நோக்கியா இன் இந்தியா – நாம் கற்க மறந்த பாடங்கள்

அறிமுகம்
2009ல் நோக்கியா கைப்பேசி தயாரிப்பு தொழிற்சாலையில் சேர்ந்த போது, அமிர்தா 12வது வகுப்பு முடித்த 18 வயதான இளம் தொழிலாளர். ஆறு வருடங்கள் கழித்து நோக்கியா தொழிற்சாலை மூடிய போது அவர் ஒரு இளம் தாயார். அவருடைய கணவர் கட்டிட வேலை பார்க்கிறார். நோக்கியா மாத வருமானத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை இருந்தது. 27 வயதிலேயே ஓய்வு பெற்று, வேலை வாய்ப்பின்றி வீட்டில் உள்ள அவருக்கு திக்கு தெரியாத காட்டில் விட்டது போல் உள்ளது. கோபம் ஏமாற்றம் என்ற உணர்வுகளின் மத்தியில் தன்னுடைய நிலைமைக்கு யார் காரணம் என்று புரியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் தான் மார்ச் 2013ல், நோக்கியா நிர்வாகமும் நிரந்தரத் தொழிலாளர்களும் மூன்று வருட ஊதிய ஒப்பந்தம் போட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்த நிர்வாகம் ஒப்பு கொண்டிருந்தது. தனது வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்று தொழிலாளர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் இரண்டே வருடங்களில் நோக்கியா தொழிற்சாலை மூடும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்த போது இது ஒரு கனவாக மாறியது. தங்களுடைய வேலை நிலைமைகளை மாற்றத் தெரிந்த தொழிலாளர்களுக்கு இதை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை.

நோக்கியா தொழிற்சாலை மூடுவதற்கு முன்னர், பன்னாட்டு நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நோக்கியாவை விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே போடபட்டது. இந்த பரிமாற்றத்தில் இந்திய தொழிற்சாலை இடம் பெறவில்லை. 2013 ஆண்டில் நோக்கியா வரி முறையாக செலுத்தவில்லை என்று இந்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது. வரி பாக்கியை செலுத்துவதற்கு அரசு தொழிற்சாலையின் சொத்துக்களை முடக்கியது. தொழிற்சாலை புது நிர்வாகத்திற்கு மாறாததற்கு வரி பிரச்சனையையும், இந்திய அரசையும் நோக்கியா காரணம் காட்டியுள்ளது.

பல தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும் இந்த காரணத்தையே நோக்கியாவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சித்தரித்துள்ளன. நோக்கியா முன்மாதிரியான(model) நிர்வாகமாகவும், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எடுத்துக் காட்டாகவும், இந்த ஊடகங்கள் முன் வைக்கின்றன. இதன் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் நோக்கியாக்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவை என்றும், இந்திய அரசு பழைய கால சட்டங்களை வைத்து இந்திய வளர்ச்சியை தடுப்பதாகவும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முதலாளித்துவ அரசியல்லாதிகளும் இதை ஏற்றுக் கொண்டு தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களே இந்திய வளர்ச்சியை கொடுக்கும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசு வில்லனாகவும் நோக்கியாவும், தொழிலாளர்களும் பலிகடாக்கள் என்று அமிர்தா போன்ற தொழிலாளர்களும் உள்வாங்கி வருகின்றனர்.

நோக்கியா தொழிற்சாலை மூடி ஒரு வருடமாகிறது. அரசியல்வாதிகளும், நோக்கியாவும் மைக்ரோசாஃப்டுகளும் நோக்கியா தொழிலாளர்களை விட்டு எங்கோ சென்று விட்டனர். ஒரு பக்கம் மத்திய அரசு மேக்-இன்-இந்தியா வையும், மாநில அரசு – சர்வதேச முதலீட்டார்கள் மாநாட்டையும் தங்களுடைய வெற்றியாக பறை சாற்றுகின்றனர். இன்னொரு பக்கம் விலைக்கு வாங்கிய ஒரே வருடத்தில் நோக்கியாவை வாங்கியது நிர்வாக தவறு என்று மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. நோக்கியாவின் பழைய தொழிலாளர்களை உலகம் முழுதும் வேலையிலிருந்து நீக்கி வருகிறது. நடந்து முடிந்த செயல்களை பார்க்கும் போது உண்மையான பலிகடாக்கள் தொழிலாளர்களும் இந்திய மக்கள் மட்டும் தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் நோக்கியாவின் இந்திய வரலாறை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.

நோக்கியாவின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் நோக்கியாவின் தொழிலாளர் பார்வை எவ்வாறு இருந்தது, நோக்கியாவின் உற்பத்தி கட்டமைப்புகள் எவ்வாறு தொழிலாளர்களை நேரடியாகவும்(ஒப்பந்த தொழிலாளர்), மறைமுகமாகவும்(சப்ளையர் நிறுவனங்கள்) சுரண்டியன, நோக்கியாஅரசின் சலுகைகள் மூலம் எவ்வாறு லாபம் அடைந்தது என்பதை காண்போம்.

நோக்கியா இந்தியாவின் நிதிகளை ஆய்வு செய்வதன் மூலம் நோக்கியா இந்தியா நிர்வாகத்தின் மூலம் மகத்தான லாபம் அடைந்ததையும், வருவாயில் வெறும் 5சதம் வரி விதித்த போது அதைக் கட்ட மறுத்ததையும் நாம் காண்போம். நோக்கியா இந்திய தொழிற்சாலை மூடுவதற்கு இது காரணமாக இருக்க முடியாது என்றும் மைக்ரோசாஃப்டின் ஸ்மார்ட் போன் யுத்தி மற்றும் வியட்னாமுடன் மைக்ரோசாஃப்டின் உறவு இந்தியத் தொழிற்சாலைக்கு சாவு மணி அடிக்க காரணமாக இருப்பதையும் நாம் காணலாம். இதே கொள்கைகளை தொடர்வதன் மூலம் இந்திய அரசு தொழிலாளர் வர்க்க சுரண்டல்களுக்கு துணை போவதையும் நாம் ஆராய்வோம்.

நோக்கியாவிற்கும் மாநில அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்
நோக்கியா மற்றும் சப்ளையர் நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை
தொழிலாளர்களின் போராட்ட அலை
நோக்கியாவில் உள்ள முதலாளித்துவ நிலை
நோக்கியாவின் வரி தகராறு, மைக்ரோசாப்ட் இடம் விற்பனை, மற்றும் அதை தொடர்ந்த ஆலை மூடல்
நோக்கியா பின்லாண்டிற்கு சேர்ந்த அதீத லாபங்கள்
நோக்கியா தொழிலாளர்களின் இன்றைய நிலைமை
நவீன தாராளமயக் கொள்கை வழியில் நோக்கியா தொழிற்சாலையின் பயணம்
அரசு கற்க விரும்பாத பாடங்கள்

நோக்கியாவிற்கும் மாநில அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம்
2005ல் திருபெரும்புதூரில் கைப்பேசி தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கு மாநில அரசும் நோக்கியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யு) போட்டன. தொழிற்சாலை அமைப்பதற்கு நோக்கியாவிற்கு அரசு என்னன்ன சலுகைகள் கொடுக்கும் என்றும், நோக்கியா வருவதனால் மாநிலத்திற்கு என்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்று எம்.ஓ.யு எடுத்துரைக்கிறது. நோக்கியாவிற்கு மட்டுமல்லாமல், நோக்கியாவின் சப்ளையர்கள் – பாக்ஸ்கான், சால்காம்ப், ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், பிஓய்டி, ஜபீல், லைட்ஸ்ஆன், வின்டெக் – ஆகியவற்றிற்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும்.

