63 ரெனால்ட் நிசான் தொழிலாளர்களின் பணி நீக்கம் வாபஸ் – தொழிற்சங்கப் பிரச்சனைக்கு முடிவு

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஒரே சங்கம் எனத் தீர்வு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் கோரிக்கை, 63 தொழிலாளர்களின் பணி நீக்கம் வாபஸ்

ஓரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் தொழிற்சாலையின் நிரந்தரத் தொழிலாளர்கள் மத்தியில் இரண்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வந்தன. வழக்குறைஞர் பிரகாஷ் தலைமையிலான ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(ULF) ரெனால்ட் நிசான் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வந்தனர். நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்(RNITS) என்ற இன்னொரு சங்கமும் ஆலையில் செயல்பட்டது. ULF கிளையை அங்கீகரிக்க மறுத்த ஆலை நிர்வாகம் RNITS வுடன் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் 5 தொழிலாளர்களை வேலை விட்டு நீக்கியும், 58 தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தது.

இப்பிரச்சனைகள் குறித்து நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், வழக்குறைஞர் பிரகாஷ் தலைமையிலான ULF பிரதிநிதிகளுக்கும் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக கடந்த பிப்ரவரி 20 அன்று நிர்வாகம் RNITS வுடன் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க ULF கிளை ஒத்துக் கொண்டுள்ளது. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட 63 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. RNITS வில் ULF தொழிற்சங்கத்தை சார்ந்த 5 உறுப்பினர்கள் இணைச் செயலாளர்களாக பதவியேற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம் தொழிற்தாவா சட்டத்தின் 12(3) பகுதியின் கீழ் கையெழுத்திடப்பட்டு;ள்ளது.ULF சங்கக் கிளை கலைக்கப்பட்டு ஒரே தொழிற்சங்கம் ஆலையில் செயல்படுகின்றது.

ரெனால்ட் நிசான் வரலாறு
2006ல் சென்னைக்கு அடுத்துள்ள ஓரகடம் பகுதியில் ரெனால்ட் நிசான் தொழிற்சாலை அமைப்பதற்கு 400 ஹெக்டேர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. இந்த நில ஒதுக்கீட்டால் பூதான் திட்டத்தின் கீழ் நிலத்தை உழுது வந்த 13 தலித் விவசாயிகள் உட்பட 500 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தன. ஆனாலும் இத்திட்டத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு அரசு நில ஆர்ஜுதத்தை நியாயப்படுத்தியது.

2009ல் தொடங்கப்பட்ட ஹுண்டாயில் இருந்து வெளியேற்றப்பட்டத் தொழிலாளர்கள் பலர் இங்கு வேலைக்கு சேர்ந்தனர். 2008ல் உலகப் பொருளாதார மந்தத்தை காரணம் காட்டி சிப்காட் இருங்காட்டுக்கோட்டையில் இருந்த ஹுண்டாய் தொழிற்சாலை 1500 பயிற்சி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்திருந்தது. மூன்று வருடங்கள் வெறும் 3000ரூபாய் ஊதியத்திற்காக தங்கள் உடல் உழைப்பை செலுத்தி வந்தனர் இத் தொழிலாளர்கள். அவர்களுக்கு இருந்த ஒரே கனவு மூன்று வருடம் கழித்து தாங்கள் நிரந்தரத் தொழிலாளர் ஆவோம் என்பது தான். அவர்களுடைய கனவுகளை பொய்த்து ஹுண்டாய் நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்த பின்னர் பலத் தொழிலாளர்கள் தனக்கு தெரிந்த தொழில்களை செய்து பிழைக்க ஆரம்பித்தனர். இவர்களில் சிலர் ரெனால்ட் நிசானில் வேலைக்கு சேர்ந்தனர். 3 வருடம் இதேத் துறையில் பணி செய்தும் அவர்களுக்கு கிடைத்த வேலை மீண்டும் பயிற்சியாளர்களாக தான்.

