தொழிலாளர் கோரிக்கைகளை சட்டவாதம் வென்றெடுக்குமா? திருவொற்றியூர் அரங்கக் கூட்டத்தில் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள் கண்டனம் – கேள்விகளுக்கு தொழிற்சங்க பிரதிநிதியின் பதில்

நிர்வாகத்திற்கு எதிராக எம்ஆர்எஃப் தொழிற்சங்க தலைவர்கள் மேற்கொண்டுள்ள சட்டவாத முறையை எம்ஆர்எஃப் தொழிலாளர்கள், முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சமூகத் தொழிலாளர் தலைவர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர். சட்டவாத முறை தொழிலாளர் கோரிக்கைகளை வென்றெடுப்பதில் மிகுந்த காலதாமதத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், தொழிலாளர்கள் நம்பிக்கை இழக்கச் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அக்டோபர் 24 அன்று தொழிலாளர் சீரமைப்பு இயக்கம், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம், எம்ஆர்எஃப் எல்பிஎஃப், எம்ஆர்எஃப் அண்ணா தொழிலாளர் பேரவை ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்த இக்கூட்டத்தில் உழைக்கும் மக்கள் தொழற்சங்க மன்றத்தின் தலைவரும் முன்னாள் எம்ஆர்எஃப் சங்கத் தலைவரும் ஆன தோழர் குசேலர் முக்கிய உரையாற்றினார். இக்கூட்டத்தில் எம்ஆர்எஃப் தொழிலாளர்கள், எம்ஆர்எஃப் ஓய்வு பெற்றத் தொழிலாளர்கள், அசோக் லேலண்ட், ஹிந்துஜா பவுண்ட்ரீஸ், என்பீல்ட், கார்பரண்டம், கோரமண்டல், கோத்தாரி மற்றும் எவரெடி தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 500 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

mrf-hall-meeting1

ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவு செய்ய வேண்டிய காலத்தைத் தாண்டி 40 மாதங்கள் ஆகியும் இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று எம்ஆர்எஃப் தொழிற்சங்க முன்னாள் துணைத் தலைவர் தோழர் சிவபிரகாசம் கூறினார். நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்க தொழிலாளர் வர்க்கத்திற்கு பல வழிகள் உள்ளன என்றும் அதில் சட்டவாதம் ஒன்று மட்டுமே என்றும், தொழிற்சங்கம் சட்டவாதத்தை கையில் எடுத்துள்ளதனால் தொழிலாளர்களின் போராட்டம் அதற்கு ஏற்றால் போல் வகுக்கப்படுகிறது என்றும் அவர் கருத்துரைத்தார்.

தற்போது 4 வருடங்களுக்கு ஒருமுறை எம்ஆர்எஃப் நிர்வாகமும் தொழிற்சங்கமும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. கடைசியான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2009ல் கையெழுத்திடப்பட்டு 2013ல் முடிவுற்றது. 2014ல் நடைபெற்ற ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் நிர்வாகம் அடுத்த நான்கு வருடங்களுக்கு மாதம் ரூ8250 ஊதிய உயர்வாகத் தர வாய்மொழியாக ஒப்புக்கொண்டதாகவும் 2013 ஜுலையில் இருந்து இதை நடைமுறைப்படுதத் தயாராக இருந்ததாகவும் தோழர் சிவப்பிரகாசம் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை முறிந்ததாக தொழிலாளர் துறையில் இருந்து ஆணையை வாங்கிய தொழிற்சங்க நிர்வாகம் இப்பிரச்சனையை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

கடந்த ஜனவரி 2016ல் தோழர் சிவப்பிரகாசம் தொழிற்சங்கப் பிரதிநிதியாக செயல்பட்ட போது, நிர்வாகம் ரூ9250 ஊதிய உயர்வு தருவதற்கு முன்வந்த போது, தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் பிரபாகரன் இதற்கு முதலில் ஒத்துக்கொண்டதாகவும் பின்னர் பின்வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த 40 மாதங்களில் இடைக்கால ஊதிய உயர்வே பெற முடிந்ததாகவும் அதனால் சட்டவாதம் தொழிலாளர் போரட்டத்திற்கு சரியானப் பாதையல்ல என்று அவர் கருதினார்.