நோக்கியா ஆலை அமைப்பதற்கு அரசு 200க்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இந்த நிலங்கள் ஏற்கனவே அங்கிருந்த கிராமங்களில் இருந்த மக்களிடமிருந்து கையகப்படுத்தபட்ட தனியார் மற்றும் பொது நிலங்கள் ஆகும். இவற்றை குறைந்த விலையில் அதாவது 99 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 4 லட்ச ரூபாய் என்ற கணக்கில் அரசு நோக்கியாவிற்கு குத்தகைக்கு விட்டது. 10 வருடங்களுக்கு விற்பனை வரி சலுகை, தடையில்லாத மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் என பல சலுகைகளை அரசு நோக்கியாவிற்கு வழங்கியது. இதைத் தவிர சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதால் மத்திய அரசின் சலுகையின் மூலம் இறக்குமதி வரி விலக்கும் உண்டு .

இந்த சலுகைகள் பெறுவதற்கு நோக்கியா என்ன உத்தரவாதம் அளித்தது என்றால் எதுவும் இல்லை. நோக்கியா குறிப்பிட்ட காலத்திற்கு உற்பத்தி செய்வோம் என்று உத்தரவாதம் தரவில்லை; குறிப்பிட்ட வேலை வாய்ப்புகள் தருவோம் என்று குறிப்பிடவில்லை; ஊதியம் பற்றி எதுவும் இல்லை. நோக்கியா தனது வர்த்தகத்தின் மூலம் வரிப்பணத்திற்காவது ஏதாவது உத்தரவாதம் தந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. மாறாக தொழிற்சாலை வந்தால் மாநிலத்திற்கு நன்மை என்ற ஒரே வரியில் நோக்கியாவின் கடமைகள் அனைத்தும் அடங்கி விட்டன. நோக்கியா மட்டுமல்ல இன்று சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில் நிறுவனங்களுடன் போடப்படும் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதையே பிரதிபலிக்கின்றன.

தொழிலாளர்கள் கட்டுப்பாடு குறித்து, அரசு நோக்கியாவிற்கு சில உத்தரவாதங்களை அளித்துள்ளது: அவை பயிற்சியாளர்கள்(Apprentices) சட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் திறன்களை வளர்ப்பது, டிரெய்னிங் பீரியட் முடிந்த பின்னர் அவர்களை தகுதி அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி கொள்வது, வேலை நிலைமைகளில் உள்ள சட்ட விதிமுறைகளை தளர்த்துவது (குறிப்பாக ஷிஃப்ட் நேரத்தை அதிகரித்தல், பெண் தொழிலாளர்கள் இரவு ஷிஃப்ட்களில் ஈடுபடுத்துதல், 24 மணி நேர உற்பத்தி), நிர்வாகம் தொழிலாளர்களுக்கு இடையே முரண்பாடுகள் எழும் போது அதை வேகமாகவும் சுமூகமாகவும் தீர்த்து வைப்பது, சிறப்பு பொருளாதார மண்டலத்தை ‘பொது நிறுவனமாக’ அறிவிப்பது, எந்த சட்டவிதிமுறைக்கு உட்படாமல் தொழிலாளர்களை நியமித்தல், தொழிலாளர் துறையிலிருந்து சிறப்பு பொருளாதார மண்டல அதிகாரிக்கு தொழிலாளர்களின் கட்டுப்பாடு குறித்த பொறுப்பை மாற்றுதல் ஆகும்.

இந்த உத்தரவாதங்களை ஆராய்ந்தாலே நோக்கியா தொழிலாளர்களின் உரிமைகளை பொருட்படுத்த தயாராக இல்லை என்று தெரியும். குறிப்பாக இன்றைக்கு உள்ள சட்டங்களை, ஜனநாயக நடைமுறைக்கு உட்படுத்தாமல், தன்னுடைய லாபத்திற்காக தளர்த்துவதற்கு நோக்கியா முனைந்துள்ளது. அதற்கு அரசும் துணை போயுள்ளது. இதிலிருந்து எழும் தொழிலாளர் போராட்டங்களை தடுப்பதற்கு, நோக்கியா பொதுத் துறை என்ற தகுதியையும் பெருகிறது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலை செய்ய கடமைபட்டுள்ள தொழிலாளர் துறையிலிருந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை சுமூகமாக இயக்க கடமைப்பட்டுள்ள அதிகாரியிடம் கொடுத்தால், அவர் யாருக்கு துணை போவார்?

நோக்கியா மற்றும் சப்ளையர் நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை
நோக்கியா ஒப்பந்தத்தில், பயிற்சியாளர் சட்டத்தின் மூலம் திறமையுள்ள தொழிலாளர்களை உருவாக்கும் என்று கூறியுள்ளது. தொழிலாளர்களின் திறன்களை வளர்ப்பது மட்டுமே பயிற்சியாளர் சட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக 500க்கும் அதிகமாக தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகளில் பயிற்சியாளர்களை தனியாக ஒரு கட்டிடத்தில் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். டிரெயினிகளை குறைந்த ஊதியத்தில் வேலையில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

நோக்கியா எம்ப்ளாயி ஸ்டான்டிங் ஆர்டரின் படி, டிரெயினிகள் 1 வருடத்திலிருந்து 3 வருடம் வரை நோக்கியாவில் பயிற்சியாளர்களாக இருக்கலாம். நோக்கியாவில் வேலை செய்த தொழிலாளர்கள் ஏராளமானோர் 15 மாதங்கள் டிரெயினிகளாக வேலை செய்ததாகக் கூறினர். அவர்களுக்கு உண்மையான டிரெயினிங் 2 மாதம் வரை நடந்தது. அதன் பின்னர் அவர்கள் மற்ற தொழிலாளர்களுடன் உற்பத்தியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஊதியம் என்பது உதவித் தொகை(stipend) என்ற பெயரில் கொடுக்கப்பட்டது. அது மற்ற தொழிலாளர்களின் ஊதியத்தை விட குறைவாகவே இருந்தது. நோக்கியாவில் மட்டுமல்ல, அதன் சப்ளையர் நிறுவனங்களிலும் அதே நிலை தான். குறிப்பாக நோக்கியாவின் முக்கிய சப்ளையர் ஃபாக்ஸ்கானில் டிரெயினி காலம் 3 வருடமாகும்.

டிரெயினிகள் 15 முதல் 36 மாதங்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வதே, நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான். நோக்கியா ஸ்டான்டிங் ஆர்டரில் குறிப்பிட்ட படி பார்த்தால், டிரெயினிகளுக்கு நிரந்தர வேலை தர வேண்டும் என்று உத்தரவாதம் இல்லை. நோக்கியாவில் டிரெயினிகள் நிரந்தரமாக்கப்பட்டனர் ஆனால் சப்ளையர் நிறுவனம் ஃபாக்ஸ்கானில் டிரெயினிகள் 3 வருட வேலைக்கு பின்னர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். அப்போது அவர்கள் யாருக்காக இந்த வேலையை கற்று கொள்கின்றனர்?

நோக்கியாவும் சப்ளையர் நிறுவனங்களும் தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி வந்தனர். 2011ல் வெளியான ‘ஃபோனி ஈக்வாலிட்டி’ என்னும் அறிக்கை நோக்கியாவில் 20சதம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்தனர் எனப் பதிவு செய்துள்ளது . மைய உற்பத்தியிலோ, அல்லது இடைவிடாத உற்பத்தியிலோ, ஒப்பந்த தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். ஆனால் நடைமுறையில் இது நடந்து கொண்டு தான் வருகிறது. நோக்கியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் மைய உற்பத்தியில் ஈடுபடவில்லை என்று நோக்கியா கூறியுள்ளது. ஆனால், மைய உற்பத்தி என்பதை நிறுவனமே முடிவெடுக்கும் போது எவ்வாறு அது சரியாக இருக்கும் என்று இந்த அறிக்கை வினா எழுப்புகிறது. நோக்கியாவின் முக்கிய வணிக நடவடிக்கையில், வேர்ஹவுஸ் வேலைகள் அதாவது கிடங்கு வேலைகள் முக்கியமாகும். எப்படி அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மைய உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் என்று கருத்தில் கொள்ளலாம் என்றும் அறிக்கை முன் வைக்கிறது.

