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மறுத்து வருகிறது.

Bellsonica Workers at a Hall meeting

Bellsonica Workers at a Hall meeting

20-25 தொழிலாளர்களுடன் 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரித்ததனால் சுமார் 500 தொழிலாளர்கள் 2009லும், மேலும் 500 தொழிலாளர்கள் 2011லும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பல தொழிலாளர்கள் ஒப்பந்த முறையிலும், டிரெயினிகளாகவும் வேலை செய்கின்றனர். முதலில் அனைத்து தொழிலாளர்களும் ஒரே ஷிப்டில் பல மணி நேரத்திற்கு வேலை செய்தனர். உற்பத்தி பெருக வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக்கப் பட்டது. அவர்களுக்கு கேண்டின், போக்குவரத்து என்ற எந்த வசதியும் செய்யப்படவில்லை. காலையில் 8:30 மணி நேரத்திற்கு வந்தால் எப்போது திரும்புவோம் என்ற வரையறை இல்லாமால் 16-18 மணி நேரம் வேலை வாங்கப் பட்டனர். வேலை ஆரம்பித்த 2 மணி நேரம் கழித்து 10 நிமிட பிரேக் மட்டும் தான். மதிய உணவு இடைவேளிக்கு குறிப்பிட்ட நேரம் கிடையாது.

2007ல் வேலைக்கு அமர்த்தப்பட்ட போது மாதம் ரூ6000 ஊதியம் வழங்கப்பட்டது. 2009ல் புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்த போது டிரெயினிகளுக்கு வெறும் 4400ரூபாய் ஊதியமும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ5400ரூ மட்டுமே. ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் டிரெயினிகளின் ஊதியம் 5200ரூபயாக உயர்த்தப்பட்டது ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த ஊதிய உயர்வும் கொடுக்கவில்லை. உதாரணமாக 2011ல் ஒரு டிரெயினிக்கு ரூ6500 ஊதியமும் ஒப்பந்த தொழிலாளருக்கு ரூ5500 ஊதியமும் வழங்கப்பட்டது.

தொழிற்சாலையில் குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, முதலுதவி என்ற எந்த வசதிகளும் இல்லை. ஒரு தொழிலாளர் வேலையில் நோயுற்றால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பாமல் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். 2012ல் மிதிலேஷ் எனும் ஒரு டிரெயின் வெல்டிங் ஷாப்பில் வேலை செய்த போது எந்த ஒரு காற்றோட்டமும் இல்லாமால் வெல்டிங் புகையால் நோயுற்றார். நிர்வாகம் அவருடைய பிரச்சனைக்கு தான் பொறுப்பல்ல என்று அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவருடைய சிகிச்சைக்கு அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அவர் இறந்து பின்னர் அவருடைய மனைவிக்கும் 3 குழந்தைகளுக்கும் தொழிலாளர்களே நிதியுதவி செய்தனர். அவருடைய மனைவி நிர்வாகத்திடம் நிதியுதவி கேட்டபோது அவரை மனித வள மேலாளர் கேட்டிற்கு வெளியே தள்ளினார். இதுவரை 4-5 விபத்துகள் நடந்துள்ளன. இதுவரை நிர்வாகம் எந்த நிதியுதவியும் செய்யவில்லை.

ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். பிஎஃப், ஓவர்டைம் ஆகிய சலுகைகளில் பெரும் மோசடிகள் நடக்கின்றன. குறிப்பாக 2009ல் புது மனித வள மேலாளர் மனோஜ் சிங் என்பவர் வந்த பிறகு அடக்குமுறை இன்னும் அதிகமாகியது. அவர் பயிற்சி காலத்தை இரண்டு வருடமாக்கினார். ஒப்பந்த தொழில் முறையை அதிகரித்தார். தொழிலாளர் ஒரு நாள் விடுமுறையில் சென்றால் கூட அவரை வேலை விட்டு நீக்கினார்.

