கோர்வைக்கு அப்பாற்பட்ட யதார்த்தம் – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் “ஆரோஹனம்”

மறுபடியும் Bipolar Disorder ஆ! என்று சிறிது கூட சலிப்பையோ, பார்த்து பழகிப்போன வழக்கத்தையோ உருவாக்காமல் எல்லா முன்னறிதலையும் சிதைக்கிறது அவரோஹனம் கலந்த “ஆரோஹனம்”. பங்களாக்களில் வீட்டு பணி செய்தும், வண்டி மிதித்து காய் கறிகள் விற்றும் தன் இரண்டு பிள்ளைகளை பராமரிக்க போராடும் பெண், மகளின் பெண் பார்க்கும் நாளுக்கு முந்தைய தினம் காணாமல் போகிறாள். அதே நாளில், நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கும் முக்கிய நிர்வாக சந்திப்பிற்கு car-இல் விரைந்து கொண்டிருக்கும் இரு மேல் தட்டு தோழிகள் ஒரு விபத்தை சந்திக்கின்றனர். இந்த சம்பவங்களுக்கு தொடர்பு என்ன, அறிமுகம் இல்லாத நபர்களை எதிர்பாராத விதங்களில் எப்படி ஒரு சூழல் சித்தரிக்க முடியும் என கடிகாரத்தில் பின்பும் முன்புமாய் கதை வெடிக்கிறது.

தான் “நியாயமாய்” நடந்துக்கொள்ளாததால் வேறொரு பெண்ணை தேடி செல்லும் கணவனை வீட்டை விட்டு வெளியேற சொல்லிய பிறகு, தனி தாயாய் சுதந்திரத்தையும் , துணிகரமான செயல்களையும் விரும்பும் பெண்ணாய் மிரளவைக்கும் கதாபாத்திரமே கதையின் காந்தம். எந்த Bipolar Disorder, மனநிலையை புரட்டி போட்டு குழந்தைகளையுமே நடுங்க வைக்கிறதோ, அதே “குறைபாடு” எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய நம்பிக்கையும் தர கூடியதாக படம் வெளிப்படுத்துகிறது. பளீர் நகைச்சுவையும், சமூக பொருத்தத்திற்கு உட்படாத கூச்சமின்மையும் இக்கதாபாத்திரம் மூலமாக மனதை ஈர்த்து உருக வைக்கிறது.

எப்போதும் வில்லியாக வரும் இரண்டாம் மனைவியான “சித்தி” இம்முறை தமிழ் சினிமாவில் எல்லோர் நலனும் கருதும் உன்னத ஜீவனாக, படம் முழுக்கவே ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் வெவ்வேறு பெண்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறார். ஆண் துணை விரும்பாத பிடிவாத பெண், அதே ஆணின் துணையை ஏற்றும் நீதிமானாய் அசையாமல் நிற்கும் பெண், தாய் என்ன தான் பக்குவத்தை இழந்தாலும் தந்தையை வெறுத்து எதிர்க்கும் பெண், வீட்டையும் மனதையும் வாடகைக்கு விட்டு ஆதரவு தரும் இஸ்லாமிய சற்றே முதிய பெண், தொழில்- புகழ்- சுதந்திரத்திற்காக குடும்பமே தேடிக்கொள்ளாமல் தனிமையாகி விட்டோமே என்று வருந்தும் பெண் – இவ்வாறு வயது, வர்க்கம், ஜாதி, படிப்பு, பணபலம், செல்வாக்கு எல்லாவற்றையும்( வெகு ஜன பெண் உரிமை பேசாமலேயே) அர்த்தம் இழக்க செய்ய முயல்கின்றனர். இந்த பெண்களின் புரிதலுக்காகவும் , பொறுமைக்காகவும் , நட்புக்காகவும், அனுதாபத்திற்காகவும், ஒரு கை சோற்றுக்காகவும், அமைதிக்காகவும், மௌனத்திற்காகவும், அடிமைத்தனத்திற்காகவும், உடல்சுகத்திற்காகவும் ஏங்கும் ஆண்களும் படத்தில் ஏராளம்.

“தப்பாட்டம் வந்தாச்சு” party பாடலில் யாரையும் கண்டுகொள்ளாத ஆட்டம் திரையில் உள்ளவர்களை மட்டும் அல்லாமல் பார்வையாளர்களையும் அச்சம் நாணம் துறந்து நிம்மதி பெருமூச்சு விட தூண்டுகிறது. ஆக, இதுவே திரைக்கதையின் வெற்றி.

This entry was posted in Art & Life, Domestic Workers, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.