ரெனால்ட் நிஸ்ஸான் – உழைப்பு சுரண்டலின் உச்ச கட்டம்

பயிற்சி பெற்ற இந்திய தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிநிரந்தரம் என்பது தொடர்ந்து நிராகரிக்கப்படும் நிலையில் திறன் இந்தியா என்பது எவ்வாறு சாத்தியப்படும்?

(செய்திகளின் அடிப்படையில் மொழியாக்கம்எஸ்.சம்பத்)

சென்னை புறநகர் ஓரகடத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டுடன் இணைந்து கூட்டு தயாரிப்பான ரெனால்ட் நிஸ்ஸான் கார் தொழிற்சாலையின் பெயர் சமீபகாலமாக செய்திகளில் தொடா்ந்து அடிபட்டு வருகிறது. அடக்குமுறையை பிரயோகித்து தொழிலாளர்களிடமிருந்து தந்திரமாக குறைந்த கூலிக்கு உழைப்பை சுரண்டி வருகிறது. மறுபுறம் தொழிற்சங்க உரிமை கோரி அங்குள்ள நிரந்தர தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தற்போது சுமார் 30 பயிற்சியாளர்கள் காவல்துறை அடக்குமுறையையும் மீறி தங்களின் பணிநிரந்தரம் கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

photo0283

தொழிலாளர்கள் தரப்பின்படி சுமாா் 500 நபர்களுக்கு மேல் பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டவா்களிடம் ஆண்டுக்கணக்கில் பணி வாங்கிவிட்டு 2014ல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு வரை பயிற்சியாளர்கள் என்று பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிரந்தரம் செய்து வந்த நிலையில், தற்போது கார் உற்பத்தி குறைந்துவிட்டது என தவறான காரணம் தெரிவித்து சட்டவிரோதமாக ஆட்குறைப்பு செய்துள்ளனர் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்.

போராட்டக் களத்தில் இருக்கும் அனைவரும் இளைஞர்கள், தமிழகத்தில் பல் வேறு பகுதிகளில் ஐடிஐ பட்டயப் பயிற்சி தேறி அதற்கிணங்க 2011 மற்றும் 2012ல் ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்தில் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டவர்கள். பயிற்சியாளர்கள் என நியமனம் செய்யப்பட்ட போதிலும் நேரடியாக உற்பத்தி பணியில் நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக 3 ஆண்டுகள் வரை திறம்பட பணிபுரிந்துள்ளனர். அவர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ 4500, இரண்டாம் ஆண்டு ரூ 7000, மூன்றாம் ஆண்டு ரூ 8500 என்கிற விகிதத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் பார்க்கப் போனால் சாதாரண ஆட்டோமொபைல் தொழிலில் பணிபுரியும் தொழிலாளிக்கு குறைந்த பட்ச கூலி 6000 வழங்க வேண்டும். இருந்த போதிலும் 3 ஆண்டுகள் பணிமுடிவில் எங்கள் பணி நிரந்தரப்படுத்தப்படும், அதன் பின்னர் 25000 வரை சம்பளம் கிடைக்கும் என வாய்மொழியாக நிர்வாகம் தெரிவித்ததால், மேற்சொன்ன குறைவான சம்பளத்திற்கு நாங்கள் பணிபுரிய ஒப்புக்கொண்டோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்கள். (ரெனால்ட் நிஸ்ஸான் நிர்வாகம் தனது நிரந்தர பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக 2016ல் அறிவித்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது). அத்தகைய நிரந்தர பணியாளர்களில் பலர் முன்னதாக ஹூண்டாய், மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களிடம் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள்.

ஆனால் அந்த அனுபவங்களெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் மீண்டும் ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்தில் பயிற்சியாளராகத்தான் பணி துவக்க வேண்டும். இருந்த போதிலும் பணிநிரந்தரப்படுத்தப்படும் என்கிற உத்திரவாதம் சொல்லப்பட்டதால் குறைவான சம்பளத்திற்கு பணிபுரிந்தோம் என்கின்றனர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்.

