தமிழ்நாட்டில் செப்டம்பர் 2 தேசிய பொது வேலை நிறுத்தம் குறித்த கண்ணோட்டம்

அனைத்து பொது தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு செப்டம்பர் 2 அன்று தேசிய அளவில் பொது வேலை நிறுத்தத்தை நடத்தி 2 மாதங்களாகிறது. அதற்குள்ளேயே பத்திரிக்கைகள் தொழிலாளர் சீர்திருத்தங்கள் குறி;த்து மீண்டும் முதலாளித்துவ நிலைபாட்டை குறித்து எழுதி வருகின்றன. ஆங்கில இதழான லைவ் மின்ட், ஒரு பத்திரிக்கையின் தலைப்பில் “தொழிலாளர் சீர்திருத்தம் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது” என்று எழுதியுள்ளது. அதன் இன்னொரு செய்தி “தொழிலாளர்களின் சீர்திருத்தங்கள் இல்லாமல் மேக் இன் இந்தியாவை செயலாக்க முடியாது” என்று கூறுகிறது. இன்னொரு ஆங்கில நாளிதழ் எக்கனாமிக்ஸ் டைம்ஸ், குளிர்கால பாராளுமன்றத்தில் இந்த சீர்திருத்தங்கள் ஒப்புதல் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. நடந்த பொது வேலை நிறுத்தம் தேசிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியும், சீர்திருத்தங்களை அமலாக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்பதை இவை தெளிவாக்குகின்றன. இந்த கட்டத்தில் நாம் தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தத்தின் தாக்கத்தை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடத்திய விவாதத்தின் வாயிலாக தொழிலாளர் கூடம் இந்த கூற்றினை முன்வைக்கிறது.

தாக்கம் குறித்த கருத்துகள்

Sholinganallur Sep 2nd Protestசெப்டம்பர் 2 அன்று இடது சாரி தொழிற்சங்கங்கள், தலித் அமைப்புகள் சேர்ந்து பொது வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளுர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கன்யாகுமரி, நாகை மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில் மறியல், சாலை மறியல் என்று பல வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாநிலத்தில் 25000 பேர் கைது செய்யப்பட்டதாக ஹிந்துவில் செய்தி வெளி வந்துள்ளது. வங்கி மற்றும் டெலிகாம் துறைகளின் பணிகள் முடங்கின. இது குறித்து மாநிலங்களவையிலும் கேள்விகள் எழுப்பப் பட்டன.

ஹரியானா, திரிபுரா, மேற்கு வங்காளம், கேரளா, கோவா ஆகிய இடங்களில் இருந்த முழு வேலை நிறுத்தத்தின் தாக்கம் இங்கு இல்லை என்றாலும், அதற்கு முன்னர் நடந்த வேலை நிறுத்தங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தாக்கம் அதிகமாகி உள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களாக தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த போராட்டங்களின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், இந்த போராட்டம் மீண்டும் வர்க்கப் போராட்டத்தை கட்டமைக்க உதவும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் குறித்து கருத்துகள் பரந்து வெளிப்படுகின்றன. ‘ஸ்ரீபெரும்புதூரில் வேலை நிறுத்தம் நடக்கவில்லை என்பது வருத்தம் தரக் கூடிய ஒன்று, குர்கான் பகுதியில் வொர்க்கர்ஸ் சாலிடாரிடி சென்டரின் முன் முயற்சி காரணமாக ஒரு எழுச்சியை காண முடிந்தது மகிழ்ச்சி’ என்று ஒரு தொழிலாளர் குறிப்பிட்டார். மறைமலைநகரில் வேலை செய்யும் இன்னொரு இளம் தொழிலாளர், ‘பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் துறைகளில் இருந்தும் தொழிலாளர்கள் கலந்து போராட்டம் நடைபெற்றது. அதனால் எனக்கு மகிழ்ச்சி’ என்று கூறினார்.

