நான்கு மாதங்களாகப் போராடும் மகேந்திரா தொழிலாளர்கள்

உத்தர்காண்டில் உள்ள மகேந்திரா ஆலைத் தொழிலாளர்கள் 2016ல் 45 நாட்கள் நீண்ட போராட்டத்தை நடத்தினர். அங்கேயுள்ள மகேந்திரா ஆலைகள் இரண்டையும் சேர்ந்தத்  தொழிலாளர்கள் கூட்டாக இப்போராட்டத்தை நடத்தினர். இரண்டு நாட்கள் நடந்த டூல் டவுன் வேலைநிறுத்தமும் இதில் அடக்கம். வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டுப் போராட்டத்தின் கோரிக்கை. பாதிப்புக்கு ஆளான அந்த இரண்டு தொழிலாளர்களின் பெயர் ஹேமச்ந்த் மற்றும் சத்துருக்கனா என்பதாகும். ஆண்டு சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடியபோது இந்த இரண்டு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். டூல் டவுன் போராட்டம் வெற்றிபெற்றது. நீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை கிடைத்தது.

ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மகேந்திராவின் இரண்டு ஆலைகளைச் சேர்ந்தத் தொழிலாளர்களும் 2017ல் மீண்டும் போராட்டத்தைத் துவக்கினர். மகேந்திரா சிஐஇ தொழிலாளர்கள் அமைப்பு (Mahindra CIE workers organization)என்ற பதாகையின் கீழ் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மே 18 முதல் ஆகஸ்ட் 26 வரை, நான்கு மாதங்கள் நீடித்தது. இப்போராட்டத்தில் பல்வகையான போராட்ட வடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்துப் போராட்டங்களும் பணித் தள (shop floor) மட்டத்தில் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதிய போராட்டத்தின் முதல் கட்டத்தில், தங்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சாப்பிடாமல் வேலை செய்தார்கள். அப்போராட்டத்தினால் நிர்வாகம் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை, அதன்பின் ஜூலை 18க்குப் பின்னர் தினமும் இரண்டு மணி நேரம் டூல்- டவுன் போராட்டம் நடத்தினர். 20 ஜூலை அன்று டூல் டவுன் போராட்டம் மூன்று மணி நேரம் நீண்டது. ஜூலை 28 அன்று மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் குறுக்கிட்டார். அதன் பின் டூல் டவுன்  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இருந்தபோதும், உண்ணாமல் வேலை செய்யும் போராட்டத்தைத் தொழிலாளர்கள் தொடர்ந்தனர்.

ஆகஸ்ட் 3 அன்று  தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூடுதல்  மாவட்ட நடுவர் உறுதியளித்தார். 80 நாளாக நடைபெற்று வரும் ‘சாப்பிடாமல் வேலை செய்யும்‘ போராட்டத்தைக் கைவிடக் கோரினார். தொழிலாளர்கள் அதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைகளைக்  காதில் போட்டுக்கொள்ள நிர்வாகம் தயாராக இல்லை.

அதனால், ஆகஸ்ட் 18 முதல் மற்றொரு டூல் டவுன் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆகஸ்ட் 21 அன்று நிர்வாகம் ‘ஆகச் சிறந்த காரியம்‘ என்று தான் கருதியதைச் செய்தது. ஆலையொன்றில் கதவுகளை அடைத்தது. தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். மற்ற ஆலையின் தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. அதனால், அந்த ஆலையின் தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்தனர். மாலையில், இரண்டு ஆலைகளின் தொழிலாளர்களையும் போலீஸ் கைது செய்தது. அவர்களை இரண்டு மணி நேரம் வரை இரவில் காவலில் வைத்திருந்தது.

ஆனால், தொழிலாளர்களின் உறுதி தளரவில்லை. ஆகஸ்ட் 26 மாலையில் நிர்வாகம் பின்வாங்க முடிவு செய்தது. மாவட்ட கூடுதல் நடுவருக்கு முன்பு பின்வரும் கோரிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

  1. மூன்று ஆண்டுகளில் ரூபாய் 5 ஆயிரம் சம்பள உயர்வு. இதில் 60 சதம் முதல் ஆண்டிலும், 20 சதம் இரண்டாவது ஆண்டிலும், அடுத்த 20 சதம் மூன்றாவது ஆண்டிலும் அளிக்கப்படும்.
  2. இந்த ஒப்பந்தம் 1 ஜனவரி 2017 முதல் 31 டிசம்பர் 2019 வரை நடப்பில் இருக்கும்.
  3. தொழிலாளர்கள் தங்களின் அடுத்த கோரிக்கையை நவம்பர் 2019ல் அளிப்பார்கள்.. அக்கோரிகை கடிதத்தை 15 டிசம்பர் 2019ல் தீர்த்து வைக்கும்.
  4. ஜனவரி 2017 முதல் ஜூலை 2017 வரையிலான சம்பளம் ஜனவரி 2018 சம்பளத்துடன் சேர்த்து அளிக்கப்படும்.
  5. போராட்டக் காலத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட பத்து தொழிலாளர்கள் மீது உள் விசாரணை ஒன்று நடக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் விசாரணை முடிவுக்கு வரும்.

டெல்லி- மும்பை தொழில் பகுதி (Delhi Mumbai Industrial corridor- DMIC) முதல் ஜார்கண்ட் வரையான ஆட்டோமொபைல் தொழிலில் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதிதான் நீதிக்கான மகேந்திரா தொழிலாளர்களின் கொந்தளிப்பும் அவர்களின் போராட்டமும்!2016ல் மகேந்திரா தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப்  போராடிக்கொண்டிருந்தபோது, DMIC யின் பிரிக்கால் டெல்ட்டா மற்றும் மின்டா தொழிற்சாலைகளில் ஒரே சமயத்தில் போராட்டமும், அமைதியின்மையும் நிகழ்ந்தன.  மிகச் சிறு புள்ளி போன்ற ஒரு தொழிற்சாலையில் நடக்கும் போராட்டத்தைத்  தோற்கடிப்பது நவ தாராளவாத அரசுக்கு எளிதான ஒன்றாகும். ஏனென்றால், இந்த உற்பத்திப் பகுதியில் ஒவ்வொரு ஆலைக்கும் பல்வேறு உற்பத்திக் கூடங்கள் உள்ளன. முதலாளிகள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டுச் செயல்படுகிறார்கள். எனவே, இப்பகுதி முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதுதான் அரசு- முதலாளிகள் கூட்டுக்கு எதிரான வலுவான, தாக்குப் பிடித்து எதிர்த்து நிற்கும் போராட்டமாக இருக்கும்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, News, Workers Struggles and tagged , . Bookmark the permalink.