இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் சென்னை தொழிற்சாலை லாக் அவுட்- 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை

லாக் அவுட் சட்டவிரோதம் என தொழிலாளர் துறை உதவி ஆணையர் கூறியும் நிர்வாகம் சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளது

Workers on Vigil

Integra Workers have Lunch at the gate

 

 

 

 

 

 

தொழிலாளர் சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் நிறுவனங்களின் வரிசையில், ஹுண்டாய் நிறுவனத்தின் சப்ளையர் இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையை மூடி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. பொங்கல் விடுமுறையின் போது, ஜனவரி 14(13 இரவு) அன்று சென்னை தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுவதற்கு நிர்வாகம் முயற்சித்த போது, தொழிலாளர்கள் உடனே நிர்வாக வாயிலை முற்றுகை இட்டதன் விளைவாக சில இயந்திரங்களையே நிர்வாகத்தால் வெளியே எடுக்க முடிந்தது. வேலை இழப்பிற்கு ஈடு செய்வதாக நிர்வாகம் கூறியும் தொழிலாளர்கள் மீண்டும் வேலை வேண்டும் எனக் கோரி 14ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்துகின்றனர். பொங்கல் விழாவைக் கூட அவர்கள் கொண்டாட முடியாமல் அவர்கள் இரவும் பகலும் தொழிற்சாலையி;ன் முன் ஒரு கொட்டாயில் சூடான பகலிலும், கொட்டும் பனி இரவிலும் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இதே வகையில் கும்மிடிப்பூண்டி கிரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையும் சட்ட விரோதமாக லாக் அவுட் செய்து தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை அப்புறப்படுத்தியது. தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக உரிமைகளை நிலைநாட்டாத அரசு இயந்திரங்களான காவல், நீதிமன்றங்களின் மெத்தனப் போக்கினால் நிர்வாகங்கள் தொழிற்சாலையை மூடி இன்னொரு இடத்தில் திறப்பதற்கு இலகாகி வருகின்றது.

இன்டெக்ரா நிறுவனம்

Integra name board

எல்ஜின் மற்றும் வேலியோ ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்காக இன்டெக்ரா ஆட்டோமேஷன்ஸ் நிறுவனம் பிரேக் டிஸ்குகள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை தயாரித்து வருகின்றனர். எல்ஜின் மற்றும் வேலியோ ஹுண்டாய் நிறுவனத்திற்கு சப்ளையர் நிறுவனங்கள் ஆவர். அம்பத்தூர் அருகில் இருந்த இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, 2013ல் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள வல்லார்புரத்திற்கு மாற்றப்பட்டது. உற்பத்தியின் உச்சகட்டத்தில் 130 தொழிலாளர்கள் 3 ஷிப்டுகளில் வேலை செய்தனர்.

சராசரி 25 வயது நிரம்பிய இந்த இளம் தொழிலாளர்களில் சிலர் 10வது முடித்துள்ளனர், சிலர் ஐடிஐ அல்லது மற்ற பட்டப் படிப்புகள் முடித்துள்ளனர். பலர் சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரைச் சார்ந்தவர்கள். சில தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்கின்றனர். அசெம்பிளி லைனில் வேலை செய்யும் டெக்னீஷன்ஸ் மற்றும் ஆபரேட்டர்களுக்கு சராசரி ஊதியமாக ரூ10000 மாதம் கொடுக்கப்படுகிறது. இங்கு அவர்கள் பல வருடங்கள் வேலை செய்தும் அவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யப்படவில்லை

2014ல் சங்கம் அமைத்த போது
தொழிற்சாலைகளில் தங்கள் பணி நிலைமைகளில் மாற்றம் கோரி வைத்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்காததால் 2014ல் தொழிலாளர்கள் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சங்கத்தில் இணைந்து பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்விற்காக கோரினர். ஆனால் நிர்வாகம் சங்கத்தை புறக்கணித்த நிலையில், ஜனவரி 2015ல் தொழிலாளர் துறை உதவி ஆணையரின் முன் தொழிற் தாவா எழுப்பினர்.

2015ல் முதல் வேலை நிறுத்தம்
அனைத்து ஷிப்டுகளிலும் ஊதியம் இல்லாமல் கூடுதல் வேலை செய்ய கோரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஷிப்டுகள் முடிந்த பின்னர் உற்பத்தி செய்யபட்ட பாகங்களை அனைத்தும் தரப் பரிசோதனை செய்யும் வரை அனைத்து டெக்னிஷியன்களையும் வேலையிடத்திலேயே இருக்க வேண்டும் என்றும், தரம் இல்லாத அனைத்து பாகங்களையும் சரி செய்த பின்னரே நிர்வாகம் தொழிற்சாலை கேட்டை திறந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அதை எதிர்த்து தொழிலாளர்கள் 2015 மார்ச் 3 அன்று திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

உடனே நிர்வாகம் தொழிற்சாலையை மூடி தொழிலாளர்களை லாக் அவுட் செய்தது. உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிர்வாகம் தொழிற்சாலையை மூடக் கூடாது என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலம் தொழிலாளர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது எனவும் தொழிற்சாலை வாயிலில் போராடக் கூடாது எனவும் உயர் நீதி மன்றம் ஆணையிட்டது. தொழிலாளர்கள் மேல் எந்த பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதி மன்றம் ஆணையிட்டும், நிர்வாகம் தொழற்சங்க பிரதிநிதிகள் மேல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நிர்வாகம் சங்கத் தலைவரையும், செயலாளரையும் வேலை விட்டு நீக்கியுள்ளது.

