அப்போலோ டயர்ஸ் தொழிற்சாலையில் 2 நாள் வேலை நிறுத்தம் – உற்பத்தி முடக்கம்

சென்னையை அடுத்துள்ள ஓரகடத்தில் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலை 2010ல் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 4 மற்றும் 5 இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். 200க்கும் மேற்பட்ட இடம் பெயர் தொழிலாளர்கள் உட்பட நிரந்தரத் தொழிலாளர்களும், பயிற்சியாளர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, முறையான பணி நிலைமைகள் கோரி அவர்கள் போராடினர்.

தொழிற்சங்கம் என்ற எந்த அமைப்பும் இல்லாமல் தன்னிச்சையாக எழுந்த இந்த வேலை நிறுத்தம் ஏப்ரல் 5 ஆம் தேதி தொழிலாளர் துறை தலையீடுக்குப் பின்னர் முடிவுற்றது. ஏப்ரல் 4 அன்று தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த சிஐடியுவின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் துறையின் பேச்சுவார்த்தையில், ஆட்டோமொபைல் துறையில் தொழிலாளர்கள் தன்னிச்சையாக வேலை நிறுத்தம் செய்வது தமிழ்நாடு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சந்திப்பில் பங்கு பெற்ற நிர்வாகமும் தொழிலாளர்களின் கோரி;க்கைகளை பரிசீலிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளது. நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு திரும்பியுள்ளனர்.

 தொழிற்சாலையில் தொழிலாளர் சட்டமீறல்

அப்போலோ டயர்ஸ் நிறுவனத்திற்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலையும் கேரளாவில் இரண்டு தொழிற்சாலைகளும், ஓரகடத்தில் ஒரு தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன. மேலும் ஆந்திராவில் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது. 2009ல் கட்டப்பட்ட ஓரகடம் தொழிற்சாலை இந்தியாவில் உள்ள பெரிய தொழிற்சாலையாகும். இங்கு ட்ரக்,பஸ் மற்றும் கார்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது இங்கு 1300 ட்ரக்-பஸ் டயர்களும்(டிபிஆர்) 7000 கார் டயர்கள்(பிசிஆர்) உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது 6000 டிபிஆர்களும், 16000 பிசிஆர்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஓரகடம் தொழிற்சாலையை ஆசியாவிலேயே மிகப் பெரிய டயர்ஸ் தொழிற்சாலையாக நிறுவனம் விரிவுபடுத்தி வருகின்றது.

21 பில்லியன் ரூபாய்(2000 கோடி) முதலீடு செய்யவும் 2000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தவும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் 2 அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 150 ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலை செய்வதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கணக்கிடுகின்றனர்.

உற்பத்தி இலக்கு அதிகரித்து வருவதனால் வேலை பளு அதிகமாக உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 7000 டிபிஆர்கள் உற்பத்தி இலக்கு என்றால் நிர்வாகம் அதற்கு மேலாக 10சதம் வரை அதாவது 7700 டயர்கள் வரை இலக்கை அதிகப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். இதுவரை உச்சகட்ட இலக்காக 19000 பிசிஆர்களும், 8000 டிபிஆர்கள் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதிக உற்பத்தி இலக்கை அடைவதற்கு தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற பணி நிலைமைகளில் ஓவர்டைம் வேலைகளும் செய்ய வேண்டியுள்ளது. ஓவர்டைம் வேலைக்கு சட்டத்தில் வகை செய்யப்பட்ட படி இரட்டிப்பு ஊதியம் கிடையாது. மாறாக தொழிலாளர் இன்னொரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதை நிர்வாகம் சரியான முறையில் பராமரிப்பது கிடையாது. தொழிலாளர்கள் தான் தங்கள் ஓவர்டைம் வேலைக்கான விடுமுறையை நிர்வாகத்திடம் கோர வேண்டும். அதே போல் ஒரு தொழிலாளர் விடுமுறை எடுத்தால் இன்னொரு தொழிலாளர் அவருடைய உற்பத்தியை ஈடுகட்ட இரண்டு ஷிப்டுகள் வேலை செய்ய வேண்டும். அதனால் தொழிலாளர்களுக்கு அதிக நேர வேலை, சரியான தூக்கம் கிடையாது எனக் கூறுகின்றனர். முன்னர் இரண்டு சீனியர் டெக்னீசியன்கள் வேலை செய்யும் இடத்தில் தற்போது ஒரு சீனியர், ஒரு ஜுனியர் டெக்னீசியன்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் பணியில் பாதுகாப்பின்மை நிலவுவதாக தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

