FICCI செயற்குழு உறுப்பினரின்  SPEL செமிகண்டக்டர்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உரிமை மறுப்பு

மத்திய பிஜேபி அரசின் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்ட சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகிக்கிறது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பு (FICCI). தொழிற் சங்கம் அமைத்தல், கூட்டு பேரம் ஆகியவற்றை எதிர்த்து வருகின்றது இந்த அமைப்பு. இதில் செயற்குழு உறுப்பினராக உள்ள வாலிங்ரோ குழு, எஸ்.பி.இ.எல் செமி கண்டக்டர்ஸ் தொழிற்சாலையை 1988லிருந்து 25 வருடங்களாக நடத்தி வருகிறது. தொழிற்சங்கம் அமைத்ததற்காக, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 25 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

photo0137photo0135

இத்தொழிற்சாலையில் 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரமாகவும், மற்ற தொழிலாளர்கள் தற்காலிகமாகவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வரும் டிப்ளமோ, ஐடிஐ படித்த நிரந்தர தொழிலாளர்களுக்கு ஊதியம் ரூ 20000 ஆகும், 15 வருடங்களாக வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். அவர்களுக்கு ஊதியம் 10000ரூபாய் மட்டுமே. ஊதிய உயர்விற்கு கூட்டு பேர முறை அமல்படுத்தப்படுவதில்லை, நிறுவனத்தின் தயவில் அவ்வப் போது ரூ50 – ரூ170 என மிகக் குறைவான ஊதிய உயர்வே கொடுக்கப்படுகிறது எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

வேலை நேரம் 3 ஷிஃப்ட்டுகளில் 8 மணி நேர வேலை எனினும், 12 மணி நேரம் வரை வேலை, தேசிய விடுமுறைகளில் வேலை வாங்குவது, மற்றும் அப்போது வேலைக்கு வராத தொழிலாளர்களின் விடுமுறை நாட்களை கழிப்பது, முக்கியமாக கூடுதல் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் தராதது எனத் தொழிலாளர்கள் பல உரிமை மீறல்களை கூட்டிக்காட்டுகின்றனர். நிர்வாகமே தொழிற்சாலைக்குள் உணவு விடுதி நடத்தியும், உணவு சலுகை அளிக்கப்படுவதில்லை. மாதம் 1200ரூபாய் தொழிலாளர்கள் உணவுக்காக செலுத்த வேண்டியுள்ளது. தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்கப்படவில்லை. போதுமான மருத்துவ காப்பீடு அளிக்கப்படவில்லை. இ.எஸ்.ஐ பலருக்கு கொடுக்கப்படவில்லை மேலும் பெயரளவிற்கே உள்ளது.

இது குறித்து புகார்களின் மேல் நடவடிக்கைகள் எடுப்பதற்கு தொழிலாளர் நலக்குழு அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், நிர்வாகம் தனக்கு சாதகமான தொழிலாளர்களை வைத்து குழுவை நடத்தி வருகிறது. இதனால் விரக்தி அடைந்த தொழிலாளர்கள் டிசம்பர் 2013 அன்று சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளனர். சங்கம் ஆரம்பித்த 4 மாதத்திலேயே சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் உட்பட 3 தொழிலாளர்களின் மேல் பொய் குற்றம் சுமத்தி, தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. தொழிலாளர் நலக்குழு உறுப்பினரை தாக்கியதாக சுமத்தபட்ட புகார் குறித்த வழக்கு தொழிலாளர் துறையில் நிலுவையில் உள்ளதாகவும், இதுவரை நிருபணம் செய்யவில்லை எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நிர்வாகம் தன்னிச்சையாக இத்தொழிலாளர்களை நவம்பர் 2014ல் நிரந்தரப் பணிநீக்கம் செய்துள்ளது. தொழிற்சங்கத்தில் இணையாத 100 தொழிலாளர்களுக்கு மட்டும் நிர்வாகம் 2014 ஜனவரியில் 1800ரூபாய் ஊதிய உயர்வு கொடுத்து உள்ளது.

மேலும் 4 வருடங்களாக அப்பிரன்டைசுகளாகவும், டிரெயினிகளாகவும் வேலை செய்து நிரந்தர பணிக்காக 6 மாதங்களாக ப்ரபேஷனில் இருந்த தொழிலாளர்களை, சரியாக வேலை செய்யவில்லை என நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இத் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து தொழிற்சங்கத்தின் சார்பாக, தொழிலாளர்கள் 14, ஏப்ரல் 2015 அன்று உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். அரசு மற்றும் காவல்துறை உதவியை கொண்டு 9 நாட்களாக நடந்த இந்த போராட்டத்தை முறியடிக்க முயற்சித்தது. தொழிற்சாலையை விட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 54 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக 25 தொழிலாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 தொழிலாளர்களின் மேல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியும், தொழிலாளர்களின் மேல் செலுத்தபட்டுள்ள அனைத்து புகார்களை வாபஸ் வாங்கக் கோரியும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும், கூட்டு பேர உரிமைக்ககாவும், தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை உறுதியுடன் மேற் கொண்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தின் போது நிர்வாகம் புதிய ஆட்களை வைத்து தொழிற்சாலையை சட்ட விரோதமாக இயக்குவதை தடுப்பதற்கு தொழிலாளர்கள் உயர்நீதி மன்றத்தை நாடி, வென்றுள்ளனர். ஆனாலும் தொழிற்சாலையை இயக்குவதை நிறுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தொழிலாளர்கள் ஒற்றுமையாக சங்க உரிமைகளை நிலைநாட்டுவதை தடுப்பதற்காக ஆதிக்க சக்திகளின் உதவியுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது நிர்வாகம். இந்த சட்டவிரோத போக்குகளை சட்டரீதியாக நிலைநாட்டுவதே, மத்திய அரசு தொழிலாளர் சீரதிருத்தங்கள் கொள்கைகளாகும், இவற்றை முறியடிக்க தொழிலாளர்கள் ஒன்று கூடுவோம்.

This entry was posted in Electronics Industry, Factory Workers, News, Workers Struggles, தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.