மாருதி தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டம்

மாருதி சுசுகி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையைக் கண்டித்தும், கடந்த ஒரு மாதமாக தில்லியில் போராடி வரும் தமிழ்நாடு விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் ஏப்ரல் 13 அன்று சேப்பாக் அருகே 1000 தொழிலாளர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். இப்போராட்டத்தில் ஏஐடியுசி,சிஐடியு. ஏஐஏயூடியுசி, ஏஐசிசிடியு, ஹெம்எஸ், டபிள்யு.பி.டி.யு.சி மற்றும் எல்பிஎஃப் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். இது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெற்ற அரங்க கூட்டத்திற்குப் பின்னர் நடக்கக்கூடிய மத்திய தொழிற்சங்கங்களின் இரண்டாவது முக்கிய நிகழ்வாகும்.

Workers demonstration against Maruti Riots Case Verdict

மார்ச் 17 அன்று ஹரியானா விசாரணை நீதிமன்றம் மாருதி சுசுகி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தது. இதில் 11 பேர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆவர். தொழிலாளர் வர்க்க சுதந்திரம் மீதான அரசு மற்றும் முதலாளிகளின் தாக்குதலான இத்தீர்ப்பை கண்டித்து இதை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல அமைப்புகள் ஆதரவு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சிறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கங்களும் குரல் கொடுத்துள்ளனர். இது குறித்தான ஏப்ரல் 5 திட்டமிடல் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாகவும் குரல் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

வறட்சி நிவாரணம் மற்றும் கடன் ரத்து செய்யக் கோரி தில்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாடு விவசாயிகள் போராடி வருகின்றனர். தொழிலாளர்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் இப்போராட்டம் பலத்த ஆதரவைப் பெற்றுள்ளதாக உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மையத்தின் துணைத் தலைவர் தோழர் சம்பத் கூறினார். மூன்று வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும் அவர்களை புறக்கணிக்கும் பிரதமரை கண்டித்த அவர் இது வெகுஜன பிரச்சனையாகவும் தொழிலாளர்களை தட்டி எழுப்பும் தூண்டுகோலாகக் கருதினார்.

இப்போராட்டங்களில் பொதுத்துறையில் இருந்தும் தனியார் துறையில் இருந்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பெரம்பூர் லோக்கோ வொர்க்ஸ் பணிமனையில் இருந்து தோழர் அறிவழகி, தோழர் ஆனந்தராஜ், தோழர் பாலாஜி கலந்து கொண்டனர். ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தை சார்ந்த தோழர் அறிவழகி சீனியர் டெக்னீசன் ஆவார். பெரம்பூர் பணிமனையின் தொழிற்சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். அங்கு 200 பெண் தொழிலாளர்கள் பல டெக்னிகல் வேலைகளில் ஈடுபடுவதாக அவர் கூறினார். மாருதி தொழிலாளர்களை விடுவிக்க ஹெச்எம்எஸ் தோழர் ராஜா ஸ்ரீதர் உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் கொடுத்துள்ள கோரிக்கைகள் முக்கியமானது என அவரும் தொழிற்சங்க கிளை செயலாளர்கள் ஆனந்தராஜ் மற்றும் தோழர் பாலாஜி கருதினர்.

‘அவர்கள் சாதாரண தொழிலாளர்கள். தங்களுக்காக மட்டும் அவர்கள் வேலை செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களுக்கும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள். தொழிற்சங்கம் ஆரம்பித்தற்காக இன்று அவர்கள் சிறையில் உள்ளார்கள். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை முக்கியமான கோரிக்கையாகும் அதனால் நாங்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம்’ என தோழர் ஆனந்தராஜ் கூறினார். நிர்வாகம் கேட்கும் உற்பத்திக்கு மேலாக செய்து கொடுத்தும் இன்று இந்த ரயில் தொழிலாளர்களின் பணிகள் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டு வருகின்றன.

சர்வதேச நிறுவனத்தில் பணி புரிவதனால் மாருதியில் உள்ள நிலைமையை நன்றாக அறிந்துள்ளதாகவும் அதனால் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவு தருவதாகவும் பல்லாவரத்தில் உள்ள ஆல்ஸ்தோம் தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் தோழர் வெங்கடராமன் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட 13 தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய உழைக்கும் மக்கள் தொழிற் சங்க மையத்தின் பொதுச் செயலாளர் தோழர் துரைராஜ் கோரினார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியப் படையினால் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்ததும் ஏப்ரல் 13 அன்று தான் என்பதை ஏஐசிசிடியு தோழர் திவாகர் நினைவு கூர்ந்தார். போராட்டத்தின் நடுவில் தொழிலாளர் கூடத்துடன் பேசிய ஏஐசிசிடியு தோழர் ஏ.எஸ்.குமார் 1919ல் எந்த வித வழக்கும் இல்லாமல் குடிமக்களை கைது செய்யும் ரௌலட் சட்டத்தை ஆங்கிலேயர்கள் வந்தனர் என்பதை நினைவு கூர்ந்தார். இன்றும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் 4 வருடங்களாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதி தொழிலாளர்களுக்கு நீதியும் நிவாரணமும் கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழிலாளர் வர்க்கத்தின்; மேல் பல்வேறான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மதுவிற்கு எதிராக பெண்கள் தன்னிச்சையாக எழுச்சி அடைந்த போது, ஒரு பெண் போராளியை ஒரு ஆண் காவலர் கன்னத்தில் அறைந்த காட்சி அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது. இப்பிரச்சனைகளை மக்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டும் என அவர் கூறினார்.

