ஓரகடம் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் இரவு ஷிஃப்ட் உற்பத்தி நிறுத்தம் – பணமதிப்பு நீக்கம் காரணமா?

பண முடக்கமும், வருடக் கடைசியினால் ஏற்படக் கூடிய தேவை குறைவும் காரணமாகக் கூறப்படுகின்றன

சென்னையை அடுத்து உள்ள ஓரகடத்தில் உள்ள தனது வாகனத் தயாரிப்பு தொழிற்சாலையில் டிசம்பர் 15 முதல் ரெனால்ட் நிசான் நிறுவனம் இரவு ஷிப்ட் வேலையை நிறுத்தியுள்ளது. இதனால் 800 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழக்க உள்ளனர். மொத்தம் 2000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. க்விட் எனப்படும் புதுக்கார் தேவைக்கான கார்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆண்டு முடிவினாலும் பணமதிப்பு நீக்கத்தின் விளைவாலும் வாகனத் தயாரிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக ஆட்டோமொபைல் தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

க்விட் பிராண்ட் கார்களை தயாரிப்பதற்காக இரவு 12 மணி முதல் காலை 7 மணி வரை உள்ள இரவு ஷிப்;ட் மார்ச் 2016 ல் தொடங்கப்பட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இரவு ஷிப்டில் ஒரு அசெம்பிளி லைன் மட்டும் இயக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த ஷிப்டில் 500 கார்கள் தயாரிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். பாடி ஷாப், பெயின்ட் ஷாப் மற்றும் அசெம்பிளியை கொண்ட 3 துறைகளில் மொத்தம் 2000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 600-800 ஒப்பந்த தொழிலாளர்களும், பல பயிற்சியாளர்களும்(பயிற்சியாளர் சட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அப்பிரன்டைஸ்) அடங்குவர். க்விட் கார்களுக்கு தேவைகள் குறைவதனால் இந்த அசம்பளி லைனை முழுவதுமாக மூடுவதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கார் பாடிகள் தயாரிக்கப்படும் பாடி ஷாப் துறையில் 3 லைன்கள் உள்ளன. இதில் அண்மையில் நிறுவப்பட்ட லைன் 3 முழுவள்துமாக இயந்திரமாக்கப்படவில்லை. அதனால் இந்த லைனில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக பளுவுள்ள கார் பாடிகளை தூக்கி அவற்றை லைனில் தாங்களே தள்ள வேண்டியுள்ளது. இதனால் இந்த லைனில் வேலை நிலைமை அபாயகரமாக உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

‘லைன் 3ல் சரியான பயிற்சி அளிக்கப்படாத பயிற்சியாளர்களும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2-3 நாட்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு, அரை நாள் அசெம்பிளி லைனில் பயிற்சி கொடுத்தவுடன் தயாரிப்புகளில் நேரடியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். அனுபவமின்மையினாலும் அதிக பளுவை கையாளுவதினாலும் தொழிலாளர்களுக்கு நிறைய காயங்கள் ஏற்படுகின்றன. வெல்டிங் செய்வதனால் ஏற்படும் தூள்களால் பலருக்கு கண்ணில் காயம் ஏறபட்டுள்ளன’ என பாடி ஷாப் லைன் 3ல் இரவு ஷிப்டில் வேலை பார்த்த நிரந்தரத் தொழிலாளர் ஒருவர் கூறினார். லைனில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய நிலையில் உற்பத்தி குறைவினால் மாற்றங்கள் செய்யப்படாது என்று அவர் கருதினார்.

இரவு ஷிப்ட் மூடப்பட்டதால் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்ற லைன்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ‘இந்த லைன்களில் ‘கோ’, ‘கோ ப்ளஸ்’ மற்றும் ‘மைக்ரா’ பிராண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். மைக்ரா தயாரிப்பு 5கார்கள் விகிதமாக அதிகமாக்கப் பட்டுள்ளது. தற்போது ஆண்டு கடைசி பராமரிப்பு வேலைவைகள் தொடங்க உள்ளன. 24ம் தேதி மாலையில் ஒரு லைனும், 25ஆம் தேதி காலையில் மற்ற லைனும் நிறுத்தப்படும். புது ஆண்டு பிறந்த பின்னர் மீண்டும் உற்பத்தி மீண்டும் ஆரம்பமாகும் அப்போது தான் எங்களுடைய நிலைமை என்னவென்று தெரியும்’ என்று நிரந்தரத் தொழிலாளர் கூறினார்.

பயிற்சியாளர்கள் குறித்து அவர் கூறுகையில் பயிற்சியாளர்களை வேலையை விட்டு நீக்கவில்லை என்றும் ஆனால் அவர்கள் சென்ற பின்னர் விற்பனை குறைவாக இருந்தால் புது பயிற்சியாளர்கள் கொண்டு வரப் பட சாத்தியமில்லை என்று அவர் கருதினார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் குறித்து தற்போது தொழிற்சாலையில் சங்கம் நிறுவப் பாடுபடும் ஐக்கிய தொழிலாளர் முன்னணி(யுஎல்எஃப்) சங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

வருடக்கடைசியில் வாகன விற்பனை எப்போதுமே குறைவாக இருக்கும். ‘இந்த சமயத்தில் வாங்கினால் கார்கள் 2016 கார் என்று முத்திரை குத்தப்படும் ஆனால் இன்னும் ஒரு மாதம் கழித்து வாங்கினால் 2017 கார் என்ற அடையாளப்படுத்துவதனால் பலர் வருடக்கடைசியில் வாகனங்களை வாங்குவதில்லை’ என்று ரெனால்ட் நிசான் தொழிலாளர் கூறுகிறார். ஆனால் இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவு விற்பனை குறைந்துள்ளதாக பல நிறுவனங்கள் கூறியுள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியுள்ளன. பணமதிப்பு நீக்கம் கொள்கை காரணமாக பலரிடம் வாகனங்கள் வாங்குவதற்கான பணம் இல்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. எலக்ட்ரானிக் மற்றும் ஜவுளித் துறைகளிலும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கி வருவதாக செய்திகள் வருகின்றன.

பணமதிப்பு நீக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில் ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதற்கான நோக்கம் சரியானது என்றாலும், மோசமாக செயல்படுத்துப் படுவதாக தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலையிடத்திலேயே தற்காலிக மொபைல் ஏடிம்கள் மூலம் பணம் எடுப்பதற்கு வசதி ஏற்படுத்தியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் புது நோட்டுகளை வைத்து பரிவர்த்தனை செய்வது கடினம் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.