தொழிற்சங்கத்தின் மீது பிரிக்கால் நிர்வாகத்தின் கொடுந்தாக்குதல் தொடர்கிறது!

தொழிலாளர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டது!

முதலாளிகளுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு விரோதமான தன் நிலையை நீதித்துறை மற்றொரு முறை எந்த வெட்கமும் இன்றி வெளிப்படுத்தியுள்ளது. 2009ல் நிர்வாகத்தின் HR நிர்வாகியைக் கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இராமமூர்த்தி மற்றும் மணிவண்ணன் என்ற இரண்டு தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நவம்பர் 13 அன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு பல்வேறு ஓட்டைகள் உள்ள வழக்கு என்ற அவப்புகழ் பெற்றது. சங்கம் அமைப்பதற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்தத் துணிந்த தொழிலாளர்களைப் பழிவாங்குவதற்காக புனையப்பட்ட வழக்கு என்பதை வழக்கில் உள்ள ஓட்டைகள் காட்டுகின்றன. சாட்சியங்கள் போதாத நிலை இருந்த போதும் தொழிலாளர்களைப் பழிவாங்குவது மேலும் தொடர்கிறது என்பதை இந்த வழக்குக் காட்டுகிறது.

அதே நாளில், அதே நீதிமன்றம் மற்றொரு மேல்முறையீட்டு வழக்கை ஏற்றுக்கொண்டது. குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட 25 தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் மேல் முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 6 தொழிலாளர்களின் வாழ்க்கையை நிச்சயமற்ற நிலைக்கும் அச்சத்திற்கும் தள்ளும் வகையில், அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிபாங்கள் உற்பத்தியில் நாட்டின் முதன்மையான கம்பெனிகளில் ஒன்று பிரிக்கால். தொழிற்சங்கத்தோடு மோதல் நிகழ்த்துவதின் காரணமாக செய்திகளில் அடிபடுகின்ற கம்பெனி. இதுவரை 133 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளை விசாரிக்க தொழிலாளர் நீதிமன்றம் மறுத்துள்ளது. AICCTUவுடன் இணைக்கப்பட்ட கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் தொழிலாளர்களைக் குறிவைத்து நிர்வாகம் தாக்குதல் நடத்தி வருகிறது. நிர்வாகத்தின் கீழ் உள்ள மூன்று ஆலைகளைச் சேர்ந்த 900 நிரந்தரத் தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆலை 1 பெரியநாயக்கன் பாளையத்திலும் ஆலைகள் 3 மற்றும் 4 சின்னமதம்பாளையத்திலும் உள்ளன. இந்த மூன்று ஆலைகளிலும் 1300 தொழிலாளர்கள் உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பயிற்சித் தொழிலாளர்களும், அப்பரண்டீஸ்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களில் நடந்தவை பற்றி தொழிலாளர் கூடத்திடம் சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜன் பேசினார்.

மிகச் சமீபத்தில் கம்பெனியில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களில் நிர்வாகம் எப்படி நடந்துகொண்டது என்பது தொழிற்சங்கமும் தொழிலாளர்களும் எதற்கு எதிராகப் போராடுகின்றனர் என்பதைப் பற்றி பல விவரங்களைத் தருகின்றன. பிரான்சிஸ் என்ற 52 வயதுத் தொழிலாளர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆலையில் வேலை செய்து வந்தார். அவருடைய உடல் நலம் மோசமானது என்பதை அனைவரும் அறிவர். அதனால், அசெம்பிளி பிரிவில் உள்ள இலகுவான வேலைகளை அவர் செய்துவந்தார். சங்கத்தின் தலைமையும் நிர்வாகத்துடன் தனிப்பட்ட முறையில் பேசி ஓர் ஏற்பாடு செய்திருந்தது. பிரான்சிஸ் காலையில் அசெம்பிளி பிரிவில் வேலை செய்துவிட்டு சில மணி நேரம் அமர்ந்திருப்பது நடக்க ஆரம்பித்தது.

அதே ஆலையில்தான் தோழர் நடராஜனும் வேலை செய்கிறார். நிர்வாகத்துக்கு ஆதரவான சங்கத்தினர் பிரான்சிசோடு தொடர்ந்து பேசி நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர். சங்கத்தை விட்டு வெளியேறினால் பிரான்சிசுக்கு இன்னமும் எளிதான வேலைகளை வாங்கித் தருவோம் என்று பேசி நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். “யூனியனை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரான்சிசை வேறொரு பிரிவுக்கு மாற்றிவிட்டனர். அந்தப் பிரிவின் அவர் மூன்று மாடிகளுக்கு அடிக்கடி ஏற வேண்டியிருந்தது. ஏறத்தாழ 60 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இப்படி அடிக்கடி ஏறியிறங்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்ய வேண்டிய அளவும் மிக அதிகமானதாகும். அப்படி இரண்டு நாள் வேலை செய்த பின்னர் அவரை திரும்பவும் பழைய இடத்துக்கு மாற்றினர், என்று தோழர் நடராஜன் சொன்னார். அதன்பின் ஒரு வாரம் கழிந்த பின்னர் அவர் வேலை செய்யும் இடத்தில் நிலைகுலைந்து விழுந்தார். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது, அவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது.

