பிரிக்கால் தொழிலாளர் பிரச்சனை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு சென்றது,  தொழிலாளர்களின் 16 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

விவசாயிகள் பிரச்சனைக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக பிரிக்கால் நிர்வாகம் சுமார் 840 தொழிலாளர்களின் 8 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. இது குறித்து எழுப்பப்பட்ட வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பக் கோரி ஜுன் 19 முதல் பிரிக்கால் தொழிலாளர்களும் ஆதரவாளர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். சென்னை தலைமையகமும் இரு நாட்கள் முற்றுகையிடப்பட்டன. இதன் விளைவாக ஜுலை 3 அன்று தொழிலாளர் துறை அமைச்சருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிலாளர்களின் வழக்ளை நீதிமன்றத்திற்கு அனுப்ப மாநில அரசு ஒத்துக் கொண்டது. அதற்கான அரசாணை ஜுலை 5 ல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஜுலை 4 ஆம் தேதி தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.

ஜுன் 19ல் உண்ணாவிரதம் ஆரம்பிக்கபட்டவுடன் அரசு எப்போதும் போல் போராட்டத்தை புறக்கணித்து வந்தது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலவிதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஜுன் 29 அன்றும் ஜுலை 3 அன்றும் AICCTU, AIARLA, DAA மற்றும் RYA அமைப்புகளின் போராளிகள் மற்றும் தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டனர். மத்திய தொழிற்சங்கங்களும், கட்சி சார்பற்ற தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கூட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர். இவ்வகையான பல்வேறு போராட்டங்கள் அரசின் கவனைத்தை ஈர்த்தது. இதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் காபில் மற்றும் தொழிலாளர் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் கோரிக்கையை நீதிமன்றத்தின் வாயிலாக தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். ஜுலை 5 அன்று வெளியிட்ட அரசாணையில் தொழிலாளர் துறை இரு கேள்விகளை வைத்து நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளது:
1. 25.4.2017 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக தொழிலாளர்களின் 8 நாட்கள் சம்பளத்தை பிரிக்கால் லிமிடெட் பிளான்ட்-1 மற்றும் பிளான்ட்-3 நிர்வாகங்கள் பிடித்தம் செய்துள்ளது நியாயமானது தானா? இல்லையெனில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் என்ன?
2. எழுவினா-1ன் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டு, 8 நாள் சம்பளத்தை பிரிக்கால் லிமிடெட் ப்ளான்ட்-1 மற்றும் ப்ளான்ட்-3 நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்க இடைக்கால தீர்வம்(INTERIM AWARDS) பிறப்பிக்க வேண்டுமென்ற தொழிற்சங்கக் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் என்ன?

தொழிலாளர்கள் இந்நடவடிக்கையினால் உற்சாகமடைந்துள்ளதாக ஏஐசிசிடியு கோவை மாவட்டத் தலைவர் தோழர் நடராஜன் கூறினார். ஜுலை 7 அன்று பிரிக்கால் நிர்வாகம் கோவையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ் இந்துவில் இது குறித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் வேலை நிறுத்தத்திற்கு பதிலாக தொழிலாளர்கள் வேலை செய்து ஒரு நாள் ஊதியத்தை தர முன்வந்தால் அதற்கு ஈடாக நிர்வாகமும் பணம் செலுத்தி விவசாயிகளுக்கு கொடுக்கும் திட்டத்தை நிர்வாகம் முன்வைத்ததாகவும் ஆனாலும் தொழிற்சங்கம் இதை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் வேலை நிறுத்த அறிவிக்கை போதிய அவகாசத்துடன் கொடுக்கப்படவில்லை என்றும் நிர்வாகப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

நிர்வாகத்தின் கூற்றுக்கு பதிலளிக்கையில் விவசாயிகள் பிரச்சனைக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதியதால் தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து முடிவு செய்த தேதியில் வேலை நிறுத்தம் நடத்த வேண்டியிருந்தது என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறினர். நிர்வாகத்தின் மனப்பான்மை குறித்தும் தொழிற்சங்கங்களின் பல அமைப்பு பிரதிநிதிகள் சாடியுள்ளனர். விவசாயிகள் தங்கள் பிரச்சனைக்கு பணம் பிச்சை கேட்கவில்லை என்றும் அவர்கள் கோருவது முறையான தீர்வு அதற்கு பணம் கொடுப்பது தீர்வாகது என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றால், கோவையில் இருந்து தொழிற்சாலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை குறித்து நிர்வாகம் யோசிக்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்ற. நிர்வாகத்தின் இந்த பேச்சு தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான வேலைநிறுத்த உரிமையை பறிப்பதாகவே உள்ளது. நிர்வாகத்தின் பணிகள் தொழிலாளர்களை அச்சுறுத்துவதாக உள்ளன என்ற தொழிற்சங்க வாதத்தை இது உறுதி செய்கின்றது.

This entry was posted in Automobile Industry, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.