ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக போராடிய 34 நிரந்தரத் தொழிலாளர்கள் பணி நீக்கம் – ஓமாக்ஸில் தொடரும் தொழிலாளர் விரோதப் போக்கு

பிப்ரவரி 1 அன்று ராஜஸ்தான் தாருஹேரா பகுதியில் உள்ள ஓமாக்ஸ் நிறுவனத்தில் சுமார் 350 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதை அடுத்து, அதே மாதம் 13 ஆம் தேதியில் அஜய் பாண்டே எனும் ஒப்பந்தத் தொழிலாளர் தற்கொலை செய்து கொண்டார். நிர்வாகம் இதற்கு பொறுப்பு எடுக்க வேண்டும் என ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தினர். முழு வேலை நிறுத்தத்தை சமாளிக்க தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுப்பதாக நிறுவனம் ஒப்புக் கொண்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்ததுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

தொழிலாளர் துறையின் கீழ் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் நிர்வாகம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பழிவாங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 34 நிரந்தரத் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக நிரந்தரத் தொழிலாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தொழிந்சங்கப் பிரதிநிதிகள் அனைவரையும் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

388 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவது குறித்து இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. நிர்வாகத்தின் அடாவடிப் போக்கினால் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளனர். இந்தியா முழுவதும் ஓமாக்ஸ் நிறுவனத்திற்கு 9 தொழிற்சாலைகள் உள்ளன. தாருஹேரா-மாநேசர் பகுதியில் மட்டும் 6 யூனிட்கள் உள்ளன. இத்தொழிற்சாலை உற்பத்தியின் ஒரு பகுதியை மற்ற யூனிட்டுகளுக்கு மாற்றியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஓமாக்ஸின் மற்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களின் ஆதரவு இல்லாமல் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றியை சந்திப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

12 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட 13 மாருதி தொழிலாளர்கள் மீது நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதன் பின்னணியில் நடக்கும் இச்செயல் தொழிற்சங்கம் அமைக்க முற்படும் தொழிலாளர்கள் மீது முதலாளிகள் காட்டும் தீவிரத்தை குறிக்கிறது. இச்செயல்களுக்கு எதிராக குர்காவ்-தாருஹேரா-மாநேசர்-பவால் பகுதிகளில் தொழிலாளர்களின் எழுச்சி அதிகரித்து வருகிறது.

ஒப்பந்தத் தொழில்முறை தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைத்து நிர்வாகம் அதிக லாபம் சம்பாதிக்க வழிவகுக்கிறது. இது குறித்து முன்னாள் நீதிபதியின் கருத்தை இங்கே காணலாம்.

This entry was posted in Automobile Industry, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.