சான்மீனா, ரெனால்ட் நிசான், அப்போலோ டயர்ஸ்,வென்ச்சர் லைட்டிங் மற்றும் பல தொழிற்சாலைகளின் செய்தி தொகுப்பு

பல்வேறு தொழிற்சாலைகளில் நடக்கும் போராட்டங்களின் சமீபத்திய நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்

Workers protest at MEPZ Tambaram

Integra Workers Picket against Closure

Sanmina workers protest by standing and eating

 

 

 

 

 

 

சான்மீனா எஸ்.சி.ஐ டெக்னாலாஜீஸ், ஓரகடம்
ஜின்டெக் ஆட்டோமோடிவ், ஸ்ரீபெரும்புதூர்
காம்ஸ்டார் ஆட்டோமோடிவ், மறைமலைநகர்
அப்போலோ டயர்ஸ் தொழிற்சாலை, ஓரகடம்
இன்டெக்ரா ஆட்டோமோடிவ், வல்லார்புரம், சென்னை
கிரீவ்ஸ் காட்டன், கும்மிடிப்பூண்டி
ரெனால்ட் நிசான் இந்தியா லிமிடட், ஸ்ரீபெரும்புதூர்
வென்ச்சர் லைட்டிங், மெப்ஸ் தாம்பரம்
பிஎம்ஐ என்ஜினியரிங், மெப்ஸ் தாம்பரம்
ஓமாக்ஸ் தாருஹேரா, ராஜஸ்தான்

சான்மீனா எஸ்.சி.ஐ டெக்னாலாஜீஸ், ஓரகடம்

சென்ற மார்ச் மாதத்தில் ஒரு தொழிலாளரை மனித வள மேலாளர் தரக்குறைவாக பேசி விட்டார் என சான்மீனா தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். தொழிலாளர் துறை தலையிட்டு பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதாக கூறிய பின்னர் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். ஆனால் இன்றும் தொழிலாளர் விரோதப் போக்குகளை சான்மீனா நிர்வாகம் மேற்கொள்வதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். மார்ச் 31 அன்று இன்னொரு மேலாளர் இரண்டு தொழிலாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். மார்ச் மாதத்தில் நடத்திய போராட்டத்திற்கு நிர்வாகம் தொழிலாளர்களின் 21 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. மேலும் மார்ச் 27ல் இருந்து 32 நிரந்தரத் தொழிலாளர்களுக்கும், ஏப்ரல் 3ல் இருந்து 110 தொழிலாளர்களுக்கும் 6 நாள் கட்டாய விடுமுறை அளித்துள்ளது. இதை எதிர்த்து சான்மீனா தொழிலாளர்கள் மே 8ல் இருந்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வேலை நிறுத்தக் கோரிக்கையை நிர்வாகத்திற்கு சமர்ப்பித்தனர். இதில் கீழ்கண்ட கோரிக்கைகளை நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரினர்:

  • பெரும்பான்மையான தொழிற்சங்கத்தை அங்கீகரித்து, கூட்டு பேர உரிமையை உறுதி செய்து தொழில் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
  • பிடித்தம் செய்யப்பட்ட 21 நாள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
  • தொழிலாளர்களை அவமரியாதை குறைவாக கீழ்த்தரமாக பேசிய மேலாளர்கள் திரு வினோத் மற்றும் தங்கம் சுரேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இடைக்கால நீக்க அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.
  • பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
  • தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டாய விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.
  • கேன்டினில் தரமான உணவு வழங்க வேண்டும்.

மே 4 அன்று தொழிலாளர் துறை பேச்சுவார்த்தையை துவக்கிய நிலையில் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளது. இதுவரை 3 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பிரச்சனைகளையும் பயிற்சியாளர் பிரச்சனைகளையும் குறித்து அரசு கவனத்தை ஈர்க்க எஐசிசிடியு ஒருங்கிணைக்கும் தொழிலாளர் முற்றுகை போராட்டத்திற்கு தொழிலார்கள் தயாராகி வருவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறினர்.

