55 தொழிலாளர்களும் 6800 வேலை நாள்களும்!!! – எஸ். கண்ணன்

அண்மையில் நடந்த 1.5 லட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், நாடுமுழுவதும், 15 கோடி தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடந்த பொது வேலை நிறுத்தங்கள், இந்தியாவில் கொள்கை மாற்றத்தின் தேவையை வலியுறுத்துகின்றன. தொழிற்பேட்டைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பகுதிகளில் தொழிலாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேலை நிறுத்தமே உதவி செய்கிறது. சக்கரங்கள் நின்றால் மட்டுமே முதலாளித்துவம், தனது அரக்கத்தனத்தை சற்று தளர்த்த சம்மதிக்கிறது.

மாருதி, ஹூண்டாய், ஃபோர்டு, ஹோண்டா, போன்ற பெரும் முதலீடுகளைக் கொண்ட, பிராண்ட்டட் நிறுவனங்களிலும், அதன் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களிலும் நடந்த வேலை நிறுத்தங்கள், பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன.தங்கள் நாடுகளில் வாரம் 40 மணிநேரம், 35 மணிநேரம் என வேலை நேரத்தை கொண்டுள்ளன. தங்களின் தாய் நாட்டில், அமலாக்கும் ஜனநாயகத்தை, இந்தியாவில் அனுமதிப்பதில்லை. அவர்களைப் பொருத்தளவில் இந்தியா ஜனநாயக ரீதியிலும் பின் தங்கிய நாடு, எனவே முன்னேறிய ஜனநாயகத்தின் குரல் எழக் கூடாது என எதிர்பார்க்கின்றனர்.

சங்கம் வைப்பது கொலைக் குற்றத்திற்கு ஈடானது:

தொழிசங்கம் வைக்கும் உரிமையை பிரிட்டிஷ் ஆட்சிக்காலமான 1926 ல் பெற்று விட்டோம். 91 ஆண்டுகள் கடந்த பின்னும் அங்கீகரிக்க வழிவகை செய்யும் சட்டத்தை இயற்றவில்லை. 1970 ல் காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம், மார்க்சிஸ்ட் கட்சியின், நாடாளுமன்றத் தலைவராக இருந்த ஏ.கே.கோபாலன் முயற்சியில் உருவானது. 47 ஆண்டுகள் முடிந்த பின்னரும், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வரையிலும் காண்ட்ராக்ட் பணியாளர்களாகவே உள்ளனர். இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கான, பட்டுக்கம்பளப் பாதையாக காண்ட்ராக்ட் சுரண்டல் முறை உள்ளது.

ஜிண்டெக் என்ற கொரிய நாட்டு நிறுவனத்திலும் இந்த கொடுமை அரங்கேறியது. மாதம் பலகோடி ரூபாய் மதிப்பில் வணிகம் செய்யும் நிறுவனத்தில், சி.ஐ.டி.யு உருவாகும் வரை யாரும் நிரந்தரம் செய்யப்படவில்லை. 3 முதல் 7 ஆண்டுகள் பணியாற்றினாலும், பெயர் பயிற்சித் தொழிலாளி. சங்கம் பிறந்து, வழக்கு தொடுத்த பின்னரே 76 தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்ததும், நிரந்தரமானதும் பெரும் வெற்றியாக கொண்டாடப்பட்ட நிலையிலேயே, நிர்வாகிகள் முன்னணி ஊழியர்கள் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

தமாஷ் டிஸ்மிஸ்களும் – வேடிக்கைப் பார்த்த அதிகாரிகளும்:

