ஹோண்டா தொழிலாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் தொழிற்சாலை நோக்கி திரும்புகிறது

ஹோண்டா இரண்டு சக்கர வாகனத் தொழிலாளர் சங்கத் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்குவதை எதிர்த்து, செப்டம்பர் 19 அன்று ஹோண்டா டாபுகாரா தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். ஜந்தர் மந்தரில் தொடர்ந்த இப்போராட்டம் 20 நாட்கள் நீடித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டத் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகிய நிலையில், மற்ற தொழிலாளர்கள் மற்றும் தில்லி தொழிலாளர் துறை அமைச்சரின் வேண்டுகோளின் படி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதத்தை அக்டோபர் 8 முதல் மேற்கொண்டனர். 32 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டத் தொழிலாளர்கள் நவம்பர் 10 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்தனர்.

nyay-sangarsh-rally-conclusion-at-jantar-mantar-2

nyay-sangarsh-rally-conclusion-at-jantar-mantar-2

இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஹோண்டாத் தொழிலாளர்களின் பக்கம் ஈர்ப்பதற்கு போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஹோண்டா தொழிலாளர்களின் போராட்டக் குழு(Honda Kamgar Sangarsh Samiti) ஆதரவுப் போராளி கூறினார். அனைத்துத் தொழிலாளர்களின் மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யவும், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தவும் மாநில அரசிடம் கோரி தொழிலாளர்கள் பலப் போராட்டங்களை பிப்ரவரியில் இருந்து நடத்தி வருகின்றனர். ஹோண்டா நிர்வாகத்தின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை குறித்து கவன ஈர்ப்புப் போராட்டமாக நடத்தப்பட்ட தற்போதையப் போராட்டம் தொழிலாளர்களின் முயற்சியினால் வென்றது என்று அவர் கூறினார். இப்போராட்டத்தின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து ஆதரவு பெருகியுள்ளதாக தொழிலாளர் ஆதரவாளர் கூறினார். மேலும் இது குறித்து அரசியல் கட்சிகளும் அறிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தீபாவளிக்கு முன்னர் தொழிலாளர்கள் ஹோண்டா வாகனங்கள் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினர். தீபாவளியின் போது வாகனங்கள் விற்பனை அதிகமாக இருப்பதால் வாகனப் புறக்கணிப்புப் போராட்டம் நிர்வாகத்தின் மீது நெருக்கடியை ஏற்படுத்தியது. நிர்வாகம் தொழிலாளர்கள் மேல் வழக்கு தொடுத்தது இப்போராட்டத்தின் தாக்கத்தைக் குறிக்கிறது. தீபாவளிக்குப் பின்னர் வாகன விற்பனை குறைந்துள்ளது. தற்போது மோடி அரசு 500ரூ, 1000ரூ நோட்டுகளை சந்தையில் இருந்து நீக்கியதால் ஹோண்டாவின் விற்பனை இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்துள்ளது. தொழிலாளர்களுக்கு விடுமுறைகள் விடப்பட்டு வருகின்றன. நிர்வாகம் மேல் உள்ள நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் புறக்கணிப்புப் போராட்டமும் உண்ணாவிரதப் போராட்டமும் முடிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் ஆல்வார் தொழிலாளர் துறை துணை ஆணையரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 102 நிரந்தரத் தொழிலாளர்களை வேலை விட்டு நீக்குவதற்கு முன் நிர்வாகம் அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியது சட்டவிரோத செய்லாகும். இது குறித்த வழக்கின் முடிவில் நிர்வாகம் செய்தது சட்டவிரோத செயல் என்று துணை ஆணையர் வாய்மொழியாக ஆணையிட்டார் என்றும் ஆனால் இறுதியில் நவம்பர் 21ல் பிறப்பித்த ஆணையில் நிர்வாகத்திற்கு ஆதரவாக தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியது செல்லும் என்று குறிப்பிட்டுள்ளதாக ஆதரவாளர் கூறினார். தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகுவது தவிர வேறு வழியில்லை என்று அவர் கருதினார். மேலும் 20 தொழிலாளர்கள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 3000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த கட்டமாக இப்பகுதிகளில் உள்ள மற்ற தொழிலாளர்கள் அமைப்புகள் குறிப்பாக டாய்கின் மற்றும் ஸ்ரீராம் பிஸ்டன் தொழிலாளர்களுடன் கூட்டணி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் கூறினார். சட்டரீதியான முயற்சிகள் குறித்தும் தொழிலாளர்கள் ஆராய்ந்து வருகிறன்றனர். துணை ஆணையரின் ஆணையை எதிர்த்து வழக்குத் தொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹோண்டாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் உள்ள இணைப்பை பலப்படுத்துவது, அவர்களை சங்கத்தில் சேர்க்கும் முயற்சிகள் எடுப்பது என்று தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். நீம்ரானா, தாபுகாரா, பிவாடி ஆகியப் பகுதிகளில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து பிராந்திய சங்கம் அமைப்பது குறித்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் இங்கு உள்ள பெரிய நிறுவனங்களுக்கு எதிராக ஒரு நெடியப் போராட்டத்தை நடத்துவதற்கான சாத்தியங்களை பலப்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு மாநாடு நடத்த இப்பகுதித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.