கர்ப்பிணிப் பெண்ணான சகத் தொழிலாளிக்கு ஆதரவாக ரெனால்ட் நிஷான் தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் நவம்பர் 16 அன்று கம்பெனி வாசல் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களின் சகப் பெண் தொழிலாளிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பேறுகாலத்தின் பிற்பகுதியில் இருந்த அந்தப் பெண்ணை, மிகக் கடுமையான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நிர்வாகம் நிர்ப்பந்தப்படுத்தியிருந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காரணத்தால், பிரச்சனை என்னவென்பதை தொழிலாளர் கூடத்திடம் பேசுவதற்குத் தொழிலாளர்கள் தயங்கினர். இருந்தாலும், எங்களோடு தொடர்பிலிருக்கும் சிலர் சொன்னதன்படி, அந்தப் பெண் எழுத்து (ஆவணப்படுத்துதல்) வேலைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்று தெரியவருகிறது. மீதமுள்ள பேறு காலத்தின்போது அந்தப் பெண்ணுக்கு கடினமானப் பணிகள் தரப்படமாட்டாது என்றும் தெரியவருகிறது. ஆனால், இடமாற்றம் செய்யுங்கள் என்ற அந்தப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று பணியிட மாற்றம் செய்வதை வேண்டுமென்றே தவிர்த்த நிர்வாகிகள், மனித வள த்துறை அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதுபோன்ற சம்பவங்கள்செய்தி ஆகாமல்போவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, பணியிடக் கண்காணிப்பாளரும், மேனேஜரும் கெட்ட வார்த்தைகளால் தொழிலாளியைத் திட்டிய சம்பவத்தின் போதும் கூட, குற்றம் செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இன்றி பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. ரெனால்ட் நிசான் தொழிற்சங்க நிர்வாகத் தலைமைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் தற்போது பிரச்சனை இருப்பதால், இந்த விவகாரங்களில் தொழிற்சங்கம் செயலூக்கம் வகையில் தலையீடு செய்ய முடியவில்லை. அரசின் கண்காணிப்பு அமைப்புகளான தொழிற்சாலை ஆய்வகமும் (Factories Inspectorate- தற்போது இந்தத் துறை தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் Industrial Safety and Health-என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தொழிலாளர் துறையும் எதனையும் கண்டுகொள்வதில்லை அல்லது எப்போதாவது ஏதாவது செய்வார்கள் என்ற நிலை இருப்பதால், தொழிலாளர்களுக்கான ஒரே பாதுகாப்பாக சகத் தொழிலாளர்கள்தான் இருக்கிறார்கள்.

Workers after the protest: Photo credit from facebook

நாங்கள் சேகரித்தத் தகவலின்படி அந்தப் பெண் தொழிலாளி டிப்ளமோ படித்தவர். டெக்னீஷியனாக அவர் ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். அவர் கார்களின் கூடு (Body) கட்டும் இடத்தில் பணியிலமர்த்தப்பட்டிருக்கிறார். இங்கே செய்யப்படும் பணிகள் மிகவும் களைப்பை ஏற்படுத்துபவை என்பதால், இந்தப் பிரிவைக் கடின உழைப்புப் பிரிவு என்று சொல்வார்கள்.

