முதலீடுகளின் பீடத்தில் பலியாகும் தொழிலாளர்கள்: மாநிலங்களின் போட்டி மனப்பான்மை

இந்தியாவில் 5 பில்லியன் டாலர்கள்(ஏறத்தாழ 34000கோடி ரூபாய்கள்) முதலீடு செய்யப் போவதாக race_to_the_bottomஃபாக்ஸ்கான் சி.இ.ஓ டெர்ரி காவ் ஜுலை 2015ல் அறிவித்தார். அப்போது ஒரு பேட்டியில் அவர் ‘இந்தியாவில் எந்த மாநிலம் உற்பத்தி செய்வதை எளிதாக்குகிறதோ – அங்கு தான் நாங்கள் ஆரம்பிப்போம். 2020க்குள் 1மில்லியன் (10 லட்சம்) வேலை வாய்ப்புகள் உருவாக்க உள்ளோம்” என்று கூறிப்பிட்டார். ஸ்ரீபெரும்புதூரில் இதே ஃபாக்ஸ்கான் நிறுவனம் 2014 டிசம்பரில் தனது தொழிற்சாலையை மூடியதை இங்கு நினைவு கூர்வோம். தனது முதன்மை வாடிக்கையாளர் நோக்கியா தொழிற்சாலை மூடியதனால் ஃபாக்ஸ்கானும் தனது நிறுவனத்தை மூடுவதாக அப்போது கூறியது. இப்போது இந்தியாவில் இவ்வளவு மார்க்கெட் சாத்தியத்தை பற்றி கூறும் ஃபாக்ஸ்கானால், ஒரு வருடம் முன்னர் 1300 தொழிலாளர்களை வேலைக்கு வைத்து கொள்ள முடியவில்லை.

2020க்குள் 1பில்லியன் டாலர்கள்(6500 கோடி ரூ) முதலீடு செய்வதாக கூறியுள்ள ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் குஜராத்தின் ஹலோல் பகுதியில் உள்ள தொழிற்சாலையை மூடி, மகாராஷ்ட்ராவின் தாலேகாவிற்கு உற்பத்தியை கொண்டு செல்வதாக கூறியுள்ளது. இதற்கு காரணமாக ஹலோல் தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை குறைக்க தொழிற்சாலையை மகாராஷ்ட்ராவிற்கு கொண்டு செல்வதாக ஜெனரல் மோட்டர்ஸ் கூறியுள்ளது. இதைப் பற்றி எகனாமிக்ஸ் டைம்ஸ் ‘குஜராத்தின் நஷ்டம் மகராஷ்ட்ராவின் ஆதாயம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஆராய்ந்தால் இந்தியாவின் மாநிலங்களுக்கிடையே முதலீடுகளை கவரும் போட்டி அதிகமாக உள்ளதா என்று தோணுகிறது. யார் முதலீடுகள் தங்கு தடையில்லாமல் லாபம் சம்பாதிக்க உதவுகிறாரோ அவரே போட்டியில் வெற்றி பெற்றவர். இதற்கான பட்டியலும் தயாராகி விட்டது. மத்திய தொழில் கொள்கை மற்றும் விருத்தி துறை(Department of Industrial Policy and Promotion) கேட்டு கொண்டபடி, எந்த மாநிலத்தில் வணிகம் செய்வது எளிதாக உள்ளது என்ற அடிப்படையில் உலக வங்கி அனைத்து மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த போட்டி சூழலில், ஒரு இடத்தில் உள்ள தொழிற்சாலையை மூடி இன்னொரு இடத்தில் ஆரம்பிப்பது என்பது எளிதாகி விட்டது. எந்த மாநிலம் சிறந்த ஒப்பந்தத்தை தருகிறது என்பதை பொறுத்தே தொழிற்சாலைகள் அமைக்கப் படுகின்றன.

இதில் தொழிலாளர் சட்டங்களை தளர்த்துவது முக்கிய அம்சமாகும். அனைத்து மாநிலங்களும் தொழிலாளர் நலன்களை வலுவிழக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தொழிற்சாலைகளை தங்கள் பக்கம் இழுக்க, பல மாநிலங்களின் முயற்சிகள் குறித்து மத்திய அரசின் ‘மேக்-இன்-இந்தியா’ விளம்பரம் பட்டியலிட்டுள்ளது.

இதில் முதன்மையாக உள்ளது ராஜஸ்தான் மாநிலம் அதன் ‘சாதனை’களில் தொழிற் தகராறு சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம் மற்றும் பயிற்சியாளர்கள் சட்டம் ஆகியவற்றை மாற்றி அமைத்தது மற்றும் தொழிற்சாலை கண்காணிப்புகளை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே என்று மாற்றியது முக்கியத்துவம் வாய்ந்தவை. ராஜஸ்தான் மாநிலம் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் முன்னிலையில் உள்ளது. அவர்கள் மாற்றுகின்ற சட்டங்களில் சில:
1. 100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை நீக்குவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என்பதை மாற்றி 300 தொழிலாளர்கள் வரை இருக்கும் ஆலைகளில் தொழிலாளர்களை நீக்குவதற்கோ அல்லது ஆலையை மூடுவதற்கோ அனுமதி பெற வேண்டியதில்லை.
2. சங்கம் அமைப்பதற்கு குறைந்த பட்சம் 30சத உறுப்பினர்கள் வேண்டும். முன்னர் இது 15சதமாக இருந்தது.
3. தொழிற்சாலை சட்டத்திற்கான குறைந்த பட்ச தொழிலாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு கீழே தொழிலாளர்களை அமர்த்தும் தொழிற்சாலைகளில் தொழிற்சாலை சட்டம் செயல்படாது.
4. முதலாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதி மன்றம் அரசின் எழுத்து பூர்வ அனுமதி இல்லாமல் ஏற்கக் கூடாது.