சப்ளையர் நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை 60சதம் வரை எட்டியது. காண்டிராக்டர் நிறுவனங்கள் மூலம் வரும் இந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் பயன்கள் குறைவாக கொடுக்கப் பட்டது. இந்தியாவில் 93சத மக்கள் எந்த பாதுகாப்பின்றி வேலையில் ஈடுபடுத்தப் படுவதால் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிக்கும் சட்டம் 1970ல் இயற்றப்பட்டது. ஆனால் பன்னாட்டு கம்பெனிகளுக்காக அரசு தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்கின்றது.

வேண்டும் போது வேலை வாய்ப்பு வேண்டும் போது ஆட்குறைப்பு என்பதே இன்று முதலாளிகளின் முழக்கமாக உள்ளது. குறைந்த பட்ச ஊதியம் கூட இல்லாமல், அவர்களுக்கு வேண்டும் போது வேலை நீக்கம் செய்தால், தொழிலாளர் வர்க்கம் எவ்வாறு வாழ்வது என்பதை பற்றி முதலாளிகளுக்கும் கவலையில்லை, அரசுக்கும் கவலையில்லை. நோக்கியா தொழிற்சாலை மூடும் காலத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சத்தமின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு எந்த நிவாரணமும் தரப்படவில்லை. அடுத்து பயிற்சியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். நோக்கியா தன்னுடைய டிரெயினி தொழிலாளர்களுக்கு சிறிய தொகையை நிவாரணமாகக் கொடுத்தது. ஆனால் சப்ளையர் நிறுவனங்கள் அதையும் தரவில்லை.

தொழிலாளர்களின் போராட்ட அலை
நோக்கியா தொழிற்சாலையில் 2006லிருந்து உற்பத்தி வெகுவேகமாக முன்னேறியது . 2006ல் பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். உற்பத்தி அதிகமாக தொழிலாளர்களின் வேலை பளு அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற ஊதியம் இல்லை. 2009ல் தொழிலாளர்கள் ஊதியம் 3400லிருந்து 5400 வரை இருந்ததாக தெரிவித்தனர். ஒரு பக்கம் நிர்வாகம் லாபத்தை அதிகரிக்க இன்னொரு பக்கம் தொழிலாளர்களின் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்ற நிலையில் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். 2009-2010 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர் போராட்ட அலை வீசியது.

அக்டேபர் 2010ல், அம்பிகா எனும் நிரந்தரத் தொழிலாளர் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி இறந்தார். கூடுதல் உற்பத்தி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக நடந்த இயந்திரக் கோளாரில் இவர் இறந்தார் எனத் தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். இந்த நிகழ்வுகள் வெளியே தெரிய, பன்னாட்டு அமைப்புகள் நோக்கியாவில் உள்ள தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்து எழுத ஆரம்பித்தனர்.

தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களை நடத்துவதை தடுக்க முதலில் நோக்கியா மற்ற நிறுவனங்களைப் போலவே நடந்தது. தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். நிர்வாகத்தை ஆமோதிக்கும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை வைத்து 2009ல் ஊதிய ஒப்பந்தம் போட்டனர். ஆனாலும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை கைவிடவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கோரியும், ஊதிய உயர்வு கோரியும், 2010ல் போராட்டங்களை தொடர்ந்தனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக 2010லும், 2013லும் நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்துடன் நிர்வாகம் ஊதிய ஒப்பந்தம் செய்தது. இவை இரண்டுமே நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், தொழிலாளர்களுக்கு வீடு வரை போக்குவரத்து, பெண் தொழிலாளர்களுக்கு கிரெஷ் வசதி போன்ற தொழிலாளர் நலத் திட்டங்களை அமல்படுத்தியது.

நோக்கியாவில் கொடுக்கப்பட்ட ஊதியமோ, நலத் திட்டஙகள் நோக்கியாவின் சப்ளையர் நிறுவனங்களில் தரப்படவில்லை. 2010ல், நோக்கியாவின் முக்கிய சப்ளையரான ஃபாக்ஸ்கானில் பயிற்சியாளர்களுக்கு 2995ரூபாய் ஊதியம் கிடைத்தது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ4000 கிடைத்தது. இது நோக்கியா தொழிலாளர்களுக்கு கிடைத்த ஊதியத்தில் பாதியே ஆகும். நோக்கியா தொழிலாளர்களின் நிலைமையை விட சப்ளையர் நிறுவனங்களின் பணி நிலைமைகள் மோசமாக இருந்தன.

பாக்ஸ்கான் தொழிலாளர்கள் 2010ல் பல போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக திடீர் வேலை நிறுத்தத்தில் ஆரம்பித்து 37 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் நடத்தினர். பாக்ஸ்கான் நிர்வாகம் தொழிலாளர்கள் போராட்டங்களை நசுக்க, 23 தொழிலாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்தது. பாக்ஸ்கான் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் போராடிய போது, எல்.பி.எஃப் சங்கத்தை அங்கீகரித்து அவர்களுடன் ஊதிய ஒப்பந்தம் செய்தது. வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களை சங்கத்தில் ஈடுபட மாட்டோம் என்று கட்டாய கையெழுத்து வாங்கியது.

நோக்கியாவின் இன்னொரு சப்ளையர் நிறுவனம் பி.ஒய்.டி தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தின் படி தொழிற்சாலை பொது நிறுவனம் என்ற பெயரில் பி.ஒய்.டி நிர்வாகம் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. தொழிற்சாலையை மூடி சட்ட விரோதமாக லாக்அவுட்டில் ஈடுபட்டது. மற்ற சப்ளையர் நிறுவனங்களான பிளெக்ஸ்ட்ரான்க்ஸ், சால்காம்பிலும் குறைந்த ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர் முறை என தொழிலாளர்கள் நிலைமைகள் மோசமாக தான் இருந்தன.

நோக்கியாவில் உள்ள முதலாளித்துவ நிலை
நோக்கியா உண்மையிலேயே முதலாளிகளுக்கு எடுத்துக் காட்டாக இருந்தது என்று ஊடகங்கள் கூறுகின்றன. அவை உண்மை தானா? அதன் பிண்ணனி என்ன என்று நாம் பார்க்கும் போது போது உண்மை புலப்படுகிறது.

நோக்கியா தொழிற்சாலையில் உள்ள பணிநிலைமைகளை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினார்கள். இங்கு உள்ள பிரச்சனைகளை களைவதற்கு, நோக்கியாவும், அதன் சப்ளையர் நிறுவனங்களும் தொழிலாளர் குழு(works committee)க்களை அமைத்தனர். இவை பெயரளவிற்கே செயல்பட்டன. தொழிலாளர்கள் சங்கம் வைத்து போராடியதனால், தொழிலாளர்கள் பிரச்சனைகள் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தன. நோக்கியாவிற்கு அதனுடைய பிராண்ட் இமேஜ் முக்கியமாகும். நோக்கியாவின் பிராண்ட் உலகளவிலும், இந்தியா அளவிலும் பிரசித்தி பெற்றிருந்தது. தொழிலாளர்களுக்கு முறையான பணி நிலைமைகளை கொடுப்பதனால், இந்த இமேஜ் பாதிக்கப்படாது என்று நோக்கியாவிற்கு தெரியும். நோக்கியா தொழிலாளர் பணி நிலைமைகளை பல முன்னேற்றங்கள் கொண்டு வந்தது. நோக்கியாவின் மேல் தொழிலாளர்கள் மத்தியில் அபிமானம் உருவானது.

