மாருதி சப்ளையர் அஹ்ரெஸ்டி தொழிற்சாலையில் காவல்துறையையும் பவுன்சர்களையும் வைத்து தொழிலாளர்கள் மீது அடக்குமுறை

குர்காவ்-மாநேசர்-பாவல்-டாபுகேரா தொழிற்பேட்டை பகுதிகளில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான புதிய வகையான அடக்குமுறை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. மாருதியின் முக்கிய உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான அஹ்ரெஸ்டியின் தொழிலாளர்கள் இதற்கான சமீபத்திய பலிகடாக்கள் ஆவர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அஹ்ரெஸ்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக சங்கம் அமைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர். அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடாமல், மாறாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கொல்வோம் என நிர்வாகம் மிரட்டி வருகிறது. தொழிலாளர்கள் மிரட்டலால் அஞ்சவில்லை என்று உணர்ந்த நிர்வாகம் தொழிற்சங்கத் துணைத் தலைவர் தோழர் சோம்நாத் என்பவரை ரௌடிகளை கொண்டு அடித்துள்ளனர். ஜுன் 11 ம் தேதி சோம்நாத் தொழி;ற்சாலைக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது தாக்கப்பட்டுள்ளார். அவருடைய இரு கால்களையும் உடைத்து ஒரு கையையும் உடைத்துள்ளனர் நிர்வாகத் தரப்பு ரௌடிகள். அவருடைய தலையில் பலத்த காயம் பட்டு 16 தையல்கள் போட வேண்டியிருந்தது.

சோம்நாத் மேல் நடந்த தாக்குதல் குறித்து உள்ளுர் காவல் நிலையத்தில் தொழிலாளர்கள் குற்ற அறிக்கை பதிவு செய்தும் 10 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தனர். ஜுன் 21 முதல் தொழிற்சாலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு தொழிலாளர் துறை தலையிட்டு நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்தது.

ஜுன் 24 அன்று அஹ்ரெஸ்டி நிர்வாகத்தின் கோரிக்கைக்கு இணங்கி காவல்துறை தொழிற்சாலைக்குள் நுழைந்து தொழிலாளர்கள் மீது பலத்த தடியடி நடத்தியது. பிப்ரவரியில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய 104 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஹோண்டா தொழிலாளர்கள் மீதும் காவல்துறை தடியடி நடத்தியதை இங்கு நினைவு கூர்கிறோம். ஹோண்டா தொழிற்சாலையில் நடந்தது போலவே பொய் வழக்குகளும் தீவிரக் குற்றச்சாட்டு வழக்குகளும் தொழிலாளர்கள் மீது பதியப்பட்டுள்ளன. இத்தொழிலாளர்களுக்கு 30 ஜுன் அன்றே பிணை கொடுக்கப்பட்டது.

தற்போது 159 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து அவர்களுக்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்து நிர்வாகம் தடையின்றி உற்பத்தியை தொடர்கிறது. தொழிற்சாலையில் பலத்த காவலும் தனியார் பவுன்சர்களும் போடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலின் அருகில் சென்று போராட முடியவில்லை. தொழிற்சங்க உறுப்பினர்கள் தவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 4ல் இருந்து தொழிலாளர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜுலை 5ல் இருந்து மீண்டும் போராட்டத்தை தொடர தொழிலாளர்கள் உறுதியேற்றுள்ளனர்.

2016 ஹோண்டா வேலை நிறுத்தத்திற்கு பின்னர், உள்ளுர் நிர்வாகம், தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் காவல்துறை தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை தொடுப்பதில் ஒன்றிணைந்துள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. வேலை நிறுத்தத்திற்கும் போராட்டத்திற்கும் தொழிலாளர்களுக்கு இருந்த கட்டமைப்புகள் முறியடிக்கப்பட்டு விட்டன. முதலாளிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு உள்ளிருப்பு போராட்டங்களை ஒடுக்குவதற்கு காவல்துறை தயாராக உள்ளனர். நீதிமன்றமும் தொழிலாளர்கள் போராட்டம் செய்வதற்கு தடை விதித்து ஆணையிடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. இதனால் தொழிற்சாலை வாயிலின் முன்னர் போராட்டங்கள் நடத்துவது சாத்தியம் இல்லாமல் செல்கிறது.

முக்கியமாக எத்தனை நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் உற்பத்தி தங்கு தடையின்றி நடக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் தொழிலாளர்கள் நீக்குவதற்கான சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. மேலும் வேலையின்மையினால் உபரித் தொழிலாளர்களும் அதிகமாகி விட்டனர். மாருதி போன்ற தொழிற்சாலைகளில் 7 மாதங்களுக்கு மட்டும் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு எப்போதும் பயிற்சியளிக்கப்பட்ட உபரித் தொழிலாளர்கள் இருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வேலை நிறுத்தங்களின் தாக்கம் குறைந்து வருகிறது. உற்பத்தியை நிறுத்தும் வகையில் புதிய வடிவப் போராட்டங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதற்கான யுக்திகளை தொழிற்சங்கங்கள் ஆராய வேண்டியுள்ளது.

 

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.