ரெனால்ட் நிசான் தொழிற்சாலை பிரான்சின் ரெனால்ட் நிறுவனத்திற்கும், ஜப்பானின் நிசான் நிறுவனத்திற்கும் கார்கள் தயாரித்து வந்தது. 2010ல் ஒரு அசெம்பிளி லைனில் ஆரம்பித்த உற்பத்தி 3 லைன்களுக்கு மாறியது(2016ல் பண மதிப்பு நீக்கத்திற்கு பின்னர் ஒரு அசெம்பிளி லைன் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்). இத் தொழிற்சாலையில் 1000 பயிற்சித் தொழிலாளர்கள் உட்பட 3500 தொழிலாளர்களும், 1200 அப்பிரன்டைசுகளும் பணி புரிந்து வருகின்றனர். முன்னர் ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தாமல் வந்த நிர்வாகம் தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகள்
2010ல் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கியதில் இருந்து விரைவிலேயே தொழிலாளர்கள் மீதான பணி அழுத்தம் அதிகரித்தது. உற்பத்தியை அதிகரித்து வந்த நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க மறுத்ததை கண்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து உரையாடத் துவங்கினர். குறிப்பாக உற்பத்தியை அதிகரிகப்பதற்காக தொழிலாளர் பாதுகாப்புளையும் தொழிலாளர் சுகாதாரத்தையும் நிர்வாகம் புறக்கணிப்பதை தொழிலாளர்கள் அறிந்தனர்(இந்த ஆலையில் 2017ல் ஒரு இளம் மெக்கானிக் ஹைட்ராலிக் பிரஸ் நசுக்கிப் பரிதாபமாக இறந்தார்). தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக 2000 தொழிலாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு பிக்னிக் சென்றதை அறிந்த நிர்வாகம் உடனடியாக தொழிலாளர்களுக்கு 5000ரூபாய் ஊதிய உயர்வு வழங்கியது. அதே சமயம் தொழிலாளர் தலைவர்களை இடமாற்றம் செய்யத் தொடங்கியது. ரெனால்ட் நிசான் தொழிலாளர் குழு ஒன்றையும் அமைத்தது. தொழிலாளர்களோ தொழிற்சங்க ரீதியான தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை கோரினர். 2014ல் நோக்கியாவில் இருந்து ஒரு புது மனித வள துணைத் தலைவர் சேர்ந்ததும், தொழிலாளர்கள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. தொழிலாளர்கள் தங்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்க முற்பட்டனர். அதன் விளைவாக 2015 ஏப்ரல் மாதத்தில் ULF தொழிற்சங்கத்தின் கீழ் ஏற்பட்ட கிளைச்சங்கத்தில் தொழிலாளர்கள் இணைந்தனர்.

ULF தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் பிரதிநிதியாக இருப்பதை காரணம் காட்டி நிர்வாகம் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுத்தது ( தொழிற்சங்க சட்டத்தின் கீழ் செயற்குழு உறுப்பினர்களில் 50 சதம் வரை தொழிலாளர்கள் அல்லாதவர்கள் இருக்கலாம்). மேலும் தொழிலாளர்கள் மீது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகளை கையாண்டு வந்தது. 2015ல் தொழிற்சங்க தேர்தலை நடத்தி நிர்வாகம் RNITS தொழிற்சங்கத்தை அங்கீகரித்தது. 2016 ஜுன் மாதத்தில் RNITS தொழிற்சங்கமும் நிர்வாகம் 18000ரூபாய் உயர்வுடன் கூடிய ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். ULF தொழிலாளர்கள் இத்தேர்தலைப் புறக்கணித்து, ஊதிய ஒப்பந்தத்தையும் நிராகரித்தது. தங்கள் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ULF தொழிற்சங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

தற்போதைய தீர்வு
இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் ULF தொழிற்சங்கம் தனது கிளையை கலைத்து ஆலையில் உள்ள தொழிற்சங்கத்துடன் இணைய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் கீழ் RNITS தொழிற்சங்கத்தில் ULF உறுப்பினர்களுக்கு 5 பிரதிநிதித்துவம் தரவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 63 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் நிர்வாகமும் RNIWU தொழிற்சங்கமும் ஒப்புக் கொண்டுள்ளன.

2013ல் தன்னிச்சையாக பணி நீக்கம் செய்யப்பட்ட 4 தொழிலாளர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ULF தொழிலாளர் பிரதிநிதி, இந்த 4 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட போது அவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் இல்லை என்றும் அப்போது தொழிற்சங்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மனித வளத் துறையிடம் தொழிற்சங்கத் தலைவர்கள் பேசியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் 4 தொழிலாளர்களின் பணி குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் கருதினார்.

RNITSவில் தொழிற்சங்கத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த ULF பிரதிநிதிகள் கோரியுள்ளனர். ஆனால் நிர்வாகத் தரப்பில் இருந்தோ தொழிற்சங்கத் தரப்பில் இருந்தோ தேர்தல் குறித்த எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. பணி நீக்கம் செய்யப்பட்ட 63 தொழிலாளர்களுக்கு ஊதிய பாக்கிகள் குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சிறிய தொகை கொடுக்கப்பட்டு வந்தாலும் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டத் தொழிலாளர்களுக்கு எந்த ஊதியமும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு கொண்டுவருவதாக நிர்வாகம் கூறியுள்ளது எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆலையில் உள்ள பிரச்சனைகள், போக்குவரத்து, உணவுப் போன்ற கோரிக்கைகளும் விரைவாகத் தீர்க்கப்படும் என்று தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

தொழிலாளர்கள் கருத்துகள்
இத்தீர்வு குறித்து பல்வேறு கருத்துகளை தொழிலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பக்கம் நெடிய போராட்டத்தை இது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. சட்டம் பல உரிமைகளை தொழிலாளர்களுக்கு கொடுத்தும், அவை நடைமுறையில் அமல்படுத்தப்படுவதில்லை. மேலும் சட்டரீதியான போராட்டத்திற்கு தீர்வு விரைவில் வருவதில்லை மட்டுமல்லாமல் செலவு மிகுந்தது. இத்தீர்வு வழியாக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உறுதி செய்யப்படுவதுடன் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது.