வேலை நிறுத்தம் குறித்து பத்திரிக்கைகள் குறிப்பாக தினமலர் எப்போதும் போல, தனது முதலாளித்துவ பார்வையை முன் வைத்தது. “வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், சென்னையில் பஸ்கள் வழக்கம் போல் ஓடியதை சுட்டிக்காட்டி தினமலர், ஒப்பந்த மட்டும் தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து பஸ்களை ஓட்டி அரசு வேலை நிறுத்தத்தை நிறுத்தியதாகவும் கூறியது.

போக்குவரத்து துறை சங்கப் பிரதிநிதிகளின் தரப்பின் படி, பொது போக்குவரத்தில் சுமார் 40சத தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்வினையாக, 4000 பயிற்சியாளர்களை போக்குவரத்தில் உபயோகித்தல், தொழிலாளர்களை மிரட்டி வேலைக்கு வரவைத்தல், இரண்டு ஷிஃப்ட் வேலை என்ற யுக்திகளை அரசு உபயோகித்ததாக அவர்கள் கூறினர். நாங்கள் உபயோகித்த இரண்டு பஸ்கள், வழி தெரியாமல் பாதை மாறியதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் வேலை நிறுத்தம் என்பதால் இந்த யுக்திகள் வெற்றியடைந்தன என்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்திருந்தால் இவைகள் உபயோகப்பட மாட்டாது என்ற கருத்தை அவர்கள் முன் வைக்கின்றனர். உழைக்கும் மக்கள், நடுத்தர மக்கள் வெகுவாக உபயோகிக்கும் பொது போக்குவரத்தில் பயிற்சியாளர்களை உபயோகிப்பது பாதுகாப்பற்ற செயல் என்பதை ஊடகங்கள் சுட்டக் காட்டவில்லை. சென்னை வீதிகளில் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் வெகு குறைவாகவே காணப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளர்களின் மத்தியில் சங்கமின்மையே வேலை நிறுத்தத் தாக்கத்தின் குறைவுக்கு காரணம் என்று சங்கப்பிரதிநிதிகள் கூறுகின்றனர். இங்கு இருக்கும் 600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 24 தொழிற்சாலைகளிலேயே சங்கங்கள் இருக்கின்றன. அவற்றில் 3 தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் நடை பெற்றதாக பிரதிநிதிகள் கூறினர். சில தொழிற்சாலைகளில், ஊதிய பேச்சுவார்த்தை நடைபெறுவதால், சங்கம் எடுத்துரைத்தும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் கூறினர். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை வைத்து வேலை வாங்கியதால் உற்பத்தியில் பெரும் தாக்கமில்லை.

வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக, தொழிலாளர்களின் மத்தியில் பிரச்சாரங்கள் நடைபெற்றன. சங்கங்கள் தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில், துண்டு பிரச்சாரங்களை விநியோகித்தனர். சென்னையில், மத்திய தொழிற்சங்கங்களின் மாநில கூட்டம் நடைபெற்றது. அம்பத்தூர், மறைமலைநகர் பகுதிகளில், அனைத்து சங்க விளக்கக் கூட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர் கூடம் சார்பாக தொழிற்கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரங்கள் செய்தோம். நாங்கள் பார்த்த பகுதிகளில் அனைத்து சங்க வேலை நிறுத்த கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. மாவட்ட, மாநில பிரதிநிதிகள் பகுதிகளில் இது சாத்தியப்படாது என்றே கூறுகின்றனர். மத்திய அளவில் கூட்டப்பட்ட சங்க கூட்டமைப்பில் பி.எம்.எஸ், ஐஎன்டியுசி மற்றும் எல்பிஎஃப் போன்ற அமைப்புகளும் உள்ளன என்றும், தொழிற்சாலைகள் அளவில் அவை முதலாளிகளுக்கே பணி புரிகின்றன என்ற கருத்தை சங்கப்பிரதிநிதிகள் வைக்கின்றனர். அவர்களுடைன் கூட்டுவைப்பதை தொழிலாளர்கள் வர்க்க துரோகமாக கருதுவர் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

