மாருதி தொழிலாளர் போராட்டம் ஐந்து ஆண்டுகள் நிறைவு: முக்கியத்துவமும் தாக்கமும்

தொழிற்சங்கம் அமைக்கக் கோரியும் தொழிலாளர்கள் முறையான பணி கோரியும் நடைபெற்ற மாருதி தொழிலாளர்கள் போராட்டம் 2012 ஜுலை 18 அன்று உச்சகட்டத்தை அடைந்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில் தொழிலாளர்களின் நலன் கோரிய ஒரு மனித வள மேலாளர் இறந்தார். 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 117 தொழிலாளர்கள் 4 வருட சிறைவாசத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 2500 தொழிலாளர்களை நிறுவனம் சட்;டவிரோதமாக பணியில் இருந்து நீக்கியது. 12 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட 13 தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

RAlly to Mark 5th Anniversary of Maruti Struggle

பேரணி

மாருதி போராட்டத்தின் 5ஆம் ஆண்டு நிறைவை நினைவூட்டும் வகையில் குர்காவ் பகுதியில் ராஜிவ் சௌக்கில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை தொழிலாளர்கள் மாருதி சுசுகி தொழிற்சங்கத்தின் தலைமையில் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் மாருதியின் நான்கு தொழிற்சாலைகள், குர்காவ் மற்றும் தாருஹேராவில் உள்ள ஹோண்டா தொழிற்சாலைகள், ஹீரோ, அய்சின், அஹ்ரெஸ்டி, பெல்சோனிகா, டாய்கின், ரிக்கோ, நெரோலாக், யூனிப்ராடக்ட்ஸ், மார்க் எக்சாஸ்ட்ஸ், காரியர் மற்றும் தொழிலாளர் ஒற்றுமை மையம், இன்குலாப் மஸ்தூர் கேந்த்ரா, ஜன சங்கர்ஷ் மஞ்ச் (ஹரியானா), பிகுல் மஸ்தூர் தாஸ்தா, ஷ்ரமிக் சங்க்ரம் சமிதி மற்றும் என்.டி.யு.ஐ போன்ற புரட்சிகரத் தொழிற்சங்கங்களும், மத்தியத் தொழிற்சங்கங்களும் பங்கேற்றனர். பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறையில் உள்ள மாருதி தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரவும், அவர்களுடைய குடும்பங்களுக்கு நீதி திரட்டவும் வேண்டிய தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நிதி ஆதரவு

சிறையில் உள்ளத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அவர்களுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ75000 நிதி உதவி செய்ய சன்பீம் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. மாருதி சுசுகி தொழிலாளர்கள் தலா ரூ5000(மொத்தம் 80 லட்ச ரூபாய்) தர உறுதியேற்றுள்ளனர். ஏற்கனவே மாருதி சுசுகி குர்காவ் தொழிற்சங்கம் 20 லட்ச ருபாய் உதவி செய்துள்ளனர். பெல்சோனிகா போன்று மற்ற தொழிற்சங்கங்கள் நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். மாருதி போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து முன்னிலை வகிக்கும் தற்காலிகக் குழு நிதி உதவி மட்டும் போதாது போராட்டத்தில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினர். தொழிற்சங்கங்களின் ஒற்றுமையும் அமைப்பும் தொழிலாளர்களின் முக்கிய பலமாகும். இப்பகுதியில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற பகுதிவாரியான தொழிற்சங்க ஒற்றுமை முக்கியமாகும்.

Workers from various factories in the DMIC belt participate

போராட்டம் கற்றுத் தரும் பாடம்

இந்தியாவில் தலைவிரித்தாடும் நவீன தாராளமய தொழில்முறை சுரண்டலை கட்டவிழ்த்துள்ள அரசை எதிர்த்து மாருதி சுசுகி தொழிலாளர்களின் உச்சகட்ட போராட்டம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஆர்.சி பார்கவா இது ஒரு வர்க்கப் போர் என இந்நிகழ்வை வர்ணித்தார். ஹரியானா மாநில அரசு இதை சிந்தனையற்ற வன்முறை என்று குறிப்பிட்டுள்ளது. ஆட்டொமொபைல் துறையில் குறிப்பாக தில்லி-மும்பை இன்டஸ்டிரியல் காரிடார் (டிஎம்ஐசி)யில் நடைபெறும் தொழிலாளர் வர்க்க போராட்டத்தில் இது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

