நிசான் சப்ளையர் என்.ஹெச்.கே எஃப் கிருஷ்ணா ஆட்டோமோடிவ் தொழிற்சாலையில் தொடரும் போராட்ட அலை

ஓரகடம் பகுதியில் உள்ள நிசான் சப்ளையர் என்.ஹெச்.கே எஃப் கிருஷ்ணா ஆட்டோமோடிவ் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் பகுதியில் உள்ள 4000 தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலின் முன்னர் நேற்று மாபெரும் போராட்டம் நடத்தினர். சுமார் 100 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கோரி ஜுலை 12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG-20160724-WA0013

சென்னை அருகே உள்ள ஓரகடத்தில் ரெனால்ட் நிசான் நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது. அங்கே 2013ல் நிறுவப்பட்ட என்.ஹெச்.கே எஃப் கிருஷ்ணா ஆட்டோமோடிவ் நிறுவனம் நிசான் தொழி;ற்சாலைக்காக கார் சீட்டுகளை தயாரித்து சப்ளை செய்து வருகிறது. இங்கு வேலை செய்யும் சுமார் 100 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த ஜுலை 12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஜுலை 11 திங்கள் அன்று இந்த தொழிலாளர்களை நிறுவனம் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல தடுத்து நிறுத்தியதாகவும் அதன் பின்னர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்தினால் ரெனால்ட் நிசானின் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிசானில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தயாரிப்பை ஈடுகட்டுவதாற்காக மாநேசரில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து தயாரிப்பில் ஈடுபடுவதாகவும் கிருஷ்ணா ஆட்டோமோடிவ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

என்.ஹெச்.கே எஃப் கிருஷ்ணா ஆட்டோமோடிவ் நிறுவனம் ஒரு ஜப்பானிய ஸ்பிரிங் தயாரிப்பு நிறுவனமும், கார் இன்டிரீயர் பாகங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமும் சேர்ந்து ஆரம்பித்துள்ள நிறுவனமாகும். நிசானிற்காக அவர்கள் இந்த தொழிற்சாலை 2013ல் நிறுவிய போது, கிரேஸ் எண்டர்பிரைசஸ் எனும் நிறுவனத்தின் 15 தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தங்களை கிருஷ்ணா ஆட்டோமோடிவ் நிறுவனம் நேரடியாக தேர்வு வைத்து தேர்ந்தெடுத்து பின்னர் கிரேஸ் நிறுவனத்திற்கு அனுப்பியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு 300 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் இன்னும் இரண்டு லேபர் சப்ளை நிறுவனங்கள் மூலம் அவர்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 2013ல் வெல்டர்களுக்கு மாதம் ரூ7100ம் மற்ற தொழிலாளர்களுக்கு ரூ3500ம் மாத ஊதியமாக வழங்கியுள்ளனர். தற்போது வெல்டர்களுக்கு ரூ11000மும் மற்ற தொழிலாளர்களுக்கு ரூ6300 வழங்கி வருகின்றனர். இஎஸ்ஐ, பிஎஃப் ஆகிய பிடித்தமும் உண்டு.

இங்கு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் குறிப்பாக 2013ல் சேர்ந்த 55 தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி வருகின்றனர். ஆனால் நிறுவனம் 2015 முதல் சரியான வருவாய் மற்றும் தேவை போதுமானதாக இல்லை என்று கூறி கோரிக்கை நிறைவேற்றாமல் தாமதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2015ல் நிறுவனம் புதிதாக டிப்ளமோ படித்த இளைஞர்களை பயிற்சியாளர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளது. தங்களது வேலையை நிறுத்தி விடுவார்கள் என்று ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனம் அவர்கள் அரசு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பயிற்சியாளர்கள் என்றும் பயிற்சி முடிந்ததும் அவர்கள் சென்று விடுவார்கள் என்று கூறியுள்ளது. அதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் பணி நிரந்தர கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொழிலாளர்கள் ரெனால்ட் நிசான் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் ஐக்கிய தொழிலாளர் முண்ணனி (யு.எல்.எஃப்) சங்கத்தை நாடினர். 2016 ஏப்ரல் 4 அன்று சில தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தனர். இதற்கு அடுத்து இரண்டு தொழிலாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. அதற்கு பின்னர் பல தொழிலாளர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது. சுமார் 100 தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
1. 2013ல் சேர்ந்த 55 தொழிலாளர்களுக்கு உடனடியாக பணிநிரந்தரம் கொடுக்க வேண்டும் மற்ற தொழிலாளர்களுக்கு சீனியாரிடி அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
2. அனைத்து தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும்.
3. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ25000 உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் வருடாந்திர போனஸ் அளிக்கப்பட வேண்டும்.

இதற்கு நிர்வாகம் எந்த பதிலும் தரவில்லை. இது குறித்து ஜுலை 10 அன்று தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களுடன் விவாதித்து வந்த நிலையில், கிரேஸ் எண்டர்பிரைசஸ் தொழிலாளர்கள் அனைவரையும் ஜுலை 11 அன்று தொழிற்சாலைக்கு அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதை அடுத்து அனைத்து தொழிலாளர்களையும் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு வேலை நிறுத்தம் செய்யுமாறு அனுமதி மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜுலை 12 முதல் தொடங்கிய இந்த வேலை நிறுத்தத்தில் 100 தொழிலாளர்கள் குறிப்பாக அனுபவமிக்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு 25 கார் சீட்டுகள் உற்பத்தி என்பது 5 ஆக குறைந்துள்ளதாகவம், நிசான் உற்பத்தி இரண்டு நாள் (வியாழன், வெள்ளி) பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். இதை நிசான் தொழிலாளர்களும் உறுதிபடுத்துகின்றனர். இந்த பாதிப்பை ஈடுகட்டுவதற்காக ஹரியானா மாநேசர் தொழி;ற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