ஜின்டெக் ஆட்டோமோடிவ், ஸ்ரீபெரும்புதூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50 தொழிலாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை ஆதரித்து தொழிலாளர் துறை ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். ஆனால் ஆணையை பிறப்பிக்கும் போது நிர்வாகம் இல்லாததால் இது செல்லாது என நிர்வாகம் முறையிட்டுள்ளது. மேலும் 5 தற்காலிக பணிநீக்கம் செய்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் வைத்துக் கொள்வதாகவும், நிரந்தரப் பணிநீக்கம் செய்த 4 தொழிலாளர்களை பணியில் வைக்க முடியாது என நிர்வாகம் கூறியுள்ளது. தற்காலிக பணிநீக்கம் செய்த தொழிலாளர்களை பணியில் வைக்க வேண்டும் என்றால் தொழிற்சங்கம் வழக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றும் நிரந்தரப் பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்காக எந்த வழக்கையும் போடக்கூடாது என நிர்வாகம் நிபந்தனை போட்டுள்ளது. தொழிற்சங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் தொழிற் தாவா வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

காம்ஸ்டார் ஆட்டோமோடிவ், மறைமலைநகர்

காம்ஸ்டார் நிறுவனத்திற்கும், தொழிலாளர் குழுவிற்கும்(Employee Relations Committee) இடையே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் அனைத்து தொழிலாளர்களும் தொழிற்தாவா பகுதி 18(1) கீழ் கையெழுத்திட்டுள்ளனர். முன்னர் குழு உறுப்பினர் உட்பட 40 தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தத்தின் சில ஷரத்துகளை எதிர்த்து கையெழுத்திட மறுத்தனர்.

குறிப்பாக அனுமதி பெறாமல் ஒரு தொழிலாளர் விடுமுறை எடுக்க நேர்ந்தால் நிர்வாகம் தொழிலாளர் தொழிற்சாலைக்குள் நுழைவதற்கான அட்டையை செயலிழக்க செய்வோம் என ஊதிய ஒப்பந்தத்தில் கூறியிருந்தது. இதனால் விடுமுறைக்கான ஊதியம் ஒரு நாளைக்கு 6000ரூபாய் வரை குறையும் எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும் நிர்வாகம் ஒரு தொழிலாளரை பழி வாங்க நினைத்தால், விடுமுறை அனுமதிக்காமல் இந்த ஷரத்தின் கீழ் அவரின் மேல் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர்(ஹுண்டாய் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர் ஒருவர் விடுமுறை எடுத்து தில்லியில் போராட்டம் செய்து வந்த ஹோண்டா தொழிலாளர்களை சந்தித்தார் எனக் கேள்விப்பட்ட ஹுண்டாய் நிறுவனம் பின்னர் அவர் விடுமுறை கோரிய போது விடுமுறையில் என்ன செய்வீர்கள் என்று வினவியுள்ளது). காம்ஸ்டார் நிறுவனம் இந்த ஷரத்தை மாற்றுகிறோம் என்று கூறிய நிலையில் அனைத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

2011ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பல்வேறு இடையூறுகளை விளைவித்து வந்த காம்ஸ்டார் நிறுவனம் அவர்களுடன் விருப்ப ஓய்வூதிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து 24 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெற்று பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இரண்டு தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர்.

