அரசியல் சாசனமா? தொழிற்சாலைகளின் நிலையாணைகளா?

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தொழிற்சாலைகளை கண்டித்து பெரும் போராட்டம்

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல் சாசனம் சில அடிப்படை உரிமைகளை உறுதிபடுத்துகிறது. இதில் தொழிற்சங்க உரிமையும், பேச்சுரிமைகளும் அடங்கும். தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் நிலையாணைக் கோட்பாடுகளை காரணம் காட்டி தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோவதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஐக்கிய தொழிலாளர் முன்னணி(யு.எல்.எஃப்) சங்கத் தொழிலாளர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் உள்ளத் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதையும், தொழிற்சாலைக்கு வெளியேயும் தொழிலாளர்கள் மேல் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டக் கோரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கோடிட்டு காட்டியத் தொழிலாளர்கள், அடிப்படை சாசனங்களை உறுதிபடுத்தாத நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடுவது வெறும் அடையாளமாகவே உள்ளது என்பதை கோஷமிட்டு முழங்கினர்.

IMG_20160815_120340611_HDR

இப்போராட்டத்தில் ரெனால்ட் நிசான், எம்.ஆர்.எஃப்(அரக்கோணம், திருவொற்றியூர், புதுச்சேரி), ஆட்டோ ஸ்டீல் பைப் இந்தியா, காத்ரெஜ், இந்துஸ்தான் லிவர், க்வான்சங்க் செங்காடு, கேபி ஆட்டோமோடிவ், என்விஹெச் இந்தியா, என்ஹெச்எஃப் கிருஷ்ணா ஆட்டோமோடிவ், எம்எஸ்ஐ மண்ணுர், விப்ரோ இன்ப்ராஸ்டர்க்சர்ஸ், கேட்ஸ் யுனைடட் இந்தியா உட்பட 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் மாதத்தில் ரெனால்ட் நிசான் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் சென்னையில் ஒரு போராட்டம் நiபெற்றது. போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பதற்காக 59 தொழிலாளர்கள் மீது ரெனால்ட் நிசான் நிர்வாகம் குற்றப்பத்திரிக்கை(ஷோ காஸ்) அளித்துள்ளது என்று ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறினார். மேலும் பேஸ்புக் மற்ற இணைய தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்ததாகவும் தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைவதாக அவர்கள் கூறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகவும் சங்க உரிமைகளை மறுப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்(சிறு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததற்காக ஹுண்டாய் தொழிலாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்).

2007ல் தொடரப்பட்ட ஒரு நீதிமன்ற வழக்கில்(2512/India), ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிலாளர்களின் சங்கத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை இயற்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய யு.எல்.எஃப் சிறப்பு செயலாளர் கிரிஸ்டோபர், இது குறித்து உடனடியாக சட்டம் இயற்ற அரசு வர வேண்டும் என்று கோரினார். ரெனால்ட் நிசானில் நடக்கும் தொழிலாளர் விரோதப் போக்கையும், அதிகரித்து வரும் ஒப்பந்த தொழிலாளர் முறையையும் அவர் கண்டித்தார். தங்களுடைய போக்கில் அரசு குறிக்கிடாது என்று நிர்வாகங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதனால் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்காள்கின்றன என்று கூறிய அவர் தொழிலாளர் வர்க்கத்தை நிலைநாட்டும் அரசே தொழிலாளர்களுக்கு உகந்தது என்று கூறினார்.

