தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து சிஎம்ஆர் டொயட்சு (CMR Toyotsu) தொழிலாளர்களின் போராட்டம்

Workers near CMR Toyutsu Pc Rajavelu (Hyundai)

சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், மற்றும் பல கோரிக்கைகளுடன் சிஎம்ஆர் டொயட்சுவின் நிரந்தரத் தொழிலாளர்கள் 18 பேர் வேலைநிறுத்தம் செய்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அலுமினியத்தைச் சுத்திகரிக்கும் இந்த ஆலையில் 18 நிரந்தரத் தொழிலாளர்களும் 300க்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரும் பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். வேலைநிறுத்தம் துவங்கிய நாள் முதல் வேலைநீக்கம், இட மாற்றம் ஆகிய பிரச்சனைகளுக்காக நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அவர்களின் துன்பங்களுக்கு முடிவேதும் இருப்பதாக இதுநாள் வரை தெரியவில்லை.

சிஎம்ஆர் டொயட்சுவுக்கு அருகில் தொழிலாளர்கள் (படம் உதவி ராஜவேலு -ஹுண்டாய்)
வேலைநிறுத்தம் துவங்கி சரியாக ஓராண்டு நிறைவுபெறும் அக்டோபர் 31 அன்று தங்களுக்கு எதிரான அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சாலையின் வாசலில் இருந்து 10 மீட்டர் தொலைவில் கூடினர். தொழிற்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்று கம்பெனியின் நிர்வாகம் நிரந்தரத் தடையாணை (injunction) பெற்றிருந்தது. இருந்தபோதும், காஞ்சிபுரத்தின் துணை நீதிபதி ஒருவர் வளாகத்திலிருந்து 10 மீட்டருக்குள் போராட்டம் நடத்துவதற்கான தற்காலிக உத்தரவொன்றை தொழிலாளர்களுக்கு அளித்தார். போராட்டத்திற்கு உள்ளூர் மக்களின் ஆதரவும் இருந்தது. அந்தத் தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிற தொழிற்சாலைகளின் தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இரணியப்பன் ‘ஆலை வாயிலுக்கு முன்பு 9 ஜனவரி 2017 அன்று நடந்த பொதுக் கூட்டத்திற்குப் பின்பு வேலைநிறுத்தத்தைத் திரும்பப் பெற்றதாக‘ கூறினார். இருந்தபோதும், நிர்வாகம் தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கவில்லை. தொழிலாளர் துறையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிப்பதற்கு 14 நிபந்தனைகளை நிர்வாகம் முன்வைத்தது. நிர்வாகத்தின் நிபந்தனைகள் பலவற்றை ஒப்புக்கொண்ட தொழிற்சங்கம், வேலைநிறுத்தம் சட்ட விரோதமென்றும் வேலைநிறுத்தக் காலத்துக்கான சம்பளத்தைப் பெற உரிமையில்லை என்றும் நிர்வாகம் கூறியதை தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தோழர் இரணியப்பன் சொன்னார்.

AICCTU சுவரொட்டி – படம் ராஜவேலு ஹுண்டாய்

சமரசப் பேச்சுவார்த்தையில் பிரச்சனை தீரவில்லை என்பதால், தொழிலாளர் நீதிமன்றத்தின் வழியே பிரச்சனையைத் தீர்க்க தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் ஆலையின் நிர்வாகம் நிரந்தரத் தடையாணை ஒன்றைப் பெற்றது. கம்பெனியின் வாயிலில் தொழிலாளர்கள் கூடுவது சட்ட விரோதம் என்றும் இந்தி பேசுகின்ற வட இந்தியத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று தொழிலாளர்கள் மிரட்டுவதாகவும், ‘வேலை நீக்கம் செய்யப்பட்ட‘ தொழிலாளர்களுக்கு ஒன்று கூடி முழக்கம் எழுப்ப உரிமையில்லை என்றும் காரணம் காட்டி கம்பெனியின் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கூடுவதற்கு மேற்படி ஆணையின் மூலம் தடை பெற்றது. (I. A 1263/2016 in O.S 310/2016 dated 27/April/2017). தொழிலாளர்கள் மீது எவ்விதப் புகாரும் காவல்நிலையத்தில் இல்லை என்றும் அல்லது சட்ட விரோதமாக ஒன்று கூடுவது அல்லது வேறு எந்தப் புகாரையும் தொழிற்சங்கத்தின் மீது காவல்துறையிடம் நிர்வாகம் அளித்திருக்கவில்லை என்றும் தொழிற்சங்கம் வாதிட்டது. கம்பெனி பெற்றிருந்த தடையாணையை ஒப்புக்கொண்ட காஞ்சிபுரத்தின் துணை நீதிபதி தடை செய்யப்பட்ட 100 மீட்டர் என்பதை 10 மீட்டராகக் குறைத்தார்.