பொதுவாக, இப்பிரிவில் பெண்களை வேலை செய்யவைக்க மாட்டார்கள். துவக்கத்தில் இங்கே வேலைக்கமர்த்தப்பட்ட 20 பெண்களில் 17 பேரை வெகு சீக்கிரம் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார்கள், என்று ஒரு தொழிலாளி சொன்னார். நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற உள் சங்கத்திற்குப் பதிலாக ULF சங்கத்திற்கு அந்தப் பெண் ஆதரவு தெரிவித்திருந்தார். அந்தப் பெண்ணை கூடுகட்டும் பிரிவிலேயே வைத்திருந்ததற்கு இதுதான் காரணம் என்று சில தொழிலாளர்கள் சொன்னார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பம் ஆனார். அவரின் உடல்நிலை காரணமாக வேலைக்கு வராமல் (அதே சமயம் அதிகாரபூர்வ விடுப்பும் எடுக்காமல்-‘leave of absence’) போகும்படி அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனையின் பின் அவர் 2-3 வாரங்களுக்கு வேலைக்கு வரவில்லை. அதன்பின் அவர் மீண்டும் பணிக்கு வந்தபோது, குறைவான உடலுழைப்பு உள்ள பிரிவு ஒன்றிற்கு தன்னை மாற்றும்படி வாய்மொழியாகக் கேட்டிருக்கிறார். ஆனால், மனித வளத்துறை அதிகாரியும் உற்பத்தி நிர்வாகியும் அவரை இடமாற்றம் செய்யவில்லை. மற்றொரு பக்கம், தாயுக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் உற்பத்தி தளத்தில் உள்ள கண்காணிப்பாளர்கள் அந்தப் பெண்ணை வேலையில் ஈடுபடுத்த விரும்பவில்லை. அதனால், வேலை செய்ய வாய்ப்பில்லாத தர்மசங்கடமான நிலைக்கு அந்தப் பெண் தள்ளப்பட்டார்.

உற்பத்திக்கான பொது மேலாளர் ஆய்வுக்காகச் சுற்றி வந்தபோது பிரச்சனை பற்றிக்கொண்டது என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள். அந்தப் பெண் வேலை செய்யாதிருப்பதைப் பார்த்த அந்த அதிகாரிசும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு சம்பளம் தர முடியாதுஎன்று அவர் மீது வசைமாரி பொழிந்திருக்கிறார். அந்தப் பெண் பிரச்சனை என்னவென்று விளக்கியபோது, ‘ஒன்றும் செய்ய முடியாது.. எங்களை ஆதரிக்காது மற்றவர்களை (அதாவது மாற்று சங்கத்தை) ஆதரிக்கும் உனக்கு நாங்கள் ஏன் ஆதரவாக இருக்க வேண்டும்?‘ என்று உற்பத்தி பொது மேலாளர் சீறியிருக்கிறார். மிகவும் வேதனைப்பட்ட அந்தப் பெண் அழத் துவங்கினார் என்றும் தன்னை வேலை செய்ய அனுமதிக்குமாறும் கண்காணிப்பாளரை கேட்டுக்கொண்டார் என்று தொழிலாளர்கள் சொல்கிறார்கள். மானுட உணர்வுள்ள அந்தக் கண்காணிப்பாளர் பெண்ணை வேலை செய்ய அனுமதிக்கவில்லை.

அந்தப் பெண் தொழிலாளிக்கு இட மாற்றம் கோரும் எல்லா உரிமையும் இருக்கிறது. கர்ப்பமுற்ற தொழிலாளிக்கான சட்டத்தின் படியும் (பேறுகாலப் பலன்கள் சட்டம் 1961, பிரிவு 4(3)) ரெனால்ட் நிசான் தொழிற்சாலை உட்பட பல தொழிற்சாலைகளிலும் கர்ப்பமுற்ற பெண் தொழிலாளிக்கு கடினமற்ற, ஆபத்தற்ற பணிகளைத் தரும் முந்தைய வழக்கப்படியும் அந்தப் பெண்ணுக்கு வேறு வேலை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக் காப்பதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், ரெனால்ட் நிசான் நிர்வாகம் இந்த விதியை இரண்டு முறை மீறியிருக்கிறது. இரண்டு முறையும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