எம்ஆர்எஃப் தொழிற்சங்கத்தை வழிநடத்தும் சங்கத் தலைவர் தோழர் பிரகாஷ் நிர்வாகத்திற்கு சாதகமாக வேலை செய்யவில்லை என்றாலும் அவருடைய சட்டவாத முறை நிர்வாகத்திற்கு துணையாக செயல்படுகிறது என்று தோழர் சிவபிரகாசம் கூறினார். தொழிலாளர்களின் மேலான ஒடுக்குமுறையை நிர்வாகம் அதிகரித்து கொண்டு வருவதாகவும் அதைத் தடுப்பதற்கு சங்கம் செயல்படவில்லை என்றும் அதனால் தொழிலாளர்கள் மத்தியில் தோல்வி மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும் போராடுவதற்கு தொழிலாளர்கள் தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் 30நாட்கள் வேலை நிறுத்தம் நடத்தி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுத்த சங்கம் தற்போது 5 நாட்கள் பட்டினிப் போராட்டத்தை கண் துடைப்பிற்காக செயல்படுத்துவதை அவர் கண்டித்தார்.

சட்;டவாத முறையை தொழிற்சங்கம் கையில் எடுத்ததில் இருந்து நிர்வாகம் 48 தொழிலாளர்களை தற்காலிக வேலைநிறுத்தம், 15 தொழிலாளர்களை நிரந்தர வேலைநிறுத்தம் செய்துள்ளது மற்றும் பலத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை மெமோக்களை கொடுத்துள்ளது என்று எம்ஆர்எஃப் தொழிலாளரும், குமுக விடுதலைத் தொழிலாளர் இயக்கத்தின் தோழர் சேகர் கூறினார். இவற்றை எதிர்த்து தொழிலாளர் துறையிலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுப்பதாக சங்கம் கூறியும் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். நீதிமன்றத்தில் சட்டம் தொடுக்கும்போது வாய்தாக்கள் மூலம் நிர்வாகம் வழக்கை பல வருடங்களுக்கு தாமதிக்கமுடியும் என்ற பச்சத்தில் ஏன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். சட்டவாதத்தை பலத் தொழிலாளர்கள் எதிர்ப்பதாகவும் இது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு எடுக்கக் கோரியும் தொழிற்சங்க நிர்வாகம் மதிக்காமல் ஜனநாயக மரபை மீறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் தொழிலாளர்கள் கூட்டங்கள் நிர்வாகத்தின் சுரண்டல்களையும், ஒடுக்குமுறைகளையும் குறித்து பேசுவதற்காக கூட்டப்படும் என்றும், தன் வாழ்நாளில் முதல்முறையாக தொழிற்சங்க யுக்தியை குறித்து பொது மேடையில் பேசுவதற்கு கூட்டப்படுகிறது என்று தோழர் குசேலர் கூறினார். தொழிற்சங்க நடைமுறைகளில் உள்ள ஜனநாயகச் சிக்கல்களை இக்கூட்டங்கள் வெளிப்படுத்துவதாக அவர் கருதினார். தொழிலாளர்களின் மேல் நடத்தப்படும் ஒடுக்குமுறையை கட்டுப்படுத்துவது தொழிற்சங்கத்தின் அடிப்படை கடமையாகும் என்றும் தற்போது எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் நடக்கும் செயல்கள் தொழிற்சங்கத்தின் செயலின்மையை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

