ரெனால்ட்  நிசான் தொழிலாளர்களின் வேலை நீக்கம் செல்லாது – தொழிலாளர் நீதி மன்றம் தீர்ப்பு

மூன்று வருடங்களுக்கு பின்னர் வந்த தீர்ப்பின் படி வேலை நீக்கம் செய்யப்பட்ட நான்கு தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் பயன்களோடு மீண்டும் வேலையில் அமர்த்த உத்தரவு

2014ல் தொழிற்சாலைக்கு வெளியே ஓரகடம் பேருந்து நிறுத்தம் அருகே 4 தொழிலாளர்களுக்கும் அங்கிருந்த சில பேருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. இந்திய பீனல் சட்டம் 294-பி பகுதியின் கீழ் காவல்துறை தொழிலாளர்கள் மேல் வழக்கு போட்ட பின்னர் இது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.  ரெனால்ட் நிசான் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது எந்த விசாரணை மேற்கொள்ளாமலேயே வேலை நீக்கம் செய்தது. தொழிலாளர்களுக்கு தங்கள் தரப்பு கூற்றை எடுத்துரைப்பதற்குக் கூட நிர்வாகம் அவகாசம் தரவில்லை.

இது குறித்து போடப்பட்ட வழக்கில் மூன்று வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர் நீதி மன்றம் தந்துள்ள தீர்ப்பில், தொழிலாளர்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காததை காரணம் காட்டி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த உத்தரவு தந்துள்ளது. இவ்வாறான விசாரணைகளில் முதலில் தொழிலாளர்களுக்கு விசாரணை அழைப்பு(show cause) மனு அளித்து, தற்காலிக வேலை நீக்கம், உள் விசாரணை மேற்கொண்டு, உறுதி செய்யபட்ட பின்னரே நிரந்தர வேலை நீக்கம் செய்யலாம் என்பது முறையான விசாரணையாகும் என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புடன் இந்த மூன்று வருடங்களுக்கு ஊதியமும் மற்ற பயன்களும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் எடுக்காமல் நிர்வாகம் தீரப்பை புறக்கணித்து வருகின்றது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உயர்நீதி மன்றத்தை நிர்வாகம் அணுகலாம் என்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். இதற்கு நிர்வாகம் செலவு செய்யத் தயாராக இருக்கலாம் ஆனால் ஏற்கனவே வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு வழக்குகளை இழுத்தடிப்பது அவர்களை வாழ்க்கையை சீரழிப்பதாகும்.

2010ல் பயிற்சியாளர்களாக சேர்ந்த இத்தொழிலாளர்கள், சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிரந்தரத் தொழிலாளராக உறுதி செய்யப்பட்டனர். 2014ல் அவர்களுக்கு ரூ22000 மாத ஊதியமாக கொடுக்கப்பட்டது. வேலை இழந்த பின்னர் முதலில் அவர்கள் மீண்டும் அதே வேலையைப் பெற முயற்சி எடுத்தனர். அங்கு வேலை கிடைக்கவில்லை என்றவுடன் இப்பகுதியில் உள்ள மற்ற நிறுவனங்களில் முயற்சி செய்தனர்.

ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் வேலை நீக்கம் செய்யபட்ட காரணத்தினாலேயே யமாஹா மற்றும் ராயல் என்பீல்ட் நிறுவனங்கள் தனக்கு வேலை கொடுக்க மறுத்ததாக ஒரு தொழிலாளர் கூறினார். ஆதனால் அவர் தற்போது ஒரு உள்ளுர் எலக்ட்ரீசனிடம் உதவியாளர் பணியில் வேலை செய்கிறார். வேலை இருக்கும் போது தான் அவருக்கு ஊதியம். இன்னொருவர் எந்த வேலையும் கிடைக்காமல் சொந்த ஊருக்கு சென்று விட்டார். மற்ற இருவரும் சென்னையில் தினக் கூலி வேலை செய்து தொழிலாளர் நீதிமன்றத்தில் நீதிக்காக போராடி வந்தனர்.

தங்களுக்கு மற்ற தொழிலாளர்கள் உதவி செய்ததாகவும், நண்பர்கள் தங்குவதற்கு உதவியதாகவும் அவர்கள் கூறினார்கள்.  தற்போதுள்ள வேலையால் அன்றாட செலவுகள் மட்டுமே பூர்த்தியாகிறது என்றும் மற்றபடி வீட்டிற்கு நிதியுதவி செய்ய முடிவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஏஐசிசியுவின் வழக்கறிஞர் தோழர் பாரதி வழக்கை இலவசமாக எடுத்து வாதாடியதால் தங்களால் இந்த வழக்கை எதிர்கொள்ள முடிந்தது என்று தொழிலாளர்கள் கூறினர்.

அன்றாடத் தேவைகளையே எதிர்கொள்ள முடியாத போது எவ்வாறு இவர்கள் வழக்கு வாதாட முடியும் என்று நிர்வாகம் நினைத்தது என்று தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். வழக்கறிஞர் பாரதி இல்லாமல் இது நடந்திருக்க முடியாது என்றும் இது வரை அவர் ஒரு பைசா கூட கேட்கவில்லை என்று அவர்கள் கூறினர். ஊதியம் கிடைத்தவுடன் வழக்கு செலவுகளை ஈடுகட்ட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பிப்ரவரி 7 அன்று நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், உத்தரவு நகலுடன் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தக் கோரி ஒரு மனுவையும் ரெனால்ட் நிசான் நிறுவன மனிதவளத் துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், இது வரை நிர்வாகம் எந்த பதிலும் கூறவில்லை என்று தோழர் பாரதி கூறினார். அவர்கள் இதுவரை மனுவை வாங்கிக் கொண்டதாக கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களுக்கான வேலை மற்றும் விடுமுறை, ஊதிய உயர்வு, பதவி உயர்வு என அனைத்து பயன்களும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தரப்படவேண்டும் என்று உத்தரவு தெளிவாகக் கூறுகிறது. ஆனால் வேலை நீக்கத்தை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வைக்க நிர்வாகம் உயர் நீதி மன்றத்தை நாட வாய்ப்புள்ளதாக அவர் கருதினார். இதனால் தொழிலாளர்களின் வாழ்நிலை இன்னும் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே அரசு மற்றும் நிர்வாகத்தின் தன்னிச்சையான செயலினால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் வாழ்ககை இன்னும் மோசமாகும். உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தால் அவர்களுக்கு பிழைப்பு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு உதவாது. மூன்று வருடங்களுக்கு பின்னர் கிடைத்த இந்த நீதி இன்னும் தாமதமானால் இது நீதி மறுப்பிற்கு சமமாகும்.

2014ல் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை. தற்போது இரண்டு தொழிற்சங்கங்கள் உள்ளன. ஐக்கிய தொழிலாளர் முன்னணி(ULF) தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க மறுத்து வருகிறது. நிர்வாகம் தன்னிச்சையாக சுயேச்சைத் தொழிற்சங்கத்தை அங்கீகரித்துள்ளது. இது குறித்து இரண்டு தொழிற்சங்கங்களும் எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. தோழிலாளர்களும் தொழிற்சங்கத்தை நாடவில்லை.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.