பணமதிப்பு நீக்கம் உழைக்கும் வர்க்கத்திற்கே பெரும் பாதிப்பு – ஹீரோ, மோட்டோகார்ப் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநீக்கம்

(Tamil translation of the post on January 4th)

புத்தாண்டு தொடக்கத்தையொட்டி தேசிய அளவில் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, எப்படி வலிகளினூடாக தன்னுடன் நின்ற இந்திய மக்களால் பெருமைப் படுவதாகக் கூறினார். அடிப்படை பொருளாதார கோட்பாடுகளை கேலிக்குள்ளாக்கும் வகையில் அமைந்த அப்பேச்சு வேலையையும் வாழவாதரத்தையும் இழந்தவர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போலவே அமைந்தது. பணமதிப்பு நீக்கத்தினால் தேவைகள் குறைந்துவிட்டதாகக் காரணம்காட்டி, தொழிற்சாலைகள் ஆயிரகணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றன. குர்கான்மானேசர் DMIC பகுதியிலுள்ள ஹோண்டா தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதும் காலவரையற்ற விடுப்பில் அனுப்பப்படுவதும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்பணமதிப்பு நீக்கத்தின் அடிப்படை நோக்கமாகக் கூறப்படும் கருப்புப் பண மற்றும் ஊழல் ஒழிப்புக்கு முற்றிலும் மாறாக, i) தேவைகள் குறைந்துவிட்டதாகக் கூறி ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் குரூர செயல்கள் ii) ஒரு நிறுவனத்தில் பல வருடங்களாக வேலை செய்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை பணமதிப்பு நீக்கத்தைக் காரணம் காட்டி வேலை நீக்கம் செய்தல் – என்று இது முதலாளித்துவ வர்க்கத்திற்கே சேவை புரிந்துள்ளது.

1996இல் உற்பத்தியைத் தொடங்கிய காலம் முதலே ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலையில் வைத்திருக்கும் குர்கான், மானேசரில் அமைந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் தொழிற்சாலையே இச்செயல்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மோடியின் கருப்புப் பண ஒழிப்பு அதிரடியால் குறைந்தது 6 முதல் 9 வருடங்கள் வரை வேலை பார்த்த சுமார் 900 ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டத்தை மீறி இவர்கள் அனைவரும் தொழிற்சாலையின் மைய உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சட்டப்படி நிரந்தரமாக்காப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் ஊழல் செயல்கள் நிச்சயமாக மோடியின் கண்களுக்குத் தெரியாது. நாடு முழுவதும் தொழிலாளர் சட்டதிருத்தம் கொண்டுவருவதன்மூலமாக நிரந்தர ஒப்பந்தமாக்கப்படுதலை இவரது அரசு சட்டப்பூர்வச் செயலாக மாற்றியமைக்கக்கூடும். sanp3

ஹீரோ நிறுவனம் இதனை வேலை நீக்கம் என்று குறிப்பிடாதபொழுதும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்களா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. 9 வருடங்கள் அயராது உழைத்த பின்னர், ஒரே இரவில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இவர்கள் ஒரிஸா, பீகார், .பி., ஆந்திரா என நாடுமுழுவதிலும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். பெரும்பாலானோர் தங்கள் ITI படிப்பை முடித்த கையோடு ஹீரோ தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்த இருபதுகளில் உள்ளவர்கள் ஆவர். நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கிய இந்த அதிரடி வேலை குறைப்பு நடவடிக்கையால் 15-20 தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்நடவடிக்கை சூடுபிடித்து, டிசம்பர் மாதத்தில் பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. தங்களுக்காகக் குரல் கொடுக்க தொழிற்சங்கம் போன்ற அமைப்புகள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் எவ்வித ஆதரவுமில்லாமல் நிற்கதியாய் நிற்பதாக நம்மிடம் சில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். நாங்கள் பேசிய பல தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சங்கம் அமைப்பதும் அடிப்படை உரிமைகளைக் கேட்பதும் சட்டப்படியான செயல்கள்தான் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். ஆறு வருடங்களுக்குக் குறைவாக வேலை பார்த்துள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படாததே இத்தொழிலாளர்களுக்குத் தாங்கள் மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளபடுவரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் உரையாடிய சில தொழிலாளர்களைப் பொருத்தவரை, இது இரண்டு சாத்தியக்கூறுகளைச் சுட்டுகிறது : ஒன்று, புதிய ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இவர்களை நிரந்தரமாக்கத் தேவையான சட்டத்தின் பிடியிலிருந்து விலக முடியும்; மற்றொன்று, உற்பத்தி வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றப்படக்கூடும் ( குஜராத்தில் ஏற்கனவே ஒரு புது ஹீரோ தொழிற்சாலை வந்துவிட்டது). இருப்பினும் பெரும்பாலானோர் சட்டத்திலும் நீதி விசாரணையிலும் கொண்டுள்ள நம்பிக்கையால், தாங்கள் மீண்டும் சட்டப்படி வேலையில் எடுத்துக்கொள்ளப்படுவர் என்று நினைக்கின்றனர்.