குறைந்த ஊதியம், தொடரும் அடக்குமுறை, வேலை பளு ஆகியவற்றை எதிர்த்து பெல்சோனிகா தொழிலாளர்கள் சங்கம் அமைத்து போராட முடிவு செய்தனர். 2014 ஜுலையில் 45 தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தி இதற்கான திட்டத்தை முன்வைத்தனர். அனைத்து தொழிலாளர்களும் இதற்கு ஒப்புதல் தந்து 8 சங்கப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். 2014 ஆகஸ்டில் தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறைக்கு மனு அளித்தனர். அதை அறிந்த நிர்வாகம் தொழிலாளர்களை மிரட்டியும் லஞ்சம் கொடுத்தும் சங்கம் அமைப்பதை தடுக்க முயற்சித்தது. நிர்வாகம் தொழிலாளர்களை தனி அறையில் பூட்டி வைத்து மாருதியில் நடந்தது போல் உங்களையும் ஒரு வழி செய்து விடுவோம் என்று பவுன்சர்களை கொண்டும் காவல்துறையை வைத்தும் மிரட்டியது. ஆனால் தொழிலாளர்கள் மனம் தளராமல் இருந்ததால் அக்டோபர் 2014 அன்று பெல்சோனிகா தொழிலாளர்கள் சங்கம் பதிவு செய்யபட்டது.

சங்கம் பதிவு செய்யபட்டவுடன், சங்கத்தை ஒருங்கிணைந்த 45 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக வேலை நீக்கம் செய்தது. இது தொழிற் தகராறு சட்டத்திற்கு புறம்பாகும். இதை எதிர்த்து தொழிலாளர் துறைக்கு தொழிற்சங்கம் புகார் அனித்தது. இது குறித்து விசாரித்த தொழிலாளர் துறை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை சண்டிகர் தொழிலாளர் ஆணையருக்கு 2015 நவம்பரில் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிற்சங்கம் அமைத்தற்காக இதுவரை சுமார் 150 தொழிலாளர்கள்(54 நிரந்தரத் தொழிலாளர்கள், 32 டிரெயினிகள், 62 ஒப்பந்த தொழிலாளர்கள்) வேலை விட்டு நீக்கபட்டுள்ளனர். தொழிற்சங்கத்தை ஆதரிக்கும் எந்த தொழிலாளரையும் வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று மனித வள மேலாளர் எச்சரித்துள்ளார். இதை எதிர்த்த தொழிலாளர்கள் மீது நிர்வாகம் வன்முறையை ஏவியுள்ளது. இது குறி;த்து காவல்துறைக்கு சங்கம் புகார் அளித்தும் காவல்துறை விசாரணை செய்ய மறுத்து வருகிறது.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட 45 தொழிலாளர்களை வேலையில் எடுக்க நிர்வாகம் மறுத்து வருகிறது. அவர்களின் மேலான குற்றச்சாட்டை நிர்வாகம் தர மறுத்ததால், குர்காவ் சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டு தொழிற்சங்கம் குற்றச்சாட்டை வாங்கியது. உள்விசாரணைக்கு பின்னர் நிர்வாகம் 2015 பிப்ரவரியில் 39 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்க தொழிலாளர் துறையிடம் அனுமதி கோரியது. நிர்வாகத்தின் வாதத்தை மறுத்த தொழிலாளர் துறை தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பின்னூட்டு ஊதியம் தர ஆணையிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் முறையிட்டது. உயர்நீதி மன்றம் நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்து தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த ஆணையிட்டுள்ளது. தீர்ப்பை செயல்படுத்த தொழிற்சங்கம் தொழிலாளர் ஆணையிரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் போட்ட முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது. சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தையும் அதை செயல்படுத்தாத தொழிலாளர் துறைiயுயும் எதிர்த்து பெல்சோனிகா தொழிலாளர்கள் மனம் தளராமல் போராடி வருகின்றனர்.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.