ஜேகே டயர்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்க அங்கீகாரப் போராட்டம் வெற்றி

பெரும்பான்மை தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேகே டயர்ஸ் தொழிற்சாலை தொழிலாளர்கள் 2017 ஜுலை 24 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ள சங்கத்தை முறையாக தேர்ந்தெடுக்காமல் நிர்வாகம் தொழிற்சங்கம் ஒன்றை உள்ளே தொடங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 6000 தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் உள்ளனர். 17 நாட்களாக தொடர்ந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகம் பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்கவும், வேலை நிறுத்தத்தின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதாகவும் ஒத்துக் கொண்டுள்ளது.

J.k tyres Workers on Protest

ஆகஸ்ட் 2 அன்று நிர்வாகம் வேலை நிறுத்தம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமிழ்நாடு அரசு ஆணைப்படி தொழிற்சாலை ஒரு ‘பொது சேவை நிறுவனம்’ என்றும் அதனால் வேலை நிறுத்தம் செல்லாது என நிர்வாகம் அறிவித்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை 48 மணி நேரத்தில் கைவிட வேண்டும் என்றும் அல்லது அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய நிர்வாகம் தயங்காது என்றும் எச்சரித்தது. இதன் பின்னர் 27 தகுதிகாண் தொழிலாளர்களை அவர்களுடைய பணி சரியில்லை எனக்கூறி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் தோழர் கண்ணன் கூறினார். ஆனால் தங்களுடைய நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை தொடர்வது என தொழிற்சங்கமும் தொழிலாளர்களும் உறுதியேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இதர பகுதிகளில் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
தொழிலாளர்களின் உறுதி வீண்போகவில்லை. சிஐடியு தொழிற்சங்கத்துடன் கூட்டு பேர பேச்சுவார்த்தையை செப்டம்பர் 4ல் இருந்து தொடங்குவதாக நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களை ஆகஸ்ட் 21 முதல் அதே பணியில் சேர்க்கவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு போராட்டரீதியாக கிடைத்த வெற்றியாக தோழர் கண்ணன் கூறினார். தொழிலாளர்களின் உறுதியும் உற்பத்தியில் ஏற்பட்ட முடக்கமும் இப்போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்ததாக அவர் கருதினார். ஊதிய உயர்வு, 480 நாட்கள் பணிமுடித்த பயிற்சியாளர்களுக்கு பணிநிரந்தரம், காண்டின்-போக்குவரத்து போன்ற வசதிகளை மேம்படுத்துதல், அலவன்ஸ் உயர்வு, ஓவர்டைம் பணிகளை சட்டரீதியாக செயல்படுத்துதல் உள்ளிட்ட 40 கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

A. Soundarajan addressing j.K Tyres worker-photo courtesy CITU

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இதர தொழிற்பேட்டைகளில் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் தொழிற்சங்கத்திற்காக பாடுபாடும் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆட்டோமொபைல் தொழிற்சாலை பொது சேவைத் துறை எனக் கூறி தொழிலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் தொழிற்சாலைகளின் ஆதிக்கத்தை தொழிலாளர்கள் எதிர்த்துள்ளனர். தொழிலாளர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக தானே தொழிற்சங்கத்தை உருவாக்கும் நிர்வாகத்தின் போக்கையும் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர். இம்மகத்தான வெற்றியை ஒருங்கிணைத்து தொழிலாளர் வர்க்கத்திற்கான போராட்டமாக உருவாக்குவது தொழிற்சங்கங்களுக்கு முன் உள்ள சவாலாகும்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Strikes, Workers Struggles and tagged , , . Bookmark the permalink.