அப்போலோ டயர்ஸ் தொழிற்சாலை, ஓரகடம்

ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை கோரி அப்போலோ டயர்ஸ் தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் இரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். அதன் பின்னர் அப்போலோ தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து கோரிக்கை அறிவிக்கையை சமர்ப்பித்துள்ளனர். ஊதிய உயர்வு, முறையான விடுமுறை கொள்கை, ஓவர்டைம் ஊதியம், ஷிப்ட் அலவன்ஸ் ஆகியவற்றிற்கான கோரிக்கைகளை தொழிலாளர்கள் கோரியுள்ளனர். தொழிலாளர் துறையின் கீழ் இது வரை 7 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நிர்வாகம் ஒரு வருட இடைக்கால ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால் தொழிற்சங்கம் ரூ35000 ஊதிய உயர்வுடன் 3 வருட ஒப்பந்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது. இதுவரை பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இது குறித்து நடந்த தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தவிர மற்ற சலுகைகளுக்கான ஒப்பந்தத்தை பேசி சுமூகமான தீர்வு காணுமாறு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக விடுமுறை கொள்கையிலும் ஓவர்டைம் கொள்கையிலும் தொழிலாளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மற்ற சலுகைகளில் தொழிற்சங்கம் ஒப்பந்தம் செய்ய தயாராக உள்ளதை தொழிலாளர் துறைக்கும் நிர்வாகத்திற்கும் கூறப்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதி கூறியுள்ளார். அதே போல் வீடு கட்டும் திட்டத்திலும் தொழிலாளர்கள் மாற்றம் கோருகின்றனர். தற்போதுள்ள திட்டத்தின் படி 10 வருடம் பணி முடித்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வீடு கட்டுவதற்கு 1 லட்ச ரூபாய் தருகிறது. அதற்கு பதிலாக நிர்வாகம் தொழிலாளர்களுக்காக நிலம் வாங்கி பராமரித்தால் தொழிலாளர்கள் அதில் நிர்வாகத்திடம் இருந்து கடன் வாங்கி வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர்.

நிர்வாகம் தொழிற்சாலைக்குள் இன்னொரு தொழிற்சங்கத்தை நிறுவ முயற்சிப்பதாகவும், தொழிலாளர்களை நிர்வாகம் கூறும் தொழிற்சங்கத்தில் சேர நிர்ப்பந்திப்பதாக தொழிலாளர்கள் கூறினர். ஆனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தில் உள்ளதாக தொழிலாளர்கள் கூறினர்.

இன்டெக்ரா ஆட்டோமோடிவ், வல்லார்புரம், சென்னை

சென்ற ஜனவரியில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் வல்லார்புரத்தில் உள்ள தொழிற்சாலையை மூடியதனால் 100 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழிற்சங்கம அமைத்ததற்காக நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிர்வாகம் தொழிற்சாலையில் இருந்து இயந்திரங்களை நீக்குவதற்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தொழிலாளர்களுக்காக நிர்வாகம் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலிருந்து காலி செய்ய சொல்லி நிர்வாகமும் வீட்டு உரிமையாளரும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இது குறித்தும், வீட்டு உரிமையாளர் தொழிலாளர் ஒருவரை தாக்கிய போதும் தொழிலாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுத்து வருகிறது. நிர்வாகம் நிவாரணம் கொடுத்துள்ளதால் காவல் துறை தொழிலாளர்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தற்போது தொழிலாளர்கள் வீட்டை காலி செய்து அருகில் வாடகை அறைகளில் தங்கி வருகின்றனர்.

அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்பதை காரணம் காட்டி தாழிற்சாலை சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ளது என்ற தொழிலாளர்களின் மனுவை விசாரிக்க தொழிலாளர் நீதிமன்றம் மெறுத்து விட்டது. உயர்நீதி மன்றத்தில் உள்ள வழக்கு இன்னும் முடிவுறாத நிலையில் தொழிலாளர்கள் வழக்கு முடியும் வரை ஊதியம் கேட்டு இன்னொரு வழக்கை தொடர உள்ளனர். மேலும் தொழிற்தாவா சட்டத்தின் 2(k) பிரிவின் கீழ் தொழிலாளர் துறையிடம் புகார் செய்துள்ளனர்.

ஏற்கனவே நிர்வாகம் இயந்திரங்களை அகற்றி விட்டதாக தொழிலாளர்கள் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து காவல் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். நிர்வாகம் இதற்கு பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் கோரியுள்ளது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொழிலாளர்கள் இப்பகுதிகளில் பிரச்சாரம் செயய உள்ளனர்.