நோக்கியா அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சலுகைகள் வழங்கினாலும், பயிற்சியாளர் முறை, ஒப்பந்தத் தொழிலாளர் முறைகளை உபயோகப்படுத்தி 50 சதத் தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாகவே கொடுத்து வந்தது. நோக்கியா ஒரு மாடல் நிறுவனமாக இருந்தால் ஏன் இந்த பாராபட்சத்தை செயல்படுத்த வேண்டும்? நோக்கியா அனைவருக்கும் ஒரே ஊதியத்தை கொடுத்தால் அதனுடைய லாபத்தில் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று பார்த்தோமானால், உண்மையில் நோக்கியாவிற்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலியின் செலவு குறைவு தான்.

2007 முதல் 2010 வரை நோக்கியாவின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்தால்
நோக்கியாவின் வருவாய் – 73, 873 கோடி ரூபாய்
நோக்கியாவின் லாபம் – 4, 115 கோடி ரூபாய்
நோக்கியா தொழிலாளர்களுக்கான செலவு – 843 கோடி ரூபாய்.
ஆக, நோக்கியாவின் வருவாயில் தொழிலாளர்களுக்கான செலவு வெறும் 1.13சதமே. இதில் நோக்கியா தனது தொழிலாளர்களுக்கு செய்யும் நல உதவிச் செலவுகளும் அடங்கும். 2009 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட ஊதிய உயர்வினால், நோக்கியாவிற்கு ஏற்பட்ட தொழிலாளர்களின் செலவு வருவாயில் .3 சதம் அதிகரித்தது. தொழிலாளர்களின் ஊதியம் என்பது நோக்கியாவின் வருவாயில் இவ்வளவு குறைவாக உள்ள போது ஏன் நோக்கியா அனைத்து தொழிலாளர்களுக்கும் சம ஊதியம் கொடுக்கவில்லை?

பாக்ஸ்கான், சால்காம்ப், பி.ஒய்.டி என நோக்கியாவின் சப்ளையர் நிறுவனங்களில் ஏறத்தாழ 15000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். அவர்களின் உழைப்பு இல்லாமல் நோக்கியாவிற்கு உற்பத்தி கிடைக்காது. நோக்கியாவின் சப்ளையர் நிறுவனங்களில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைவாக இருந்தது. அவரகளின் குறைவான ஊதியம் நோக்கியாவின் லாபத்திற்கு அடிப்படையாக இருந்தது. எவ்வாறு அரசு நோக்கியாவிடம் அடிப்படை தொழிலாளர் உத்தரவாதங்களை கோரவில்லையோ, அதே போல் நோக்கியாவும் தனது சப்ளையர் நிறுவனங்களிடம் அடிப்படை உத்தரவாதங்களை கோரவில்லை.

இன்றைய நவீன உற்பத்தியில், நோக்கியா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை முழுவதுமாக அல்லது பெரும் பகுதியை மற்ற நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்கின்றனர். இந்த உற்பத்தி முறையில் நோக்கியாவின் உற்பத்தி அதன் சப்ளையர் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையை சாரந்து உள்ளது. தொழிலாளர்களின் நலன்களுக்கு பொறுப்பு எடுக்கக் கூடாது என்ற நிலைபாட்டிலிருந்தே நோக்கியா, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் உற்பத்தி முறையை கையாள்கின்றனர். சப்ளையர் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் பணிநிலைமைகள் குறித்த பிரச்சனைகளில் நோக்கியாவிற்கும் பங்கு உள்ளது.

தொழிற்சாலைகளில் அமைக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச வசதிகள் குறித்து 1948ல் தொழிற்சாலை சட்டம் இயற்றப்பட்டது. தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் சாப்பிடும் வசதி, ஓய்வு அறை, மருத்துவ வசதி, குழந்தைகள் காப்பகம் கொடுக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை சட்டம் கூறுகிறது. நோக்கியாவில் உள்ள பணிநிலைமைகள் தொழிற்சாலை சட்ட விதிகளை கடைபிடிக்கிறது. சட்டத்தை அமல்படுத்தும் ஒரு நிறுவனத்தின செயல்பாட்டை மாடலாக கருதும் ஊடகங்கள், ஏன் மற்ற நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவதை குறை கூற மறுக்கின்றன? மாறாக தொழிலாளர் பிரச்சனைகளை புறக்கணிக்கும் ஊடகங்கள், நோக்கியா தொழிற்சாலை மூடுவதற்கு தொழிலாளர் சட்டங்கள், அரசின் வரி அதிகாரம் தான் காரணம் என்று ஆணித்தரமாக எழுதுகின்றன. வரிகளின் பிண்ணனி குறித்து அடுத்தப் பகுதியில் ஆராய்வோம்.

நோக்கியாவின் வரி தகராறு, மைக்ரோசாப்ட் இடம் விற்பனை, மற்றும் அதை தொடர்ந்த ஆலை மூடல்
நாம் முன்னர் பார்தது போல், நோக்கியாவில் மிகப்பெரிய தொழிற்சங்கமான நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கம் மார்ச் 2013 இல் நீண்ட-கால ஊதிய ஒப்பந்தத்தை நோக்கியா நிர்வாகத்துடன் நிறைவேற்றியதை தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், நிர்வாகம் அனைவரும் மெச்சி இருந்தனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு 30-50சதம் உடனடி ஊதிய உயர்வை இந்த ஊதிய ஒப்பந்தம் வழங்கியதோடு அடுத்த 3 ஆண்டுகளில் அவர்களுடைய ஊதியத்தை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், 2013 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளேயே உற்பத்தி கணிசமாக குறைக்கப்பட்டது. ஊதிய ஒப்பந்தம் உத்திரவாதம் செய்த பொருளாதார பாதுகாப்பின் மீதான தொழிலாளர்களின் நம்பிக்கை நீடிக்கவில்லை. ஏப்ரல் மாதம் 2014 இன் இறுதியில், ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான நிரந்தர தொழிலாளர்கள் நோக்கியாவில் பணியில் இல்லை.

2006 இல் திருப்பெரும்புதூரில் நோக்கியா உற்பத்தியை துவங்கிய போது, கைப்பேசி விற்பனையில் உலகச் சந்தையில் 36சத பங்குடன் நோக்கியா முன்னிலையில் இருந்தது. 2013 காலகட்டத்திலோ, நோக்கியாவின் சந்தைப்பங்கு 20சதத்திற்கும் கீழே குறைந்தது. ஃபீச்சர் போன்களை காலி செய்த ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியில் தொடங்கி, நோக்கியாவின் இந்த அதிவிரைவான சரிவிற்கான காரணங்கள் குறித்து அதிகமாக எழுதப்பட்டு இருக்கின்றது. சிம்பியன் என்ற சாஃப்டவேரை அடிப்படையாக கொண்ட நோக்கியா ஸ்மார்ட் போன்கள், வேகமாக வளர்ந்த ஆப்பிள் போன்களுடனோ ஆன்ட்ராய்ட் சாம்சங் போன்களுடனோ போட்டியிட இயலவில்லை. 2011 முதல் நோக்கியா வின்டோஸ் சாஃப்ட்வேரை வைத்து ஸ்மார் போன்கள் தயாரிப்பதற்கான மைக்ரோசாப்ட் உடனான கூட்டு முயற்சியும் பலிக்கவில்லை. செப்டம்பர் 2013 இல், மைக்ரோசாப்ட் நோக்கியாவின் அலைப்பேசி வணிகத்தை வாங்குவதாக அறிவித்தது.

