விவசாயிகளுக்கு ஆதரவளித்த பிரிக்கால் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கல் – 65 லட்சம் ரூபாய் ஊதியம் பிடித்தம்

மத்திய மாநில அரசுகளின் கொள்கையினாலும், வறட்சியினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தெருவில் இறங்கி தமிழ்நாட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் ஏப்ரல் 25 அன்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுத் துறை தொழிலாளர்கள் என பலதரப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் கலந்து கொண்டனர். கோவையில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். இதற்காக அவர்கள் முன் கூட்டியே நிறுவனத்திடம் அறிவிப்பும் செய்தும் நிர்வாகம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்காக 8 நாள் ஊதியத்தை பிடித்துள்ளது. வேலை நிறுத்தம் செய்த 840 தொழிலாளர்களின் 8 நாள் ஊதியப் பிடித்தம் ரூ65 லட்சம் ஆகும்.

Comrades fasting in Coimbatore

இதை எதிர்த்து தொழிலாளர்கள் தொழிலாளர் துறையிடம் முறையிட்டும, எந்த பலனும் கிடைக்காத நிலையில் கோவையிலும் சென்னையிலும் 12 பிரிக்கால் தொழிலாளர்களும் 10 ஆதரவாளர்களும் ஜுன் 19 முதல் கடந்த 5 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்:

  • தொழிற்தாவா சட்டம் பிரிவு 10(1)ன் கீழ் தொழிலாளர்களின் 8 நாள் ஊதியப் பிடிப்பு நடவடிக்கை எவ்வாறு நியாயமாகும் என்பதை விசாரிப்பதற்கு, தொழிலாளர் துறையில் உள்ள வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்.
  • விசாரணை முடியும் வரை தொழிற்தாவா சட்டம் பிரவு 10(B)ன் கீழ் 8 நாள் ஊதியம் முன்பணமாக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

ஜுன் 21 அன்று காலவரையற்ற உண்ணாவிரதத்தால் ஒரு தொழிலாளர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் இடதுசாரி ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு இணையதள மனுப் பிரச்சாரத்தையும் தொழிற்சங்கம் மேற்கொண்டுள்ளது.

பிரிக்கால் நிறுவனம் பல்வேறு ஆட்டோ பாகங்களை தயாரித்து வரும் நிறுவனம் ஆகும். ஏஐசிசிடியுவின் தகவல் படி, இக்குழுமத்தின் வருவாய் ரூ1237 கோடியாகும். இதை ரூ3000கோடியாக உயர்த்த நிறுவனம் முயற்சித்து வருகிறது. உலகில் பல்வேறு பகுதிகளில் வளர்ந்து வரும் இந்நிறுவனம் தனது கோவை தொழிற்சாலையில் தொழிலாளர்களுடன் விரோத உறவையே மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலையில் 1350 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளனர். நிர்வாகம் 800க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை சமீபத்தில் பணியில் அமர்த்தியுள்ளது.

தொழிற்சாலையில் ஏஐசிசிடியுவுடன் இணைந்த கோவை மாவட்ட பிரிக்கால் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க நிர்வாகம் மறுத்து 100க்கும் மேலானத் தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. 2009ல் மேலாளர் ஒருவரின் இறப்பிற்கு 25 தொழிலாளர்கள் மீதும் 2 தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் கொலைக்குற்றம் மட்டும் கொலைத்திட்டம் தீட்டியதாக நிர்வாகம் மற்றும் அரசு குற்றம் சாட்டி அவர்கள் கைது செய்யப்பட்டனர். 8 வருடங்களுக்கு பின்னர் 2 தொழிலாளர்களை தவிர மற்ற அனைவர் மீதும் எந்த ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின் 25 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிறையில் உள்ள இரு தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கம் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதற்குப் பின்னர், தொழிற்சங்கத்தை அங்கீகரித்து நிர்வாகம் 2012லும் 2014லும் ஊதிய ஒப்பந்தங்களை கையெழுத்திட்டும், தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் உள்ள உறவு சுமூகமாக இல்லை. விவசாயிகள் பிரச்சனையில் முறையாக வேலைநிறுத்தத்தை அறிவித்தும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க மறுக்கும் நிர்வாகத்தின் நடவடிக்கை தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையாகத் தொழிலாளர்களால் காணப்படுகிறது.

ஜுன் 19 அன்று சென்னையில் இருந்து காணொளி மூலம் முன்னாள் நீதிபதி ஹரிப்பரந்தாமன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சென்னையிலும் கோவையிலும் துவக்கி வைத்தார். 8 நாள் ஊதியப் பிடித்தத்தின் சட்ட வரலாறை தொழிலாளர்களுக்கு விளக்குவதற்கு பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 8 நாள் ஊதியப் பிடித்தம் ஊதியம் செலுத்துதல் சட்டத்தின்(Payment of Wages Act 1936) பிரிவு 9ல் வரைமுறை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் 1936ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு மாதா மாதம் ஊதியத்தை சரியான நேரத்தில் கொடுக்கவில்லை. சில சமயம் மாதக்கணக்கில் ஊதியம் மறுக்கப்பட்டன.

