ஹூண்டாய் தொழிலாளரை தற்காலிகப் பணிநீக்கம் செய்ததற்கு கண்டனம் – ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன்

பத்திரிக்கை செய்தி

காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன் தொழிற்சங்கம்  அமைத்து அதற்கான அங்கீகாரம் கோரி கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடி வருகிறது. தொழிற்சங்க அங்கீகாரம் கோரி போராடிய பல முன்னனி தோழர்கள் வட மாநிலங்களுக்கு இடமாற்றம், தற்காலிக பணிநீக்கம், நிரந்திர பணி நீக்கம், நியாயமாக வழங்க வேண்டிய கிரேடு வழங்காமை, நியாயமற்ற முறையில் சம்பள பிடித்தம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2015, நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் மற்றும் பன்னாட்டு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன் இணை செயலாளர் தோழர்.செந்தில்குமார் அவர்கள் “மழையினால் பாதிக்கப்பட்ட ஆட்டொமொபைல் நிறுவனங்கள்” என்ற தலைப்பில்  19.12.2015-ம் தேதி அன்று சன் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் தோழர்.செந்தில்குமார் அவர்கள் “சுற்று வட்டாரத்தில் உள்ள கார் கம்பெனிகள் Ford, BMW நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது, ஆனால் அதைவிட பலமடங்கு லாபம் ஈட்டும் எங்கள் ஹூண்டாய் நிறுவனம் இதுவரை எங்கள் தொழிலாளிக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை இது மனதிற்கு வருத்தமாக உள்ளது” மேலும் எங்கள் ஹூண்டாய் நிறுவனம் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கியுள்ள நிறுவனம் என்றும் மழை வெள்ளத்தால் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு நிற்கும் தொழிலாளர்களுக்கு நிச்சயமாக நிவாரணம் வழங்குவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஹூண்டாய் நிர்வாகமோ தோழர்.செந்தில்குமார் அவர்கள் HMIEU-வின் இணை செயலாளர் என்றே ஒரே காரணத்திற்காக அவரை பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்தோடு கடந்த 22.12.2015 நாளிட்ட காரணம் கோரும் (Show cause Notice) கடிதம் வழங்கி உள்விசாரணையும் நடத்தப்பட்டது.

நிலையாணை எண் 21(57)–ல்  “வேண்டுமென்றே நிர்வாக நலனுக்கு குந்தகமான அல்லது தவறான தகவல் தருதல்” குற்றமாக வரையரை செய்யப்பட்டுள்ளது, நிலையாணை எண் 21(81)–ல்  “கம்பெனியின் நலத்திற்கு எதிராக அல்லது ஒழுக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் செயல்களை செய்தல்” குற்றமாக வரையரை செய்யப்பட்டுள்ளது,  இதை உறுதி படுத்தக்கூடிய சாட்சியோ, சான்றாவனமோ விசாரணையில் விசாரிக்கப்படவில்லை ஆனாலும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டதாக விசாரணை அதிகாரி பிழையாக முடிவு செய்துள்ளார் என தொழிலாளி தரப்பில் கூறப்பட்டது.

உள்விசாரணையில் தோழர்.செந்தில்குமார் “தனக்கு நியாயமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை. விசாரணை அலுவலர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டார். அவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் அவரை மாற்றி நடுநிலையாளர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க கோரியும் கோரிக்கையை தாங்கள் ஏற்காது நிராகரித்துள்ளீர்கள். இது எனக்கு எதிரானதாகும். விசாரணை அதிகாரி முழுக்க முழுக்க எனக்கு எதிராக செயல்பட்டு தனது நிர்வாக சார்பு தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே எப்படியாவது என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது முடிவு அறிக்கையை எழுதியுள்ளார். இதிலிருந்தே எனக்கு உரிய நியாயமான வாய்ப்பை வழங்காமல் இயற்கை நீதிக்கு விரோதமாக விசாரணை நடந்துள்ளது என்பது தெளிவாகிறது. எனது கோரிக்கை அனைத்தும் எனக்கு சட்டப்படி வழங்கவேண்டிய நியாயமான சந்தர்ப்பத்தை மறுப்பது ஆகும், இயற்கை நீதிக்கு புறம்பானது ஆகும். விசாரணை இயற்கை நியதியின்படியும் சட்டத்திட்டங்கள் படியும் முறையாக நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வாய்ப்புகளும் எனக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது உண்மை அல்ல, மேலும் விசாரணையில் நடுநிலையாளர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்ததாக கூறுவது உண்மையல்ல, ஆதாரமற்றது. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் மீதான விசாரணை இயற்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டு தேவைப்படும் அனைத்து வாய்ப்புகளும் எனக்கு வழங்கப்பட்டதாக தாங்கள் தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு மாறானது, ஆதாரமற்றது. இயற்கை நீதி என்பது விசாரணையில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அம்சம் அல்ல, இயற்கை நீதி என்பது குற்றச்சாட்டு மீதான வழங்கப்படும் தண்டணையை முடிவுசெய்யும் போதும் கடைபிடிக்க வேண்டிய அம்சமும் ஆகும். ஆனால் என்மீதான விசாரணையில் இந்த இரண்டு அம்சங்களும் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது. இதை முடிவு அறிக்கை அளித்த விசாரணை அதிகாரியும் கவனத்தில் கொள்ளவில்லை, தண்டணையை உத்தேசித்துள்ள தாங்களும் கவனத்தில் கொள்ளவில்லை” என விசாரனை முடிவறிக்கை மீதான தனது விளக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