அமைப்புசாரா தொழிலாளர்கள், இடம் பெயரும் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கங்கள் இன்னும் முழுமையாக வேலை செய்யாததையும் சங்க பிரதிநிதிகள் காரணம் காட்டுகின்றனர். ஆனாலும், பல்வேறு பகுதி போராட்டங்களில் அமைப்புசாரா, இடம்பெயர் தொழிலாளர்கள் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்ய வேண்டிய கட்டமைப்புகள்
அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் உள்ள பொருளாதார, பணி நிலைமைகளை சார்ந்தே கட்டப்படுகின்றன. அவற்றை வெகுஜன அரசியல் போராட்டமாக மாற்றும் கட்டமாக தேசிய வேலை நிறுத்தங்கள் செயல்படவேண்டும். இவ்வாறு கட்டப்படும் போராட்ட வடிவமைப்பு மீண்டும் தொழிற்சாலைகளின் நடக்கும்(எண்ணிக்கையிலும் சரி, தீவிரங்களிலும் சரி) போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். கடந்த சென்ற போராட்டங்களை ஆராய்வு செய்வதிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும்.

நவீன தாராளமயக் கொள்கையை கடைபிடிக்கும் அரசுக்கு எதிராக தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய வேலை நிறுத்தங்களை நடத்தி வருவது, தொழிற்சங்களின் இடையே இந்த இணைப்பை பலப்படுத்துவதற்கான முயற்சியாக நடைபெறுகிறது. ஆனால் இந்த இணைப்பு மாவட்ட பகுதி வாரியான செயல்கள் என்று வரும் போது காணாமல் போகிறது. தொழிற்பேட்டை, பகுதி, மாவட்ட அளவிலான வேலை நிறுத்த கமிட்டி இல்லாமல் தேசிய வேலை நிறுத்தங்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.

தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும் சங்கங்களும் மத்திய கூட்டமைப்பில் இருப்பது இவ்வாறான கமிட்டி அமைப்பதற்கு தடையாக இருப்பதை நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பி.எம்.எஸ், ஐஎன்டியுசி, எல்பிஎஃப் போன்ற தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ கொள்கைகளை ஏற்று கொள்வதனால், தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையே மத்யஸ்தர் வேலையை செய்து வருகின்றனர். அதனால், தொழிற்சங்கங்களுக்கு இடையே ஏற்படக்கூடிய ஒற்றுமைக்கு தடையாக உள்ளன.

குறிப்பாக தொழிற்சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை கூட்டமைப்பு நிராகரிகரித்தும், பி.எம்.எஸ் தொழிற்சங்கம் கடைசி நிமிடத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து வெளியேறியது. பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் எந்த ஒரு உரிமையை காக்கவும், மத்திய அரசு முன்வரவில்லை என்கிறபோது, பி.எம்.எஸ் போராட்டத்தில் இருந்து விலகியது அதன் முதலாளித்துவ போக்கையே குறிக்கிறது. மத்திய நிலையிலும் ஒற்றுமையின்றி, பகுதிவாரியாகவும் கூட்டமைப்பு அமைக்கமுடியாத நிலையில், தேசிய அளவில் வேலை நிறுத்தம் வெற்றி பெற்ற நிலையில், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

மத்திய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அமைப்புசார்ந்த துறைகளிலும், பொது துறைகளிலும் உள்ளனர். 93சத இந்தியத் தொழிலாளர்கள் அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யும் நிலையில், பல மாநிலங்களிலும் பகுதிகளிலும், சிறிய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். குறிப்பாக, கட்டிடம், வீட்டு வேலை போன்ற தொழிலாளர்கள் மத்தியில் இந்த சங்கங்கள் வேலை செய்கின்றனர். மாநில மற்றும் பகுதிகளில் வேலை நிறுத்தக் குழு அமைக்கப்படாமல் இந்த தொழிலாளர்களும் சங்கங்களும் வேலை நிறுத்தங்களில் பங்கேற்பதற்கு கட்டமைப்புகள் அமைவதில்லை.

