நமது அரசியல்வாதிகளின் நேர்மைக் குறைவு கல்வி நிறுவனங்களுக்கும் பரவுகிறதா?

IIT Madras

IIT சென்னை

இன்று இந்தியாவில் பின்பற்றப்படும் ‘வளர்ச்சித் திட்டம்‘, நவதாரளவாதம் மற்றும் இந்துத்துவா என்ற இரட்டைத் தூண்களின் மீது நிற்கிறது. சமூகத்தில் பெரிய அளவில் நடக்கும் விஷயங்களை சில நிறுவனங்கள் தங்களுக்குள் சுருக்கப்பட்ட வடிவத்தில் வெளிப்படுத்துகின்றன என்பதை நாம் பார்க்க முடியும்.  மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் இவ்விரண்டு தூண்களும் நடப்பில் இருப்பது கடந்த சில ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பக்கம் பார்த்தால், இந்த நிறுவனங்கள் பாதுகாப்புப்பணி, பராமரிப்புப் பணி,  உணவகப் பணி போன்ற கல்வி போதிக்கும் பணி அல்லாத வேலைகளை ஒப்பந்தப் பணிகளாக மாற்றி வருகின்றன. மற்றொரு பக்கம், மறைமுகமாக இந்துத்துவ அரசியல் வளாகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது.

நாட்டைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்த பிரச்சனைகளை எழுப்பிக்கொண்டிருந்த அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்திற்கு (Ambedkar Periyar Study Circle -APSC) அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரத்தைச் சென்னை IIT, 2015ல் திரும்பப் பெற்றது துருதிருஷ்ட வசமானது. வளாகத்துக்குள்ளும்  வெளியிலும் நடைபெற்ற போராட்டங்கள் அளித்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, APSC யின் மீது போடப்பட்ட முறைகெட்ட தடை திரும்பப்பெறப்பட்டது. இருந்தபோதும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். சமீபத்தில் APSC யிடன் தொடர்புள்ள மாணவர் ஒருவர் வளாகத்துக்குள் இந்துத்துவ சக்திகளின் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஆளானார். அவர்  மாட்டுக்கறி விருந்திதொன்றில் கலந்துகொண்டதுதான் தாக்குதலுக்கான காரணம். அவரின் ஒரு கண்ணில் மிகப் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதனால், அவர் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். இந்தப் பயங்கரமான தாக்குதலைத் தொடுத்தவரை படிப்பை விட்டு வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால், நிர்வாகம் அதைச்  செய்யவில்லை. மாறாக, தாக்கியவருக்குக் “கடும் கண்டனம்“ தெரிவித்தனர். இப்படிக் கண்டனம் தெரிவிப்பது என்ற தண்டனை வளாகத்துக்குள் புகை பிடிப்பவருக்கு  அளிக்கப்டும் தண்டனையாகும்!

கடந்த ஆண்டு முன்னாள் ராணுவத்தினராகிய G D பாக்சி என்பவர் வளாக மாணவர்கள் மத்தியில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.  அர்ணாப் கோஸ்வாமி நடத்துகின்றன மிக விஷமத்தனமான ஊடக நாடகங்களில் அடிக்கடி பேசுகின்ற ஓட்டைவாய் இந்த ஆள். அவர், பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது பற்றி பேசினார். பாக்சியின் உரை வெறுப்பு அரசியல்  வகைப்பட்டது என்று மாணவர் ஒருவர்  பிரச்சனை எழுப்பினார். அந்த மாணவர் வலதுசாரி குண்டர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானார். வளாகத்தின் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள், ஆளும் கட்சியின் பிற்போக்குக் கருத்துக்களுக்கு மௌனமான முறையில் அங்கீகாரம் தருகிறார்கள் என்பதை இந்த உதாரணங்கள் வெளிப்படுத்துகின்றன. சென்னை IITயின் நிர்வாகம் நவ தாராளவாத கொள்கைகளையும் தற்போது பின்பற்றுகிறது என்று தோன்றுகிறது. அவர்களில் வளாகத்தில் வேலை செய்யும் தற்காலிக தொழிலாளர்களுக்கு அவர்கள் எந்த மதிப்பையும் அளிப்பதில்லை.