தில்லியில் நெடிய போராட்டத்தை நடத்தி வரும் தமிழ்நாடு விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடியையும் பிஜேபி அரசையும் ஏஐடியுசி தோழர் மூர்த்தி சாடினார். பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கவும் பல்வேறு நாடுகளுக்கு செல்ல நேரம் உள்ள பிரதமருக்கு விவசாயிகளை வறட்சியில் வாடும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார். காடுகளையும், மரங்களையும் அழித்ததனால் ஏற்பட்டுள்ள வறட்சியினை அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கடன் தள்ளுபடியை மத்திய அரசு செய்யக் கூடாது என வலியுறுத்தி வரும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜீத் படேலை அவர் விமரிசனம் செய்தார். கடன் வாங்கி திருப்பி தராமல் ஏய்க்கும் விஜய் மல்லையா போன்ற கார்பரேட்வாதிகளை காப்பாற்றும் மோடி அரசின் குணத்தை அவர் சாடினார். தங்களுடைய உரிமைகளுக்காக தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்று சேரும் நாள் தான் இந்நாட்டிற்கு அச்சே தின்(நல்ல நாள்) வரும் எனக் குறிப்பிட்டார்.

மோடி அரசை விமரிசித்த சிஐடியு தோழர் சவுந்தரராஜன் ஆங்கிலேயர் காலத்தில் வவுசி போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது, மாபெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன என்றும் அதே மாதிரியான தொழிலாளர் திரட்டல் இப்போது தேவை என்றும் குறிப்பிட்டார்.

தொழிலாளர் சீர்திருத்தங்களால் சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தங்களைப் போன்றத் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதாக கொருக்குப்பேட்டையில் இருந்து வந்த ஏஐயுடியுசி தொழிலாளர்கள் கூறினர். தாங்கள் பணிபுரியும் சிறிய தொழிற்சாலையில் எந்த தொழிலாளர் சட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என அவர்கள் கூறினர். இன்னும் வேலை நேரத்தை மோடி அரசு அதிகரித்தால் தங்களை முதலாளிகள் தொழிற்சாலையிலேயே தங்க வைத்து விடுவர் என்று அவர்கள் கூறினார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்த மாருதி தொழிற்சங்க வரலாற்றை ஏஐயுடியுசி தோழர் சிவக்குமார் நினைவு கூர்ந்தார்.

மாருதி தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கும் ஆதரவாக நடத்தப்பட்ட இந்த அடையாளப் போராட்டம் முக்கிய பிரச்சனைகளை தொழிலாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குறிப்பாக விவசாயிகள் போராட்டங்கள் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றுள்ள நிலையில், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உறவை பலப்படுத்த மத்திய தொழிற்சங்கங்கள் முயற்சி எடுக்கக் கோரியுள்ளனர்.

இரண்டாவதாக தொழிற்சங்க உரிமை குறித்து ஒற்றுமித்த கருத்து உள்ளது. பல தொழிலாளர்கள் இன்று ஒப்பந்த பணிநிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். உதாரணமாக ஆல்ஸ்டோம் தொழிற்சாலையில் 235 நிரந்தரத் தொழிலாளர்களும் 320 ஒப்பந்தத் தொழிலாளர்களும் உள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரூ10000 மாதம் ஊதியமாக பெறுகின்றனர். இது தொழிற்சங்கம் அமைத்துள்ள நிரந்தரத் தொழிலாளர்களின் உதியத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக தாங்கள் குரல் கொடுப்பதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். உதாரணமாக ஒரே கேண்டினில் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் உணவு கொடுக்குமாறு அவர்கள் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது கடினமாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

பொதுத் துறையிலும் இதே நிலைமை தான் நிலவுகிறது. பெரம்பூர் பணிமனையில் 180 கோச்சுகளுக்கான பெயின்டிங், தச்சு வேலைகள் கடந்த வருடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். உற்பத்தி துறைகளில் ஏறக்குறைய அனைத்து தொழிற்சாலைகளிலும் இதே நிலைமை தான். இதனால் தொழிற்சங்க உறுப்பினர் குறைவதுடன் தொழிற்சங்க அங்கீகாரமும் கடினமாகி வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம், ஒப்பந்த பணிமுறையை நீக்குதல், தொழிற்சங்க உரிமை ஒன்றுடன் ஒன்றாக பின்னி உள்ளது. இந்த உரிமைகளுக்காக தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் வளர வேண்டுமானால் இதற்கான நடவடிக்கைகள் வளர வேண்டும்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Public Sector workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.