ஜுலை 17 அன்று இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்களை திரட்டி கிருஷ்ணா ஆட்டோமோடிவின் 100 தொழிலாளர்கள் உட்பட 700 தொழிலாளர்கள் தொழிற்சாலை வாசலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையும், தாசில்தாரும் கூடி விரைவில் தொழிற்சாலை ஆணையத்துடன் பேச்சுவார்த்தை கூட்டி விரைவாக இப்பிரச்சனையை கலைய வாக்குறுதி கொடுத்தனர். அதன்படி 18 அன்று சிப்காட் தொழிற்சாலை ஆணையத்தின் வளாகத்தில் துணை ஆணையர் முன்னால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் ஹெல்பர்களாக மட்டுமே வேலை செய்தனர் என்றும் மைய உற்பத்தியில் வேலை செய்யவில்லை என்றும் அதனால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்றும் நிர்வாகம் கூறியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையில் அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று நிர்வாகம் கூறியதாகவும் தொழிலாளர்கள் திரும்ப வந்தால் வேலைக்கு எடுத்து கொள்ளுவதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. அதே சமயம் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட கிரேஸ் எண்டர்பிரைசஸ் இத்தொழிலாளர்களுக்கு பதிலாக வேறு தொழிலாளர்களை அமர்த்தி விட்டது என்றும் இவர்களை மீண்டும் வேலைக்கு எடுத்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

நிர்வாகத்தின் வாதத்திற்கு பதிலாக தொழிலாளர்கள் உற்பத்தி அசெம்பளி லைனில் எத்தனை நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வேலை செய்கின்றனர் என்று கேட்ட கேள்விக்கு நிர்வாகத் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும் இதை குறித்து துணை ஆணையர் எந்த விசாரணை நடத்தவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து கிருஷ்ணா ஆட்டோமோடிவ் நிர்வாகம் (தொழிலாளர் கூடத்திடம்) எந்த விளக்கமும் கூற மறுத்துவிட்டது. தொழிலாளர் கூடத்திடம் பேசிய துணை ஆணையர் தொழிற்சாலைக்குள் 35 தொழிலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் மைய உற்பத்தியில் வேலை செய்பவர்கள் என்று தொழிலாளர் தரப்பிலும், ஹெல்பர்கள் என்று நிர்வாகத் தரப்பிலும் கூறுவதாக உறுதி செய்தார். தொழிற்சாலையில் 300 தொழிலாளர்கள் மற்றும் சில பயிற்சியாளர்கள் வேலை செய்வதாகவும் அவர் கூறினார் ஆனால் எத்தனை நிரந்தரத் தொழிலாளர்கள் என்று தெரியவில்லை என்றும் நிர்வாகம் புதிதாக ஆரம்பித்துள்ளதால் நிரந்தரத் தொழிலாளர் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய பணியில் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறும் நிர்வாகத்திடமும், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு செல்லுமாறும் தொழிற்சாலை ஆணையம் அறிவுறுத்தும் என்று அவர் கூறினார்.

இதனால் அதிருப்தியுற்ற தொழிலாளர்கள் இன்னும் வேலைக்கு திரும்பவில்லை. கடந்த ஜுலை 24 ஞாயிறு அன்று தொழிற்சாலையின் முன் ஒரு நாள் போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் என்று சுற்று வட்டாரத்தில் உள்ள 60 தொழிற்சாலைகளில் இருந்து 4000 தொழிலாளர்கள் ஆதரவு தந்து மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் நிசான் தொழிற்சாலை, என்விஹெச், எண்ணூர் அனல் மின் நிலையம், எண்ணூர் எம்ஆர்எஃப் தொழிற்சாலை, கேடர்பில்லர், திருவள்ளுரின் முனி பச்சயப்பன் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நிசானிலிருந்து வெளியேற்றப்பட்ட பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG-20160724-WA0011நிர்வாகத் தரப்பிலிருந்து தொழிலாளர்கள் 200 மீட்டர் தொலைவில் ஒன்று சேரக் கூடாது என்று தடையுத்தரவு வாங்கியும், தொழிற்சாலைக்கு சற்று அருகிலேயே தொழிலாளர்கள் போராட்;டத்தை நடத்தியுள்ளனர். காவல்துறையும் தாசில்தாரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். தொழிற்சாலையில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வைத்து வேலை நடத்துவதாகவும், குண்டர்களை வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய தொழிலாளர்கள் சிஆர்பிச செக்ஷன் 145ன் கீழ் அரசு இதற்கு தீர்வு ஏற்படும் வரை தொழிற்சலையை மூடி சட்டம் ஒழுங்கை நிலைநாற்றக் கோரினர். தொழிலாளர்கள் தந்ந புகாரின் அடிப்படையில் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் வேலை நிலைமை குறித்தும், ஒப்பந்த அனுமதியில் உள்ள விதி மீறல்கள் குறித்தும் தொழிற்நாலை கண்காணிப்பகம் நிர்வாகத்திற்கு ஷோ காஸ் நோட்டிஸ் கொடுத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதற்கு தொழிற்சாலை 40 நாட்களுக்குள் பதில் தர வேண்டும்.

ஜக்கிய தொழிலாளர் முண்ணனி தலைவர் வழக்குறைஞர் இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை செய்யும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரியும், அதற்கான உரிய ஊதியம் விகிக்க கோரியும் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். ஒரு பக்கம் தொழிலாளர் துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டமே இந்த வெற்றியை பெற்று தரும் என்று அவர் கூறியுள்ளார். தொழிலாளர்களுக்கு ஆதரவு தந்து மற்ற சங்கப் பிரதிநிதிகளும் உரையாடினர்.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.