புகைப்படம் உதவி: தோழர் நடராஜன், KMPTS


சமீபத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவம், அவசரத் தேவைக்கான தொழிலாளர்களில் ஒருவரான நாகராஜன் பற்றியது. மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார். அவரும் அவருடன் சென்றவர்களும் டிசம்பர் 1 அன்று மைசூர் போய் சேர்ந்தனர். விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். டிசம்பர் 3 அன்று நாகராஜன் குளியலறைக்குள் சென்றிருக்கிறார். வெகு நேரமாக அவர் வெளியில் வரவில்லை என்பதால் உடன் சென்றவர்கள் கதவை உடைத்துத் திறந்திருக்கின்றனர். அவர் குளியலறைத் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள். அப்போது நேரம் காலை 7.30 மணி. நாகராஜன் இறந்தது பற்றி நிர்வாகம் எவ்விதத் தகவலும் தரவில்லை என்று தொழிற்சங்கத்தினர் சொல்கின்றனர். “எங்களின் சகத் தொழிலாளி ஒருவர் எங்களுக்குத் தகவல் கொடுத்தார். ஆனால், எங்களுக்கு உறுதியான தகவல் தெரியவில்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் துயரத்தில் துடித்துக்கொண்டிருந்தனர். மனித வளத்துறையில் உள்ள பலரையும் நாங்கள் தொடர்புகொண்டு பேசிய பின்னர் 11 மணிக்குப் பிறகுதான் எங்களுக்கு உறுதியானத் தகவல் கிடைத்தது, என்று தோழர் நடராஜன் சொல்கிறார்.

இழப்பீடு அளிப்பதற்குப் பதிலாக, இரண்டு பிரதிநிதிகளை இறந்தவரின் வீட்டுக்கு நிர்வாகம் அனுப்பி வைத்தது. அவர்கள் இறந்துபோன நாகராஜின் மனைவியிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் வாங்க முயற்சித்தனர். தனது கணவர் உடல் நலமின்றி இறந்ததாகவும், தனக்கு ரூபாய் 20 ஆயிரம் முன்பணம் வேண்டும் என்றும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், அவர் ‘வேலையில் இருந்தபோது இறந்தார்‘ என்று செய்தி அதில் குறிப்பிடப்படவில்லை. வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் நாகராஜின் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார். அவர் தலையிட்டு கையெழுத்து பெற விடாமல் தடுத்திருக்கிறார். றந்துபோன இரண்டு தொழிலாளர்களுக்கும் இழப்பீடு என்ற பிரச்சனையைக் கையிலெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேரை விடுதலை செய் இயக்கத்தைத் திரும்பவும் துவங்க வேண்டுமா?

இதுபோலவே, 2009ல் HR மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 25 தொழிலாளர்கள் மற்றும் செயல்வீரர்களைக் குறிவைத்து செயல்படுவதில் நிர்வாகம் உறுதியாக இருப்பதும் தெரிகிறது. விடுதலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2017 நவம்பர் 12 அன்று உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த ஆண்டு ஜனவரியில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த 6 தொழிலாளர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. (இதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேரை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.) அதே நாளில், இன்னமும் சிறையில் இருக்கும் 2 தொழிலாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்தது. கொலைக்குப் பின்பு நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் உள்ள ஓட்டைகளும், வெகு நீண்ட காலம் இழுபட்ட நீதிமன்ற விசாரணைகளும் நல்ல முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் அமைப்பாவதற்கான உரிமை மீது அரசும், நீதித்துறையும்,, மூலதனமும் தாக்குதல் தொடுக்கும் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. மன்சாரின் மாருதி தொழிலாளர்கள் வழக்கிலும், குர்கானின் கிராசினோவா ஆலை தொழிலாளர்கள் வழக்கிலும் வெளியான தீர்ப்புகள் தொழிலாளர் வர்க்கத்தை குற்றமயமாக்குவதிலும், ESMA அச்சுறுத்தல் மூலம் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை முறியடிப்பதிலும் நீதிமன்றங்கள் முனைப்புடன் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. தொழிலாளர்கள் ஆலை வாயிலின் அருகே போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பிரிக்கால் விவகாரத்தில், எந்த அடிப்படையில் தொழிலாளர்களின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது, எந்த அடிப்படையில், தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள் என்பதால் விடுதலை செய்யபபட்டதற்கு எதிரான நிர்வாகத்தின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது? அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சங்கம் யோசித்து வருவதாகவும், அதேசமயம் பிரச்சனையை வெகுமக்கள் இயக்கமாக மாற்றவிருப்பதாகவும் AICCTU பொதுச் செயலாளர் தோழர் குமாரசாமி சொன்னார். இதற்காக 17 டிசம்பர் அன்று AICCTU மற்ற பிற மைய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்துவதுடன், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய ஆலோசனையையும் மேற்கொள்ளவிருக்கிறது.

 

This entry was posted in Automobile Industry, News, Workers Struggles, Worksite Accidents/Deaths and tagged , , , , . Bookmark the permalink.