எம்ஆர்எஃப் சங்கத்தின் தலைவராக பல வருடங்கள் செயல்பட்ட தோழர் குசேலர் எம்ஆர்எஃப் தொழிற்சங்க போராட்ட வரலாற்றை வர்ணித்தார். 70களில் நடந்த போராட்டத்தின் போது* எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்ய மாநில அரசு தடை செய்தது. அதையடுத்து எம்ஆர்எஃப் நிர்வாகம் மொத்தம் 1100 தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்தது. இதை எதிர்த்து மற்றத் தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் கட்சிகளின் ஆதரவுடன் தொழிற்சங்கம் பெரும் போராட்டத்தை மேற்கொண்டது. தோழர் குசேலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். உடனே தோழர் குசேலரை விடுவிக்கக் கோரி பல்வேறுத் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் பரவியது. அதை அடுத்து மாநில அரசு தோழர் குசேலரை விடுவித்தது மட்டுமல்லாமல் எம்ஆர்எஃப் நிர்வாகம் அனைத்துத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தியது. ஒரு தொழிலாளரின் வேலையும் பறி போகாமல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இன்று அவ்வாறான போராட்டங்கள் நடைபெறாதது குறித்து பேசிய தோழர் குசேலர், ‘தொழிலாளர்களுக்கு ஏட்ப தலைவர்கள் அமைகிறார்களா அல்லது தலைவர்களுக்கு ஏற்ப தொழிலாளர்கள் நடக்கின்றனரா?’ என்று கேட்டார். எம்ஆர்எஃப் தொழி;ற்சங்கத்தின் தலைவராக இருந்த தன்னை 8 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர்கள் வாக்கெடுப்பில் வீழ்த்தியதைக் குறிப்பிட்ட தோழர் குசேலர், ஜனநாயகரீதியில் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும், அதைத் தான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும் என்று குறிப்பிட்டார். எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் உள்ள இளம் தொழிலாளர்கள் போராட்டம் தேவையில்லை என்று கருதியிருக்கலாம் அவர்களுக்கு சட்டவாதம் சரியான பாதையாக தோணலாம் என்றும் அவர் கருதினார்.

தொழிற்சாலையி;ல் கோரப்படும் ஊதிய உயர்வுகள் அந்த துறை மற்றும் பகுதியை பொருத்து அமைபிறது என்று குறிப்பிடுகையில், ஒரு காலத்தில் வடசென்னையில் ஊதியத்தை நிர்ணயிக்கும் தொழிற்சாலையாக எம்ஆர்எஃப் திகழ்ந்தது என்றும், இன்று மற்ற தொழிற்சாலைகளில் ஊதிய உயர்வு கோரும் நிலையில் நிர்வாகங்கள் எம்ஆர்எஃப் ஊதியத்தை மேற்கோளாக காட்டும் நிலைக்கு தாழ்ந்து விட்டது என்று தோழர் குசேலர் குறிப்பிட்டார்.

கூட்டத்தை ஒருங்கிணைத்த இயக்கங்களும், தொழிலாளர்களும் ஒரு மாத காலத்தில் எம்ஆர்எஃப் தொழிற்சங்கம் தொழிலாளர்கள் மத்தியில் சட்டவாதத்தை குறித்த ஒரு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

எம்ஆர்எஃப் தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் பிரபாகரனின் விளக்கம்

1966ல் இருந்து எம்ஆர்எஃப் நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் 11 ஊதிய உயர்வு ஒப்பந்தங்கள் இயற்றப்பட்டன. இதில் வேலை நிறுத்தம், லாக்அவுட் மற்றும் போராட்டங்களின் விளைவாக 6 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. மற்ற 5 ஒப்பந்தங்கள் எந்த போராட்டங்களும் இல்லாமல் போடப்பட்டன. நிர்வாகத்துடன் போடப்பட்ட கடைசி ஒப்பந்தம் ஜுலை 2013ல் முடிவுற்றது. இந்தப் பகுதியில் (வட சென்னை), அசோக் லேலன்ட் தொழிலாளர் மாதம் ரூ50000 ஊதியம் பெறுகிறார், என்பீல்ட், ஹிந்துஜா பவுண்ட்ரீஸ் மற்றும் கார்பரண்டம் தொழிலாளர்கள் மாதம் ரூ40000 ஊதியம் பெறுகின்றனர். எம்ஆர்எஃப் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ22000 மட்டும் தான்.

எம்ஆர்எஃப் தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுவதற்கான ஒரு காரணம் மற்ற தொழிற்சாலைகளில் போல் இல்லாமல் இங்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை போடப்படுகிறது. மேலும் இங்குள்ள நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு நடக்கும் போதே அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிற்சாலை ஆட்குறைப்பு மற்றும் ஒப்பந்தமுறை நடைமுறையாக்கப்படுகிறது. உதாரணமாக என்பீல்ட் தொழிற்சாலையில் இன்று 90 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர் ஆனால் 3500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். எம்ஆர்எஃப் தொழிற்சாலையிலும் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் 50 தொழிலாளர்களை அவுட்சோர்ஸ் செய்வதற்கான திட்டத்தை நிர்வாகம் முன்வைத்துள்ளது. இதை தொழிற்சங்கம் எதிர்த்து வருகின்றனர்.