தொழிற்சங்க அங்கீகாரத்தில் உள்ள சட்ட ஓட்டைகளும், தொழிலாளர்கள் சட்டங்கள் குறித்து நிர்வாகம் மற்றும் அரசிடம் உள்ள மெத்தனப் போக்குகளே இன்றைக்கு தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பெரிய சவால்கள் என்று எம்.ஆர்.எஃப் தொழிற்சங்கப் பொருளாளர் சேகர் கூறினார். உற்பத்தி மற்றும் அரசாண்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு நாடு கட்டமைக்கப்படுவதாகக் கூறிய அவர் இந்த இரண்டிலும் இந்தியா தோல்விகளையே சந்தித்து வருகிறது என்று குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளில் உள்ள தேக்கம், தொழிலாளர்களை சுரண்டக் கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் மூதலீடுகளை அனுமதித்தல், சுற்றுப்புறச் சீரழிவு ஆகியவற்றை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கத் தவறும் நீதித்துறையையும் அவர் சாடினார். தொழிற்சங்க அங்கீகாரங்கள் குறித்து 250 தொழிலாளர் பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து ஐஏஎஸ் படித்த முதலாளித்துவ அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ரெனால்;ட் நிசான் போன்ற நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு என்ற பெயரில் நிலங்களும் சலுகைகயும் தாரைவார்க்கப் படுவதை சுட்டிக்காட்டி ரெனால்ட் நிசான் தொழிற்சங்கப் பிரதிநிதி பிரபாகர், முறையான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றனவா என்று ஏன் அரசுகள் கவனம் செலுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பினர். 59 தொழிலாளர்களின் மேல் குற்றப்பத்திரிக்கை அளித்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதாகவும், நீதிமன்றத்தை அணுகாமல் நிர்வாகம் எந்த இறுதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதுவரை 44 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறிய அவர் இவ்வாறான தொழிலாளர் விரோதப் போக்கை கைவிடுமாறு கோரினார்.

யு.எல்,எஃப் நிறுவனர் வழக்குறைஞர் பிரகாஷ், சுதந்தரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையில் இருந்து சுதந்திரமின்மை, சரியான கல்வியின்மை, போராட்டத்திற்கான உரிமையின்மை, சரியான வேலைக்கு முறையாக ஊதியமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் அடிமை நிலைமையை சுட்டிக்காட்டினார். 90சத மக்கள் விவசாயம், உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகளில் தொழிலாளர்களாக மட்டுமே இருக்கும் இந்திய நாடு, சுதந்திரம் ஆகியவற்றை குறித்து சிந்தித்து ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டார். சென்னைக்கு சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் 100க்கு 10 தொழிலாளர்களே நிரந்தர வேலையில் உள்ள போது 60000 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை பற்றி பேசுவதை சுட்டிக்காட்டிய அவர் சிறுபான்மையினர் முதலாளிகளுக்கா மட்டுமே இந்தியா உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

IMG-20160815-WA0008

சிகாகோ நகரத்தில் 8 மணி நேர வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் வெள்ளைக் கொடியை ஏற்றிச் சென்ற போது, அவர்கள் மேல் துப்பாக்கி குண்டுகள் செலுத்தியதானால், வெள்ளைக் கொடிகள் சிகப்புப் கொடிகளாக தொழிலாளர் வர்க்கக் கொடிகளாக மாறின என்பதை நினைவூட்டிய அவர் இன்று 8 மணி நேரத்திற்கு மேல் 4 மணி நேரம் ஓவர்டைம் என்பதே தொழிலாளர்கள் வாழ்வாக மாறி விட்டதை சுட்டிக் காட்டினார். பல்வேறு தொழிற்சாலைகளில் நடக்கும் பிரச்சனைகளையும், அதற்காக யுஎல்எஃப் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் விவரித்தார்.

தொழிலாளர்களின் அடிமைத்தனத்தை நீக்கி தொழிலாளர் வர்க்க சுதந்திரத்தை நிலைநாட்ட அனைத்து தொழிலாளர்களும் கோஷம் எழுப்பினர். தங்களுடைய உரிமைக்காக போராட்டம் தொழிலாளர்களின் மேல் அரசு செலுத்தும் ஒடுக்குமுறைகளையும் அவர்கள் கண்டித்தனர்.

 

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles and tagged , , , , , , , , , . Bookmark the permalink.