ஜனவரி 2 அன்று, இப்பிரச்சனையின் உக்கிரத்தை உணர்த்தும் பொருட்டு, கமிஷனர் அலுவலகம் வரையிலான பேரணி ஒன்றை தொழிலாளர்கள் ஒருங்கிணைத்து இருந்தனர். தங்களது நிலையை விளக்கும் வண்ணம் மற்ற நிறுவனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்தனர்.

ஜனவரி மூன்று அன்று, துணை தொழிலாளர் கமிஷனரின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலையிலேயே தொழிலாளர்கள் இல்லாத நேரத்தில் நிறுவன மேலாண்மை துணை தொழிலாளர் கமிஷனரைச் சந்தித்துவிட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிறுவனத்தின் பொறுப்பில்லை என்றும், அவர்களை உடனடியாக எடுத்துக் கொள்வதற்கான எந்த வாக்குறுதியும் தர இயலாது என்றும் குறைந்தபட்சம் இவ்விடுப்பில் உள்ள காலகட்டத்தில் அரை சம்பளம் வழங்குவதைக் கூட ஏற்றுக்கொள்ளாமல், எப்பொழுதும் போலவே பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டது. தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தக்காரருடன் துணை தொழிலாளர் கமிஷனரைச் சந்தித்தபோது, ஹீரோ மோட்டோகார்ப் அவர்களை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமில்லாத காரணத்தால், அவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு இடத்தில் வேலை கண்டுபிடித்துத் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை. 6 முதல் 9 வருடங்கள் தாங்கள் மைய உற்பத்தியில் வேலை செய்ததைக் குறித்து ஜனவரி 6 அன்று ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாக முடிவு செய்தனர். ஒப்பந்தக்காரரும் ஒரு அறிக்கை சமர்ப்பிப்பார். ஆனால் கூட்டத்தின்பொழுது தொழிலாளர்கள் மைய உற்பத்தில் ஈடுபட்டார்களா இல்லையா என்று தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். இதுவே நம் நாட்டில் உழைக்கும் வர்க்கத்தின் சூழ்நிலை ஆகும். பல வருடங்கள் ஓயாது உழைத்த பின்னர், தாங்கள் இத்தனை வருடங்களாக மைய உற்பத்தியில் தான் ஈடுபட்டிருந்தோம் என்பதை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றனர்.

தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் முதலாளித்துவ வர்க்கம் புரியும் ஊழல் நடவடிக்கைகளுக்கு உகந்த எடுத்துக்காட்டாக இது அமையும். நிரந்தரத் தொழிலாளர்களைப் போல, ஒப்பந்தத் தொழிலாளர்களை மைய உற்பத்தியில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மேலும், ஆட்குறைப்பினாலோ விடுப்பில் அனுப்பப்பட்டாலோ, அவர்கள் மைய உற்பத்தியில் ஈடுபடவில்லை என்று கூறி, அவர்களுக்குத் தக்க ஈட்டுத்தொகை அளிப்பதில்லை.

துணை தொழிலாளர் கமிஷனரின் அலுவலகம் முன்பு, நாளை முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து, தங்கள் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த களப்பணியாளர்களும் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.