2014ல் நிஸ்ஸான் நிறுவனம் சில பயிற்சியாளர்களை மட்டும் பணி நிரந்தரப் படுத்திவிட்டு ஏறக்குறைய 500 பேரை ஆட்குறைப்பு செய்துவிட்டது. இதை எதிர்த்து குரல் கொடுத்த பணியில் இருந்த சில பயிற்சியாளர்களும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போதிலிருந்து இந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலாளர் துறை மற்றும் அரசின் கதவுகளை தட்டியவண்ணம் உள்ளனர், ஆனால் பயனில்லாத நிலை தொடர்கிறது. அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சரை இதுவரை 7 முறைக்கு மேலாக சந்தித்திருக்கிறோம் என்கின்றனர். ஆனால் அமைச்சர்கள், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து நாங்கள் எதுவும் செய்ய இயலாது, வேறு பணி பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்களாம். இதையே எதிரொலிக்கும் விதமாக ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், மாநில அரசு அதிகாரிகளால் இதில் தலையிட இயலாது என பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்த்து தெரிவித்தனராம்.

மேலும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கையில் இது போன்ற நிறுவனங்களில் எழுதப்படாத நிபந்தனையாக 25 முதல் 30 வயதுடையவர்கள் மட்டுமே நியமிக்கப் படுவார்கள் என்பதால், தங்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 33 தொழிலாளர்கள் தாக்கல் செய்த தொழிற்தாவா முடிவு கண்ணுக்கெட்டாத வகையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையாக தூங்கிக் கொண்டிருக்கிறது.

சுமார் ஒன்றரை வருட போராட்டத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஜூலை 9 முதல் துவக்கியுள்ளனர். துணைத் தொழிலாளர் ஆணையர் ஜூலை 9 அன்று அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். எனினும் தொழிலாளர் துறை போராட்டத்தை கைவிட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடருங்கள் என தொழிலாளர் துறை பாதிக்கப்பட்டவர்களையே அறிவுறுத்தி அனுப்பியதால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். மாநில அரசு தலையிட்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் ஜூலை 11 முதல் தொழிலாளர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்க முடிவு செய்தனர். காவல்துறை பொது இடத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதியளிக்க இயலாது ஏதேனும் தனியான இடத்தில் அமருங்கள் என சொல்லியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அம்பத்தூரில் ஒரு தனியார் அரங்கில் திட்டமிட்டபடி 11ம் தேதி உண்ணாவிரதத்தை துவக்கியவுடன், கடமையாக வந்த காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. பின்னர் விடுதலையடைந்த தொழிலாளர்கள் மறுநாள் 12ம் தேதி மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் தங்களது உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளனர். வினோதமாக தொழிலாளர்களை தங்கள் தொழிற்சாலையின் முன்பு சென்று போராடுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது. அதை ஏற்காமல் உண்ணாவிரதத்தை தொடர்ந்த தொழிலாளர்களை மெரினா கடற்கரையருகே கைது செய்துள்ளது. எனினும் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொடருவதாக உள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்தில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் சங்கமும் பயிற்சியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற தங்களது கோரிக்கைக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டம் குறித்து போராடும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் சமூக ஆர்வலர் திரு மகேந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்கு அளித்த பத்திரிக்கை செய்திக் குறிப்பில், வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்கள் மற்றும் சலுகைகளை அளிக்கிற மாநில அரசு ஏன் தொழிலாளர்களின் பணி நீக்கம் குறித்து வாய்திறக்க மறுத்து மெளனியாக இருக்கிறது என்கிறார்கள். சொல்லப்போனால் நிஸ்ஸான் தொழிற்சாலை அமைந்துள்ள இடமானது பூமிதான முறையில் அளிக்கப்பட்ட உரிமையான 13 தலித் குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப் பட்டவையாகும். ஒருபுறம் வறியவர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்பு என்கிற கனவும் பொய்யாகிப் போன நிலையில் அரசு தலையிட்டு அந்த நிறுவனங்களை பொறுப்புதாரியாக்கக் கூடாதா? என்கிற கேள்வி எழுகிறது. இது போல் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் நமது நாட்டில் வேலைவாய்ப்பை மறுத்தால் திறன் இந்தியா என்கிற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து அளிக்கப்படும் பயிற்சி என்பது வெற்றியடையாமலே போய்விடும்.

(மொழிபெயர்ப்பாளர் குறிப்புசிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் தொழிலாளர் துறை தலையிட இயலாத சலுகைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் தாரைவார்க்கின்றன மத்திய, மாநில அரசுகள். முறை சார்ந்த தொழில்களில் தொழிற்சங்க சம்மேளனம் நடத்தும் அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் இது போன்ற உழைப்பு சுரண்டலை எதிர்த்தும் குரல் கொடுத்து ஆதரவு கரம் நீட்டி போராட்ட கரத்தை வலுப்படுத்துவதன் வழியாகத்தான் இவற்றிற்கான தீர்வு சாத்தியப்படும்)

This entry was posted in Apprentice, Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.