பயிற்சித் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தி நிரந்தர வேலைகளைப் பறிக்கும் அரசின் NEEM திட்டம்! எதிர்த்துப் போராடும் அசோக் லேலேண்ட் தொழிலாளர்கள்!

எண்ணூரில் உள்ள அசோக் லேலேண்ட் ஆலையின் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உணவு இடைவேளையின் போது ஜனவரி 10 அன்று போராட்டம் நடத்தினர். ஆலையின் நிர்வாகம், பயிற்சித் தொழிலாளர்களை (apprentices) நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்தப் போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள் மதிய உணவைப் புறக்கணித்தும் தம் எதிர்ப்பைக் காட்டினர். புதிய முறையை நடைமுறைப்படுத்த முயலும் நிர்வாகத்திற்கு எதிராக மட்டும் இந்தப் போராட்டம் நடக்கவில்லை. இதற்கு உதவியாகப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு எதிராகவும் இப்போராட்டம் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. வேலைக்கமரும் திறனை உயர்த்துவதற்கான இயக்கம் (National Employability Enhancement Mission-NEEM) என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் (கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தின்படி நேரடி உற்பத்திப் பகுதிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த முடியாது. NEEM திட்டம் புறவாசல் வழியாகக் காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை நேரடி உற்பத்தியில் கொண்டுவருகிறது என்று தொழிலாளர்கள் கருதுகிறார்கள். அதன் மூலம் நிரந்தரத் தொழிலாளர்களின் கூட்டுப் பேர பலத்தைக் குறைப்பது நோக்கமாக இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

NEEM என்றால் என்ன?
வலைமனைகளில் கிடைக்கும் விவரங்கள் தொழிலாளர்களின் அச்சத்திற்கு அடிப்படையிருக்கிறது என்று காட்டுகின்றன.
AICTE (All India Council for Technical Education) என்ற அமைப்பின் ஒழுங்குமுறைகள் திருத்தத்தின் மூலம் NEEM இயக்கம் உள் நுழைக்கப்பட்டுள்ளது. NEEM 2013ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2017ல் அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாகன உற்பத்தி உள்ளிட்ட உற்பத்தித் துறைகளில் பயிற்சித் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை இந்தத் திருத்தம் சட்டப்பூர்வமானதாக்குகிறது என்பதுதான் அறிவிக்கையின் சாரமாக இருக்கிறது.
உதாரணமாக, நோக்கியா, பாக்ஸ்கான், ஹுண்டாய் போன்றவை 2006 முதல் பயிற்சியாளர்கள் (trainees) என்ற பெயரில் புதிய தொழிலாளர்களை ஆலைக்குள் சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். trainees என்ற இந்த புதிய வகையினம் பற்றி தொழிற்சாலைகள் நிலையாணை சட்டத்திலோ அல்லது பயிற்சித் தொழிலாளர்கள் (apprentices) ஆலைக்குள் பயிற்சி எடுப்பதைக் கட்டுப்படுத்தும் அப்பரண்டீஸ் சட்டத்திலோ வரையறை ஏதும் இல்லை. தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதிமுறைகளைக் கொண்ட தொழில் தகராறு சட்டத்திலும் trainees என்ற பதத்துக்கு வரையறையில்லை.
trainees (பயிற்சியாளர்கள்) என்று குறிப்பிடப்படும் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் வழியிலான ஒப்பந்தத் தொழிலாளர்கள் போலல்லாமல், நேரடியாக கம்பெனி நிர்வாகத்தின் கீழ் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிந்த பின்னர் நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளம் தொழிலாளர்கள் பயிற்சித் தொழிலாளர்கள் ஆக விரும்புகின்றனர்.