ஊதியம் மற்றும் உயர்வு குறித்த பிரச்சனைகள்

தொழிற்சாலையில் ஒரு விபத்து நடக்கும் போதோ தொழிலாளர்கள் அடிபடும் போதோ தொழிலாளர்கள் அதை மறைக்க முட்படுகின்றனர். ஏனென்றால் அப்போலோ டயர்ஸ் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு தொழிலாளர் உற்பத்தி திறனைச் சார்ந்து உள்ளது. உற்பத்தி திறன் அடிப்படையில் சுமார், மிதம், நன்று என தொழிலாளர்கள் பிரிக்கப்படுகின்றனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு 8, 10, 12 சத ஊதிய உயர்வு கொடுக்கப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் இருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கே ஊதியம் மாதம் ரூ28000 தான் எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப கட்ட ஊதியம் ரூ8500 தான். பலத் தொழிலாளர்களுக்கு 15000த்தை ஊதியம் தாண்டவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே குறைவான ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு 2-4 சத ஊதிய உயர்வு வேறுபாடு பெரிதாக உள்ளது. அதனால் தாங்கள் அடிபட்டால் அதைப் பற்றி அவர்கள் வெளியே கூறுவதில்லை. மாறாக சொந்த செலவில் தனியார் மருத்தவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.

இத்தொழிலாளர்களுக்கு அப்போல்லோ டயர்ஸ் நிறுவனம் தனியார் காப்பீடு எடுத்து வருகிறது. சிலருக்கு இஎஸ்ஐ செலுத்தப்படுகிறது. ஆனால் தொழிலாளர் தனியாரிடம் கோரும் காப்பீடு கோரிக்கையை நிர்வாகம் பரிசீலித்து அனுமதி கொடுக்கிறது. சமீபத்தில் ஒரு தொழிலாளருக்கு நடந்த விபத்தில் அவருடைய மருத்துவச் செலவு கோரிக்கையை நிர்வாகம் மறுத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்குக் கூட நிர்வாகம் ஊதியம் தருவதில்லை எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். இந்த ஊதியத்தை எங்களால் எதையும் செய்யமுடியாது என ஒரு இடம் பெயர் தொழிலாளர் கூறினார். இது குறித்து தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பினால், ‘லெவல் 6 ஐ எட்டும் வரை திருமணம் செய்யாதே’, ‘உன்னுடைய மனைவியை வேலைக்கு அனுப்பு’ என மனிதவள மேலாளர்கள் ‘அறிவுரை’ கூறுவதாகத் தொழிலாளர்கள் கூறினர்.

தொழிலாளர்கள் தங்களுக்குள் அனுப்பிய ஒரு செய்தியில் தொழிற்சாலையில் ஆண்டு வருமானத்தையும் அதில் தொழிலாளர்களின் ஊதிய பங்கையும் தொழிலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு ஆண்டுக்கு 5800 கோடி ரூபாய் ஓரகடம் தொழிற்சாலை வருமானம் ஈட்டுவதாகவும், ஆனால் தொழிலாளர்களின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ36 கோடி அதாவது வருமானத்தில் 0.8 சதம் கூட இல்லை என அவர்கள் கணக்கிட்டுள்ளனர். இதனால் தங்களுடைய ஊதியத்தை 40-50 சதம் உயர்த்த வேண்டும் எனத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கையாக எழுப்பியுள்ளனர். மேலும் உற்பத்தித் திறனிற்கேற்ப ஊதிய உயர்வை நிறுத்த வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். இரவு ஷிப்ட் சலுகை, பஞ்சப்படி ஆகியவற்றையும் தொழிலாளர்களள் கோருகின்றனர்.