வருமானம் எதுவும் இல்லாத நிலையில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். ஏறக்குறைய பாதி தொழிலாளர்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்கின்றனர். இன்னொரு நிரந்தர வேலை கிடைப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. இதனால் பலர் ஒப்பந்த வேலையில் சேர்ந்துள்ளனர். தொழிற்சங்க வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சட்டரீதியான பணிகளை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அவர்களால் மற்ற வேலை கூட தேட முடிவதில்லை. நிலையற்ற வேலைகளினால் கூட்டங்களுக்கு வருவதும் வழக்குகளுக்கு செல்வதும் கூட கடினமாகி வருகிறது. நிதி; போதாமை காரணத்தினால் நியாயம் தங்கள் பக்கம் இருந்தும் சட்டரீதியான போராட்டத்தை வெல்ல முடியாது எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

கிரீவ்ஸ் காட்டன், கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் உள்ள கிரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையை நிர்வாகம் மூடியதனால், 300 நிரந்தரம் மற்றும ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை முன் தொழிற்சங்க உரிமை கோரி தொழிற் தாவா எழுப்பப்பட்ட நிலையில் நிர்வாகம் தொழிற்சாலையை மூடி, இயந்திரங்களை ராணிப்பேட்டை தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்தியது.
மீண்டும் ஆலை திறக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அவர்கள் கோரிவருகின்றனர். நிர்வாகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் நிர்வாகம் புறக்கணித்து வருகின்றது. இது வரை தொழிலாளர்களுக்கு சட்டரீதியான தீர்வு கொடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு முடியும் வரை ஊதியம் கேட்டு தொழிலாளர்கள் கோருவதாக உள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிலங்கள் அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தை கொடுத்துள்ளதனால் தொழிற்சாலையை நடத்த நிர்ப்பந்திக்க வேண்டும் எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். தொழிற்சாலை மூடியதாக நிர்வாகம் கூறினாலும், தரப் பரிசோதனை போன்ற பணிகள் உள்ளே நடைபெறுவதாக சில தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தொழிற்சாலை நஷ்டத்தில் ஓடுகிறது என்ற நிர்வாகத்தின் கூற்றை அவர்கள் எதிர்க்கின்றனர். இது குறித்த புகாரை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உள்ளனர்.