சிறையில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் (இன்னும் 13 தொழிலாளர்கள் சிறையில் உள்ளனர்) மாருதி தொழிலாளர்களின் நெடிய நீதிமன்ற போராட்டத்தின் காலத்தில், சமூகத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை நம்மை பின்னோக்கி கொண்டு செல்கின்றன. இந்துத்துவ-பாசிச கொள்கையை முன்னிறுத்தும் அரசியல் அமைப்புகள் வெகு வேகமாக வளர்ந்து ஆட்சியை கைபிடித்துள்ளன. மத சிறுபான்மையாளர்கள், விவசாயிகள், அனைத்து மத தொழிலாளர்கள் ஆகியோரை ஒடுக்கி பிரமிட் போல ஒரு இந்து சாதிய சமூகத்தை அவர்கள் கட்டுவதற்கு முயற்சிகள் செய்து வருகின்றனர். இதில் நவீன தாராளமய முதலாளித்துவத்தை ஆதரித்து தொழிலாளர் நலன்களையும், சட்டப் பாதுகாப்புகளை பறிப்பதும் அவர்களுடைய நோக்கமாகும்.

தில்லி-மும்பய் இன்டஸ்ட்ரியல் காரிடாரில் தொழிலாளர்கள் சுரண்டல்முறைக்கு எதிராகவும் தங்கள் உரிமைக்காகவும் தினமும் போராடுகின்றனர். ஷாப் ப்ளோரில் அவமானம், மனிதாபிமானமற்ற பணி முறைகள், வேலை இழப்பு, போராடும் தொழிலாளர்களை கைது செய்வது, காவல்துறையின் ஒடுக்குமுறை அதிகரித்து ஒரு புதிய தொழில்நிலைமையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் தேசிய அளவுப் போராட்டங்களையும், சர்வாதிகார தொழிலாளர் விரோத அரசோடு பேச்சுவார்த்தைகளையும் நம்பி வருகின்றன. அடித்தளத்தில் தொழிலாளர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தாலும், அரசின் உதவியோடு ஒடுக்கும் நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்கு அவை போதுமானதாக இல்லை.

மாருதி தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை போராட்டமும், நிரந்தர-ஒப்பந்தத் தொழிலாளர்களின் மத்தியில் ஏற்பட்ட ஒற்றுமையும், புரட்சிகர தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் துருவமாகும். தங்களுடைய ஒற்றுமையை குலைப்பதற்கும், தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கும் நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை மீறி தொழிலாளர்கள் மாருதி சுசுகி தொழிற்சங்கத்தை அமைத்தனர். முதலாளிகள் நிரந்தரம்-ஒப்பந்தம், ஊழியர்-பயிற்சியாளர், மதம், இனம், பகுதி எனப் பல்வேறு பிரிவினைகளை பயன்படுத்தியதை மீறி வர்க்க சமூக அடிப்படையில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்தனர். தொழிற்சாலையை முற்றுகையிட்டு உற்பத்தியை நிறுத்தியதன் மூலம், நிர்வாகத்தின் உண்மையான பயத்தை அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர். பல்வேறு மாணவர், வெகுஜனம் ஆகிய முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து தொழிலாளர்களின் தலைமையில் போராட செய்து ஒரு இயக்கத்தையும் மாருதி போராட்டம் கட்டியமைத்தது.

ஆனால் மாருதி சுசுகி போராட்டத்திற்கு பின்னர வெடித்த பலத் தொழிலாளர்கள் போராட்டங்கள் பல்வேறு காரணங்களால் வெற்றி பெறவில்லை. ஹோண்டா தொழிலாளர்கள், ஒமாக்ஸ், ஆட்டோமாக்ஸ், அய்சின் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி செல்கின்றனர். பெல்சோனிகா தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக அமைத்து அதை மட்டும் வெற்றியாக கருதாமல் அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். மாருதி தொழிலாளர்கள் இயக்கத்தின் வெற்றிகளும் தோல்விகளும் தியாகங்களும் வீண் போகாது என நம்புகிறோம். சமூகத்தை மாற்றியமைத்து பாசிச-நவீன தாராளமய பிஜேபி-ஆர்எஸ்எஸ் சக்திகளை வென்றெடுக்கும் பணியில் தொழிலாளர் வர்க்கம் தனது கடைமைகளையும், பங்கையும் அடையாளம் காண வேண்டும்.

 

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.