2013 இன் ஆரம்பத்தில், இந்திய வருமான வரி அதிகாரிகளால் கணக்கு பரிசோதனைக்கு பிறகு ரூ.1,912 கோடி வரி செலுத்த நோக்கியாவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது (பின்னர் ரூ.7000 கோடிகளாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ.21,000 கோடிகளாகவும் திருத்தப்பட்டது). நோக்கியா பின்லான்ட் இடம் நோக்கியா இந்தியா கட்டிய மென்பொருளுக்கான ஆதாய உரிமைக்கட்டணம் (ராயல்டி) மீது, ஆதாய உரிமைக்கட்டன ஒப்பந்தத்தின் படி, இந்த வரி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை பரவலாக பரிமாற்ற விலை (டிரான்ஸ்பர் ப்ரைசிங்) என்று அழைக்கப்படுகின்ற ஒன்று – அதாவது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு பெருநிறுவனங்கள், தங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றத்தை சந்தை விலைகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்து கணக்கில் காட்ட வேண்டிய நிர்பந்தமே இது.

அலைப்பேசி மென்பொருள் விலையை ஆதாய உரிமைக்கட்டனமாக அரசு கருதுவதை நோக்கியா நிராகரித்ததுடன், அது மூலப்பொருள் இறக்குமதி(import) என்ற அடிப்படையில் வரிவிலக்கிற்கு தகுதியானதாக வாதம் செய்தது. இத்தகராறு இழுவையில் இருக்கையில், வரிச்சுமைக்கு போதுமான நிதியை ஒதுக்காமல் நோக்கியா இந்தியா நோக்கியா பின்லாண்டிற்கு ரூ.3500 கோடிகள் லாபப்பங்காக(டிவிடென்ட்) பரிமாற்றம் செய்தது. வரிக்கு போதுமான நிதி நோக்கியாவிடம் இல்லாததால், வருமான வரித்துறை திருப்பெரும்புதூர் நோக்கியா ஆலையின் சொத்துக்களை செப்டம்பர் 2013 இல் முடக்கியது.

மைக்ரோசாப்ட் இடம் தனது விற்பனையின் ஒரு அங்கமாக இந்த ஆலையும் இடம்பெற வேண்டும் என்பதற்காக, சொத்துக்கள் முடக்கத்தை நீக்க நோக்கியா சட்டத்தை நாடியது. நோக்கியா-பின்லான்டுக்கு அனுப்பப்பட்ட டிவிடென்ட 3500 கோடி ரூபாய் அளவுக்கு நோக்கியா-பின்லான்ட் வரி பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தனையோடு சொத்து முடக்கத்தை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதித்தது. தொழிற்சாலையை விற்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தும் நோக்கியா அலைப்பேசி வணிகத்தை வாங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் திருப்பெரும்புதூர் ஆலையை பெறவில்லை. அதற்கு பதில், 2015 வரை அந்த ஆலையில் கைப்பேசிகளை உற்பத்தி செய்ய நோக்கியாவிற்கு ஓராண்டு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் வழங்கியது. நவம்பர் 2014 இல், நோக்கியா உடனான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் திடீரென முடிவிற்கு கொண்டு வந்தது. திருப்பெரும்புதூர் ஆலை நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற ஆணையின் படி, வரி தகராறில் நோக்கியா-பின்லான்ட் வரிப் பிரச்சனைக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் இந்தியாவில் நோக்கியா உற்பத்தி ஆலை விற்கப்பட கூடும் என்ற நிலைமை இருந்தும், நோக்கியா நிறுவனம் ஆலையை விற்கவில்லை. 2008 இல், நோக்கியா தனது நடவடிக்கைகளை இரண்டு கம்பெனிகளாக பிரித்து பதிவு செய்திருந்தது விற்பனை பிரிவை திருப்பெரும்புதூர் உற்பத்தி ஆலையில் இருந்து தனியாக பிரித்து பதிவு செய்திருந்தது. வரிப்பிரச்சனை எழுந்த போது விற்பனை பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்றிய நோக்கியா திருப்பெரும்புதூர் ஆலையை மாற்றவில்லை. வரிபிரச்சனையையும் ஆலை நிறுவனத்தின் கீழ் இருந்ததனால், லாபத்தின் முக்கிய அம்சமான விற்பனை பகுதிகள் மைக்ரோசாப்டிற்கு மாற்றப்பட்டன. ரூ.586 கோடிகளுக்கு குறைவாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ள நோக்கியாவின் உற்பத்தி ஆலை சொத்துக்கள் வரிச்சுமைகளை தீர்த்திட சிறிதுகூட போதுமானதாக இல்லாததால், தண்டனை மீதான எந்த அச்சமும் இன்றி வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.

சால்கோம்ப் மற்றும் ப்ளேக்ஸ்ட்ரானிக்ஸ் தவிர அனைத்து சப்ளையர்களும் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். வின்டக், லைட்ஸ் ஆன் கைப்பேசி போன்ற சிலர் முன்னராகவே மூடப்பட, பிஒய்டி எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பாக்ஸ்கான் 2014 இல் மூடப்பட்டன.

விண்டோஸ் சார்ந்த ஸ்மார்ட் போன்கள் மீது கவனம் செலுத்துவது என்ற யுக்தியின் அடிப்படையில் நோக்கியா திருப்பெரும்புதூர் ஆலை உடன் போடப்பட்டிருந்த ஒரு வருட ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் ரத்து செய்தது. கையகப்படுத்தல் நிறைவேறிய சமயத்தில் இருந்தே, ஐரோப்பாவில் நோக்கியா ஆலைகளை மூடுவது, சீனாவில் செயல்பாடுகளை குறைப்பது, வியட்நாமில் உற்பத்தியை ஒருங்கிணைப்பது என மைக்ரோசாப்ட் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வரி தகராறு இருந்திராத நிலையிலும் திருப்பெரும்புதூர் ஆலை மூடப்பட்டு இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமே.

நோக்கியாவும் ஊடகங்களும் வரித்தகராறு காரணமாகவே திருப்பெரும்புதூர் ஆலை மூடப்பட்டது என வாதிட்டாலும், எங்கள் ஆய்வின் படி, ஸ்மார்ட் போன்களின் சந்தை தேவையை நோக்கியா தவறாக கணித்தது, சாம்சங், ஆப்பிள் போன்றவையிடம் இருந்து அதிகரித்த போட்டி, உலகளாவிய அலைப்பேசி வணிகத்தை தழுவி மைக்ரோசாப்ட் மற்றும் நோக்கியா எடுத்த முடிவுகள் மற்றும் இழப்புகளை சரிசெய்வதில் தங்களின் சொந்த நலன்கள், மலிவான குறைவாகவே ஒழுங்குப்படுத்தப்படும் வியட்நாம் போன்ற பிற நாடுகளுக்கு நகர்வது வகையான தற்கால அழுத்தங்களும் காரணிகளும் வெளிப்படையாகின்றன. இப்படியாக, தனது உற்பத்தியை நகர்த்துவது மைக்ரோசாப்டிற்கும், இந்தியாவில் ஆலையை மூடி செல்வது நோக்கியாவிற்கும் லாபகரமாக அமைய, அதன் விளைவுகளை தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களுமே நியாயமற்று சுமக்கின்றனர்.