அதே சமயம், தொழிற்சங்கத்தை அமைக்கும் உரிமைகளை வலுவற்றதாக ஆக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. தங்கள் பக்கம் அதிக தொழிலாளர்கள் உள்ளதாக ULF தொழிற்சங்கம் கருதினாலும், RNITS செயற்குழுவில் அவர்களுக்கு 5 பிரதிநிதித்துவமும் RNITS தொழிற்சங்கத்திற்கு 6 பிரதிநிதித்துவமும் உள்ளது. RNITSவில் இருந்து தங்கள் பதவியை விட்டுக் கொடுத்த 5 பிரதிநிகளும் தங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என ULF தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அஞ்சுகின்றனர்.

‘எங்களுக்கு RNITS தொழிற்சங்க பிரதிநிதி மேல் நம்பிக்கை இல்லை. எங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவே இந்த திட்டத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். விரைவில் தேர்தல் நடத்தி தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என ஒரு தொழிலாளர் கூறினார். ULF கிளையின் பிரதிநிதி ஒருவர் புது தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளதாக கருதுகிறார். ‘தேர்தல் வந்தால் நாங்கள் வெல்வோம் என்பது இப்போது உள்ள பிரதிநிதிகளுக்கு தெரிந்துள்ளது. அதனால் அவர்கள் தேர்தலை தள்ளிப்போடுவதற்கு காரணம் கூறுவார்கள். ஏற்கனவே அவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு உறுப்பினர்கள் சங்கத்தில் 6 மாதம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் புதிதாக சேர்ந்திருக்கும் நாங்கள் யாருமே தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது, வேட்பாளராகவும் முடியாது’ என்று அவர் கூறினார்.

இத்தீர்வு ஒரு சமரசமே என்றாலும் சில பயன்களை கொண்டுள்ளதாக ஒரு பிரதிநிதி கருதினார். ‘எங்களை பிளவு படுத்தி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது நிர்வாகத்தின் யுக்தியாகும். ஆனால் நாங்கள் அதையும் மீறி ஒருங்கிணைந்து நின்றோம். ஆனால் ஊதிய ஒப்பந்தத்தினால் சிலத் தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பலருக்கு அது கிட்டாமலும் இருந்தது. இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டோம். நிர்வாகமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்க முன்வந்தது. RNITS தொழிற்சங்கத் தலைவர்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பது பொறுத்து தான் தெரியும்’ என்று அவர் கூறினார்.

இதை தற்காலிகத் தீர்வாகதான் தொழிலாளர்கள் காண்கின்றனர். நிர்வாகம் தங்கள் மீது நடத்திய பழிவாங்கல் நடவடிக்கையை அவர்கள் மறக்கவில்லை. இத்தீர்வினால் RNITS தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். தங்களுடைய அதிகாரத்தையும், அந்தஸ்தையும் நிர்வாகம் குலைத்து விட்டதாக அவர்கள் கருதிகின்றனர். இந்நிலையில் எவ்வளவு சுமூகமாக இரு தொழிற்சங்க தலைமைகளும் பணி புரியும் என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
தற்போது இந்த தீர்வு நிர்வாகத்திற்கு சாதகமாகத் தான் அமைந்துள்ளது. நிர்வாகத்தின் உதிய உயர்வுக்கு அனைத்து தொழிலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். தங்களுடைய தொழிற்சங்கத்தை கலைத்து நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கத்தில் சேர்வதற்கு இசைந்துள்ளனர். ULF தொழிற்சங்கத் தலைமை சிறுபான்மையராக உள்ளதால் அதனுடைய பங்கு தொழிற்சங்கத்தின் செயல்களில் குறைவாகவே இருக்கும். மேலும் பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பிரச்சனைகளைக் குறித்து இரு தொழிற்சங்கங்களும் கோரிக்கைகள் வைப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஒப்பந்த தொழில்முறை ஆலையில் அதிகரித்து வரும் நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்காவிடில் நாளை நிரந்தரத் தொழிலாளர்களின் போராட்ட வடிவங்களை கட்டுப்படுத்தும்.

இது ஒரு முக்கிய வாய்ப்பிற்கான துவக்கமாக தொழிலாளர்கள் கருதுகின்றனர். 3 வருடங்களாக பிளவுபட்டிருந்த நிரந்தரத் தொழிலாளர்கள் ஒரே சங்கத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தை அதிகரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது எளிது என்பது இங்குள்ள நிர்வாகங்களுக்கும் ஒரு படிப்பினையாக அமையும். RNITS தேர்தல் நடத்தப்பட்டு சுதந்திர செயற்குழு அமைந்தால் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தொழிற்சங்கம் விலகும் நிலை ஏற்படும். இத்தீர்வின் தாக்கம் வரும் காலங்களில் தொழிலாளர் வர்க்கத்திற்கு என்ன பாடம் கற்பிக்கும் என்பது இனிமேல் தான் தெரியும்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.