அமைப்புசார்ந்த துறைகளில் கூட, தொழிற்சாலை பிரச்சனைகளை தொழிலாளர் துறையின் மெத்தனப் போக்கு ஆகியவற்றை அன்றாடம் எதிர்கொள்வதில் தொழிற்சங்க பிரதிநிதிகளின் நேரம் செல்கின்றன. தனியாக ஒரு கட்டமைப்பு இல்லாமல், வேலை நிறுத்த பிரச்சாரம் ஏற்கனவே ஒருங்கிணைக்கப் பட்ட தொழிலாளர்களின் மத்தியிலேயே சென்றடைகிறது. கலாச்சார படைப்புகளை உருவாக்கி அனைத்துத் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க போராட்டத்தை வளர்க்க பகுதிவாரியான வேலை நிறுத்தக் குழுவால் சாத்தியமாகும்.

தாராளமயவாத அரசியலில் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகி வருகிறது. நிரந்தரம், ஒப்பந்தம், பயிற்சியாளர், தற்காலிகம். உற்பத்தி வேலைகளை அவுட்சோர்ஸ் செய்தல் என்ற பல வகைகளில் முதலாளித்துவ நிர்வாகம் தொழிலாளர்களை பிளவு படுத்தி வருகிறது. ஒரு பக்கம் லாபம் அதிகரிப்பதற்கும் இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடுவதை தடுக்கவும் இந்த யுக்திகள் பயன்படுகின்றன. வேலையில்லா திண்டாட்டம், நிலையற்ற வேலைகளை பயன்படுத்தி அரசும் தொழிலாளர்களின் மோசமான நிலைமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. உதாரணமாக சென்னையில் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய பயிற்சியாளர்களை அரசு பயன்படுத்தியது.

தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதை தடுப்பதற்கும், போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அரசு அதிகாரம் மூலமாகவும், நீதித்துறை மூலமாகவும் செயல்படுகிறது. நீதித்துறையின் கால தாமதமும் மெத்தனப் போக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கு ஏதுவாக உள்ளன. இவற்றின் மூலம் ஒருபக்கம் தொழிலாளர்கள் தாராளமயத்தை ஏற்றுகொள்கின்றனர் என்று அரசு மாயையை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் தொழிலாளர்களை ஒரு சிலரால் தூண்டப்படும் வன்முறை கும்பலாகவும் சித்தரிக்கிறது.

இந்நிலையில், தொழிற்சாலை அளவில் போராடக் கூடிய நிலைமையில் இல்லாத ஒருங்கிணைக்கப் படாத தொழிலாளர்களும், வேலையில்லா தொழிலாளர்களும் ஒன்று கூடி தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேசிய வேலை நிறுத்தம் ஒரு தருணமாகும். இதற்கு அன்றாட வேலைகளிலிருந்து பலதரப்பட்ட பிரச்சாரங்கள் மூலம் சங்கங்கள் தொழிலாளர்களை அடைய வேண்டியது அவசியம். செப்டம்பர் 2ற்கு முன்னர் மாசேரில் தொழிலாளர் ஒற்றுமை மையம் 10 நாள் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டது. அதன் விளைவாக மாநேசரில் 80சத வேலை நிறுத்தம் நடந்ததாக ஊடகங்கள் கூறியுள்ளன.

தாராளமயத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு துணையாக ஊடகங்கள் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன. தேசிய வேலை நிறுத்தம் நடந்து ஒரு வாரத்திலேயே சென்னையில் உலக முதலீட்டார் தினம் நடத்தப்பட்டது. 2016 பிப்ரவரியில் மத்திய அரசு மேக் இன் இந்தியா வாரத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இவற்றிற்கு எதிராக ஒரு வலுவான தொழிலாளர் போராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த இடதுசாரி தொழிற்சங்க கூட்டமைப்பினாலேயே இதை செய்ய முடியும்.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, Labour Laws, Workers Struggles, தமிழ் and tagged , , , . Bookmark the permalink.