This changes everything – ஆவணப் பட விமரிசனம்

this-changes-everythingசுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் என்பது எங்கேயோ இருக்கும் போலார் கரடிகளையும், மற்ற விலங்குகளை பாதிக்கும் பிரச்சனை மட்டுமல்ல. 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நமது பொருளாதார கட்டமைப்புடன் இணைந்து பிண்ணப் பட்டதாகும். கனடாவின் சமூகப் போராளி நவோமி கிளெயின் அவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆவணப் படம் ‘This changes everything’ என்பதன் முக்கிய கூற்று இதுவாகும். இந்த ஆவணப்படத்தில் உலகத்தில் பல்வேறு இடங்களில் நடககும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடக்கும் பல போராட்டங்களுக்கு நம்மை அழைத்து செல்கின்றது. இந்த போராட்ட களத்தில் முதன்மையாக போராடி வருவது பாரம்பரிய சமூகங்களாகும். இந்த போராட்டங்களை ஆவணப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலை அழிப்பது என்பது மனித குணம் அல்ல என்றும், இது முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாகும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கிளெய்ன்.

இயந்திரத் தொழில் புரட்சியிலிருந்து, இயற்கையை கட்டுப்படுத்துவதற்கு மனிதன் வேலை செய்து வருகிறான் – முடிவற்ற வளர்ச்சியை அடிப்படையாக கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவ இயந்திரத்திற்கான தேவையே இந்த கட்டுப்படுத்துதல். கனடா ஆல்பெர்டாவின் போரியால் காடுகள், அமெரிக்கா மோண்டானாவின் வனாந்திரங்கள், கிரீஸ் ஹல்கிடிகியின் பச்சை மலை சரிவுகள் என்று இயற்கையின் பல்வேறு அழகிய முகங்களிலிருந்து நகரும் ஆவணப்படம், அதைச் சிதைக்கும் முதலாளித்துவ கோர முகங்களையும் காட்டுகிறது.

தார் மணல் சுரங்கம் ஆல்பர்டாவில் எண்ணெய் கசிவுகளை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் எடுப்பற்கான டிரில்லிங், எண்ணெய் பைப்புகளை கட்டுதல், நிலக்கரி சுரங்கம், நிலக்கரியை சுமக்க ரயில் பாதைகள் என்று பல வகையான ‘வளர்ச்சிகள் மோண்டானாவை சிதைத்து வருகிறது. 2008 நிதி நெருக்கடியில் ஏற்பட்ட உலக கடன் கொடுத்த நிறுவனங்களின் கைப்பிடியுல் உள்ள கிரீஸ், தனது அனைத்து வளங்களையும் முதலீட்டார்களுக்கு கொடுக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது. ஹல்கிடிகியின் மலைச்சரிவுகளை கனடா நிறுவனம் எல்டொராடோ தங்கத்திற்காக சுரண்டப் போகிறது, இன்று படிம எரிபொருள்களின் ஆபத்துகளையும் அதனால் ஏற்பட்டுள்ள பூமி வெப்பநிலை மாற்றத்தை பற்றி நாம் அறிந்தும் இந்த வளர்ச்சிகள் முன்னெடுத்து செல்லப் படுகின்றன.

இந்த இடங்களில் எல்லாம் நடக்கும் சுரணடல்களை எதிர்த்து போராடுவது அங்கு வாழும் உள்ளுர் மக்கள் தான். வட அமெரிக்காவில் பிறப்புரிமை கொண்ட முதல் நாடு இந்திய சமூகங்கள் இயற்க்கையை அழிக்கும் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுகின்றனர். கிரீஸில் மக்கள் மேல் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கையும், வளங்களை அன்னிய நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதையும் எதிர்த்து மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வளங்களை காலங்காலமாக பாதுகாத்து தலைமுறைகளாக அனுபவித்து வரும் உள்நாட்டு சமூகங்களை போல சுரண்டல்களுக்காக வரும் கார்ப்பரேட்களுக்கும் அதைச் சார்ந்த நாடுகளுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. அவர்கள் எங்கோ உட்கார்நது கொண்டு லாபத்திற்காக முடிவு எடுக்கிறார்கள். வளங்களை நிர்வகிப்பதற்கும், சமூகத்திற்கு தேவையான மின்சக்தி உருவாக்குவதற்கும், உள்ளுர் சமூகங்களுக்கு உரிமைகளையும் செயலான்மைகளையும் தர வேண்டும் என்று ஆவணப்படம் வலியுறுத்துகிறது.