தேசிய பொது வேலை நிறுத்தம்
2015 செப்டம்பர் 2ல் நடந்த தேசிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து தொழிலாளர்கள் முறையாக வேலை நிறுத்த நோட்டிஸ் அனுப்பினர். ஆனால் நிர்வாகம் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து 8 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. தொழிலாளர் துறைக்கு இந்த நடவடிக்கை பற்றி புகார் கொடுத்த பின்னர் நிர்வாகம் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்பக் கொடுத்தது.

ஜுலை 2016ல் மீண்டும் லாக் அவுட்
தொழிலாளர் துறை உதவி ஆணையரின் முன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த பின்னர், தொழிலாளர் நீதிமன்றத்தை சங்கம் அணுகியுள்ளது. இதனிடையே 2015 திடீர் வேலை நிறுத்தம் மற்றும் தொழிலாளர்கள் ஒழுங்கின்மை எனக் காரணங்களை கூறி நிர்வாகம் 2016 ஜுலை 26 முதல் தொழிற்சாலையை மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு செய்தது. இது குறித்து தொழிலாளர் துறை 25 ஆம் தேதி நிர்வாகத்துடனும், சங்கத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இந்த லாக் அவுட் சட்ட விரோதமானது என உதவி ஆணையர் ஆணையிட்டார். மீண்டும் தொழிற்சாலையை திறக்க அவர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். மூன்று மாதங்களுக்கு பின்னர் நவம்பர் 5 அன்று லாக் அவுட்டை வாபஸ் செய்வதாகவும், இயந்திரங்களை பராமரித்த பின்னர் தொழிலாளர்களை வேலைக்கு மீண்டும் சேர்;ப்பதாகவும் நிர்வாகம் அறிவித்தது.

ஜனவரி 13ல் திருட்டுத்தனமாக இயந்திரங்கள் அகற்றம்

Closure Notice

Trucks with machinery – courtesy workers

பொங்கல் விழா தொடக்கத்தில் 13 ம் தேதி இரவில் நிர்வாகம் கண்டெயினர் லாரிகள் மற்றும் கிரேன்களை வைத்து தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை அப்புறப்படுத்த முயற்சித்தாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இவற்றை கோயம்புத்தூரில் உள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல நிர்வாகம் முயற்சித்துள்ளது. தொழிலாளர்களுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைத்த உடளேயே அவர்கள் தொழிற்சாலை வாயிலின் முன் கூடினர். அப்போது அங்கு இருந்த வாகனங்களை வெளியே செல்ல விடாமல் தடுத்தனர். சில இயந்திரங்கள், இரண்டு கிரேன்கள், சில வாகனங்கள் தொழிற்சாலைக்குள் உள்ளேயே வைத்து கேட்டுகளை முற்றுகை இட்டனர். இதன் பின்னர் 12ம் தேதியிட்ட ஒரு அறிவிப்பை நிர்வாகம் வாயிலில் ஒட்டியுள்ளது. இதில் நிதி நிலைமை, இழப்பு எனக் காரணங்களைக் காட்டி தொழிற்சாலையை மூடுவதாக நிர்வாகம் கூறியுள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தையும், இழப்பீட்டையும் தருவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தங்களுடைய வாழ்வாதாரத்தின் மேலான இத்தாக்குதல்களை தொழிலாளர்கள் நிராகரித்து 24 மணி நேரக் காவலில் வாயிலின் முன் போராட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் நிர்வாகத்தின் சட்ட விரோதப் போக்கை குறித்து காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் நீதி மன்றத்தை அணுகியுள்ளனர். நிர்வாகத்தின் நடவடிக்கைகளை சட்டரீதியாக அரசு மற்றும் நீதிமன்றம் கட்டுப்படுத்தும் வரை, தொழிலாளர்கள் அங்குப் போராட்டத்தை நடத்துவதில் உறுதியாக உள்ளனர்

இதற்கிடையில் கிரேன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே மாட்டியதனால், அதன் உரிமையாளர்கள் தொழிலாளர்களை மிரட்டி வருகின்றனர். நிறுவனத்தின் இயக்குனரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், தங்கள் வாகனங்களை எடுக்கவிடாவிட்டால் குண்டர்களை வைத்து தாக்குவோம் என அவர்கள் தொழிலாளர்களை எச்சரித்துள்ளனர். ஜனவரி 18 அன்று தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்த உரிமையாளர்கள் கேட்டுகளை உடைத்து தங்கள் வாகனங்களை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் கேட்டுகள் முன் நின்ற தொழிலாளர்கள் அவர்களை விடவில்லை. இதனால் அவர்கள் தங்கள் முயற்சிகளை கைவிட்டனர்.

Integra workers arguing with crane operators

நிர்வாகத்தின் சட்ட விரோதப் போக்குகளை அரசு தடுக்க முயற்சிக்காததால், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்துள்ளன. தொழிலாளர்கள் சங்கம் அமைத்து தங்களுக்கு உரிய ஊதியத்தைக் கோரும் போது நிறுவனங்கள் தொழிற்சாலையை மூடி இன்னொரு இடத்தில் ஆரம்பிப்பது இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. இதற்கான தீர்வுகளு;காக தொழிலாளர்கள் நீதிமன்றங்களை அணுகும் போது அங்கு ஏற்படும் தாமதம் நீதிமன்றத்தில் உள்ள நம்பிக்கையை சிதைத்துள்ளன. இதை சாதகமாக வைத்து நிர்வாகங்களும் சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் மீது ‘வேலை இழப்பு எனும் தாக்குதல்கள்’ மேலோங்கியுள்ளன. முதலாளிகளுக்கு அவர்களின் மூலதனமும், அவை வாங்கும் தொழில்துறை உபகரணங்களும், முதலாளித்துவ அமைப்புகளும் சாதகமாக உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு போராட்ட குணமும் கூட்டு நடவடிக்கைகளுமே அரணாக உள்ளன.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.