அதனால் முறையாக ஊதியம் கொடுப்பதற்கான சட்டத்தை இயற்ற மாபெரும் தொழிலாளர் போராட்டம் கட்டமைக்கப்பட்டது. தொழிலாளர்களின் நெடிய போராட்டத்திற்கு பின்னர் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்காக ஆங்கிலேய அரசு சரத்து 9யும் சேர்த்தது. நிலையாணச் சட்டம் பிரிவு 24 உடன் ஊதியம் செலுத்துதல் சட்டம் பிரிவு 9ன் கீழ் நிர்வாகத்திற்கு இவ்வாறான உரிமை வழங்கப்பட்டுள்ளது. இச்சரத்து சுதந்திர இந்தியாவில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது என்றால் நாம் எம்மாதிரியான ஜனநாயகத்தில் வாழ்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் என்று தோழர் ஹரிப்பரந்தாமன் கூறினார்.

இச்சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கான போராட்ட வடிவுகளை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டால் தான் இம்மாதிரியான நடவடிக்கைகளில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க முடியும் என அவர் கோரினார். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் போடப்பட்ட இரு வழக்குகளை அவர் நினைவு கூர்ந்தார். இரு வழக்குகளும் தொழிலாளர்களின் வாக்கு செலுத்தும் உரிமை குறித்தானவை. வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரு நிர்வாகங்களும் தொழிலாளர்கள் வாக்கு செலுத்துவதற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்காமல் இரண்டு மணி நேர அவகாசம் மட்டுமே அளித்தனர். பல ஷிப்டுகள் வந்த பிறகு வாக்குகள் செலுத்துவதற்கு விடுமுறை கொடுக்கப்படாமல் தொழிலாளர்களின் ஷிப்டுகளே மாற்றப்படுவதையும் அவர் விவரித்தார். இவ்வாறு நிறுவனங்கள் எந்த இடைவெளியும் கிடைக்காமல் தொழிலாளர்களின் உற்பத்தியை சுரண்டுகின்றன. சமீபத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 21 நாள் ஊதியத்தை பிடித்துள்ள சான்மீனா தொழிலாளர்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். சான்மீனா போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் இந்தியாவில் உள்ள சட்ட ஓட்டைகளே இவர்களுக்கு சாதகமாக உள்ளது எனத் தோழர் ஹரிப்பரந்தாமன் கூறினார்.

தொழிலாளர்களுக்கு விரோதமாக முடிவுகளை எடுக்கும் நீதிமன்ற போக்கை முன்னாள் நீதிபதி சாடினார். சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க வேண்டும் எனக் கூறிய நீதிமன்ற ஆணையைக் குறிப்பிட்ட அவர், தங்கள் நடுநிலைமையை விட்டுவிட்டு நீதிமன்றங்கள் அரசுகளுக்கு ஆலோசகர்களாக மாறிவிட்டன எனக் குறிப்பிட்டார். என்எல்சி நிறுவனத்தில் 10000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது என்எல்சி நிர்வாகம் எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க நீதிமன்றத்தை அணுகியது. அவ்வழக்கில் தீரப்பளித்த தோழர் ஹரிப்பரந்தாமன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். நிர்வாகம் மேல்முறையீடு செய்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்களுடைய பிரச்சனைகளை நீதிமன்றம் தீர்க்கும் என்று தொழிலாளர்கள் நம்பிக்கையை வளர்க்கக் கூடாது எனக் கூறிய அவர் ஒன்றுபட்ட போராட்டமே தொழிலாளர்களின் உரிமைகளை வெல்லும் எனக் கூறினார். இதற்கு ஒரு தொழிற்சாலையில் ஒரு சங்கம் தான் தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழிற்சாலையில் பல சங்கங்கள் உள்ளது நிர்வாகத்திற்கு தான் சாதகம் என்றும் அவர் குறிப்பிட்டார். முதலாளித்துவ அமைப்பின் அநீதியை களைய ‘உலகின் உழைக்கும் வர்க்கமே! ஒன்று சேர்!’ எனும் மார்க்ஸின் முழக்கத்தை நினைவு கூர்ந்தார். தொழிற்சாலைகளில் உள்ள பிரச்சனைகளை குறித்து மட்டும் தொழிலாளர்கள் போராடாமல் ஜனநாயக சமூகத்தை நிலவ தொழிலாளர்கள் பாடுபட வேண்டும் என அவர் கோரினார்.

காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களும் ஆதரவாளர்களும் உற்சாகமாக உள்ளதாக, பிரிக்காலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளரும் தொழிற்சங்கப் பிரதிநிதியும் ஆன தோழர் ஜெயப்பிரகாஷ் கூறினார். உண்ணாவிரதத்தின் 3ம் நாளில் ஒரு தொழிலாளருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜுன் 20 அன்று ஏஐசிசிடியு தொழிலாளர்கள் ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தினர். ஐடி தொழிலாளர்களின் மன்றம் (FITE) கோவையில் உண்ணாவிரதப் போராட்ட வீரர்களை சந்தித்தனர். ஜுன் 22 அன்று அனைத்து தொழிற்சங்கக் கூட்டம் சென்னை ஏஐசிசிடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் AITUC, CITU, WPTUC, NTUI, UWF, LPF, MLF, MRF தொழிற்சங்கம், Simpsons தொழிற்சங்கம் மற்றும் இதர சங்கங்கள் கூடி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

This entry was posted in Automobile Industry, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.