80 நாட்களுக்கு மேலாக தொடரும் ஜின்டெக் வேலை நிறுத்தம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூர் கிராமத்தில் உள்ள ஜின்டெக் ஆட்டோமோட்டிவ் ஹீண்டாய் மற்றும் ரெனால்ட் நிசான் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது. 2008ல் நிறுவப்பட்ட இத்தொழிற்சாலையில் 86 நிரந்தரத் தொழிலாளர்களும் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். சிஐடியுவின் சங்கத்தில் இணைந்த 56 நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்ந் 80 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இங்கு வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்கள் 10, 12, அல்லது ஐடிஐ பட்டதாரிகள் ஆவர். 2008ல் அவர்கள் பயிற்சியாளர்களாக சேர்ந்து பின்னர் டெக்னிசன்களாக நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் அப்போது அவர்களுக்கு எழுத்துபூர்வமாக எந்த ஒப்பந்தமும் கொடுக்கப்படவில்லை. 2015ல் சிஐடியு சங்கத்தில் இணைந்த 86 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி ஒப்பந்தம் கோரி 13 நாள் வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது அங்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் 120 பேர் தான் பணி செய்து வந்தனர்.

வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கு நிரந்தர ஒப்பந்தத்தை நிர்வாகம் எழுத்துபூர்வமாக வழங்கியது. ஆனால் அதற்கு பின்னர் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு காரணங்களை கூறி நிர்வாகம் 4 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கமும் 4 தொழிலாளர்களை நிரந்தரப் பணிநீக்கமும் செய்துள்ளது. ஒருவர் ஞாயிறு கிழமை வரவில்லை என்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் காதல் திருமணம் செய்ய விடுமுறை எடுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த 8 தொழிலாளர்களை தவிர ஒரு தொழிலாளரை உற்பத்தி பிரிவில் இருந்து ஹவுஸ்கீப்பிங் சேவைக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது. அவர் மாற்றத்தை ஏற்காததால் அவருடைய பணியும் கேள்விக்குறியாகி உள்ளது.

நிறுவனம் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம் தருவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 9 வருட அனுபவம் உள்ள தொழிலாளருக்கு தற்போது கோடுக்கப்படும் ஊதியம் ரூ17400 தான். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எங்கும் நகராத வண்ணம் கட்டுப்பாடு விதிகள் உள்ளனர. கழிப்பறையில் கூட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு சுமார் 50 பெண்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி புரிகின்றனர். அவர்கள் இரவு ஷிப்டில் இருந்து செல்ல போக்குவரத்து வசதி கிடையாது. தொழிற்சாலைக்கும் சாலைக்கும் சுமார் அரைக் கிலோ மீட்டர் தூரம் வேறு.

தொழிற்சங்கத்தை விட்டு வந்தால் 5000ரூபாய் போனஸ் மற்றும் பணி உயர்வு கொடுப்பதாக நிர்வாகம் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களை வற்புறுத்தியதை அடுத்து 30 தொழிலாளர்கள் சங்கத்தை விட்டு வெளியேறி உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஊதிய உயர்வாக ரூ4000, பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி 56 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது குறித்து தொழிலாளர் துறை முன் தொழிற் தாவா எழுப்பப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக தொழிலாளர்களாக ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் பேச்சுவார்த்தைக்கு சென்று வருகின்றனர் ஆனால் இது வரை எந்த முடிவும் ஏற்படவில்லை.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் நிர்வாகம் முதலில் ரூ1500 ஊதிய உயர்வு கொடுப்பதாகவும் ஆனால் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தமாட்டோம் எனக் கூறியுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனை ஏற்காதத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்துள்ளனர்.

கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையின் போது 3 தொழிலாளர்களை பணியில் ஒவ்வொருவராக எடுத்துக் கொள்வதாக நிர்வாகத் தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால் தொழிற்தாவாவை இதுவுடன் முடித்துக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது சிஐடியுவின் சார்பில் வாதிட்ட தோழர் கண்ணன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் பணியில் வைத்துக் கொண்டால் தொழிற்சங்கம் தொழிற்தாவாவை தொழிலாளர் துறையில் முடித்து மீதி நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு மூலம் தீர்வு காணப் பேசியுள்ளார்.

தொழிற்சங்கம் தொழிற்தாவாவை முடிக்கும் பட்சத்தில் நிர்வாகம் 5 தொழிலாளர்கள் வரை பணியில் அமர்த்தும் நிலையில் உள்ளதாக தொழிலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தொழிற்தாவா பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சாதகமாக முடியாத நிலையில் தொழிலாளர்கள் கொரியன் தூதரகத்தையும் தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகங்களையும்  முற்றுகைப் போராட்டங்கள் நடத்தி உள்ளனர். தொழிற்சாலையில் ஒப்பந்ததாரர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவும் தொழிற்சாலை ஆய்வாளரை தொழிற்சங்கம் நிர்ப்பந்தித்துள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களையும் (பெண்கள் மற்றும் இடம் பெயர் தொழிலாளர்கள்) தொழிற்சங்த்தில் இணைப்பதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்படவில்லை.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.