AICCTU Poster Pc Rajavelu (Hyundai)

தொழிலாளர் துறைக்கு முன்பு ஒரு வருட காலமாக சமரசப் பேச்சுவார்த்தை நடந்துவந்த போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தை தோல்வி என்று குறிப்பிடும் இறுதி ஆணை இன்னமும் வெளியிடப்படவில்லை. கூட்டத்தில் உரையாற்றியவர்கள் தொழிலாளர் துறையின் நீண்ட காலதாமதத்தைக் கடுமையாகக் கண்டித்தனர். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட கணிசமான ஊதிய உயர்வைச் சுட்டிக்காட்டிய அவர்கள், தனியார் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இன்னமும் அதேபோன்ற கௌரவமான கூலியை வழங்காமல் அரசு காலம் தாழ்த்துகிறது என்றனர். நிர்வாகத்தின் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத தொழிலாளர் துறை, தொழிலாளர்களுக்கு ஆதரவானது அல்ல என்று AICCTU-வின் மாவட்ட செயலாளர் தோழர் ராஜேஷ் குற்றம் சாட்டினார். சிஎம்ஆர் டொயாட்சு ஒப்பந்தத் தொழிலாளர்களை மட்டுமே வேலைக்கு வைத்திருக்கிறது என்று RYA-வின் மாநில தலைவர் தோழர் ராஜகுரு குற்றம் சாட்டினார். தொழிற்சாலை நிலையாணை விதிகளைத் திருத்துவதன் மூலம் தொழிற்சாலைக்குள் நிரந்தரமற்ற முறையில் தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்படுவதைத் தடுக்க உரிய விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரினார்.
இதற்கிடையில், கடந்த ஒரு வருடமாக வருமானம் கிடைக்காதத் தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தக்க வைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். “எனது குடும்பத்தைக் காப்பாற்ற அவ்வப்போது கிடைக்கும் தற்காலிக வேலைகளைச் செய்கிறேன்.ஆனால், நான் எங்கு வேலை செய்தாலும் உரிமையைக் கேட்கவில்லை என்றால், யாரும் அதனை உங்களுக்குத் தரமாட்டார்கள் என்பதை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்“, என்று சிறு குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கும் தொழிலாளர் ஒருவர் சொன்னார்.
ஸ்ரீபெரும்புதூர்- ஒரகடம்- மறைமலை நகர் பகுதியில் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் சீர்கெட்டு வருகிறது. குறைவான சம்பளம், வேலை பாதுகாப்பின்மை, சட்டத் தீர்வு இன்மை என்பதாக அவர்களின் நிலை உள்ளது. சங்கம் அமைப்பது, கூட்டுப் பேர முறை, போராட்டங்கள், வேலைநிறுத்தம் போன்ற தொழிலாளர்களின் உரிமைகளை வெட்டிச் சுருக்குவதன் மூலம் மாநில அரசும் நீதிமன்றமும் முதலாளிகள் ஆதரவு நிலையை எடுத்துவருகின்றன. ஆலை வாயிலுக்கு முன்பு தொழிலாளர்கள் கூடுவதற்கான உரிமையைப் பறிக்கும் தடை உத்தரவுகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. தொழிலாளர்கள் இயக்கம் தன்னை வலுப்படுத்திக்கொள்வதும், தாக்குதலுக்கு எதிராகத் தனக்கான உரிமைகளுக்காகப் போராடுவதும் இன்றைய மிகப்பெரும் தேவையாக இருக்கின்றன.

This entry was posted in Automobile Industry, Environment and Working Class, Factory Workers, Lock out/Closure, News, Strikes and tagged , , . Bookmark the permalink.