தொழிலாளர் விரோத விடுமுறை கொள்கை

தொழிற்சாலையில் நிலவும் மற்ற கொள்கைகள் மீதும் தொழிலாளர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். முக்கியமாக விடுமுறை கொள்கைகளை தொழிலாளர்கள் சாடுகின்றனர். ஒரு பக்கம் ஓவர்டைம்களுக்கான விடுமுறை கொள்கை, இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் ஏற்கனவே உள்ள விடுமுறையோடு(பண்டிகை, வார விடுமுறை) தங்களுக்கென்ற விடுமுறையை எடுத்தால் வார விடுமுறையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஓவர்டைம் விடுமுறையை தொழிலாளர் தங்கள் விருப்பத்துக்கேற்ப எடுக்க முடியாது. நிர்வாகத்திடம் மனு கொடுத்து அதை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். முக்கியமாக பண்டிகை காலங்களில் ஒரே ஒரு நாள் விடுமுறை தான் அளிக்கப்படுகிறது. அன்றும் (சட்டத்திற்குப் புறம்பாக) இரவு ஷிப்ட் வேலை உண்டு. பலத் தொழிலாளர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் வருவதனால் விடுமுறை கொள்கை தொழிலாளர்களின் நலனிற்கு விரோதமாகவே உள்ளது.

வேலை நிறுத்தம்

தொழிற்சாலையில் நிலவும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை மாற்றத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளனர். தொழிற்சாலையில் தொழிலாளர் குழு இருந்தும், அவற்றில் இம்மாதிரியான பிரச்சனைகளை கொண்டு வரும் தொழிலாளர்களை நிர்வாகம் குழுவில் இருந்து நீக்கி விடுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தாங்கள் பணியில் சேரும் போது தொழிற்சங்கம் அமைக்க மாட்டோம் எனக் கடிதம் வாங்கி வைத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அப்போது தாங்கள் எதில் கையெழுத்து இடுகிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை என அவரகள் கூறினர்.

இதனால் ஏப்ரல் 4 அன்று தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து தொழிற்சாலை வாயிலில் கூடினர். இதனால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. உடனேயே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகம் தொழிலாளர் குழு வழியாக தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளை கூறினால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது. மேலும் தொழிலாளர்கள் வாயில் முன் வேலை நிறுத்தம் செய்யாமல் தொழிற்சாலைக்குள் வந்து பேசுமாறு கோரியுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் உள்ளே செல்லாமால் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கம் வேண்டும் என்று தொழிலாளர்கள் உறுதியுடன் நின்றனர்.

வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு மற்ற தொழிற்சாலைகளில் இருந்தும் தொழிற்சங்கங்களில் இருந்தும் ஆதரவு பெருகியது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக் குழு தொழிலாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்கினர். தொழிலாளர் துறையில் அவர்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஏப்ரல் 5 அன்று தொழிலாளர் துறை முன் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், தொழிலாளர் பிரதிநிதிகளும் நிர்வாகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதே சமயம் நிர்வாகம் தொழிலாளர்கள் குறிப்பாக பயிற்சியாளர்களை அழைத்து மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் வேலை நிரந்தரப்படுத்த மாட்டோம் என்று கூறியதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும் தொழிற்சாலை முன் கூடியிருந்த தொழிலாளர்கள் வெயிலின் காரணமாக அருகே இருந்த பாலத்திற்கு அடியில் கூடிய போது காவல்துறை அவர்களை அங்கிருந்து விரட்டியது.

தொழிலாளர் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகும் எனக் கூறியதாக தொழிலாளர்கள் கூறினர். ஆட்டோமொபைல் துறை ‘பொதுத் துறையாக’ தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளதால், இரண்டு வார அறிவிப்பு கொடுத்தே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யலாம் எனத் தொழிலாளர் துறை கூறியுள்ளது. தொழிலாளர்கள் பிரச்சனைகளை குறித்து நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் கொடுத்த உத்தரவாதத்தை அடுத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதனால் எந்த தொழிலாளர் மீதும் பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாகவும், நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். இதுவரை இவ்வாறு நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்கு அடுத்து தொழிலாளர்கள் மீது பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசு பெரும்பாலாக தடுத்து நிறுத்துவதில்;லை. நிர்வாகத்தின் உத்தரவாதத்தை அரசும் தொழிற்சங்கமும் எவ்வாறு உறுதி படுத்தும் என்பது வருங்காலத்தில் தெரியும். போராட்டத்தை கைவிட்டுள்ளத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நிறுவ முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.