லாபத்திற்காக முதலாளிகள் படையெடுக்கும் வளரும் நாடுகளுக்கு படம் நகர்கிறது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள சோம்பேட்டா என்பது கடலோரத்தில் உள்ள சமூகமாகும். இங்கு நிலக்கரி தெர்மல் மின்தயாரிப்பு நிலையம் கட்டப்படுவதற்கு திட்டம் உருவாகியுள்ளது. இத்திட்டம் இங்குள்ள ஈரநிலங்களை பாதிக்கும் என்பதால், சமூகம் இந்த திட்டத்தால் அவர்களுக்கு ஒன்றும் பயனில்லை என்றும் அவர்களது வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை கூலி வேலைக்கு தள்ளும் என்று அறிந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து போராடி திட்டத்தை கைவிடச் செய்தனர். இது ஒரு பெரிய வெற்றி என்றாலும் இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் நிலைமை கவலையிளிப்பதாக உள்ளது. இரண்டிலக்க வளர்ச்சியை நாடும் நமது ஆட்சியாளர்களால் நாடெங்கும் 500 தெர்மல் மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றை எதிர்த்து போராடுவது ஏழைகள்தான். நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏழ்மையை போக்கும் என்ற ஆட்சியாளர்களின் கூற்றை இது பொய்யாக்குகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு ஆவணப்படம் வைக்கும் ஒரு தீர்வு மறுசுழற்சி மின்சக்திகள். இதற்காக சைனாவையும், ஜெர்மனியையும் உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது. ஜெர்மனி தனது 70சத மின்சாரத் தேவையை மறுசுழற்சி மின்சக்தி வழியாக பெறுகிறது. மேலும் மையப்படுத்தபட்ட மின் தயாரிப்பிலிருந்து பரவலாக்கபட்ட மின் தயாரி;ப்பிற்கு மாறியுள்ளது. சோலார் பேனல்களை தயாரிப்பதில் சைனா முதலிடம் வகிக்கிறது. 2016க்குள் தனது அனைத்து நிலக்கரி மின்தயாரிப்பு நிலையங்களை மூடுவதற்கு சைனா முயற்சி எடுத்து வருகிறது.

ஆனாலும் ஆவணப்படும் நிலைநிறுத்தும் தீர்வு அதாவது மறுசுழற்சி மின்தயாரிப்பு செய், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடு என்பது அளவிற்கு மீறி எளிமையாக உள்ளது. குறிப்பாக சைனாவில் உள்ள சோலார் தொழிற்சாலைகள் மற்ற தொழிற்சாலைகளை விட மாறுபட்டவை அல்ல. சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன, தொழிலாளர்களை சுரண்டுகின்றன. உதாரணமாக சோலார் செல்களை உருவாக்கும் சைனா ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மறுசுழற்சிக்கு உட்படுத்தாமல் சிலிக்கான் டெட்ரா க்ளோரைடை வெளியேற்றுகின்றன. இவை நச்சுத் தன்மை உண்டதாகும். மேலும் இம்முயற்சிகள் முதலாளித்துவ கட்டமைப்புகளை மாற்றுவதில்லை – ஒரு தொழில்நுட்பம் இன்னொரு தொழில்நுட்பத்தை மாற்றுகிறது அவ்வளவு தான்.

ஜெர்மனியின் உதாரணமும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஆவணப்படத்தை தொடர்ந்து நடந்த உரையாடலில் ஒரு ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர் எவ்வாறு ஜெர்மனி நுகர்வோர் கலாச்சாரத்தை சார்ந்தது என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழலை பாதிக்கும் பிரச்சனைகளை மாற்றும் தீர்வுகள் இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது – நுகர்வதை குறைத்தல், நுகரும் பொருட்களை மாற்றுதல், முக்கியமாக லாபத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார கட்டமப்பை தூக்கி எறிய வேண்டியுள்ளது.

This entry was posted in Art & Life, Environment and Working Class, தமிழ் and tagged , , . Bookmark the permalink.