கம்பெனிகள் நடப்பில் வைத்துள்ள trainee முறையைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு அப்பாலும் அரசின் NEEM இயக்கம் செல்கிறது. NEEM திட்டத்தின் கீழ் தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ள ஒரு தனியார் அமைப்பு அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கம்பெனியில் உள்ள Traineeகளுக்கான பொறுப்பை NEEM Agentகள் என்று சொல்லப்படும் இடைத் தரகர்களுக்கு மாற்றிக்கொடுக்க NEEM திட்டம் வகை செய்வதாக மேற்படி விளக்கம் பொருள் தருகிறது. இந்த விதியின்படி NEEM முகவர்கள், திறன் பெறாத ஒரு தொழிலாளருக்குக் குறைந்தபட்ச ஊதியம் மட்டும் கொடுத்தால் போதுமானது. அவர்களுக்கு “என்ன திறன் கற்றுத் தரப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல்“ என்று புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதாக இந்த திட்டம் உள்ளது. மேலும், இத்தொழிலாளர்களுக்கு வேறு எந்தவிதமான சட்டப் பலன்களையும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமல்ல, வேலையில் ஈடுபடுத்தப்படும் பயிற்சித் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் NEEM முகவர்கள்தான் பொறுப்பு. ஒருவேளை விபத்து ஏதும் ஏற்படும் என்றால், தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் (Workmen Compensation Act)படி, NEEM முகவர்தான் இழப்பீடு அளிப்பார். இவற்றின் காரணமாக, தனக்கான பரிகாரத்தைத் தேடுவதற்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம், தொழிலாளர் இழப்பீடு சட்டம் என்ற வழிகள் மட்டுமே பயிற்சித் தொழிலாளர்களுக்கு உள்ளது.
தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு தொழில்நிறுவனம் பொறுப்பேற்பது, தொழிலாளர் உரிமைகள் போன்றவை, நீண்ட காலப் போராட்டம், நீண்ட காலத்துக்கு ஒரு நிறுவனத்தின் தொழிலாளராக இருப்பது ஆகியவற்றின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளாகும். இவற்றை ஒழித்து, தொழிலாளர்களுக்கு வேலையளிக்கும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்த திட்டம் ஆக்கிவிடும். பயிற்சியாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு மட்டும் NEEM திட்டம் வழியேற்படுத்தவில்லை. தொழிலாளர்களின் PF அல்லது மருத்துவப் பலன்களை அளிக்க வேண்டியிராத ஒப்பந்தக்காரர்களையும் அது உருவாக்குகிறது.
மாருதி, ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் நிரந்தரமற்றத் தொழிலாளர்களை பெருமளவுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் செயலைச் சட்டப்பூர்வமாக்குவதாக NEEM திட்டம் உள்ளது. வேலையில் சேரும் திறனைத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆனால், தனக்குத் தேவைப்படுகின்ற, ஒரு குறிப்பிட்டதொரு திறனுக்காக ஒரு கம்பெனி தன்னிடம் உள்ள பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள அந்தத் தொழில் நிறுவனம் விரும்பவில்லை என்றால், பின்னர் வேறு ஒரு தொழில்நிறுவனம் அதே தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. NEEM திட்டத்தின்படி 16 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களைப் பயிற்சித் தொழிலாளர்களாக எடுத்துக்கொள்ளலாம். (இதற்கு முந்தைய 2013 அறிவிக்கை 18 முதல் 35 வயது வரையிலான தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது.) இவற்றை வைத்துக்கொண்டு NEEM திட்டம் என்ன பொருள் தருகிறது என்பதை நாம் இப்படி புரிந்துகொள்ளலாம்: ‘’ஒரு தொழிலாளி ஆற்றலுடன் வேலை செய்யும் வயது வரை பயிற்சித் தொழிலாளியாகவே இருக்க வேண்டும்“!

அசோக் லேலேண்ட் போராட்டம்

தங்களின் ஆலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சியெடுத்தவுடன் அசோக் லேலேண்டின் தொழிலாளர்கள் எச்சரிக்கை அடைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்தத் தொழிற்சாலையில் தொழிற்சங்க இயக்கத்துக்கு வலுவான வரலாறு உண்டு. இருந்தபோதும், தொழிற்சாலைகளின் பணிகள் தொடர்ந்து அயல் பணிக்குக் கொடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1750ஆகக் குறைந்தது. இதற்கு நேர் எதிராக ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்தது. தொழிற்சாலையில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத் தலைமை 2016ல் கூட்டுப் பேர கூலி ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் 400 வேலைகளை அயல் பணிக்குத் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. (ஒப்பந்தத்திற்கு முன்பு இருந்த நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2154) இருந்தபோதும், உற்பத்தியின் மையமான பகுதிகளில் NEEM திட்டத்தின்படி பயிற்சியாளர்களைக் கொண்டுவரப் போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் இது பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மூத்த ஆபரேட்டர் ஒருவர் சொன்னார். ‘உற்பத்திக்கு தேவையானது போன்ற பொருத்தமான சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்படும்‘ என்ற ஆபத்தற்ற ஒப்பந்த ஷரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியின் மொத்தப் போக்கையே மாற்றிவிட முயற்சி எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இதற்கு எதிராக நடத்த எதிர்ப்பு நிகழ்ச்சியில் CITU, WPTUC, முற்போக்குத் தொழிலாளர் நல மன்றம், குசேலர் நல மன்றம், தொழிலாளர் பேரியக்கம், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற பல அமைப்புகள் ஒருமைப்பாடு தெரிவித்துக் கலந்துகொண்டன. ஒப்பந்தமயமாக்கும் தற்போதைய நிர்வாகத்தின் முயற்சியுடன், தொழிற்சங்கம் கூட்டு வைத்திருப்பதைத் தலைவர்கள் கண்டனம் செய்தனர். தாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக எதிர்விளைவுகளை தாங்கள் ஏற்கனவே சந்தித்து வருவதாகத் தொழிலாளர்கள் சொன்னார்கள். பயிற்சியாளர்களை உற்பத்திக்குள் அனுமதிக்காததற்காக 4 ஆயிரம் மணி நேரத்துக்கான ஊதியத்தை நிர்வாகம் பிடித்து வைத்துள்ளது. போராட்டங்களில் பங்கெடுத்த தொழிலாளர் தலைவர் ஒருவரை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. நிர்வாகத்திற்கு ஆதரவாகத் தொழிற்சங்கம் செயல்படுவதைக் கண்டித்து 1500 தொழிலாளர்கள் ஒரு மகஜரில் கையொப்பம் இட்டுள்ளனர். தொழிலாளர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு யூனியன் ஒத்துப்போகுமா? தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சீர்திருத்தத்துடன் ஒத்துப்போகுமா? இதற்கான பதிலுக்காகக் காலம் காத்திருக்கிறது.

This entry was posted in Automobile Industry, Factory Workers, Labour Laws, News and tagged , , . Bookmark the permalink.