மேலும் நிர்வாகத்தரப்பு சாட்சி மற்றும் நிர்வாகப்பிரதிநிதி இருவரும் விசாரணையில் முரண்பட்ட கூற்றுகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த முரண்பட்ட கூற்றுகள் எதையும் நிர்வாகமும் கவனத்தில் கொள்ளவில்லை, விசாரணை அதிகாரியும் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக குற்றம் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுதினார். தோழர்.செந்தில்குமார் அவர்கள் தன் தரப்பு நியாயத்தை ஹூண்டாய் நிர்வாகத்திடம் எவ்வளவு எடுத்துரைத்தும் தனது குரல் ஊமையின் குரலாகவே ஒலித்தது.

Article 19 in The Constitution Of India 1949
19. Protection of certain rights regarding freedom of speech etc
(1) All citizens shall have the right
(a) to freedom of speech and expression;
மேலும் The right to freedom of speech and expression is wider in its scope and it is not susceptible to any precise definition. It is a phenomenon through which one conveys his idea to others. Viewed from this angle, right to information is only a step that helps individual to get himself well-informed, so that he can right to freedom of speech and expression, effectively; M.Narayan Reddy v. Government of India, 2011 (4) RCR (civil) 418  என்ற வழக்கில் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளது போல் தோழர்.செந்தில்குமார் அவர்கள் தன்னை போல் உள்ள உழைக்கும் வர்க்கம் நன்மை அடைய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தன் மனதில் தோன்றிய உண்ணதமான யோசனையை தொலைக்காட்சி பேட்டியில் மூலம் தெரிவித்துள்ளார். இது எந்த விதத்திலும் குற்றச்செயல் அல்ல என்பதனை நடுநிலையாளர்களே திட்டவட்டமாக ஒப்புக்கொள்வர்.
தோழர்.செந்தில்குமார் அவர்கள் தான் அளித்த பேட்டி உண்மை என்றும் அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, இனி வரும் காலங்களில் இது போன்று பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் உறுதியும் தெரிவித்திருந்தார். மேலும் தான் நிறுவனத்தில் 19 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய ஊழியன், இது தவிர தனது சேவைக்காலம் முழுவதிலும் எந்த வித குற்றசாட்டிற்கும் இடம் அளிக்காமல் பணியாற்றியுள்ளேன் என்றும் நிர்வாகத்திடம் தனது விளக்கத்தை பணிந்து தெரிவித்திருந்தார். ஆனால் ஹூண்டாய் நிர்வாகமோ தோழர்.செந்தில்குமார் அவர்கள் HMIEU சங்க இணை செயலாளர் என்ற காரணத்திற்காக பழிவாங்கும் எண்ணத்தோடு 6 நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்.

தோழர்.செந்தில்குமார் அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது சட்ட விரோதமான செயல் ஆகும். இது இயற்கை நீதிக்கு புறம்பானது ஆகும். நாம் ஹூண்டாய் நிர்வாகத்திடம் இத்தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை(எழுத்துரிமை), கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகுபாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவைகள் மறுக்கப்படுவது இயற்கை நீதிக்கு புறம்பானது ஆகும். இது அப்பட்டமாக ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் ஆகும்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த இந்த அடிப்படை உரிமைகள்,  அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜனநாயகம் வடிவமைத்துள்ள அடிப்படை உரிமையை, மனிதனின் இருதயமும் உயர்சக்தியும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும் என்கிறார்.

எவன் ஒருவன் தன் உரிமையைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

ஆம் தோழர்.செந்தில்குமார் அவர்கள் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்ட உரிமைக்காக போராடும் ஓர் உயர்ந்த மனிதர்……..சுதந்திரமான மனிதர்…

இரா.ஸ்ரீதர்
பொதுச்செயலாளர்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன்
எண்27,மசூதி தெரு,
சேப்பாக்கம்,சென்னை-5

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.