சி.ஐ.டி.யு அமைக்கப்பட்ட பின், கொரிய நிர்வாகத்தின் பிரதிநிதிகளுக்கும், இந்தியாவின் உற்பத்தி மேலாளர்களுக்கும், அதிகார உன்மத்தம் தலைக்கேறி, பழிவாங்கும் உணர்ச்சி அதிகரித்தது என்றால் மிகையல்ல. காரணமே இல்லாமல், தொழிலாளர்களை சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்தது. ஒருவர் காதல் திருமணம் காரணமாக 4 தினங்கள் தாமதமாக நிறுவனத்திற்கு வந்ததுடன், விடுப்பு கடிதம், திருமணப் பதிவு சான்று ஆகியவற்றை சமர்பித்துள்ளார். ஆனாலும் ஏற்காத நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. மற்றொரு தொழிலாளி, வாரவிடுமுறை தினமான ஞாயிறு வேலை நாள் என்றும், அன்றைய தினம், கண்டிப்பாக மிகைப்பணிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்திய மேலாளரிடம், தான் குடும்ப நிவர்த்தியைப் பூர்த்தி செய்ய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் வர இயலாது என்பதை தெரியப்படுத்தி விட்டார். இரண்டு தினங்கள் முடிந்து மீண்டும் பணிக்கு வந்த போது, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இவை இரண்டுமே சட்ட விரோதமானது. ஆனால் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டு, தவறான மிகைப்பணி குறித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள், இதைக் கண்டு கொள்ளவில்லை. சட்டரீதியிலான தொழிற்தாவா வழக்குகளிலும் தீர்வு காண முடியவில்லை. அதேநேரத்தில் நிர்வாகம், தனது அடக்குமுறையை நீடிக்கும் வகையில், தொழிற்சங்கத்தில் இல்லை என எழுதி கொடுத்தால் சிறப்பு சலுகைகள் என ஏமாற்றவும், அவ்வாறு செய்யாதவர்களை மிரட்டவும் செய்தது. இதன் காரணமாக சங்கத்தின் உறுப்பினர்களில் 20 பேர் விலைபோகும் நிலை உருவானது. ஒருபுறம் சங்க நிர்வாகிகளை வெளியேற்றுவது, மறுபுறம் சங்கத்தை பலவீனப்படுத்துவது, என்ற நிர்வாகத்தின் தந்திரத்தை எதிர்கொள்ள வேலை நிறுத்தம் என்ற ஆயுதமே உதவியது.

வெட்டப்பட்ட மரமும் – எரிக்கப்பட்ட பந்தலும்:

ஆலைக்கு எதிரில் 100 அடி தூரத்தில் இரண்டு பெரிய வேப்பமரங்கள் இருந்தது. தொழிலாளர்களை ஆலை வாயிலில் சந்திக்க மிக வசதியாக இருந்தது. முதலில் ஒருமுறை நடந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் அந்த மரத்தின் நிழலிலேயே அமர்ந்து போராடினர். அப்போது இரண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 10 மாதம் கழித்து இரண்டாவது வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட போது, நிர்வாகம் செய்த முதல்பணி, அந்த இரண்டு மரங்களையும் வெட்டுவது என்பதாகும். ஒருமரத்தை முழுமையாக வெட்டிய நிலையில் மரத்தின் சொந்தக்காரர், மற்றும் அந்த நிலத்தின் உரிமையாளர், தனது எதிர்ப்பை தெரிவித்து, ரூ 50 ஆயிரம் இழப்பீட்டைப் பெற்றுள்ளார்.

வெண்மணி அக்னி குண்டம், அரசுகளின் துப்பாக்கிச் சூடு, கைது, கைவிலங்கு என பல தாக்குதல்களைச் செங்கொடி இயக்கம் சந்தித்துள்ளது. ஆனால் பச்சை மரத்தை வெட்டி, போராட்டத்திற்கு இடையூறு செய்ததை கேள்விப்பட்டதில்லை. கொரிய முதலாளி தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்தால் உட்காருவதற்கு நிழல் தரும் மரம், தொழிற்சாலைக்கு எதிரே இருக்கக் கூடாது, என முடிவு செய்தார். முதலாளித்துவ வக்கிரத்தின், மிருகத் தாக்குதல் என்பதன் வெளிப்பாடாக அமைந்தது.

தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இது குறித்து தொழிலாளர்கள் புகார் கூறினர். கூடவே, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு தந்ததாக, தங்களுக்கு கிடைத்த தகவலையும் இணைத்துக் கூறினர். உடனே மனிதவள அதிகாரி, 50 ஆயிரம் தான் சார், என அளித்த பதில், எப்போது நினைத்தாலும் நகைப்பைத் தருகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் தங்களின் 123 நாள்கள் வேலை நிறுத்தத்தை, ஒரு மரம் மட்டுமே தந்த நிழலில் சின்னதாகப் பந்தல் அமைத்து மேற்கொண்டனர்.

அந்தப்பந்தலும் ஏப்ரல் 23 அன்று அதிகாலை 5.22 மணிக்கு எரிக்கப்பட்டதாக, ஆலை வாயிலில் உள்ள சிசிடிவி கேமரா தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு ஶ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்பொழுதும் எரித்தவர்களை கண்டறிய முடியவில்லை, என இயலாமையை காவல் துறை சொல்லிவருகிறது.

ஆதரவும், உதவிகளும்:

அரியானாவின் மானேசரில் மாருதி தொழிலாளர்கள், பொய்யான கொலை வழக்கு காரணமாக 147 தொழிலாளர்களை சிறை வைத்தது. அதில் 43 தொழிலாளர்கள் தவிர மற்றவர் பிணையில் வெளிவர, மூன்றரை ஆண்டுகள் கடந்தது. நான்கரை ஆண்டுகளுக்குப் பின் 31 பேர் அநியாயமாக தண்டிக்கப்பட்டனர். நீதிமன்றம் இந்த தொழிலாளர்களை பிணையில் விடுவித்தால், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு எப்படி சாத்தியமாகும்? என கேள்வி எழுப்பியது. பல ஆயிரம் தொழிலாளர் சம்மந்தப்பட்ட போராட்டத்தின் நிலை இது என்றால், 55 தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்கவும் வேண்டுமா?

