ஹரியானாவின் அய்சின் தொழிற்சாலையில் தொடரும் தொழிலாளர் போராட்டங்கள்

31 மே அன்று ஹரியானாவின் ஐஎம்டி ரோஹ்தக் பகுதியில் உள்ள அய்சின் ஆட்டோமோடிவ் தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட 425 தொழிலாளர்கள் மீது காவல்துறை படுமோசமான தடியடி நடத்தியுள்ளது. இதில் 35 பெண் தொழிலாளர்களும் அடக்கம். 20 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொழிலாளர்கள் மீது 323, 186, 114, 341, 342, 332, 353, 284 உட்பட பல்வேறு ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.

அய்சின் ஆட்டோமோடிவ் மாருதி, ஹோண்டா, டயோடா நிறுவனங்களுக்கு கார் கதவு பூட்டு, கதவு கீல் மற்றும் மேனிபோல்டுகளை தயாரி;த்து வருகிறது. 2012ல் இத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. 340 நிரந்தரத் தொழிலாளர்கள், 170 பயிற்சியாளர்கள் உட்பட 800 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ9600, பயிற்சியாளர்களுக்கு ரூ 8600, ஒப்பந்தத் தொழிhலாளர்களுக்கு ரூ6800-ரூ7200 வரை கிடைக்கிறது. பல்வேறு பணி நிலைமைகள், நிர்வாக அதிகாரிகளின் அவமதிப்பு மிக்க எதேச்சையான போக்கு, குறைந்த ஊதியம் ஆகிய தொழிற்சாலை பிரச்சனைகளை களைய தொழிலாளர்கள் மார்ச் 2017ல் தொழிற்சங்கம் அமைக்க முடிவு செய்தனர். ஏப்ரல் மாதத்தில் சங்கத்தை பதிவு செய்யவும் மனு கொடுத்தனர். இதை முறியடிப்பதற்கு நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக மே 3க்கு முன்னர் பல புதிய தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் கொண்டு வந்துள்ளது.

மே 3 அன்று தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வாகனங்கள் அனுப்பப்படவில்லை. தொழிலாளர்கள் வாகனங்களை பிடித்து தொழிற்சாலைக்கு வந்த போது 20 தொழிலாளர்களின் வேலைகள் பறிபோனதை அறிந்தனர். இதில் 5 பெண் தொழிலாளர்களின் வேலையும் பறிக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் நன்னடத்தை சான்றில் கையெழுத்திட்டு வரவேண்டும் என நிர்வாகம் நிரப்பந்தித்தது. இச்சான்று தொழிலாளர்களின் நடவடிக்கைகளை மிகவும் கட்டுப்படுத்தும். அவர்களின் உரிமையை மறுக்கும். தொழிலாளர்கள் கையெழுத்திட மறுத்த போது நிர்வாகம் தொழிற்சாலையை கதவடைப்பு செய்தது. அன்று முதல் தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 7 தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிற்சாலை வாயிலில் இருந்து 400 மீட்டருக்குள் செல்ல முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு அருகில் செல்லாவண்ணம் தடையுத்தரவு கொடுத்துள்ளது.

போராடிய தொழிலாளர்கள் அருகில் உள்ள கிராமங்களில் ஆதரவை திரட்டினர். 50சதத் தொழிலாளர்கள் உள்ளுர் மக்கள் என்பதும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. ரோஹ்தக் பகுதியில் உள்ள ஏசியன் பெயின்ட்ஸ், குர்காவ்-மாநேசர்-பாவல்-நீம்ரானா பகுதிகளில் உள்ள மாருதி, ஹோண்டா, பெல்சோனிகா, டாய்கின் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்தனர்.

மே 23 அன்று ரோஹ்தக் நகரத்தில் பெரிய பேரணி ஒன்றை நடத்தினர். நிர்வாகத்தின் மீது அழுத்தத்தை தருவதற்கு தொடர் உண்ணாவிரதத்தையும், காலவரையற்ற உண்ணாவிரதத்தையும் அவர்கள் மேற்கொண்டனர். பல தொழிலாளர்கள் வெயிலில் வாடி வதங்கி நோயுற்றனர். ஆனால் புதிதாக கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு நிர்வாகம் தொழிற்சாலையை நடத்த முயன்றது. அவர்கள் உள்ளேயே தங்கி, வாழ்ந்து தொழிற்சாலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

தொழிலாளர் துறை தொழிலாளர்களின் சங்கப் பதிவு விண்ணப்பத்தை எந்த காரணமும இன்றி நிராகரித்துள்ளது. இதனால் மே 31 அன்று தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலை முற்றுகை இட்டனர். உடனே அங்கு பெரிய அளவில் காவல்துறை குவிக்கப்பட்டு தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் கைது செய்து ரிமாண்டில் வைக்கப்பட்டனர். பெண் தொழிலாளர்களுக்கு அடுத்த நாளும், ஆண் தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கு உதவிய தொழிலாளர் போராளிகளுக்கும் நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை இன்னும் தொடர்கிறது. எந்தத் தொழிலாளரும் தொழிற்சாலை வாயிலின் 300 மீட்டருக்குள் வரக்கூடாது என நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை தொடர உறுதி மேற்கொண்டுள்ளனர்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.