குர்காவ் தொகுப்புகள்: ஆட்டோமாக்ஸ் தொழிற்சாலை மூடுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம், அய்சின் தொழிலாளர்களின் தொடரும் போராட்டம்

ஹரியானா தாருஹேரா பகுதியில் உள்ள ஓமாக்ஸ் தொழிற்சாலையில் அஜய் பாண்டே எனும் 35 வயது ஒப்பந்தத் தொழிலாளர் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி எழுதியிருந்தோம்.15 வருடங்களுக்கும் மேலாக பணிபுரந்து வந்த 388 ஒப்பந்தத் தொழிலாளர்களை ஓமாக்ஸ் நிர்வாகம் பணியை விட்டு நீக்கியதனால் பிப்ரவரி 13 அன்று அஜய் தற்கொலை செய்தார். தங்களுடைய பணிக்காக ஓமாக்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கையில், ஓமாக்ஸ் நிறுவனம் ஆட்டோமாக்ஸ் எனும் தனது இன்னொரு தொழிற்சாலையை திடீரென்று மூடியுள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

ஜே.கே.மெஹ்தா என்ற முதலாளியின் கீழ் ஓமாக்ஸ், ஆட்டோமாக்ஸ் மற்றும் ஸ்பீடோமாக்ஸ் எனும் மூன்று நிறுவனங்கள் மாருதி சுசூகி, ஹோண்டா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வருகிறது. குர்காவில் இவர்களுக்கு 6 தொழிற்சாலைகளும், இந்தியா முழுவதும் 10 தொழிற்சாலைகளும் உள்ளன. ஆட்டோமாக்ஸ் தொழிற்சாலையில் ரயில்வே பிரிவு, ட்ராக்டர் பிரிவு, ஹீரோ பிரிவு, ஹோண்டா பிரிவு போன்ற பிரிவுகள் உள்ளன. அவர்கள் ஆக்சில், கவரிங், ஃப்ரேம், மற்றும் என்ஜின் பாகங்களை தயாரிக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களாக பினோலாவில் உள்ள ஆட்டோமாக்ஸ் நிர்வாகம் பாவாலில் உள்ள ஓமாக்ஸ் நிர்வாகத்திற்கு இயந்திரங்களை மாற்றி வருகிறது. ஜுன் 26 அன்று ஆட்டோமாக்ஸ் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சென்ற போது, தொழிற்சாலை வாயிலில் ஒரு அறிவிக்கை ஒட்டப்பட்டிருந்தது. அதில் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதாக கூறப்பட்டிருந்தது. 1985ல் இருந்து 20 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்த தொழிலாளர்கள் திடீரென்று பணியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். 2010ல் இருந்து தொழிற்சாலையில் ஒரு தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. நிர்வாகம் தொழிலாளர்களுக்கோ தொழிற்சங்கத்திற்கோ எந்த முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. மே மாதத்தில் போதுமான உற்பத்தி தேவையில்லை என்று 150 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானதாகும். தொழிற்சங்கம் அமைத்ததாலே தொழிற்சாலையை மூடியுள்ளதாக அனைவரும் கருதினர். தொழிற்சாலை மூடப்பட்டு அனைத்து நிரந்தரத் தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்பட்டாலும் தொழிற்சாலையில் ரயில்வே பிரிவு இன்னும் பணிபுரிகின்றது(தமிழ்நாட்டில் க்ரீவ்ஸ் காட்டன் தொழிற்சாலையில் இதே நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது). இப்பிரிவிற்காக புதியத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜுன் 23 அன்று தொழிலாளர்கள் கடைசியாக தொழிற்சாலையில் பணிபுரிந்தனர். 24 மற்றும் 25ம் தேதி விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் திரும்பி வ்நத போது (இன்டெக்ரா தொழிற்சாலையில் நடந்தது போலவே) தொழிற்சாலையை நிர்வாகம் மூடிவிட்டது. தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்கள் இந்நடவடிக்கையை எதிர்த்து நிர்வாகம் சட்டரீதியாக செயல்பட்டதற்கான ஆதாரங்களை கோரிய போது, நிர்வாகம் காவல்துறையை அழைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கியுள்ளது. ஓமாக்ஸ் நிறுவனத்தின் பாக்கெட்டில் தொழிலாளர் துறையும் காவல்துறையும் செயல்பட்டு வருகின்றன என்பது தெளிவாகிறது. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தனியாகவே செயல்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் இயந்திரங்களை பவால் தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்திக் கொண்டுள்ளது. பவால் தொழி;ற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை. இயந்திரங்களை அப்புறப்படுத்துவதற்கு காவல்துறை உதவி செய்து கொண்டுள்ளது. ஆனாலும் ஜுன் 26 முதல் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை இரவும் பகலும் தொடர்ந்து வருகி;ன்றனர்.

அய்சின் தொழிலாளர்களின் போராட்டம் 70 நாட்களை கடந்துள்ளது. மே31 அன்று தொழிற்சங்கம் அமைத்தற்காக அய்சின் நிர்வாகம் காவல்துறை உதவியுடன் 800 நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கியது. 450 ஆண் தொழிலாளர்களும் 50 பெண் தொழிலாளர்களும் தொழிற்சாலை வாயிலில் இருந்து 400 மீட்டருக்கு அப்பால் போராட்டம் செய்து வருகின்றனர். கடும் வெயிலில் போதிய குடிநீர் வசதியில்லாமல் கழிப்பிடம் இல்லாமல் அவர்கள் போராடி வருகின்றனர். அய்சின் நிர்வாகம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. ஆட்டோமாக்ஸ் போலவே தொழிலாளர் துறையும் மற்றும் உள்ளுர் அரசு நிர்வாகங்களும் முதலாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தங்கள் போராட்டத்தை தொடர்வதென அய்சின் தொழிற்சங்கம் உறுதியாக உள்ளது.

குர்காவ்-தாருஹேரா-மாநேசர்-பவால் ஆட்டோமொபைல் தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் புதிய கட்டத்தை அடைந்துள்ளன. நிலையற்ற வேலைவாய்ப்புகள், வேலையில்லா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிலாளர் சட்டங்கள் எதுவும் செயல்படாது இருப்பது, தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தி இன்னொரு பகுதிக்கு மாற்றுவது எனப் பல்வேறு பிரச்சனைகளால் தொழிலாளர்களின் போராட்டங்கள் தோல்வியடைந்து வருகின்றன. முதலாளிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு புதுவகையான யுக்திகளை புரட்சிகர அமைப்புகள் சிந்திக்க வேண்டியுள்ளது.

This entry was posted in Automobile Industry, Contract Workers, Factory Workers, Lock out/Closure, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , . Bookmark the permalink.