ஜூலை 1 அன்று ஐந்து – ஆறு தொழிலாளர்கள் இயற்பியல் துறையின் சோதனைச்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். ஒப்பந்தக் கூலிகளாக அவர் உழைத்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர், IIT வளாகத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள் என்றும், இருந்தபோதும் அவர்கள் தற்காலிகத் தொழிலாளர்களாகவே உழைத்து வந்தார்கள் என்றும்,  மாணவர்களிடம் பேசியபோது தெரிந்துகொண்டோம். அந்தத் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. இருந்தபோதும், IIT நிர்வாகத்தால்  அத்தொழிலாளர்கள் மின்சார ஊழியர்களாகப் பணியாற்ற வைக்கப்பட்டிருந்தனர். இந்தத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக்காக IIT செய்துள்ள ஏற்பாடுகள் அனைத்து பாதுகாப்பு நியதிகளையும் மீறுவனவாக உள்ளன. மின்சார வயர்களைக் கையாளும் அவர்கள் யாருக்கும் பாதுகாப்பான காலணிகளோ, கையுறைகளோ கொடுக்கப்படவில்லை. அவர்கள் மின்சாரம் பாயும் வயர்களைக் கையாளும்போது மின்சாரத்தை நிறுத்துவதற்கான உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்கள் சிலரிடம் கேட்டோம். மின்சாரத்தை நிறுத்துவது பொறியியல் துறை சோதனைச்சாலையில் நடக்கும் வேலைகளைப் பாதிக்கும் என்றும், வயரிங் வேலைகள் நடக்கும்போது கூட ஒருபோதும் மின்சாரம் நிறுத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இப்படியாக, தொழிலாளர்களின் உயிர் ஆபத்தில் இருக்கிறது. மாணவர்கள் சோதனைச்சாலையில் நுழையும்போது பாதுகாப்பான காலணிகளை அணிவது  பாதுகாப்பின் நிமித்தம் கட்டாயமானதாக இருக்க, மின்சாரம் பாயும் வயர்களைக் கையாளும் தொழிலாளர்கள் சாதாரண காலணிகளை அணியும் நிர்ப்பந்தித்ததைத் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று மாணவர்களே குறிப்பிட்டனர்.

ஆபத்தான நிலையில் பணிசெய்யும்படித் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றாக்குறையாக இருப்பதும் பேரழிவை விலைகொடுத்து வாங்குவதாகும். அதுதான் இப்போது நடைபெற்றிருக்கிறது என்று  தோன்றுகிறது.

ஜூலை 1 அன்று அலுவலகம் ஒன்றில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக இருட்டு வந்த பின்னரும் கூட வேலைசெய்துகொண்டிருந்தனர். தங்களின் வேலைக்காகத் தற்காலிக விளக்கொன்றைப் பொருத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், மின்சாரம்  நிறுத்தப்படவில்லை.  தொழிலாளிகளில் ஒருவரான ஜசீம் அக்ரம்  தற்காலிக விளக்கிற்கு இணைப்பு கொடுத்தபோது மின் தாக்குதலுக்கு ஆளானார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த வயரிலிருந்து தொழிலாளி ஒருவர் அவரைத் தள்ளிவிட்டார். உடனே அவரை, அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும்,  IIT மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். “இன்னும் கொஞ்ச நேரம் நாங்கள் காலத்தை விரயம் செய்திருந்தால் தொழிலாளி இறந்து போயிருப்பார்“, என்று மாணவர்களில் ஒருவர் எங்களிடம் சொன்னார். அத்தொழிலாளி மின் தாக்குதலுக்கு ஆளானது மட்டுமல்லாமல், அவர் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. மின்சாரம் தாக்கியபின் அந்தத் தொழிலாளி கீழே விழுந்ததால் அவரின் தாடையில் காயம் ஏற்பட்டிருந்தது. IIT மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், பின்னர்  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று மாலையே அவர் அங்கிருந்தும் விடுவிக்கப்பட்டார் என்று தகவல்கள் இருக்கின்றன. சம்பவத்திற்குப் பின்பு அத்தொழிலாளி அபாய நிலையில் இருந்ததாகவும் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர்  அவருக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.