ரெனால்ட் நிசான் இந்தியா லிமிடட், ஸ்ரீபெரும்புதூர்

இரண்டு வருடத் தொழிற்சங்கப் போராட்டத்தை அடுத்து சில கோரிக்கைகளுடன் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் இருந்த இரு தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்தன. குறிப்பாக பொதுக் குழுவைக் கூட்டி புதிய தொழிற்சங்க செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என யுஎல்எஃப் தொழிற்சங்கம் கோரியிருந்தது. அதுவரையில் தற்போதுள்ள செயற்குழுவில் 11 பேரில் 5 பேரை நீக்கி யுஎல்எஃப் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொறுப்பைக் கொடுப்பதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம் போடப்பட்டு 3 மாதங்கள் ஆகிய நிலையில் ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்க(RNITS) செயற் குழு பொதுக் குழுவைக் கூட்ட மறுப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சங்க விதிகள் படி ஒருவர் தொழிற்சங்கத்தி;ல் இணைந்து 6 மாதங்கள் ஆகிய பின்னரே தேர்தலில் வாக்களிக்க முடியும் என RNITS தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். மேலும் RNITS தரப்பில் செயற்குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக இருந்த 5 பிரதிநிதிகளும் பொறுப்பில் இருந்து விலகாததால் யுஎல்எஃப் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஓரங்கட்டப்படுவதாக தொழிலாளர்கள் குறை கூறுகின்றனர். தொழிலாளர் துறை முன் முடிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் RNITS பிரதிநிதிகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் RNITS தொழிற்சங்க பிரதிநிதிகள் நிதிமோசடி செய்ததாக சில தொழிலாளர்கள் குற்றம் சாட்டி தொழிற்சங்க அலுவலகத்தை பூட்டியுள்ளனர். தொழிலாளர்களின் கூற்றுப்படி மே 1 அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின அன்பளிப்பாக ஒரு குடையும், பாக்கெட் டயரியும் தொழிற்சங்க நிர்வாகம் அளித்துள்ளது. இதற்கான நிதி தொழிலாளர்களின் அவசரத் தேவைக்காக சேமிக்கப்படும் நிதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். அவசரத் தேவைகளுக்கான நிதியை இம்மாதிரியான காரியங்களுக்கு உபயோகிப்பதை தொழிலாளர்கள் விரும்பவில்லை. மேலும் குடைகள் வாங்கிய விலை மிகவும் அதிகமாக உள்ளது என்றும், வாங்கிய 4000 குடைகளில் சில காணாமல் போகியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொதுக் குழுவைக் கூட்டி நிதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர். தொழிலாளர் கோரிக்கைகளை தொடர்ந்து RNITS நிர்வாகிகள் புறக்கணித்து வந்ததால், கடந்த வாரம் சில தொழிலாளர்கள் சென்று அலுவலகத்தை பூட்டி விட்டனர்.  இச்செயலை செய்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிற்சாலை நிர்வாகத்திடம் RNITS பிரதிநிதிகள் கோரியதாக தகவல்கள் வந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் இதே போல் ஒரு கர்ப்பிணி பெண் தொழிலாளர் கழிப்பறையில் நெடிய நேரம் செலவிடுகிறார் என ஒரு மேலாளர் தொழிலாளரை அதட்டியுள்ளார். தொழிற்சங்கம் இது குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம் எனக் கூறியது, ஆனால் தொழிலாளர்கள் பெண் தொழிலாளருக்கு ஆதரவாக உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தனர். நிர்வாகம் தொழிலாளரின் கணவரை அழைத்து தனியாக பேசி பிரச்சனையை முடித்து விட்டது. இச்சம்பவங்கள் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள நம்பிக்கையின்மையை காட்டுகிறது. தொழிலாளர்களின் நம்பிக்கைக்குறிய தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தேர்வு தான் இதற்கு முடிவு கட்டும்.

வென்ச்சர் லைட்டிங், மெப்ஸ் தாம்பரம்

வென்ச்சர் லைட்டிங் தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்களை மேலாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தொடர்ந்த வழக்கில் பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழுவை ஏற்படுத்தி உற்பத்தி மேலாளர் மற்றும் கண்காணிப்பாளர் மீதான தொழிலாளர்களின் புகார்களை விசாரிக்க உயர்நீதி மன்றம் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. தொழிலாளர் வேலைக்கு திரும்பிய சில நாட்களிலேயே சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என பெண் தொழிலாளர்கள் சிலரை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் சில ஆண் தொழிலாளர்களை குஜராத் தொழிற்சாலைக்கு பணிமாற்றம் செய்துள்ளது. குடும்ப சூழ்நிலையால் தாங்கள் குஜராத் தொழிற்சாலைக்கு செல்ல இயலாது எனத் தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது உள் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இருந்து நிர்வாகம் பின்வாங்குவதாக தெரியவில்லை. மார்ச் மாதத்தில் சில பெண் தொழிலாளர்கள் வேலை முடித்து தங்கள் வாகனங்களில் வெளியே செல்ல முயன்ற போது, அங்கு ஒரு ஆண் காவல் தொழிலாளர் மொபைல் போனில் தங்களை வீடியோ எடுப்பதை கண்டு பிடித்தனர். வீடியோவை அகற்ற தொழிலாளர்கள் வற்புறுத்திய போது ஏற்பட்ட கலகலப்பை வைத்து 30 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. ‘எங்களை பழிவாங்குவதற்காகவே வீடியோ எடுக்கும் நடவடிக்கையை நிர்வாகம் தூண்டிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்துள்ளது. நாங்கள் தொழிற்சங்க உதவியோடு இப்பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறோம்’ என சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு தொழிலாளர் கூறினார். தங்களுக்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர் பாதி சம்பளத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மெப்ஸ் தொழிற்சங்கப் பொருளாளர் தோழர் ஜெயந்தி உட்பட மற்ற உறுப்பினர்களை கொண்டு பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு மே 30ல் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளது.