நோக்கியா பின்லாண்டிற்கு சேர்ந்த அதீத லாபங்கள்
நோக்கியாவின் இந்திய செயல்பாடுகளின் பொருளாதாரத்தை டில்லி உயர்நீதிமன்ற ஆணை பட்டியலிட்டுள்ளது:

நோக்கியா பின்லான்ட் நோக்கியா இந்தியாவில் செய்த முதலீடு (1996)

ரூ 35 கோடி

நோக்கியா இந்தியா இந்தியாவில் செய்த முதலீடு (உற்பத்தி வேலை, விலைக்கொடுக்கப்பட்ட வளங்கள், நிறுத்தப்பட்ட சொத்துக்கள் சேர்த்து)

ரூ. 1,858 கோடி

2005-2012 இல் நோக்கியா இந்தியாவின் வருவாய்

ரூ 1,50,700 கோடி

மூலபொருட்கள் வாங்கியதில் நோக்கியா இந்தியாவில் இருந்து நோக்கியா பின்லாண்டிற்கு பரிமாற்றப்பட்ட தொகை

ரூ 57,924 கோடி

1997-2013 வரை நோக்கியா பின்லாண்டால் இந்தியாவில் செலுத்தப்பட்ட வரி

ரூ. 71 கோடி

லாபப்பங்காக நோக்கியா இந்தியாவில் இருந்து நோக்கியா பின்லாண்டிற்கு பரிமாற்றம் செய்யப்பட்ட நிதி

ரூ. 3,500 கோடி

இந்திய அரசிற்கு நோக்கியா இந்தியாவால் செலுத்தப்பட்ட மூலதனவரி

ரூ. 2,181 கோடி

1996 இல் நோக்கியா பின்லான்ட் ரூ.35 கோடியை நோக்கியா இந்தியா பிரைவேட் லிமிடடில் முதலீடு செய்திருந்தது. 1996 இல் இருந்து 2005 வரை நோக்கிய இந்தியாவில் கிடைத்த லாபத்தை கொண்டே, நோக்கியாவை திருப்பெரும்புதூர் ஆலையில் முதலீடு செய்தது. இதன் மூலம் மேலும் நோக்கியா பின்லாண்டுக்கு ரூ.57900 கோடிகளுக்கு அதிகமான வருவாயும் ரூ.3500 கோடிகள் லாபப்பங்காகவும் கிடைத்தது. தெளிவாக சொல்வதானால், நீதிபதிகள் கண்ணா மற்றும் சச்தேவ் கூறியவாறு, “இந்தியாவில் வியாபாரம் செய்வது நோக்கியா பின்லாண்டிற்கு அதீத லாபத்தையும் பலன்களையும் அளித்துள்ளது என்றே தெரிய வருகிறது…”.

நோக்கியா இந்தியா மற்றும் நோக்கியா பின்லான்ட் ரூ.2250 கோடி வரியை இந்திய அரசிற்கு செலுத்தியுள்ளார்கள். இந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகைகள் பற்றிய தெளிவான ஆவணங்கள் இல்லை. ஆனால், எவ்வாறான மானியங்களை நோக்கியா அனுபவித்தது என்பதை சில உதாரணங்கள் வர்ணிக்கின்றன. உதாரணமாக, 2009 முதல் 2012 வரை, கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்படாது உள்நாட்டிலேயே விற்கப்பட்ட நிலையில், ரூ.2400 கோடிக்கு நோக்கியா தவறாக மதிப்புக்கூட்டு வரி விலக்கை பெற்றதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மதிப்புக்கூட்டு வரிவிலக்கு ஏற்றுமதிகளுக்கு மட்டுமே.

கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியாவின் அறிக்கை படி, 2005 மற்றும் 2006 இல் மட்டுமே, உள்நாட்டு கைப்பேசி விற்பனைக்காக நோக்கியா இறக்குமதி செய்த மூலப்பொருட்கள் மீது ரூ.650 கோடி சுங்க வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, பொருளாதார பட்டியல்கள் எதை குறிக்கின்றன என்றால், அரசாங்கத்திற்கான பலன்களும் (வரிகள் ஊடாக) பொதுமக்களுக்கான பலன்களும் (வேலைவாய்ப்பு ஊடாக) மிக நலிந்ததாகவும் குறுகிய வாழ்வு கொண்டதாகவும் இருக்க, நோக்கியா மட்டும் பெரும் லாபத்தை குவித்தது.

நோக்கியா தொழிலாளர்களின் இன்றைய நிலைமை
ஏப்ரல் 2014ல் நோக்கியா தன்னிச்சையான ஓய்வுத் திட்டத்தை(வி.ஆர்.எஸ்) அறிவித்தது. அதற்கு முன்னரே நோக்கியா ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் வேலையை விட்டு நீக்கியிருந்தது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. பயிற்சியாளர்களுக்கு குறைந்த நிவாரணம் கொடுக்கப்பட்டது. சுமார் 7000 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 4-7 லட்ச ரூபாயும், விடுப்பு தொகையும் கொடுப்பதாக நோக்கியா கூறியது. தொழிற் தகராறு சட்டத்தின் கீழ், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலை மூடும் போது அரசுக்கு முறையாக தெரிவித்து அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த சட்டவிதிகளை தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் வி.ஆர்.எஸ் எனும் தந்திரத்தை உபயோகிக்கின்றன. தொழிலாளர்கள் தங்களுடைய வேலைக்காக போராட்டங்கள் நடத்தினர்.

நோக்கியா மைக்ரோசாஃப்;டிற்கு மாறவில்லை என்றாலும், ஒரு வருடத்திற்கு உற்பத்தி ஒப்பந்தம் தருவதாகவும், அதற்குள், வரிப்பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றும் ஊடகங்கள் கூறின. இந்நிலையில் ஏன் இந்த ஓய்வுத் திட்டத்தை நோக்கியா கொண்டு வந்தது? அதுவரை சுமூகமான உறவைப் பராமரித்து வந்த நோக்கியா நிறுவனம், தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டத் தொடங்கியது. தொழிலாளர்களை வி.ஆர்.எஸ்சை ஒப்புக் கொள்ளக் கோரி நிர்ப்பந்தம் செய்தது. போக்குவரத்து வசதிகள் குறைக்கப்பட்டன. பல பெண் தொழிலாளர்கள் இதனால் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்த தொகையை பெற்றுக் கொண்டு வேலையை விட்டு போகாவிட்டால் தொழிற்சாலையை மூடும் போது இதுவும் கிடைக்காது என்று நிர்வாகம் பயமுறுத்தியது. மே மாதம் முடிவதற்குள், சுமார் 5600 தொழிலாளர்கள் வி.ஆர்.எஸ் வாங்கி தங்கள் வேலையை விட்டு சென்றனர்.

சுமார் 950 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று உறுதியுடன் நின்றனர். நவம்பர் 2014ல் நோக்கியா தொழிற்சாலையை முழுவதுமாக மூடியது. 18-20 வயதுகளில் சேர்ந்த இளம்பருவத் தொழிலாளர்களை இன்னும் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு எட்டும் முன்னரே ஓய்வு கொடுக்கும் தொழில் மயத்தைக் குறித்து நாம் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது. 28-30 வயதில் உள்ள இந்தத் தொழிலாளர்கள் வேலை தேடி வேலைச் சந்தைக்கு திரும்பிய போது ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சில பேர் தவிர எவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அவர்களுடைய திறனுக்கு தகுந்த வேலை எதுவும் இல்லை.

இங்கு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் மிகக்குறைவே. அவையும் நோக்கியாத் தொழிலாளர்களை எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. நோக்கியாவில் 5 வருடங்கள் நிரந்தரத் தொழிலாளராக வேலை செய்து 15000ரூபாய் ஊதியம் வாங்கிய ஒரு தொழிலாளர், தன்னுடைய அனுபவத்தை மறைத்து, ரூ6000 ஊதியத்திற்கு திரும்பவும் பயிற்சியாளராக சேர்ந்துள்ளார். இங்கிருக்கும் மற்ற நிறுவனங்களும் துறைகளும் அனுபவம் கூடிய தொழிலாளரை வேலைக்கு சேர்ப்பதில்லை. பல நிறுவனங்களில் 25 வயதைத் தாண்டி விட்டால் வேலைக்கு எடுப்பதில்லை. ஒரு சில மாதத்திலேயே இளம் தொழிலாளரை பயிற்சி கொடுத்து குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கும் நவீன உற்பத்தி முறையில், அனுபவம் என்பது சுமைதான்.

சில நிறுவனங்கள் நோக்கியா தொழிலாளர்கள் சங்கம் வைத்து போராடியதைக் காரணம் காட்டி வேலையை மறுத்துள்ளனர். சில நிறுவனங்கள் நோக்கியாவில் இருந்த மாதிரி வசதிகள் கொடுக்க முடியாது என்று வேiலை வாய்ப்புகளை மறுத்துள்ளனர். ஒரு பக்கம் தொழிலாளர்கள் போராடி தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டினால், அந்தப் புகழ் நிறுவனத்திற்கு சேர்கிறது. இன்னொரு பக்கம் தொழிலாளர்களை உரிமை நாட்டுவதையே பிரச்சனையாக்குகின்றனர்.

