இரண்டு தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த ஹுண்டாய் நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம்

2012ல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக குற்றம் சாட்டி ஹுண்டாய் நிர்வாகம், ஹுண்டாய் மோட்டர்ஸ் இந்தியா தொழிற் சங்கத்தைச்(HMIEU) சார்ந்த இரண்டு தொழிலாளர்களை மார்ச் 21 அன்று தற்காலிக பணி நீக்கம் செய்தது. நிர்வாகம் இருவரையும் தொழிற்சாலைக்குள் அனுமதிக்க மறுத்ததை அடுத்து சுமார் 300 தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் ஹுண்டாய் ஆட்டோமொபைல் கார் தயாரிப்பு நிறுவனம் 1996ல் இருந்து செயல்பட்டு வருகிறது. 2012ல் HMIEU தொழிற் சங்கம் ஊதிய உயர்விற்கான நோட்டீஸை நிர்வாகத்திடம் வழங்கியது. ஆனால் நிறுவனமோ அங்கீகரிக்கப்பட்ட UUHE தொழிற்சங்கத்துடன் ஊதிய ஒப்பந்தம் செய்து அனைத்து தொழிலாளர்களையும் தொழிற்தாவா சட்டத்தின் 18(1) ஷரத்து கீழ் கையெழுத்திட வற்புறுத்தியதாக HMIEU பிரதிநிதிகள் கூறுகின்றனர். இதனால் HMIEU தொழிற்சங்கம் 8 நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டது. தொழிலாளர் அமைச்சர் முன்னிலையிலும் தொழிலாளர் துறையின் முன்னிலையிலும் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது.

வேலை நிறுத்தத்தின் போது 5 தொழிலாளர்களுக்கு நிர்வாகம் ஷோ காஸ் நோட்டிஸ் வழங்கியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக அவர்கள் மேல் நிர்வாகம் குற்றம் சாட்டியதாக HMIEU பொது செயலாளர் தோழர் ஸ்ரீதர் கூறினார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது குறித்தான உள் விசாரணையை நிர்வாகம் அறிக்கையாக தொழிலாளர் துறை துணை ஆணையருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இறுதி முடிவை துணை ஆணையர் எடுப்பார் என்ற நிபந்தணையை தொழிற்சங்கமும் நிர்வாகமும் ஏற்றுக் கொண்டனர் என அவர் கூறினார்.

2012ல் இருந்து இதுவரை 3 தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளனர் என்று தொழிலாளர்கள் கூறினர். விசாரணை மேற்கொண்ட பின்னர் இந்தத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள், விடுமுறை ஆகியவைகளை நிர்வாகம் மறுத்து வந்ததால் இத்தொழிலாளர்கள் மனம் மாறியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர். மன்னிப்பு கேட்ட 2 தொழிலாளர்களை நிர்வாகம் 15 நாள் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். HMIEU உறுப்பினர்களான தோழர் கௌரிசங்கரும், தினகரனும் உறுதியோடு நிர்வாகத்தை எதிர் கொண்டு வந்தனர்.

பத்து நாட்களுக்கு முன்னர், இருவரையும் அழைத்த நிர்வாகம் அவர்களை பணி நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டத் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் நோட்டிஸை ஏற்க மறுத்து இது குறித்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். தொழில் அமைதியை குலைக்கும் செயலாக நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தொழிற்சாலையில் மற்ற தொழிலாளர்களும் இந்த பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்ப, நிர்வாகம் பின் வாங்கியது என்று தொழிலாளர்கள் கூறினர். ஆனால் மார்ச் 20 அன்று மீண்டும் இரண்டு தொழிலாளர்களை அழைத்து நிர்வாகம் மார்ச் 21 முதல் அவர்களை 25 நாள் தற்காலிக பணி நீக்கம் செய்வதாகக் கூறியது. தொழிலாளர்கள் மீண்டும் மறுத்து முன்னர் செய்த ஒப்பந்தப்படி துணை ஆணையர் தான் இது குறித்த முடிவை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மார்ச் 21 அன்று இரண்டு தொழிலாளர்களும் இரண்டாவது ஷிப்டிற்கு வந்த போது அவர்களுக்கு தொழிற்சாலைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. பைக்கில் வந்த ஒரு தொழிலாளர் கேட்டுக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டார். இது குறித்த தகவல் தெரிந்தவுடன் முதல் மற்றும் இரண்டாவது ஷிப்டின் 300 தொழிலாளர்கள் உடனேயே பஸ் பார்க்கிங் அருகில் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். இரவு வரை இப்போராட்டம் நடந்தது.

இப்போராட்டம் நடந்த போது நிர்வாகம் தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர். UUHE தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டத் தொழிலாளர்களுடன் பேசி நிர்வாகம் பணி நீக்கத்தை வாபஸ் வாங்குவதாக உத்தரவாதம் கொடுத்ததை தொழிலாளர்கள் எழுத்து மூலமாக கோரியுள்ளனர். பின்னர் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கொடுத்த எழுத்து பூர்வ தகவலில் UUHE கேட்டுக் கொண்டதால் நிர்வாகம் பணி நீக்கத்தை வாபஸ் வாங்குவதாகவும், மார்ச் 27 முன்னர் இது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நிர்வாகம் மீண்டும் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியுள்ளது.

தற்போது தொழிலாளர் துறை முன் இதற்கான சமரசப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதால் தொழிலாளர்கள் போராட்டத்தை தற்போது கைவிட்டுள்ளனர்.

ஹுண்டாய் தொழிற்சாலையில் பல்வேறு பிரச்சனைகளால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக பிடிஐ(Sales and Pre Delivery Inspection) தொழிலாளர்கள் உணவுப் புறக்கணப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தரப்பரிசோதனையில் முக்கியமான இப்பிரிவை மூடுவதால் 31 நிரந்தரத் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவர்கள்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.