ஜேகே டயர்ஸ் தொழிற்சாலையில் தொழிற்சங்க அங்கீகாரம் கோரி சிஐடியு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மணிமங்கலம் அருகில் உள்ள ஜேகே டயர்ஸ் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த ஜுலை 24 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான தொழிற்சங்கமான சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தரம் மற்றும் பயிற்சியாளர் பிரிவுகளில் உள்ள 600க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் சிஐடியுவில் உள்ளதாகவும், பெரும்பான்மையான தொழிலாளர்களின் பிரதிநிதித்துவக் குரலான தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதை விட்டு விட்டு நிர்வாகம் தொழிற்சங்கத்தை தானே உருவாக்கி இத்தொழிற்சங்கத்துடன் ஊதிய பேரத்தை நடத்த உள்ளதாக சிஐடியு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொழிற்தாவா சட்டத்தி;ன் கீழ் எழுப்பப்பட்டுள்ள புகாரில் உள்ளிருக்கும் தொழிற்சங்கம் பெரும்பான்மை உறுப்பினர் கொண்டுள்ளதா என்பதை வாக்கெடுப்பு மூலம் அல்லது உறுப்பினர் பதிவு மூலம் நிர்வாகம் காட்ட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

பிசிஆர்(பாசஞ்சர் கார் ரேடியல்ஸ்) மற்றும் டிபிஆர்(ட்ரக் பஸ் ரேடியல்ஸ்) டயர்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக ஜேகே டயர்ஸ் உள்ளது. இதற்கு இந்தியாவின் மைசூர்(கர்னாடகா), பான்மோர்(மத்திய பிரதேசம்), லக்சர்(உத்தரகாண்ட்) மற்றும் சென்னைக்கு அருகே 6 தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர மெக்சிகோவில் 3 தொழிற்சாலைகளிலும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் 1977 இந்திய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் சர்வதேச உற்பத்தி மற்றும் நுகர்வோரின் அடிப்படையில் இன்று ஒரு பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு ஹுண்டாய், ரெனால்ட் நிசான், மஹீந்திரா, மாருதி, ஜெனரல் மோட்டர்ஸ், அஷோக் லேலன்ட், டாய்ம்லர், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து கழகம் ஆகியோர் வாடிக்கையாளர்கள் என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

2011ல் தொடங்கப்பட்டத் தழிழ்நாட்டுத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூறும் பணிநிலைமைகள் இங்குள்ள மற்றத் தொழிற்சாலைகளை போலவே உள்ளன. (குறிப்பாக இதே பிரச்சனைகளை ஒட்டி ஓரகடத்தில் உள்ள அப்போலோ தொழிற்சாலையில் ஏப்ரல் மாதத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடந்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்). இங்கு சுமார் 1500 தொழிலாளர்கள் பணிபுரிவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்களை வழிநடத்தும் சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் முத்துக்குமார் தொழிற்சாலையில் 420 நிரந்தரத் தொழிலாளர்கள், 250 தகுதிகாண் தொழிலாளர்கள் மற்றும் 250 பயிற்சியாளர்கள் பணிபுரிவதாகக் கூறினார். தொழிலாளர் துறை முன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் இத்தகவலை பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் ஆனால் அவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரியவில்லை. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் டிப்ளமோ முடித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து வந்து சில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

குறைந்த ஊதியம், உற்பத்தி அழுத்தம், தொழிற்சாலையில் போதிய வசதியின்மை மற்றும் சட்டவிரோத பணி நிலைமைகள் எனப் பல பிரச்சனைகளை தொழிலாளர்கள் சந்திக்கின்றனர். போராடும் தொழிலாளர்களின் கூற்றுப்படி, 6 வருட அனுபவம் மிக்க தொழிலாளருக்கு மாதம் ரூ16000 ஊதியம் தான் கிடைக்கிறது. இதிலும் போக்குவரத்திற்கு ரூ200, உணவிற்கு ரூ200 என நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. ஊதிய உயர்வு என்பது ரூ300 என்ற அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. உற்பத்தி இலக்குகளை அடைந்தால், உற்பத்தி நிறுத்தப்படுவதில்லை, அதற்கும் மேலே உற்பத்தி எடுக்கப்படுகிறது. முதல் ஷிப்ட் தொழிலாளர்களின் பணி 3 மணிக்கு முடிந்தாலும் அவர்கள் பொது ஷிப்ட் பணி நேரம் வரை தொழிற்சாலையில் இருக்க வேண்டும். இந்நேரத்தில் அவர்களுக்கு உற்பத்தி, பாதுகாப்பு சார்ந்த கூட்டங்கள் மற்றும் பயிற்சிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் செய்யும் இம்மிகுதி நேர வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. உணவு, இடைவெளி போன்ற வசதிகள் குறித்தும் தொழிலாளர்கள் பல குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனர்.

