ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் தொழிலாளர் தற்கொலை முயற்சி

பணியிடத் துன்புறுத்தல்களால் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 17 அன்று சென்னை ஓரகடத்தில் உள்ள ஆட்டொமைபைல் தயாரிப்பாளர் ரெனால்ட் நிசான் தொழிற்சாலையில் அங்கு இருந்த சோப் எண்ணெயை குடித்து ஒரு தொழிலாளர் தற்கொலை செய்ய முயன்றார். விடுமுறை கோரி கொடுத்திருந்த அவர் விண்ணப்பத்தை கண்காணிப்பாளர் ஏற்க மறுத்ததனால் தொழிலாளர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். ‘உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்’ என கண்காணிப்பாளர் அவரை பரிகசித்ததனால் தொழிலாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தனியார் மருத்துவமனையான க்ளோபல் மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு 19ம் தேதி வரை சிகிச்சை செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

விடுமுறைக்கு அனுமதி மறுத்து பரிகசித்த கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தொழிலாளர்களுக்கு விடுமுறை மறுக்கப்படும் முறையை நிறுத்தக் கோரியும் ஆகஸ்ட் 18 அன்று தொழிலாளர்கள் 20 நிமிடத்திற்கு உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த விசாரணைகளோ நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. தொழிற்சாலையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கம் இது குறித்து நிர்வாகத்திடம் எந்த புகாரும் அளிக்கவில்லை எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ரெனால்ட் நிசானில் அதிகரித்து வரும் பணியிட துன்புறுத்தல்கள் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கின் எதிரொலியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

தொழிற்சாலையில் தற்போதுள்ள விதிமுறை படி, தொழிலாளர் விடுமுறை கோரும் போது மனித வள நிர்வாகம் அனுமதி மறுத்தால் தொழிலாளர் எடுக்கும் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் குறைக்கப்படும். தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுப்பதற்கு முன்னர் நிர்வாகம் தொழிலாளருடைய கண்காணிப்பாளர்களிடம் அனுமதி கோரும். ஆனால் தொழிலாளர்களுக்கு விடுமுறை கொடுப்பதற்கு கண்காணிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டு ஊதியம் குறைக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தற்கொலைக்கு முயன்ற தொழிலாளருக்கு ஏற்கனவே இருநாள் விடுமுறை மறுக்கப்பட்டு அவருடைய ஊதியத்தில் இருந்து ரூ2000 குறைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் மீண்டும் தனக்கு விடுமுறை மறுக்கப்பட்ட போது அவர் கண்காணிப்பாளரிடம் வாதமிட்டுள்ளார். ஆனால் கண்காணிப்பாளர் பிடிவாதத்துடன் இருந்ததால், தொழிலாளர் மிகவும் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு(ULF) தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்கள் மீது துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக தொழிலாளர்கள் கருதுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், ULF தொழிலாளர் உறுப்பினர்கள், நிர்வாகம் அங்கீகரித்து உள்ளே இயங்கி வரும் ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கத்துடன்(RNITS) இணைந்து தொழிலாளர் துறையில் கொடுத்த தொழிற்தாவாக்களை வாபஸ் வாங்கினர்.இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் ULF தொழிற்சங்கத்தை சார்ந்த 5 தொழிலாளர்கள் RNITS தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் அமைப்பில் உள்ளனர். அப்போது தொழிற்சங்கத்தில்  செயற்குழு பதவிகளுக்கு புதிய தேர்தல் வைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இது வரை பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி RNITS தொழிற்சங்கம் தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

நிர்வாகம் அங்கீகரித்துள்ள தொழிற்சங்கம் தொழிற்சாலையில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். நிர்வாகமும் சில தொழிலாளர்களை ஊக்குவித்து பல தொழிலாளர்களை ஒடுக்கி தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதன் எதிரொலியாக தொழிற்சாலையில் பல்வேறு திடீர் போராட்டங்கள் வெடித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் பெயின்ட் ஷாப்பில் பணிபுரிந்த ஒரு கர்ப்பிணி தோழர் பணியிடத் துன்புறுத்தலுக்கு ஆளான போதும், தொழிற்சங்கம் நிதியை மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட போதும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக போராடினர். இதன் வழியில் விடுமுறை அனுமதி மறுப்பு சமீபத்திய மோதலாகும். தொழிற்சங்க தேர்தலை உடனடியாக நடத்தி தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய தொழிற்சங்கத் தலைமையை தேர்ந்தெடுப்பது கட்டாயமாகி உள்ளது.

 

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles and tagged , , , . Bookmark the permalink.