பிஎம்ஐ என்ஜினியரிங், மெப்ஸ் தாம்பரம்

வேலை நிறுத்தம் செய்ததற்காக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 18 தொழிலாளர்கள் மீது நிர்வாகம் உள்விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தோழர் மகேஷ்வரன் கூறினார். ஜுன் மாதத்திற்குள் உள்விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் நிர்வாகத்திற்கு உத்தரவி;ட்டுள்ளது. மேலும் சில பிரச்சனைகளுக்கு தொழிலாளர் துணை ஆணையர் முன் பேச்சுவார்த்தை நடத்தவும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரூ வருடத்திற்கு ஊதியம் தரவும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் சில பயன்களை தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். குறிப்பாக ஊதியச் சீட்டும் சீருடைகளும் அலுவலகத்தில் கொடுக்கப்படுகின்றன(முன்னர் தொழிற்சாலை வாயிலில் கொடுக்கப்பட்டு வந்தன). தொழிற்சாலை வாயிலில் கூடுவதை தடைசெய்யும் உத்தரவை எதிர்த்து தொழிற்சங்கம் மேல்முறையீடு செய்ய உள்ளது.

ஓமாக்ஸ் தாருஹேரா, ராஜஸ்தான்

பிப்ரவரி முதல் தாருஹேரா ஓமாக்ஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்கள் வேலைக்காக போராடி வருகின்றனர். ஓமாக்ஸ் நிறுவனம் தாருஹேரா தொழிற்சாலையை மூடி மற்ற தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியை மாற்ற முயற்சித்து வரும் நிலையில் அனைத்து தொழிலாளர்களின் போராட்டங்கள் நெருக்கடியான நிலையை எட்டியுள்ளது.

பிப்ரவரியில் ஒப்பந்த தொழிலாளர் அஜய் பாண்டே தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதனால் நிர்வாகம் 39 நிரந்தரத் தொழிலாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. இதில் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் அடக்கம். நிரந்தரத் தொழிலாளர்களின் பணிநீக்கத்தை எதிர்த்து அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை முறியடிக்க நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குர்காவில் உள்ள ஸ்பீட்ஓமாக்ஸ் எனும் இன்னொரு தொழிற்சாலைக்கு நிர்வாகம் ஏற்கனவே உற்பத்தியில் ஒரு பகுதியை மாற்றி விட்டது. தாருஹேரா தொழிற்சாலையை விட இத்தொழிற்சாலையில் ஊதியம் குறைவு, தொழிற்சங்கமும் கிடையாது. ஏப்ரல் 17 அன்று சண்டிகர் பிளேட்டிங் பகுதியை தவிர தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளையும் மூடுவதற்கு அனுமதி கோரி தொழிலாளர் துறையிடம் நிர்வாகம் விண்ணப்பம் அளித்துள்ளது. தொழிற்சாலையை மூடுவதற்கு இன்னும் அனுமதி தரப்படாத நிலையில் உற்பத்தியை மாற்றுவது அரசு இம்மாதிரியான செயல்களை மறைமுகமாக ஆதரிப்பதையே காட்டுகிறது.

இந்நிலையில் போராடும் நிரந்தரத் தொழிலாளர்களை நன்னடத்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மீண்டும் வேலைக்கு சேர நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருகிறது. பெரும்பான்மையான நிரந்தரத் தொழிலாளர்கள் கையெழுத்திட்டு வேலைக்கு திரும்பியுள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்களில் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சிலர் கையெழுத்திட மறுத்து வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வாகம் மீண்டும் வேலைக்கு சேர்க்கவில்லை.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.