தொழிலகப் பாதுகாப்புத் துறையை முற்றுகை இட்ட பிறகு, ஒருமாதம் முடிந்த பின்னரே, நிறுவனத்திற்கு, காண்ட் ராக்ட் லைசன்ஸை ஏன் ரத்து செய்யக் கூடாது? என நோட்டீஸ் அனுப்பியது. கொரியத் தூதரகத்தை முற்றுகை செய்ததும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காலவரையற்ற பட்டினிப் போரைத் துவக்கியதும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஓரளவு நிர்பந்தமாக அமைந்தது. அதுவே 123 நாள் வேலைநிறுத்தத்தை, முடிக்கவும் உதவியது.

தொழிற்பேட்டையின், மனிதவள அதிகாரிகளுக்கும், பன்னாட்டு நிறுவன நிர்வாகங்களுக்கும், அச்சமூட்டிய ஒரு செயலும், இப்போராட்டத்தில் இருந்தது. அது 55 தொழிலாளர்களுக்கு ஆதரவாக பலநூறு தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் ஆகும். போராட்ட நிதியை 10 க்கும் மேற்பட்ட ஆலைத் தொழிலாளர்கள், தாரளமாக தந்தனர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு போராட்டத்தையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சுவரொட்டிகளையும் வெளியிட்டது. ஃபாக்ஸ்கான் போராட்டத்திற்கு பின் இத்தகைய சகோதரத்துவத்தை, ஶ்ரீபெரும்புதூர் பகுதி கண்டது. குறிப்பாக, பட்டினிப் போருக்கு ஆதரவாக, தொழிலகங்களில் தொழிலாளர் உணவுப் புறக்கணிப்பு நடத்தலாமா? என சமூக வலைத்தளத்தில் விவாதித்தது, மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு அச்சத்தை அதிக படுத்தியது.

200காண்ட் ராக்ட் தொழிலாளர்கள் சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றால், முதல் 5 தினங்களிலேயே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் உள்ளூர் பிரமுகர்கள், சமூக அச்சத்தை பல்வேறு. வகையில் உருவாக்கி வைத்துள்ள பிரபலங்கள் காண்ட்ராக்ட் உரிமையாளர்கள் எனும்போது, அரசு அதிகாரியே அஞ்சியதைக் காணமுடிந்தது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, தொழிலகப்பாதுகாப்பு அதிகாரியிடம், “பன்னாட்டு நிறுவனங்களை அரசு சிரமப்பட்டு அழைத்து வந்தால், ஒரு நோட்டிஸ் மூலம் விரட்டுவீங்களா? “, எனக் கேட்டுள்ளார். ஆனாலும் இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றதற்கு முக்கியம் காரணம், நேச சக்திகளின் ஆதரவு கரங்களே.

அனைத்தும் சட்ட மீறல் என்பதற்கான உதாரணங்களே, மேற்குறிப்பிட்ட விவரம். போதாக்குறைக்கு, நிர்வாகம் நீதிமன்றத்தீர்ப்பையும், எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு, என மதிக்காத போக்கைக் கையாண்டது. பன்னாட்டு நிறுவங்களின் மூலதனப் பெட்டிக்குள், பணம் மட்டும் இல்லை, சட்டங்களை உடைக்கவும், வளைக்கவுமான ஆயுதங்களையும் கொண்டுள்ளது, என்பதை உணர முடிந்தது. மாநில அரசு பலவீனமாக உள்ளது, எனவே பணிந்து விடும் என கருதலாகாது. அரசுகள் பொம்மையாக இருந்தாலும் ஆட்டுவிப்பது, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிந்தது.

இத்தனை அடக்குமுறைகளும் தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்தின் முன் தோற்றது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐந்து சங்க நிர்வாகிகளை, ஒருவார சஸ்பெண்ட் என்ற தண்டனையுடன், மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்தது. 23 மாதங்கள் கழித்து இந்த ஐந்து தோழர்களும் ஆலைக்குள் வேலைக்காக சென்றுள்ளனர். இதுவரை ஆண்டு சம்பள உயர்வாக 500, 600 ரூபாய்களாக இருந்த நிலை, 2100 முதல் 3100 வரை உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் காலத்தில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெரும் வெற்றி இந்தப்போராட்டம்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.