தொழிலாளர்கள் ஏற்கனவே தனிப்பட்ட முறையிலும் நிர்வாகக் கூட்டங்களிலும் இப்பிரச்சனைகளை எழுப்பியுள்ளனர். ஆனால் நிர்வாகம் இப்பிரச்சனைகளை புறக்கணித்தும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் எழுப்பும் தொழிலாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மாதந்தோறும் நடக்கும் நிர்வாகக் கூட்டங்களில் குடிநீர் உபயோகம் போன்ற நிர்வாகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசப்படுகின்றனவே தவிர தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சனைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இத்தொழிற்சாலையில் தொழிற்சங்கம் கட்டும் பணி சிஐடியுடன் சேர்ந்து 2017 மே மாதத்தில் தொடங்கப்பட்டதாக தோழர் முத்துக்குமார் கூறுகிறார். சிஐடியு சங்கம் கட்டும் பணியை செய்து வந்த போது, நிர்வாகம் அதை அறிந்து தனக்கு சாதகமான சங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார். சிஐடியுவில் இணைந்த சில நிரந்தரத் தொழிலாளர்களை மிரட்டி தனது தொழிற்சங்கத்தில் பிரதிநிதிகளாக்கி உள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார். மேலும் சிஐடியுவில் உள்ள தொழிலாளர் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியும், வேறு துறைகளுக்கு மாற்றியும் பழிவாங்குவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனை தடுப்பதற்கு நிர்வாகம் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கடைபிடிப்பதாக சிஐடியு தொழிற்தாவா சட்டத்;தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் நிர்வாகத்தின் போக்கு மாறாமல் உள்ளதால் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு அரசு நிர்வாகத்தை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று சிஐடியு பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சுமார் 600 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தோழர் முத்துக்குமார கூறுகிறார். உற்பத்தியை தொடர நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் தொழிற்சாலையிலேயே தங்க வைத்து அவர்களை பல மணிநேரம் பணிபுரிய வைப்பதாகவும், இது ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் சட்டத்திற்கும் புறம்பானது என்றும் இது குறித்து தொழிலாளர் கண்காணிப்பகத்திற்கு புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தொழிலாளர் துறை முன் நடந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுக் கொள்ளலாம் என்றும் ஆனால் தொழிற்சாலைக்கு வெளியே செல்லும் பொருட்களை நிறுத்தக் கூடாது எனக் கோரியுள்ளதாகவும் அதற்கு முடிக்கப்பட்ட சரக்குகளை மட்டுமே எடுத்து செலல வேண்டும் என்றும் பாதியாக முடிக்கப்பட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என சிஐடியு நிபந்தனை விதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர் துறையின் கீழ் பல் வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தும், தொழிலாளர் துறை ஆணையகம் நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க அறிவுரை கூறியும், நிர்வாகம் மறுத்து வருவதாக தோழர் முத்துக்குமார் கூறினார். தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனில் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். மைசூர் தொழிற்சாலையில் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்துடன் இது குறித்து சிஐடியு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேசி வருவதாகவும், மைசூர் தொழிற்சங்கம் நிர்வாகத்திடம் இது குறித்து வினா எழுப்புவதாக கூறியுள்ளதாகவும் தோழர் முத்துகுமார் கூறினார்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles, தமிழ் and tagged , , . Bookmark the permalink.