ஹரியானாவில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் ஓப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் – ஒரு தொழிலாளர் தற்கொலை

ஹரியானா மாநிலத்தில் உள்ள தாருஹேரா பகுதியில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் சுமார் 390 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிப்ரவரி 1 அன்று வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களின் சராசரி வயது 40 ஆகும். இவர்கள் கடந்த 15 முதல் 20 வருடங்கள் வரை வேலை செய்து வந்துள்ளனர். அவ்வாறு பணி இழந்த தொழிலாளர்களில் ஒருவரான பீகார் மாவட்டத்தைச் சார்ந்த அஜய் பாண்டே எனும் 35 வயது தொழிலாளர் பிப்ரவரி 13 அன்று தற்கொலை செய்து இறந்தார்.

அஜய் பாண்டே மனம் சரியில்லாதவர் என்றும் பல வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி இத் தொழிலாளரின் மரணத்திற்கு பொறுப்பு எடுக்க மறுத்தது நிர்வாகம். ஆனால் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தொழிலாளரின் உடலை தொழிற்சாலைக்கு முன்னர் கிடத்தி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். அவர்கள் அஜித் பாண்டேயின் குடும்பத்தினருக்கு(மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்) உரிய இழப்பீடு மற்றும் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கைகள் கோரினர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிலாளரின் உடலை தகனம் செய்ய தொழிலாளர்கள் மறுத்தனர். தாருஹேரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக ரிக்கோ ஆட்டோபிட் தொழிலாளர்களும் டாய்கின் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பிப்ரவரி 14 அன்று தொழிற்சாலையில் ஓமாக்ஸ் தொழிற்சாலையில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்களின் தொழற்சங்கம்(HMS) வேலை நிறுத்தம் செய்தனர்.

தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்திற்கும் இடையே பிப்ரவரி 15 அதிகாலை 1 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் அஜித் பாண்டேயின் குடும்பத்தினருக்கு 5.5 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் வேலை இழந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது நிர்வாகம். அதன் பின்னர், தொழிலாளர்கள் அஜித் பாண்டேயின் உடலைத் தகனம் செய்ய ஒப்புக் கொண்டனர். தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உற்பத்தி மீண்டும் துவங்கியது.

ஓமாக்ஸ் நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு 90 சத உதிரிபாகங்களை தயாரிக்கின்றது. பண மதிப்பு நீக்கத்தால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரு மாதத்திற்கு முன்னர் 1000 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது. ஓமாக்ஸ் நிறுவனம் ஹோண்டா மற்றும் யமாஹா நிறுவனங்களுக்கும் உதிரிபாகங்கள் தயாரிக்கின்றது. கடந்த 2014ல் ஓமாக்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடினர். மூன்று வருடங்களுக்கு பின்னர் ஊதிய உயர்வு கொடுக்க மறுத்து தொழிலாளர்கள் உற்பத்தியை குறைத்ததாக நிர்வாகம் கூறியது.

This entry was posted in Automobile Industry, Contract Workers, News, Strikes, Worksite Accidents/Deaths, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.