இன்னொரு வெற்றி மாநிலம் என்றால் அது ஆந்திர பிரதேசம். முதலீடுகளை கவர்வதற்காக பளபளப்பான வலை தளத்தை உருவாக்கியுள்ளது. ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தை மாற்றிய முதல் மாநிலம் என்று பறைசாற்றுகிறது இந்த வலைதளம். 5 தொழிலாளர்கள் இருந்தால் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதை 50 தொழிலாளர்கள் வரை பதிவு செய்ய தேவையில்லை என்று மாற்றியு;ளளது. ஆந்திராவில் தொழிலாளர் உற்பத்தியை குறைத்தால்(Go slow) அது சட்டப்படி குற்றமாகும். மேலும் ஷிஃப்டுகளை 8 மணி நேரத்திற்கு மேலாக மாற்றுதல், ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல், பெண்களுக்கான வேலை நேரம் எனப் நிறுவனங்களுக்கு ஏதுவான பல தொழிலாளர் நலன்களை தளர்த்தியுள்ளது. தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்க ஆட்டோமொபைல் துறையை ‘பொதுத் துறையாக” அறிவித்துள்ளது ஆந்திர மாநில அரசு.

தமிழ்நாடு மாநில அரசு தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நிதி மற்றும் இதர சலுகைகளை தொழில் கொள்கை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஈர்க்கத் துடிக்கும் நிறுவனங்களில் ஃபாக்ஸ்கானும் அடக்கம். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு அந்த நிறுவனத்துடன் பேசி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதற்காக ஃபாக்ஸ்கான் வைத்துள்ள கோரிக்கை இரண்டு என்று அவர்கள் கூறுகின்றனர் – சிறப்பு பொருளாதார மண்டல நிலத்தை ஏக்கருக்கு ரூ4 லட்சம் என்ற விகிதத்தில் குத்தகைக்கு கொடுக்க வேண்டும்(தற்போதைய நிலவரம் படி அந்த நிலத்தின் சந்தை விலை ஏக்கருக்கு 2கோடி ரூபாய்). ஏற்கனவே இங்கு வேலை செய்த தொழிலாளர்களை நிறுவனம் மீண்டும் வேலைக்கு எடுத்து கொள்ளாது. தொழிலாளர்களை கட்டுப்படுத்த மேலும் சில உத்தரவாதங்களை ஃபாக்ஸ்கான் எதிர்பார்க்கின்றது. அதற்கு அரசு தரப்பில் இருந்து தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் நிலைமை மிகவும் அமைதியாக உள்ளதாக கூறியுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

எந்த நம்பிக்கையோடு ஃபாக்ஸ்கானுக்கு இவ்வாறான உத்தரவாதங்கள் கொடுக்கப் படுகின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது. தொழிலாளர்கள் போராட்டங்கள் ஃ.பாக்ஸ்கான் எங்கு சென்றாலும் தொடர்கின்றன என்பதற்கான சாட்சியங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் சைனாவில் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. 2010ல் அதன் சென்ஞன் தொழிற்சாலையில் 93000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். டையுவான் தொழிற்சாலையில் 79000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த தொழிற்சாலைகளை ராணுவ நிர்வாகம் அடிப்படையில் நிர்வகித்து வந்தது ஃபாக்ஸ்கான். தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 11 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். உற்பத்தி லைன்களில் விபத்துகளும், காயங்களும் சர்வ சாதாரணம். 2010ல் சென்ஞன் தொழிற்சாலைகளில் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆப்பிள் ஐபோன்களை தயாரிப்பதால் இது சர்வ தேச கவனத்தை ஈர்த்தது. மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். 2012ல் ஆப்பிள் ஐபோன் 5 வெளியிடுவதற்கு முன்னர் சென்ஷோவ், டயுவான், மற்றும் புலிஹவா தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடந்தன.

முதலீடுகளை ஈர்ப்பதற்கு போட்டி போடும் மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு தேசிய அளவில் குறைந்த பட்ச பாதுகாப்பை செயல்படுத்த ஏன் தயங்குகின்றன?. இந்தியாவில் தேசிய குறைந்த பட்ச ஊதியம் என்பது இன்னும் அமலாக்கப் படவில்லை. ஒவ்வொரு மாநிலமும் வௌ;வேறு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு அளித்திட மாநிலங்கள் சேர்ந்து ஒத்துழைக்கலாமே!. உதாரணமாக நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை காரணம் காட்டி ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் குஜராத்தில் இருந்து மகராஷ்ட்ராவிற்கு மாற்றினால் மகராஷ்ட்ரா மாநிலம் அதே வேலை நிலைமைகளை இங்கு ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்க கோரலாமே.

நாம் வசிக்கும் உலகப் பொருளாதாரத்தில் நிறுவனங்களும் முதலீடுகளும் எந்த தேச எல்லையையும் மீறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் பாதுகாப்புகள் வெவ்வேறு நிலையில் உள்ளன. இதனால் லாபம் அடைவது நிறுவனங்களே. நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை மூடிய போது, நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே குறைந்த ஊதியம் உள்ள வியட்நாமை தேர்ந்தெடுத்தது. தேசங்களுக்கு மத்தியில் இந்த போட்டிகள் தற்போது மாநில அளவில் தொடங்கியுள்ளன. இவை நம்மை அதல பாதாளத்திற்கே கொண்டு செல்லும்.

This entry was posted in Analysis & Opinions, Factory Workers, labour reforms, தமிழ் and tagged , , , , , , . Bookmark the permalink.