சம்பவம் நடந்த பின்னரும் கூட, புதுப்பித்தல் வேலை நடந்த அங்கேயேதான்,  மின் தாக்குதலை ஏற்படுத்திய வயர், தரையில் வயர் குவியலின் மத்தியில் கிடந்தது. மின்சாரம் பாயும் அந்த வயரைக் கண்டுபிடித்து அகற்ற மறுபடியும் ஒரு தொழிலாளர் குழாம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் பாதுகாப்பான காலணிகளோ, பிற பாதுகாப்புச் சாதனங்களோ கொடுக்கப்படவில்லை!

இந்த விபத்திற்குப் பின்னரும் கூடத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச்  செய்வதற்கு IIT அதிகாரிகள் கவலைப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஜெசீம் தவிர அந்தக் குழுவின் பிற தொழிலாளர்கள் அதே இடத்தில், மின்சாரம் பாயும் வயர்களில், பாதுகாப்பான காலணிகளோ கையுறைகளோ இல்லாமல், அதேசமயம் மின்சாரத்தை நிறுத்தாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர் என்று மாணவர்களில் ஒருவர் சாட்சியம் அளித்தார்.

மின்தாக்குதலுக்கு ஆளான தொழிலாளி புலம் பெயர்ந்த பிற தொழிலாளர்களுடன் வேளச்சேரியில் உள்ள இடிந்து விழும் நிலையில் இருந்த குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். தொழிலாளர் கூடம் அங்கே சென்றது. பாதிப்புக்கு ஆளான தொழிலாளி பீகாருக்குத் திரும்பிப் போய்விட்டார் என்று மற்ற தொழிலாளர்கள் எங்களிடம் சொன்னார்கள். பல ஆண்டுகள் மின்சாரத் தொழிலாளியாக IITயில் பணியாற்றிய அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிக ஆபத்தானவையாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதனால் அவர் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார் என்றும் மதிப்பிடத் தோன்றுகிறது. IIT நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற அணுகுமுறையின் காரணமாக, விபத்துக்கு ஆளானத் தொழிலாளிக்கு இழப்பீடு ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி தகவல் இல்லை.  ‘அவர் ஓய்வெடுப்பதற்காக‘ பீகார் சென்றுள்ளார் என்றும், தொழிலாளி நல்ல நிலையில் இருப்பதாகவும்  பாதிக்கப்பட்ட தொழிலாளியின் கண்காணிப்பாளர்  சொன்னவற்றிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நமது நாட்டில், நல்ல உடல் நிலையில் இருக்கும் தற்காலிகத் தொழிலாளி ஒருவர், தனது உடல் வேலை செய்யத் தயாராக இருக்கும்போது, சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்று சில மாதங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்வார் என்பது நம்ப முடியாத ஒன்று.

ஒரு தொழிலாளியின் உயிரைப் பற்றி IIT நிர்வாகம் கவலைப்படவில்லை என்பது வளாகத்துக்குள் அதிகரித்து வரும் இந்துத்துவா அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அதேசமயம்,  தொழிலாளியின் உயிருக்கு மதிப்பில்லை என்ற நவ தாராளவாத வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் முக்கியமான அம்சத்தையும் IIT நடைமுறைப்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

This entry was posted in Contract Workers and tagged , , , , , , . Bookmark the permalink.