நடந்தது கண்டு அந்த பணியிடத்தில் இருந்தத் தொழிலாளர்கள் அதிர்ச்சி நிலைகுலைந்து போயினர். பிரச்சனையைத் தீர்ப்பதற்கு யூனியன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் தொழிலாளர்கள் பிரச்சனையைத் தங்கள் கையில் எடுக்க வேண்டியதாயிற்று. மறுநாள் போராட்டம் நடத்துவதற்குத் தொழிலாளர்கள் அழைப்பு விடுக்கத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். முதல் ஷிஃப்ட்டுக்குப் பின்னர் தொழிலாளர்கள் பலர் வாசலில் அமர்ந்து போராட்டத்தைத் துவக்கினர். அதன் காரணமாக, மனித வளத்துறையும் உற்பத்திப் பிரிவு நிர்வாகிகளும் சேர்ந்து பிரச்சனையைத் தீர்த்து வைத்தனர். நுண்ணுணர்வு இல்லாது பேசிய பொது மேலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரினர். நிர்வாகத்தின் தரப்பில் ஒரு குழு கூடு கட்டும் பிரிவு தொழிலாளர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பாதிப்புக்கு ஆளான பெண் தொழிலாளியை தர ஆய்வுப் பிரிவிற்கு மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டது. அந்தப் பிரிவில் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வேலை ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிதான். ஆனால், பொது மேலாளர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார். சட்டத்தை மீறியதற்காகவும், தொழிலாளியின் மீது கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகவும் பொது மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றை அனுப்பியதுடன் நிறுத்திக்கொண்டனர். நடைபெற்ற சம்பவங்களுக்கான ஆதாரமாக தொழிலாளர்களின் நினைவும் வலைமனைப் பதிவுகளும் மட்டுமே இருக்கின்றன.

நிறுவனத் தோல்வி

உலக வங்கியும், மூடி இன்வெஸ்ட்மெண்ட் (Moody investment) அல்லது பங்குத் தரகர்கள் அளிக்கும் தரவரிசையினால் ஆயுதம் தரித்தவர்களாக NDA அரசும் இந்திய ஊடகங்களும் உள்ளன. இந்த முகமைகள் தொழில் முதலாளிய நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கப் பாடுபடுபவை.‘சுலபமான முறையில் தொழில் செய்வதுஎன்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று அவை கோருகின்றன. இந்தக் கந்து வட்டி வங்கிகளும் சூதாட்டத் தரகர்களும் போடுகின்ற உத்தரவுகளுக்கு சேவை செய்வதில் நமது அரசு மகிழ்ச்சி அடைகிறது. முதலாளிகளையும் அவர்களின் நிர்வாகிகளையும் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடு அமைப்புகளை அகற்றுவதற்கு இது இட்டுச் சென்றுள்ளது. லாபத்தால் மட்டும் இயக்கப்படுகிற தற்போதைய உற்பத்திச் சூழலில் இது போன்ற சட்ட மீறல்கள் வழக்கமானவை ஆகிவிட்டன.

ஆண்களால் வடிவமைக்கப்பட்டு ஆண்களால் ஆதிக்கம் செய்யப்படும் உற்பத்தி நடவடிக்கையில் பயணப்படும் பெண் தொழிலாளர்கள் மிகவும் துன்பப்பட வேண்டியிருக்கிறது. இந்திய அரசும், நீதிமன்றங்களும் திட்டமிட்ட முறையில் தொழிற்சங்கங்களின் ஆற்றலைப் பலவீனப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, பணியிடத்தில் தொழிலாளர்கள் கூட்டாகப் பிரதிநிதித்துவம் செய்வதும் பற்றாக்குறையாகி வருகிறது. விளைவாக, மனம்போன போக்கில் தொழிலாளியைப் பாராட்டுகிற அல்லது தண்டிக்கிற மேலாளர் வர்க்கத்தின் கருணைக்கு விடப்பட்டவர்களாக தொழிலாளிகள் மாறிவருகின்றனர். இதற்கான சாட்சியமாக ரெனால்ட் நிசானில் நடைபெற்ற சம்பவம் இருக்கிறது. செய்த குற்றத்திற்கு விளைவு ஏதும் இல்லையென்றால், கம்பெனிக்குத் தண்டனை கிடைக்கவில்லை அல்லது பண இழப்பு ஏற்படவில்லையென்றால், இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அரசு நிறுவனங்களும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் துறந்துவிடுகின்றன. விளைவாக, தங்களின் வேலை போய்விடுவது, அல்லது இன்னமும் பெரிய அபாயங்களை எதிர்கொண்டு தொழிலாளர்கள் கம்பெனி முதலாளிக்கு சாவல் விட வேண்டியிருக்கிறது. நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கூட்டாகச் சேர்ந்து தடுக்க முடியவில்லை என்றால், தொழிலாளர்கள் பரிதாபத்திற்குரிய பணி நிலைமைக்கும் மிக மோசமான அவமானங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. ஆனால், ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் போல, நிர்வாகத்தைத் தடுத்து நிறுத்த முடியும் என்றால், கூட்டுப் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வெல்ல முடிகிறது.