பிப்ரவரி 24 அன்று நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் மாதம் ரூ8250 ஊதிய உயர்வு தருவதற்கு நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால் அவுட்சோர்ஸ் செய்யக் கூடாது என்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் வேண்டும் என்ற தொழிற்சங்கக் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கவில்லை. 2009ஆம் ஆண்டு தோழர் தா. பாண்டியன்* தலைமையில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் நான்கு வருடங்களுக்கு மாதம் ரூ3500 ஊதிய உயர்வு என்று கையெழுத்திடப்பட்ட போது 100 வேலைகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டன. தற்போது சட்டத்தின் வாயிலாக ஏற்கனவே தொழிலாளர்களுக்கு மாத ஊதிய உயர்வு ரூ3500 கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத் தீர்ப்பு ஒரூ வருட காலத்திற்கே அமலாக்கப்படும் நிலையில் அதற்கடுத்து வரும் பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் மேலும் பலமான நிலையில் ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியம் ஏற்படும்.

தொழிற்சாலையில் 14 தொழிலாளர்கள் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 தொழிலாளர்கள் வேலைக்கு பல நாட்கள் வராதவர்கள். ஒரு தொழிலாளர் குறைந்த செயல்திறன் உள்ளவர். இன்னொரு தொழிலாளர் மேற்பார்வையாளரை தரக்குறைவாக பேசினார். இவ்வாறான ஒழுங்கற்ற தொழி;லாளர் நடவடிக்கைகள் நீதிமன்ற வழக்கை பாதிக்கும் என்று ஏற்கனவே தொழிற்சங்கம் தொழிலாளர்களிடம் கூறியுள்ளனர்.

எம்ஆர்எஃப் தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் வாயிலாக ஊதிய உயர்வு ஒப்பந்தங்களை வென்ற காலத்தில் திருவொற்றியூர் தொழிற்சாலையில் மட்டுமே எம்ஆர்எஃப் நிர்வாகம் உற்பத்தி செய்து வந்தனர். தற்போது எம்ஆர்எஃப் நிறுவனத்திற்கு 8 தொழிற்சாலைகள் உள்ளன. நிர்வாகத்தில் உற்பத்தியில் திருவொற்றியூர் தொழிற்சாலை 4 சதத்தை தருகின்றனர். 2009ல் கோட்டயம் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஐஎன்டியுசியின் கீழ் 10 மாத வேலை நிறுத்தம் செய்தனர். இதற்கு அன்றைய காங்கிரஸ் மாநில அரசும் துணை சென்றனர். எம்ஆர்எஃப் நிர்வாகம் தாய்வானில் இருந்து ட்யூப்களை இறக்குமதி செய்து எம்ஆர்எஃப் பிராண்ட் செய்து விற்றனர். இதனால் 10 மாதம் வேலை நிறுத்தம் செய்தும் போராட்டம் தோல்வியுற்றது. தற்போது தமிழ்நாட்டில் எந்த தொழிற்சாலைகளிலும் வேலை நிறுத்தம் வென்றதாக அறிகுறிகள் இல்லை.

இன்றைய நடைமுறைகளில் தொழிற்சங்கம் நிர்வாகத்துடன் நேரில் மோதாத போதிலும், தொழிற்சாலையில் நடக்கும் தொழிலாளர் விரோதப் போக்குகளை நீதிமன்ற அவமதிப்பு ஆணைகளாக நிறைவேற்றியுள்ளனர். உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாத 500 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தொழிற்சங்கம் நிறைவேற்றியுள்ளது. 2007ல் நிர்வாகம் தொழிற்சாலையை மூடியபோது, நீதிமன்றம் வாயிலாக லாக்அவுட் சட்டப் புறம்பானது என்ற தீர்ப்பை தொழிற்சங்கத் தலைவர்கள் வென்றனர். தோழர் குசேலர் கூறியபடி ஜனநாயக ரீதியில் தொழிற்சங்கத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் சட்டரீதியான முறைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

*பிழை திருத்தப்பட்டுள்ளது

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , , , , , . Bookmark the permalink.