நவீன தாராளமயக் கொள்கை வழியில் நோக்கியா தொழிற்சாலையின் பயணம்
நமது தேசத்தின் பொருளாதார வரலாற்றில் நோக்கியா இந்தியாவின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் ஒரு முக்கியமான பக்கமாகும். இந்தியா பொருளாதாரப் பேரரசாக உலகப் பொருளாதார வரைபடத்தில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்கும் என்ற ஒரு கனவு உருவாக்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டால் மிகவும் கவனமாக கட்டமைக்கப்பட்ட இந்த கனவில் அதற்கான பாதைகளும் நிறுவப்பட்டன. முதலீடுகளின் மேல் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தனியார்மயமாக்குதல், எந்தக் கோட்பாடுகளும் இல்லாத ஃப்ரீ மார்க்கெட் என்ற பாதைகள் கொண்ட தாராளமயக் கொள்கைகளை செயலாக்குவதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளும் துணை சென்றனர்.

2005ல் அமலாக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் இந்தக் கொள்கையை சட்டரீதியாக செய்வதற்கு பாதை அமைத்தது. இதன் மூலம், நாட்டின் வளங்களை தனியார் லாபத்திற்கு தாரை வார்த்தல், வேண்டும் போது வேலை வாய்ப்பு – வேண்டும் போது ஆட்குறைப்பு, இந்தியாவின் சந்தையில் அனைத்து முதலீடுகளையும் அனுமதித்தல் என்று சர்வதேச வணிகத்திற்கு அனைத்து சலுகைகளும் அளிக்கப்பட்டன. தாராளமயக் கொள்கைகளில் உள்ள மக்கள், தொழிலாளர், இயற்கை விரோதப் போக்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்த்து பல போராட்டங்கள் வெடித்தன. இதற்கு பதிலாக, அரசு இக்கொள்கைகளின் வெற்றியாக நோக்கியா இந்தியாவை மேற்கோள் காட்டி வந்தது.

நோக்கியா இந்தியா, உண்மையிலேயே எடுத்துகாட்டுதான். ஒப்பந்தம் போடும்போதே நோக்கியா இந்தியா தனது நோக்கங்களில் தெளிவாக இருந்தது. அடிபணியும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், வேண்டும் போது ஆட்குறைப்பு தான் நோக்கியாவிற்கு தேவையாக இருந்தது. தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழுப்பும் பட்சத்தில், விரைந்து அதை தனக்கு சாதகமாக தீர்க்கும் அரசும் நோக்கியாவிற்கு தேவை பட்டது. மாநில அரசிற்கும் நோக்கியாவிற்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இந்த நோக்கங்களை தெளிவு படுத்துகின்றன.

இவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக தொழிலாளர்கள் போராடுவார்கள் என்று ஏன் அவர்கள் யோசிக்கவில்லை? மக்கள் நலன்களை பாதுகாக்க வேண்டிய அரசு ஏன் தொழிலாளர் உரிமைகளை தாரை வார்த்தது? தொழிலாளர்களின் உரிமைகளையும், தொழிலாளர்கள் சட்டங்களையும் ஒரு ஒப்பந்தம் பறிக்கலாமா?
மற்ற நிறுவனங்களை விட நோக்கியாவில் பணி நிலைமைகள் மேலாக இருந்தாலும், நோக்கியாவும் சராசரியாக தான் தன் தொழிலாளர்களை நடத்தியது. 50சதத்திற்கும் மேலாக நிலையற்ற தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியது. நிலையற்ற தொழிலாளர்களுக்கு ஊதியம் குறைந்த பட்ச ஊதியத்தை விட கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர வாழ்க்கையை நடத்தக்கூடிய அளவுக்கு ஊதியம் தரப்படவில்லை. உற்பத்தி பழுவினாலும் பாதுகாப்பு கோளாறினாலும் ஒரு தொழிலாளர் இறந்தே போனார்.

நோக்கியா தொழிலாளர்களும் இந்நிலைகளை எதிர்த்து போராடியபின், நோக்கியா தனது அணுகுமுறையை மாற்றியது. இதன் மூலம் நிரந்தர தொழிலாளர்களுக்கு கொடுத்த கணிசமான ஊதிய உயர்வு கூட 2013ல் தான் ஆரம்பித்தது. 2013 ஊதிய ஒப்பந்தம் போடும் போது நோக்கியா மைக்ரோசாஃப்டுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தையில் இரு;நதத, அடுத்து வரும் நிர்வாகம் இந்த ஊதிய உயர்வை மதிக்க வேண்டியதில்லை என்று நோக்கியாவிற்கு தெரியாதா? மேலும் தனது சப்ளையர் நிறுவனங்களில் தொழிலாளர்களின் குறைந்த பட்ச உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நோக்கியா எந்த நடடிவக்கையும் எடுக்கவில்லை. ஒரே சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரே பொருள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஏன் இந்த பாகுபாடு?
தொழிலாளர்களை வைத்து செயல்பட்ட இந்த சூதாட்ட விளையாட்டில் நோக்கியா வெற்றி அடைந்தது. உயர்நீதி மன்ற நீதிபதி கூறியபடி, இந்திய இயக்கத்தில், நோக்கியா ஏராளமான லாபத்தை அடைந்துள்ளது. ஆனால் இதற்காக பல்வேறு வரிபணங்களை விட்டுக் கொடுத்த மக்களுக்கும், உரிமைகளை பறிகொடுத்த தொழிலாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த விபரீத விளையாட்டு யாருக்காக நடத்தப்பட்டது?

அரசு கற்க விரும்பாத பாடங்கள்
நோக்கியா ஒரு மாடல் நிர்வாகமாகவும், அரசின் அதிகாரத்துவத்தினால் நோக்கியா தொழிற்சாலையை மூடியது என்றும், நோக்கியா தொழிற்சாலையின் வரலாறை அரசும், ஊடகங்களும் கவனமாக சித்தரித்து வருகின்றன. இதையே மேற்கோளாகக் காட்டி தாராளமய வளர்ச்சியே மக்களின் வளர்ச்சி என அவர்கள் சித்தரிக்கின்றனர். இன்றைக்கு நாம் காணும் ‘மேக் இன் இந்தியா”வும் சரி, “சர்வதேச முதலீட்டார்கள் மாநாடும் சரி, இந்த கொள்கையின் அடுத்த பரிமாணங்களே. மக்களுக்கு வேலை வாய்ப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று கூறி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுடன் தங்களுடைய சுயநல லாப நோக்கங்களை இணைக்கின்றனர். அதே சமயம், ஆட்சிக்கு வரும் அனைத்து அரசுகளும், நமது நிலம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கும் சட்டங்களையும் திட்டங்களையும் தனியார் நலனிற்காக நீர்த்து போக செய்கின்றனர்.

பதவியை கைபற்றியதிலிருந்து, மோடியின் என்டிஏ அரசு பல சட்டசீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சுழல் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து பல விதிகளை மாற்றி, விரைவு(fast track) திட்டங்களுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் தடைகளை நீக்கும் என்று கூறியுள்ளது. வெகுவாக பரவி வரும் இயந்திரமயத்திற்கு ஏற்ப விவசாயிகளின் நிலங்களை பாதுகாக்கும் நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தையும் தனியார் நலனிற்காக மாற்றி வருகிறது. இச்சட்டத்தை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எதிர்த்ததால், ஜனநாயகத்திற்கு புறம்பாக அவசரச் சட்டத்தை இயற்றியது. அதையும் செய்ய முடியாத நிலையில், மாநில அரசுகளை சட்டத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறது.