இருந்தாலும், இது வருமுன் காக்கும் நடவடிக்கை அல்ல. சேதம் ஏற்பட்ட பின்னர்தான் சரிசெய்வது துவங்குகிறது. உதாரணமாக, இந்த நிகழ்வில், பல நாட்களுக்கு மனக் கவலையில் வாழ்ந்த, வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலை, தொழிலாளர்கள் கொந்தளித்து எழும் வரை அப்படியேதான் நீடித்தது. உற்பத்தி நிகழ்வுப் போக்கில் ஏற்படும் கவனக் குறைவு, திட்டமிடல் உட்பட அனைத்தையும் முன்னெச்சரிக்கையாகக் கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்கள் அமைப்பாவது, அவர்களின் நலனைக் காப்பதற்குத் தேவையானதாக இருக்கிறது.

ரெனால்ட் நிசானிலிருந்து வேறு செய்திகள்:

  • அறுபது ஒப்பந்தத் தொழிலாளர்களில் 16 பேருக்கு, முந்தைய ஒப்பந்தக்காரரால் PF பாக்கிகள் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. முந்தைய தொழிலாளர் ஒப்பந்தக்காரர், அவரின் ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் கூட PF பாக்கியை செலுத்தவில்லை. ஒரு புதிய ஒப்பந்தக்காரர் தற்போது வந்துள்ளார். வழக்கம்போல, முந்தைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் புது ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றுகிறார்கள். பணம் செலுத்தப்படாததைத் தொழிலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். மிகவும் யோசனை செய்த பின்னர், முதன்மை முதலாளியான ரெனால்ட் நிசானை எதிர்கொள்வதற்கு மாறாக, ஒப்பந்தக்காரரை இலக்காகக் கொண்டனர். நடவடிக்கை எடுக்கும்படி முந்தைய ஒப்பந்தக்காரருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினர். அதற்குப்பின்பு, பாக்கிகளைச் செலுத்த ஒப்புக்கொண்ட ஒப்பந்தக்காரர், உரிய ஆவணங்களைத் தயார் செய்து வருகிறார்.

சங்கத்தின் நிர்வாக அமைப்புக்கும் கம்பெனி நிர்வாகத்திற்கும் 3000 தொழிலாளர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். தற்போதைய சங்கத் தலைமையின் மீது நம்பிக்கையில்லை என்றும், பொதுப் பேரவை ஒன்றைக் கூட்டி தற்போதைய சங்க நிர்வாகத் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் என்றும், சங்கத்தின் பிற கமிட்டிகளையும் மாற்ற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர். ULF சங்கத்தைச் சேர்ந்த பெருமளவிலான தொழிலாளர்கள், சென்ற பிப்ரவரியின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்போது, உள் சங்கத்தில் சேர்ந்தனர். சில மாதங்களில் அவசர பொதுப் பேரவையைக் கூட்டுவதாக முந்தைய தலைமை தங்களுக்கு உறுதியளித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், 9 மாதங்கள் கடந்துவிட்டன. கொடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. நிர்வாகக் குழுவின் இணை செயலாளர்களாக இணைந்துகொண்ட 5 தொழிலாளர்களும் பதவி விலகியிருக்கின்றனர்.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Featured, News, Women Workers, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.