அதுவும் போதாது என்று, தற்போது தொழிலாளர் சட்டங்களின் மேல் கைவைத்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம், மத்திய அரசு தேசிய அளவில் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது, தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல், தொழிலாளர் போராட்டங்கள், ஒவர்டைம் மற்றும் ஊதிய நிர்ணயம் ஆகியவற்றை தொழிலாளர்களுக்கு எதிராக மாற்றி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், வேறு வேறு ஊதியம் நிர்ணயிக்கும் பட்சத்தில், நிர்வாகங்கள் அதையே காரணம் காட்டி தொழிற்சாலைகளை மூடி இன்னொரு மாநிலத்தில் திறக்கின்றன. அவ்வாறு செய்யும் போது வேறு மாநிலத்தில் பணி புரிய வரும் தொழிலாளர்களுக்கு மீண்டும் குறைந்த ஊதியம், நிலையற்ற பணி நிலைமை என்ற நிலைமையில் நிறுவனங்கள் மேலும் லாபம் பெறுகின்றன. இதற்கு மேல், வேறு மாநிலத்தில் கிடைக்கும் மற்ற சலுகைகள் வேறு. தொழிலாளர்கள் ஒன்று கூடி தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதை தடுப்பதற்கு, வேலை நிறுத்தம், வேலையை குறைத்தல் என்ற நடவடிக்கைகளை குற்றமாக மாற்றுவதற்கு அரசு முயற்சிக்கின்றது. அதே சமயம் எந்த தொழிலாளர் சட்டங்களை மீறினாலும், நிர்வாகம் அபராதம் கட்டினால் போதும்.

நோக்கியா தொழிலாளர்கள், கார்பரேட்டுகளின் பேராசைக்கு பலியான பலிகடாக்கள் மட்டுமல்ல. நோக்கியாவில் நடந்தது, ஏதோ கட்டுப்படுத்தமுடியாத நிகழ்வுமல்ல. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், தங்களுடைய உரிமைகளை தாரை வார்த்த அரசின் சூழ்ச்சியிலும் தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். நோக்கியா தொழிலாளர்கள் கோபம் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அரசு நோக்கியாவிடம் கேட்ட வரிக்காக தொழிலாளர்கள் கோபம் கொள்ளக்கூடாது. நோக்கியாவுடன் ஒப்பந்தம் போட்ட அரசு தொழிலாளர்களுக்காக குறைந்த பட்ச வேலை வாய்ப்பு, வேலை நிலைமை, நிலையுள்ள வேலை என்று எந்த உத்தரவாதத்தையும் கோர வில்லை என்பதே கோபத்தின் நோக்கமாக வேண்டும். நோக்கியா தொழிற்சாலை வந்த போது தொழிற்சாலைக்காக ஆட்சேர்ப்பு நடத்திய அரசு தொழிலாளர்களின் வேலை போன பின்னர், என்ன செய்தது?

நாம் இந்த கோபத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு அரசின் முதலாளித்துவ கொள்கைக்கு அடிபணிந்தே செல்லப் போகிறோமா? இல்லை தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காக போராடப் போகிறோமா? இது தாம் நம் முன் உள்ள சவால்.

குறிப்புகள்
1. The Ghost of Sriperumbudur. Live Mint. [Online] October 29, 2014. http://www.livemint.com/Companies/nIRZOHMNcD5fgegpWDDqBP/The-ghost-of-Sriperumbudur.html.
2. Memorandum of Understanding in relation to establishment of Electronic Hardware Manufacturing Facility in the state of Tamil Nadu between Government of Tamil Nadu and Nokia India Pvt Ltd . 2005.
3. Ltd, Nokia India Pvt. Standing Order, Chennai Factory (Undated).
4. Ministry of Human Resources Development, Government of India. Results of High School and Higher Secondary Examination 2007. 2009.
5. Dutta, Madhumita. ARRANGEMENT OF LABOUR AND CONDITIONS OF WORK IN MOBILE PRODUCTION FACILITY: A BRIEF CASE STUDY OF THE NOKIA TELECOM SEZ IN SRIPERUMBADUR TALUK, KANCHEEPURAM DISTRICT, TAMIL NADU.
6. Cividep, Finnwatch& SOMO. Phony Equality: Labour Standards of Mobile Manufacturers in India. 2011.
7. Nokia India Manufactures 500 mn Handsets – New Dual SIM Phone Soon. TelecomTalk Info. [Online] May 06, 2011. [Cited: Oct 14, 2015.] http://telecomtalk.info/nokia-india-manufactures-500-mn-handsets-new-dual-sim-phone-soon/65596/.
8. Collective, Citizen’s. The Public Price of Success: The costs of the Nokia Telecom SEZ in Chennaifor the government and workers. 2009.
9. R. Jai Krishna, Dhanya Ann Thoppil and Romit Guha. Strike Disrupts Work at Nokia’s Chennai Plant. Wall Street Journal. [Online] Jan 21, 2010. http://www.wsj.com/articles/SB10001424052748703699204575016442013819362.
10. Ambika’s Death. Kafila. [Online] 2010. https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB0QFjAAahUKEwjrt7Hoke7GAhVo4qYKHUOMCOA&url=http%3A%2F%2Fkafila.org%2F2011%2F01%2F21%2Fambikas-death-madhumita-dutta-venkatachandrika-radhakrishnan%2F&ei=_DuvVevJCejEmwX.
11. Nokia seek week’s time on suspension issue: Union. Economic times. [Online] Jan 30, 2010. [Cited: Oct 14, 2015.] http://articles.economictimes.indiatimes.com/2010-01-30/news/28406001_1_nokia-sriperumbudur-plant-suspension.
12. Pratap, Radhakrishnan, Dutta. Foxconn Workers Speak: We Are Treated Worse Than Machines. Asia Monitor Resource Centre. [Online] 2011. http://www.amrc.org.hk/content/foxconn-workers-speak-we-are-treated-worse-machines.
13. Madhumita Dutta, Venkatachandrika R, Millie Nihila, Kaliyaperumal Narayan. The mysterious case of fainting workers. 2010.
14. Radhakrishnan, Dutta and. The New Cellu-lar Jail. Kafila. [Online] 2011. http://kafila.org/2011/01/23/the-new-cellu-lar-jailmadhumita-dutta-venkatachandrika-radhakrishnan/.
15. Nokia gives steep salary hikes to staff in Chennai. Economic Times. [Online] March 08, 2013. http://articles.economictimes.indiatimes.com/2013-03-08/news/37561913_1_chennai-comeback-plans-nokia.
16. Nokia. Press Release: Nokia reports fourth quarter 2006. 2007.
17. Ali-Yrkkö, Jyrki, et al. Microsoft Acquires Nokia: Implications for the Two Companies and Finland. 2013.
18. High Court Delhi Judgment on WRIT PETITION (CIVIL) NO. 6150/2013, Decision on December 2013.
19. Microsoft shifts Nokia manufacturing to Vietnam. [Online] August 21, 2014. http://www.thanhniennews.com/business/microsoft-shifts-nokia-manufacturing-to-vietnam-30216.html.
20. Madras High Court Judgment on Writ Petition Nos. 9077, 9078, 9079, 9725, 9726 and 9727 of 2014, Dated 29-04-2014. 2014.
21. Nokia offers VRS scheme to Chennai plant employees. [Online] Apr 11, 2014. [Cited: Oct 14, 2015.] http://www.thehindubusinessline.com/companies/nokia-offers-vrs-scheme-to-chennai-plant-employees/article5900739.ece.
22. Dutta, Madhumita. Nokia: ‘Disconnecting People. Thozhilalar Koodam. [Online] April 01, 2015. tnlabour.in/?p=2124.

This entry was posted in Analysis & Opinions, Electronics Industry, Factory Workers, Research Papers, தமிழ் and tagged , , . Bookmark the permalink.